ஞாயிறு, 31 டிசம்பர், 2023

துடுப்பில்லா படகில் நான்

நீங்களில்லா பூமியில் 

நான் திரிகிறேன் 

ஒரு அநாதையை போல 

எண்ணி எண்ணிப்பார்க்கிறேன் 

என்னிடம் பலவும் உண்டு  

நீங்கள் தான் இல்லை 

நீங்களே என்னை நிரப்பியிருக்கிறீர்கள்

உழைப்பு, அர்ப்பணிப்பு, அழுகை, சிரிப்பு யாவும் 

கலந்த அந்த நாட்களில் நாங்கள் வாழ்ந்தோம் 

ஒவ்வொருவராய் இழக்கையில்

புழுவாய் துடித்ததும் 

ஓர்மமாய் எழுந்ததும் இன்றில்லை  

மக்களுக்காய் உயிர் சுமந்த ஆத்மபலம் இன்றில்லை 

நீங்களில்லா பூமியில் 

துடுப்பில்லா படகில் நான்      



Share/Save/Bookmark

சனி, 30 டிசம்பர், 2023

தாயிற்கு எதுவும் தெரியவில்லை

இருபது வருட சிறைவாழ்வு 

இரு தடவை சிறைக்கலவரம்

மயிரிழையில் உயிர்தப்பி  

உருமாறி விடுதலையாகி 

ஊர் ஒழுங்கையை கண்டுபிடித்து  

பலநாள் சேமித்த ஆசையுடன் வீடுவந்து 

அம்மா ! என்று திகைப்பூட்ட  

தாயிற்கு எதுவும் தெரியவில்லை 

" மறதி நோய்"


சுற்றத்தில் சுகவிசாரிப்புகள் இல்லை 

வேலிகள் மதில்களாயிற்று 

ஒரே ஒரு நண்பன் 

இங்கு குழந்தைகுட்டிகளோடு இருக்கிறான் 

தெரிந்தும் தெரியாத ஊராயிற்று 

தந்தையின் சாய்மனைக்கதிரைதான் 

தஞ்சம் தருகிறது 

விடிந்தும் விடியாத காலமிது 




Share/Save/Bookmark

வெள்ளி, 29 டிசம்பர், 2023

இரு தினக்குறிப்புகள்

 வருடங்கள் வந்து மாறுகின்றன 

ஏனோ புத்துணர்ச்சி இல்லை 


ஒரு காலம் இருந்தது 

இரு தினக்குறிப்புகள் கிடைக்கும் 

நானோ கவிதைகள்தான் எழுதுவேன் 

புதுவருட திட்டங்கள் மனதில் படிந்திருக்கும்

அதை செயல்களில்தான் எழுதுவேன் 

  

அந்த தினக்குறிப்புகள் இப்போது கிடைப்பதில்லை 

வருடமுடிவில் ஏக்கம் மட்டும் வந்துபோகிறது 

(பாசக்)கடல் வற்றுவதில்லை 

அவர் இயல்பும் அழகும் 

எப்போதும் எனக்குள் மாறுவதில்லை 

பார்வைக்கு அது ஒரு கடல் 

உள்ளுக்குள் ஒரு இயங்கு உலகம்

புதுவருடம் இவர் நினைவுகளுடன்   



Share/Save/Bookmark

செவ்வாய், 26 டிசம்பர், 2023

யாவருக்குமான சுதந்திர உலகு

 கடவுள் உண்டு 

அதற்கு மேல் பிரிவுகள் என்னிடம் இல்லை 

மனிதனுக்குள் பாகுபாடும் இல்லை 

ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவம் இருக்கும் 

அதை மதிக்கிறேன் 

அதை தாண்டவும் விருப்பவில்லை 

நான் நானாகவும் நீ நீயாகவும் இருப்போம் 

தனித்துவங்களால் நிரம்பிய உலகு 

இடைவெளியை நிரப்பும் புரிந்துணர்வு 

யாவருக்குமான சுதந்திர உலகு 



Share/Save/Bookmark

என் உள்ளங்கைகளை உற்றுப் பார்க்கிறேன்

புனிதர்களின் புதைகுழிகளுக்கு 

மூன்று மூன்று தடவைகளாய்   

மண் அள்ளி அள்ளி போட்ட 

என் உள்ளங்கைகளை உற்றுப் பார்க்கிறேன் 

எந்த பந்தமும் இதற்கு ஈடில்லை 


எங்கும் செல்லலாம் வாழலாம் 

உம் நினைவில்லாமல் எதுவுமில்லை   


வயலும் கடலும் காடும் குளமும் 

கலையும் பண்பாடும் எங்கள் தேசம் 

செம்மொழித்தமிழும் தாய்த்திருநாடும் 

ஒன்றோடொன்றான தமிழீழம் 



Share/Save/Bookmark

யானை சாப்பிட்ட விளாம்பழம்

 ஆதிதொட்டு 

மாற்றங்கள் நடக்கின்றன 

பல மொழிகள்   

சில விலங்கினங்கள் 

சில மனித இனங்கள் 

உலகில் இன்று இல்லை 

மனிதன் மட்டுமல்ல 

இயற்கையும் துணைபோகும் 


நிலைப்பதற்கு 

தனித்துவம் மட்டும் போதாது 

சூழலோடு இணைந்த பலமும் தேவை  


வேரிழந்த புலம்பெயர்வு ஆபத்து 

இன்று நீ அறியாய் - இது 

தாயக கோட்டையின்  

அத்திவாரங்கள் கிண்டப்படும் காலம் 

ஏதோ ஒரு மாயையில் உழலும் கோலம் 

யானை சாப்பிட்ட விளாம்பழம்  




Share/Save/Bookmark

ஞாயிறு, 24 டிசம்பர், 2023

 அவன் 

தலைமாற்றி வெளிநாடு போனவன் 

இன்று 

படித்த பாடசாலையால் கௌரவிக்கப்பட்டான்

சரி பிழைகளுக்கு அப்பாலும் 

ஒரு வாழ்வு இருக்கிறது     



Share/Save/Bookmark

ஆளும்வர்க்கம் வேறு என்ன செய்யும்?

 பழங்குடி மக்களுக்கு விடுதலை இல்லை 

ஒருகாலம் 

இன்றைய பலநாடுகள் அவர்களுடையது 

உலகமெலாம் அருகிப்போகிறார்கள் 

அவர்களிடமும் இசை நிறைந்த வாழ்விருக்கிறது 

எங்களை ஒத்த குருதியே அவர்களிடமும் ஓடுகிறது

இருந்துமென்ன ?

அவர் வேதனையின் பாடல் யாரும் கேட்பதில்லை  

உணர்வுகளை உணர ஆட்களில்லை 

அவர் வேரடியை /மொழியை யார் அறிவார் ?

புதுவருடம் வருகிறது - அதை 

உலகம் வர்ணமயமாய் கொண்டாடும் 

அவர் இதை அறியார்  

வாழ்விடங்களை தாண்டிவரா குரல் 

பல வித்தைகள் தெரிந்தும் விஞ்ஞானம் வளரவில்லை 

அவர்களை ஆராய்ச்சியிற்கு பயன்படுத்தும்  

நவீனத்தால் யாது செய்யமுடியும்?

 

 


 



Share/Save/Bookmark

சனி, 23 டிசம்பர், 2023

பார்வை மொழிகளுக்கூடாக பேசுதல்

  

இறுதிநாள்

முன்பள்ளி மாணவர் இருவர் 

ஒருவரை ஒருவர் பார்த்தபடி 

கையசைத்துப் போகின்றனர் 

உயர்தரமாணவர் இருவர்   

ஒருவரை ஒருவர் பார்த்தபடி 

பிரிந்து போகின்றனர்

பல்கலைமாணவர் இருவர்   

ஒருவரை ஒருவர் பார்த்தபடி 

பிரிந்து போகின்றனர்

பார்வை மொழி 

எதை பேசுகிறது ?

