என் அம்மாவின் அப்பாவை நாங்கள் அப்பப்பா என்றே கூப்பிடுவோம். அவர் ஒரு அசாத்தியமான மனிதராய் இன்றும் எனக்கு தெரிகிறார். கச்சாய் அவரது பூர்வீகக்கிராமம். அவரது ஆரம்ப கல்வியை சொந்த ஊரிலும், பாடசாலை மேற்கல்வியை தெல்லிப்பளை மகாஜனாக்கல்லூரியிலும் கற்றார். ஆங்கிலேயர் இலங்கையை ஆண்ட காலத்தில் அவர் மலையகத்தில் வேலை செய்ய ஆரம்பித்தார் . காலையில் பாடசாலையொன்றின் தலைமை ஆசிரியராகவும் மாலையில் அலுவலக எழுதுவினைஞராகவும் வேலை செய்தார். இதேபாடசாலையில் எனது அம்மம்மாவும் ஆறுவருடங்கள் ஆசிரியராக வேலைசெய்திருந்தார்.
அப்பப்பா வேலையில் ஓய்வு பெற்று யாழ்ப்பாணத்திற்கு நிரந்தரமாய் வந்த பின் சுழிபுரத்தில் இயங்கிய துரையப்பா அன் சன்ஸ் என்ற பெரிய வியாபாரநிலையத்தில் பிரதம கணக்கராக வேலைசெய்தார் . அதேகாலத்தில் வேறு பல வியாபார நிலையங்களின் கணக்காய்வுகளை வீட்டில் வைத்தே செய்துகொடுத்தார். எப்போதும் சுறுசுறுப்புடன் வாழ்ந்தவர் எங்கள் அப்பப்பா.
என் அப்பப்பா ஒரு மூத்த எழுத்தாளர் என்பதற்கு அப்பால் ஒரு கலைஞனாகவும் இருந்திருக்கிறார். தனது மேடை நாடகங்களுக்கு ஆர்மோனியம்,புல்லாங்குழல், மௌத் ஒர்க்கன் கொண்டு தானே பக்க இசை வழங்கியிருக்கிறார். இளவயதில் நாடகங்களில் நடித்திருக்கிறார். பெண்வேடம் இட்டும் நடித்திருக்கிறார். திரைச்சீலைகளை வரையும் ஓவியனாக இருந்திருக்கிறார். பட்டம் கட்டுவதில் அவரது இறுதிக்காலம்வரை விற்பன்னராய் இருந்தார். அவர் எப்போதும் எனக்கு ஒரு அதிசயம்தான்.

திரும்பிப்பார்க்கிறேன்- 10
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக