வெள்ளி, 5 ஜூலை, 2013

பசிபோக்க இறந்து போன குழந்தைகளை பார்க்கும் கொடுமை

இறுதி யுத்தகாலத்தில் ஒரு நாள் இரட்டைவாய்க்காலில்  இருந்து வலைஞர்மடப்பகுதிக்கு  உட்பக்கமாய் போய்க்கொண்டிருந்தேன்.சிறுவர்கள் பனைவடலியில் இருந்து குருத்தை வெட்டிக்கொண்டிருந்தார்கள்.பசியின் காரணமாய் குருத்தையும் சாப்பிடத் தொடங்கியிருந்தார்கள்.யாரும் யாருக்கும் உதவக்கூடிய வசதியில் இல்லை.மேலே வண்டு சுற்றிக்கொண்டு இருந்தது.அதைக்கடந்து சென்ற நிமிட நேரத்திலே இரண்டு செல்கள் அந்த வடலிப்பகுதியில் வீழ்ந்து புகைகிளம்பியது. அந்த பகுதியை நோக்கி ஓடினேன்.மூன்று குழந்தைகள் இறந்துவிட்டன.அதில் ஒன்று முதுகால் செல்துளைத்து பனையிலும்  குத்தி பனையோடு இறுகியபடிஇருந்தது.  ஒருவர் அந்தக்குழந்தையை இழுத்து எடுத்தார்.நெஞ்சு பிரிந்தநிலையில் குழந்தை இறந்துகிடந்தது.பிரிந்த இரப்பையில் பனங்குருத்துத்தான் இருந்தது. காயங்களுடன் துடித்த குழந்தைகளை புலிகளின் மருத்துவமனைக்கு அனுப்பினோம். நேற்று முன்தினமும் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று குழந்தைகள் (சகோதரர்கள்) ஏதோ கிழங்கை பசிதீர்க்க சாப்பிட்டு மாண்டுபோனார்கள். பசிபோக்க இறந்து போன குழந்தைகளை பார்க்கும் கொடுமை உலகில் யாருக்குமே வரக்கூடாது.

யுத்தத்தின் இறுதிவாரத்தில் ஒரு நேர சீனிக்கஞ்சி உப்புக்கஞ்சியாய் மாறியிருந்தது.எனது போராளிகள் ஓய்வு அறையில் கதைத்துக்கொண்டு இருந்தது எனக்கு கேட்டது.பாணும் ஒரு சம்பலும் சாப்பிட்டால் எப்படியிருக்கும்?.மீன் குழம்பும் குத்தரிசி சோறும் சாப்பிட்டால் எப்படியிருக்கும்?. புட்டும் முட்டைப்பொரியலும் சாப்பிட்டால் எப்படியிருக்கும்? நான் போய் கடிந்துகொண்டேன் என்ன நேரம் என்ன கதைக்கிறது என்று தெரியாது என்று.அவர்கள் சிரித்தபடி அந்த இடத்தை காலி செய்தனர். இப்ப நினைக்க கஸ்டமாய் இருக்கு.அவர்கள் விரும்பியதை சாப்பிடாமல் போய் விட்டார்கள்.உடல் முழுக்க புற்றுநோய் வந்து வலிப்பதுபோல் இருக்கிறது.

 ஓவியன்



Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share