இறந்த எஜமானனை 

பார்த்துக்கொண்டிருக்கும் நாய் 


வேலைக்கு போகும் 

தாயை பிரியும் குழந்தை 

வெளிநாடும் போகும் 

நண்பனை பிரியும் தோழன் 

இறுதி களத்திற்கு செல்லும் 

வீரனை பிரியும் சகா

    

  



Share/Save/Bookmark

சுடலைவரை லஞ்சம் வந்துநிற்குது

வட்டியிற்கு கடன் வாங்கி 

கடன் கொடுக்கும் நாடு 

பஞ்சம் பட்டினியில் தள்ளிவிட்டு 

ஏப்பம்விடும் அதிகாரம் 

லஞ்சம் மலிந்து 

சுடலைவரை வந்துநிற்குது

கெட்டகேட்டிற்கு குஞ்சம் கட்டி 

ஒய்யாரத்திற்கு  குறைவில்லை   



Share/Save/Bookmark

வெள்ளி, 22 டிசம்பர், 2023

கற்றது கையளவுதான்

 முதியமுகத்தில் தெரியும் வரிகளில் 

யாரும் வாசிக்கமுடியா எழுத்துகள் 

அக்கதைகளை  AI ஆவது கிரகிக்குமா ?

எழுதிய கதைகளை வாசிக்கமுடியவில்லை 

எழுதாத கதைகளை எப்போது வாசிப்போம்?

இன்று இருமி இருமி ஏதோ 

சொல்லமுனையும் மனிதனால் 

அன்று அடுப்பெரிந்தது 

வீடு நிறைந்தது   

மூட்டை தூக்கிய முதுகுகளின் கூலி 

எப்போது தீர்க்கப்படும்?

கடவுள்களில் கூட 

பாகுபாடு காட்டும் உலகம் 

மனிதர்களை விட்டுவிடுமா?

முதியவரின் சுவாசம் 

காற்றோடு கலந்தபடியே நின்று விடக்கூடும் 

நாளங்கள் பளிச்சென தெரியும் கைகால்களில் 

ஓடிக்கொண்டிருக்கும் வாய்க்கால் 

ஓய்ந்துவிடக்கூடும்  

அது இன்றாக இருக்கக்கூடுமா? 

எனக்குள் ஊடுருவும் அவரது கண்கள் 

ஏதோ ஒன்றை தேடுகின்றன 

அது என்ன?

கற்றது கையளவுதான் 

  



Share/Save/Bookmark

வியாழன், 21 டிசம்பர், 2023

துளிரும் பயிரை எரிப்பதா?

 கயிறு திரிப்பது போல் உயிரை திரிப்பதா?

துளிரும் பயிரை எரிப்பதா?

துயரில் வயிறு  புகையிதே?

கண்ணீரில் இருதயம் நனையிதே 


எல்லோரிடமும் 

குறைகள் நிறைகள் உண்டு 

விகிதம் வேறுபடலாம் 

குறைகளை தூத்தாதே 

நிறைகளை மதி 

குறைநிறை என்பது அவரவர் மதிப்பீடுதான்  



Share/Save/Bookmark

ஞாயிறு, 17 டிசம்பர், 2023

அவசரத்தில் ஓடியிருக்கிறாரா?

 சாற்றப்பட்டிருக்கிறது யன்னல் 

பூட்டப்பட்ட கதவில் தொங்குகிறது ஆமைப்பூட்டு 

எந்த அரவங்களும் இல்லை 

அப்பு எங்கே ? 

மூடப்பட்ட கக்கூஸில் புகை வரவில்லை 

முற்றத்தை நிரப்பியிருக்கிறது கொட்டிய இலைகள் 

கிணற்றடி வாய்க்கால் காய்ந்துகிடக்கிறது 

இறந்துவிட்டாரா? புலம்பெயர்ந்துவிட்டாரா?

மருத்துவமனையிலா? வீட்டை விற்றுவிட்டாரா? 

ஆவென்று திறந்திருக்கிறதே படலை

அவசரத்தில் ஓடியிருக்கிறாரா? 

