ஆசையோடு
வாழ்ந்த தாயகம் இழந்து,அகதியாய் நாடு மாறியிருந்தேன்.யாரும்
தெரிந்தவரும் இல்லை.யாரும் கேட்பாருமில்லை.அகதி வாழ்வின் தணல் கொடுமையானது. ஒரு
நாள் காலை கைத்தொலைபேசி எழுப்பிற்று.ஒ சிறுவயதில் எனக்குத்தெரிந்த உறவினர்
ஒருவர்தான் அழைத்திருந்தார்.நீண்ட காலத்திற்கு பிறகு கதைக்கிறேன். ஏன்ரா
இதுக்குள்ள போனநீ என்றார்.எனக்கும் திடீரென ஒருமாதிரியாய் போய்விட்டது.நான்
சொன்னேன் இரண்டில ஒருபக்கம் நிற்கோணும் நான் ஒருபக்கம் நின்றேன் என்றேன்.ஏன்?எங்களை
மாதிரி நடுநிலையாய் நின்றிருக்கலாம்
என்றார். நான் சொன்னேன் எங்கட வீட்டு பிரச்னைக்கு நாங்கள் நடுநிலை என்று நிற்கிறது
அவனோட நிற்கிறது என்றுதானே அர்த்தம் என்றேன்.வேற இரண்டு வீட்டாரின் பிரச்னைக்கு
நாங்கள் நடுநிலையாய் நிற்கலாம் அது ஏற்றுக்கொள்ளக்கூடியது என்றேன்.அவர் திடீரென
தொலைபேசியை வைத்துவிட்டார்.
எனக்கு
எங்கட மக்களின் ஞாபகம் வந்தது.களமுனையில் பங்கர் அடிக்கவும்
வருவார்கள்.எல்லைப்படையாகவும் வந்தார்கள்.எதிரியின் பிரதேசத்திட்குள்ளும் இரகசிய
வேலைகளை செய்தார்கள் .கைதாகி கவனிப்பார் அற்று இன்றும் சிறைக்குள்ளும்
வாழ்கிறார்கள்.ஒரே மனிதர்கள் எப்படி இரண்டாகிப்போனார்கள்?
ஒரு
வருடத்திற்கு பின் அவரே மீண்டும் தொலைபேசி எடுத்தார்.எப்படி இருக்கிறாய்?என்று கூட கேட்கவில்லை.நீ எப்படி இருக்கிறாய்
என்று தெரியுமென்றார்.நீ நடு ரோட்டில நிற்கிறது விளங்குதா?என்றார்.அவர் சுயநலன்களோட வாழும் ஒரு நல்ல
மனிதர்.அவர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் நீங்கள் எப்படி?என்றேன்.தனக்கு எந்தக்குறையும் இல்லை
என்றார்.சந்தோசம் என்றேன்.சந்தோசத்தை பற்றி உனக்கு தெரியுமா?என்றார்.சந்தோசம் அவரவர் மனதை பொறுத்தது
என்றேன்.
உனது
பிள்ளைகளைப்பற்றியாவது யோசித்திருக்கிறாயா?என்றார்.
ஓரளவு
யோசித்திருக்கிறேன் என்றேன். ஓரளவு என்றால்? . கொஞ்சம் என்றேன். உங்களுக்கு உலகம் விளங்காது
என்றார்.அவனவன் என்னத்தை வெளியால கதைச்சாலும் உள்ளுக்கு தங்களை பார்த்துக்கொண்டு
போயிடுவாங்கள் என்றார். வாழ்க்கையை
தொலைச்சுப்போட்டியல் என்றார்.நான் சொன்னேன் .அப்படியல்ல.வாழ்ந்த வாழ்க்கையில
திருப்தியும்,வந்த பாதையிட்கு எந்தக்காயமும் செய்யாத
மகிழ்வும் உண்டென்றேன்.அவர் என்ன யோசித்தாரோ கோபம் வந்துவிட்டது தொலைபேசியை
பொத்தென்று வைத்துவிட்டார். என் தேசத்தில் தாய்,தந்தையில்லா பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலை எனக்குள்
தணலாய் பரவிக்கொண்டிருந்தது.
ஓவியன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக