வியாழன், 23 செப்டம்பர், 2021

மானிடத்தின் அழுக்கு

சரணடையுங்கள்!  விடுவிக்கிறோம்!!

கூவி அழைத்து 

கைகளை பின்புறமாய்  கட்டி 

பின் நின்று சுடும் கோழைகள்   

சிங்கங்கள் என்ற பெயரோடு 

உலவும் நவீனயுக நரிகள் 

கொண்டாடும் வெற்றி 

தர்மத்தின் இழுக்கு 

மானிடத்தின் அழுக்கு



      



Share/Save/Bookmark

வெள்ளி, 17 செப்டம்பர், 2021

தரையில் துடிக்கின்றன மீன்கள்

 வெற்றுத்தாளில் 

இதயச்சுமையை கவிதையாய் எழுதி 

சோகம் பீறிட கிழித்து எறிகிறேன் 

தரையில் துடிக்கின்றன மீன்கள்







Share/Save/Bookmark

திங்கள், 6 செப்டம்பர், 2021

முன்னறிவிப்பு அற்று 
அகாலமாய் துயிலெழுப்புகின்றன 
மரணச்செய்திகள் 

நிதானிப்பதற்குள் 
படபடத்து விடுகிறது இதயம்  
இழப்பையும் தாண்டி 
குடைகிற மனதில் எஞ்சியிருப்பது
இ(மு)யலாமை   



Share/Save/Bookmark

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2021

பாடையும் இல்லை ஊர்வலமும் இல்லை

 ஆறறிவு மனிதன் தோற்றுப்போகிறான் 
தனக்குரிய கிடங்கை தானே வெட்டி 
ஆறறிவு மனிதன் தோற்றுப்போகிறான்
பொத்திவைத்திருந்த கனவுகள் எரிகின்றன - மகன் 
கொள்ளிவைக்காமலே ஆச்சி அப்புவும் - அவர் கொண்ட 
ஆயுள்க்கால ஆசைகளும் சாம்பலாகிறது   
இற(ர)க்கமற்று ஏறிக்கொண்டிருக்கிறது விலைவாசி
குடிசைகளை நினைக்கையில் பதறுகிறது மனம் 
நம்பி (க்) கை  கொடு ! விழி ! இதுவும் கடந்து போகும்



Share/Save/Bookmark

சனி, 14 ஆகஸ்ட், 2021

 கொரோனா தொற்று சம்மந்தமான இலங்கை செய்திகளை கவலையுடன் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.கிளி பொன்னம்பலம் ஞாபகார்த்த   மருத்துவமனையில்  2001 -2008  ஆண்டுகாலப்பகுதிகளில் பல நூறு நோயாளிகள் எனது கிளினிக் பராமரிப்பில் இருந்தார்கள். வன்னியின் பலபாகங்களில் இருந்தும் சிரமத்தோடு வந்து போவார்கள். அவர்களில் எத்தனை பேர் இப்போது உயிரோடு இருப்பார்களோ தெரியவில்லை. 



Share/Save/Bookmark

ஞாயிறு, 25 ஜூலை, 2021

எந்தவித குற்ற உணர்வும் இல்லை

 எந்தவித குற்ற உணர்வும் இல்லை 

விண்ணுக்கு ரொக்கட் விடட்டும் 

இயற்கையை அழித்து சந்ததியை கொல்லட்டும் 

நீதியை கொழுத்தி குளிர் காயட்டும்  


குழந்தைகளின் கனவுகளை பறித்து 

வீட்டுவேலைக்கு அமர்த்தும் ராட்சகம்  

லயங்களின் நீண்ட துயர் மாற்றாது  

மாளிகைகளில் அரசியல் அரக்கர்கள் 


இழப்புக்களின் வலியை அளந்துவிட

தொழில்நுட்பம் போதவில்லை- அதனால் 

நாளையும் வலி ஏறும் - வழமைபோல 

விடிவற்று காலை வரும் மாலை போகும் 

   

கூர்ப்பில் மனம் ஊனமாகி உலாவரும் 

கொம்பு முளைத்த மனிதர்களிடம்  

இரக்கம் பஞ்சமாகி போக - எஞ்சியிருப்பது 

காவடி தூக்கும் இலையான்கள்  

    




Share/Save/Bookmark

ஞாயிறு, 7 மார்ச், 2021

திருப்பிப்பார்க்கிறேன்

  


1985 இன் ஆரம்பகாலமாக இருக்கவேண்டும். காலை பதினொரு மணியளவில்  அம்மம்மா வீட்டிற்கு களைத்து வீழ்ந்து போனேன். அம்மம்மா காலை சாப்பாடு தந்து கேட்டார் " சந்தையிற்கு போய் மீன் வாங்கி தருவீரா ?. ஓம் அம்மம்மா , ஏன் என்று கேட்டேன். என்னெண்டா குஞ்சு " இரண்டு பெடியள் வந்து மத்தியானத்திற்கு ஐந்து சாப்பாடு பார்சல் கேட்டவங்கள்" . அப்படியா அம்மம்மா " நான் வாங்கி தருகிறேன்".

அப்போது புளொட் இயக்கத்திற்கும் எங்கட இயக்கத்திற்குமான பகை கொதிநிலையில் இருந்தது. புளொட் இயக்கத்தவர்கள்தான் சாப்பாடு பார்சல் கேட்டிருப்பார்கள் என்பதில் எனக்கு ஐயுறவு இருக்கவில்லை. புளொட் இயக்கம் எமது இயக்கத்தை சேர்ந்த எனக்கு தெரிந்த சிவா சின்னசிவா உட்பட ஆறு பேரை சுழிபுரத்தில் கொலைசெய்து புதைத்து சிலமாதங்கள்தான். அம்மம்மாவின் சாப்பாடு பார்சல் என்பது ஒரு சாதாரண சாப்பாடு பார்சல் இல்லை, ஒரு சாப்பாடு பார்சலில் இரண்டு பேர் சாப்பிடும் அளவு பெரியது. அப்படியிருந்தும் கட்டும்போது ஆறு சாப்பாடு பார்சல் வந்துவிட்டது. அவர்கள் இரண்டு மணியளவில்தான் சைக்கிலில்வந்து பெல் அடித்தார்கள். அவர்களுக்கு என்னைக்கண்டதும் முகத்தில் திகைப்பு தெரிந்தது, எனக்கு அதிலொருவரைதான் தெரிந்திருந்தது, அவன் ஒரு நல்ல போராளி. மன்னிக்கவும் அண்ணை " இது உங்கட வீடு என்று தெரியாது". அது பிரச்சனை இல்லை என்றவாறே சாப்பாடு பார்சல்களை கொடுத்தேன், அவர்கள் நன்றி சொல்லி வாங்கிக்கொண்டார்கள்.   



Share/Save/Bookmark
Bookmark and Share