யாரோ வரும் அரவம் கேட்கிறது 

திரும்பிப்பார்க்கிறேன் 

அநாதைப்பிணம் , போனமாதம் , தலை சுற்றுகிறது 

எங்கிருந்து வருகிறாய்?

திடுக்குற்றேன் "சிறையிலிருந்து"

ஏன் அழுகிறாய்?

வீட்டுக்குள் ஒரு கனவு இருந்ததே 

 



Share/Save/Bookmark

சனி, 16 டிசம்பர், 2023

இராணுவம் ஏவிய செல் விழுந்து முழங்கியது

 இராணுவம் ஏவிய செல் விழுந்து முழங்கியது 

ஈனக்குரல் எங்கிருந்தோ வருகிறது 

புகை வந்த திசை நோக்கி ஓடினேன் 

ஒரு தாய் பாரிய வயிற்றுக்காயம் 

கால்கள் இரண்டும் சிதைந்து கிடக்கிறது 

அருகில் கிடந்த குழந்தையை தூக்கி 

முத்தமிட்டு கிடத்தியபின் இறக்கிறாள் 

இறப்பை உறுதி செய்வதைவிட 

வேறு என்ன செய்யமுடியும்

குழந்தையை சோதிக்கிறேன் 

எந்த காயங்களும் இல்லை  

குழந்தையின் கன்னத்தில் 

தாயின் முத்த அடையாளம் 

நெற்றியில் இரு கண்ணீர்த்துளிகள் 



Share/Save/Bookmark

இருள் இன்னும் கலையவில்லை

 இருள் இன்னும் கலையவில்லை 

வேலையிடம் செல்லும் காலைப்பேருந்து

எனைப்பார்த்து புன்னகைத்து போகிறார்கள் 

பொம்மைகள் போல உடையணிந்த குழந்தைகள் 

அவர்களுக்குள் எப்போதும் ஆனந்தம் 

அவர்களால் விடியும் எனது காலை    

கண்களை மூடினேன் 

காஸாவின் குழந்தைகள் 

உணவில்லை, சேர்ந்து விளையாடியவர் இல்லை ,

தந்தையில்லை , இருட்டுலகம் 

இழப்பின் வலி அவர்களுக்குத்தான் 

மற்றவர்களுக்கு வெறும் செய்தி

வலிகளுக்குப்பின்னால் ஐநாவின் தோல்வி 

மனிதர்களுக்குள் வாழும் மிருககுணம் 

கூர்ப்புக்கொள்கையை உறுதிசெய்கிறது   

பேருந்தின் மணியோசையில் திடுக்குற்றேன் 

மீண்டும் கண்களை மூடுகிறேன் 

நான் காவிய குழந்தைகளின் உடல்கள், 

சிறுவர்களின் கைகால்கள்,பிஞ்சு பாதங்கள் 

நெஞ்சை உழுது அழுத்த 

கண்ணீர் கன்னத்தை சுட 

ஒட்டிய கண்கள் திறக்கின்றன 

நான் இறங்கவேண்டிய இடம் கடந்தும்

இருள் இன்னும் கலையவில்லை  

 



Share/Save/Bookmark

எங்கு போனாய் நீ

 நண்ப! 

தேச விடுதலைக்காய் 

சுவாசித்தவன் நீ 

கள அருகில் மூச்சை நிறுத்திக்கொண்டாய் 

ஓடி வந்தேன் 

உறுதி செய்து பணிந்தபின் 

கடமை அழைத்தது 

உடல் கணச்சூடு கூட இறங்கவில்லை 

சில மணித்துளிகள் கூட 

உன்னோடு நிற்கவில்லை 

மன்னித்துவிடு !

நீ என்னை அறிவாய் 


காயமடைந்த குழந்தையை தூக்கியபடி 

ஒருவன் ஓடிக்கொண்டிருந்தான் 

அவனுக்குப்பின்னால் 

நானும் ஓடிக்கொண்டிருந்தேன் 


பின் காலங்களில் 

எவ்வளவு நாட்களை  

வீணாக செலவளித்திருப்பேன் 

அன்று சாத்தியப்படவில்லையடா 


உன் கதையை என்னில் ஏற்றிவிட்டு 

எங்கு போனாய் நீ  



Share/Save/Bookmark

ஞாயிறு, 10 டிசம்பர், 2023

யதார்த்தம் கசப்பாக இருந்தாலும் உண்மையானது.

