வியாழன், 22 டிசம்பர், 2011

உண்மைக்கதைகள்-04

வெறும் நூலில் தொங்கும் வாழ்க்கை

அவனைப்பற்றி சொல்ல பெரிதாக ஒன்றுமில்லை.பாடசாலையில்
படிப்பில் எப்போதும் முதலாம் பிள்ளையாய் வருவான்.அவனுக்கு
கணிதம்,விஞ்ஞானம் ,விளையாட்டில் அதிக விருப்பம்.பள்ளிக்கூடத்தில்
வழமைபோல எல்லாருக்கும் பட்டப்பெயர் இருக்கும்.அவனின்
பட்டப்பெயர் விஞ்ஞானப்பண்டிதர்.பண்டிதர் என்றே சகமாணவர்
கூப்பிடுவார்கள் .அவனுக்கு விஞ்ஞானியாய் வரவேண்டும்
என்பதில் பித்துப்பிடித்திருந்தான்.இதற்கு சமுகம் எந்தளவுக்கு
காரணம் என்று புரியவில்லை.அவனுக்கும் அந்த திறமை
இருந்ததோ என்று சரியாகத் தெரியவில்லை.
                                                 விஞ்ஞானிகளின் வாழ்க்கையை/களை 
தேடி தேடிப்படித்தான்.உலகிலுள்ள சிறந்த பல்கலைக்கழகங்களுக்கு
விண்ணப்பித்துக்கொண்டும் இருந்தான்.தன்னை அதற்கு தயார்
படுத்துவதாய் மூட நம்பிக்கையிலும் இருந்திருக்கலாம்.அவனது
அதிஷ்டமோ/துரதிஷ்டமோ இந்தியாவில் உள்ள சிறந்த பல்கலைக்
கழகத்திற்கு தேர்வாகியிருந்தான்.அப்போதுதான் பிரச்சனை
ஆரம்பமாகிற்று.பணம்தான் வாழ்க்கையை தீர்மானிக்கும்
என்பதை அறியாமல் வாழ்ந்த ஏழையின் சுயத்தை புரிந்ததுடன்
முதல் தடவையாய் உலகில் தனித்துப்போனதாய் உணர்ந்தான்.
கல்வியில் அவனது ஆர்வம் குறையத்தொடங்கிற்று.
                                                1981 இல் யாழ் நூலக எரிப்பினை
சிங்கள அரசு திட்டமிட்டு செய்திருந்தது.  அதற்கு எதிர்ப்பு தெரிவித்து
எம்பாடசாலையில் ஒருநாள் பகிஸ்கரிப்பு செய்தோம்.அதில் அவன்
முக்கிய பங்குவகித்தான்.அந்த பாடசாலையில் 1956 இற்கு பிறகு
நடந்த பகிஸ்கரிப்பாக அது இருந்தது.அச்செயற்பாட்டுடன்     அவனது
இன விடுதலைச் செயற்பாடுகள் ஆரம்பித்தன.சந்திப்புகள்,சிறிய
செயற்பாடுகள் என காலம் வீணாகவும் கரைந்தது.1983 இனக்கலவரத்துடன்
திட்டமிட்ட அளவு பிரயோசனமாக செய்யமுடியாவிட்டாலும்
சிறு செயற்பாடுகளை செய்துமுடித்தனர் .
                                            1983 இன் பிற்பகுதியில் விடுதலைப்புலிகள்
இயக்கத்தில் இணைந்துகொண்டான்.காலம் எல்லாமுமாய்
ஓடிற்று.இப்போது சிங்களத்தின் ஜெயசுக்குறு காலம் "சிறுவர் பட்டினிச்
சாவு தவிர்ப்புத்திட்டம்" சிறுவர்களை காக்க நடைமுறைப்படுத்தப்பட்டது.
திட்டமிடல்,கண்காணிப்பில்  ஒருவனாக திட்டத்தை வெற்றியுறச்செய்து
சிறுவர்களைக் காத்தான்.2000 ஆம் ஆண்டு கிளிநொச்சி மீள்குடியேற்றம்
நகர் திட்டமிடலில் முக்கிய பங்குவகித்தான்.
                                            சமாதானம் சறுக்குவதும் ஏறுவதுமாக இருந்து,
ஈற்றில் முள்ளிவாய்க்காலில்   அரச கொடூரம் நிகழ்ந்தது.அவனும்
ஓய்வற்று உழைத்தான்.இறுதி ஐந்து மாதங்களில் மூன்று தடவை
இரத்ததானமும் செய்திருந்தான்( குறைந்தது மூன்று மாதத்திற்கு
ஒரு தடவைதான் இரத்ததானம் செய்யலாம்).வைகாசி 2009 உடல்,
உள தளர்வோடு கண்பார்வையும் பாதிக்கப்பட்டிருப்பதை முதல்
தடவையாக அவன் மனம் ஏற்றுக்கொண்டது.இறுதிவரை தலைமையால்
கொடுக்கப்பட்ட கடமையை செய்து ,இயக்க முடிவுக்கு இணங்க
இறுதியாய் இராணுப்பகுதிக்குள் சென்ற மக்களுடன் மக்களாய் சென்று (வைகாசி 17 ) நலன்புரிமுகாமில் இருந்து தப்பினான்.
                                            இப்போது அவனது காலம் தனிமையில்  மனது சுமக்கமுடியா சுமையுடன் ஊசலாடிக்கொண்டிருக்கிறது.


                                                         
        


Share/Save/Bookmark