 அந்தக்கிராமங்களில் உள்ள ஒழுங்கைகள் குச்சொழுங்கைகள் யாவற்றிற்கும் என்னைத்தெரியும் ஆனால் இப்போது அங்கு வாழும் சந்ததிக்கு என்னைத்தெரியாது. என் பெயரை யாராவது ஒருவர்  இப்போதும் கதைக்கக்கூடும், இன்னும் பத்து வருடங்களில் அதுவும் இருக்காது. யதார்த்தம் கசப்பாக இருந்தாலும் உண்மையானது. மாயவுலகில் சோடித்து மகிழ்வதில் அர்த்தம் இல்லை. ஒருகாலம் அந்த காலத்தின் ஒரு பாத்திரமாக இருந்திருக்கலாம் இன்று ஒரு சாட்சியாகத்தான் இருக்கமுடியும்.  



Share/Save/Bookmark

சனி, 9 டிசம்பர், 2023

 ஓடி ஓடி இறகுகளை சேர்க்கிறேன் 

ஆயுளுக்குள்  சிறகுகளாய் கோர்ப்பேன் 

ஒரு பறவைபோல் சுதந்திரமாய் பறக்க 

வேறு என்ன செய்ய முடியும்?



Share/Save/Bookmark

அதுவரை நினைவுகளுடன் வாழ்வேன்

கண் முன் உயிர்போயிற்று 

இறுதி பேச்சும் என்னோடு 

சுமையோடு தொடர் பயணம் 

 

கள அருகாமையில்  

என் மடியில் மூச்சு நின்றது 

என்னைப்பார்த்தபடியே இருந்தன கண்கள் 


இறுதி நாட்களை அறிந்தபின்  

அளவளாவிய கதைகள் 

இப்படியும் வாழமுடியுமா? 


எதிர்பாரா பிரிவில் 

தொக்கி நிற்கும் இதயம் 

ஏதும் செய்யமுடியா அவலநிலை 


ஒன்றாக கூடி உணவு சமைத்ததும் 

சுற்றியிருந்து அதை ருசித்ததும் 

இன்றுபோல் இருக்கிறது 


அந்நியமண்ணில் தனித்தலைந்தாலும் 

அர்ப்பணித்தவர் தொடர் நினைவுகளுடன் 

ஒருநாள் எரிந்து சாம்பலாவேன் 

  

உங்கள் பயணத்தை தொடரமுடியாமல் 

கையறுநிலையில் சாவதைவிட

நினைவுகளுடன் வாழ்வது கடினமில்லை  

  



Share/Save/Bookmark

ஞாயிறு, 3 டிசம்பர், 2023

கரும்புலி

 எல்லா உயிரினங்களை போல மனிதர்களுக்கும் ஆயுள்காலம் உண்டு, இதுதான் நியதி . வெளியில் தெரியும் மனிதர்களும் அவர்களுக்குள் உள்ள மனிதர்களும் ஒரேமாதிரி இருப்பது அரிது. இக்கணங்களில் கரும்புலிகளோடு பழக கிடைத்த பொழுதுகளை பேறாக கருதுகிறேன்.           



Share/Save/Bookmark

சனி, 2 டிசம்பர், 2023

தலைவன்

 ஒரு தலைவன் 

மூத்த சகோதரனாகியதில் 

நிறைந்திருக்கிறது 

" மனிதம் "


இனத்தின் விடுதலைக்காக 

உயிரை அர்ப்பணிக்கும் 

மனநிலையில் வாழ்தல் 

அவர்களுக்கானது 

மரணம் தோற்றுவிடுகிறது  



Share/Save/Bookmark

ஞாயிறு, 19 நவம்பர், 2023

 நேற்றுப்போல் இருக்கிறது 

முதல் மாவீரனின் முதலாம் ஆண்டு நினைவு 

"ஓ ! சத்யநாதா " என்ற போஸ்டர் ஒட்டியது

1990 இல் சங்கரத்தை சந்தியில் 

மாவீரர் வளைவிற்கு வாசகம் எழுதியது 

1992 ஆம் ஆண்டு துயிலும் இல்லம் சென்றேன் - பின் 

ஒவ்வொரு மாவீரர் வாரங்களிலும்  

துயிலும் இல்லம் செல்லமுடியா வேலைப்பளு      



Share/Save/Bookmark

வெள்ளி, 17 நவம்பர், 2023

திக்கற்றவரின் நெடும் பயணம்

 எங்கோ பிறந்து வளர்ந்தோம் 

மனசாட்சியால் ஒன்றானோம் 

தாயகமும் நாங்களும் 

உயிரோடு ஒன்றான உணர்வுகள் 

நீங்களில்லை 

இது யாருமற்ற வெளி 

நினைவுகளில் அசையும் ஒளி

எங்கே?

எங்களுக்குள் ஊடாடிய மொழி 

வாழ பல வழியிருந்தும் 

அந்த பாசாங்கில்லா வாழ்வு 

இன்று கவிஞன் இல்லை 

கவிதை இருக்கிறது

நினைவிடங்கள் நெஞ்சறைக்குள் 

தொடர்ந்தும் 

திக்கற்றவரின் நெடும் பயணம்  




Share/Save/Bookmark

ஞாயிறு, 5 நவம்பர், 2023

அம்மா என்னைப்பற்றி எழுதும் காலம் வரக்கூடாது

 அப்பா இப்போது இல்லை. நான் அப்பா அம்மாவை இறுதியாய் சந்தித்த நாள் அல்லது கணங்கள் எனக்கு ஞாபகம் இல்லை. அக்காலம் 2005 ஆம் ஆண்டுதான். அவர்களுக்கு கட்டாயம் ஞாபகம் இருக்கும். அவர்களுக்கு பிள்ளைகள் உலகம், எனக்கு அப்படியல்ல வேறு முக்கிய வேலைகள் இருந்தன. ஒவ்வொரு மனிதர்களும் தனித்துவமானவர்கள்.

முன்பும் அம்மா அப்பாவை நேரில் பார்க்கமுடியாத காலங்கள் இருந்திருக்கின்றன, அக்காலங்கள் இவ்வளவு நீண்டவையல்ல. அம்மா "புலிகளின் குரல்" வானொலியில் பல மாவீரர்களின் நிகழ்ச்சிகளை மிகத்தத்துரூபமாக எழுதியிருக்கிறார். அவர் ஒரு மாவீரரின் தாய் என்பதால் அந்த எழுத்தோட்டம் உயிர்பெற்றிருக்கலாம். நான் தூர இடங்களில் இருக்கும் போது கூட அந்த நிகழ்ச்சிகளை தவறவிடுவதில்லை. அப்போதெல்லாம் நான் நினைத்துக்கொள்வேன் அம்மா என்னைப்பற்றி எழுதும் காலம் வரக்கூடாது என்று. 



Share/Save/Bookmark

சனி, 4 நவம்பர், 2023

 கவிமகனின் கரம்பு நிலத்து கதைகள்  

கவிமகனின் கரம்பு நிலத்து கதைகள் தமிழ் இலக்கிய உலகில் புது வரவாகும்

உண்மைக்கதைகள். யார் இந்த கவிமகன்? தாய்தேசம் விடுதலை பெற போராடும் காலம்

அதற்குள் பிறந்து வளர்ந்தவன், விடுதலையோடு பயணித்த ஒரு தந்தையின்/ எழுத்தாளரின்

ஒற்றைமகன். இவன் ஆசிரியர்களால் மட்டுமல்ல எழுத்தாளத்தந்தையாலும் புடம் போடப்பட்டு

எழுத்துலகத்திற்குள் நிலைத்திருப்பவன். ஈழத்தமிழினத்தின் விடுதலைப்போராட்ட

நிலப்பரப்புக்குள் இரத்தமும் சதையுமாய் வாழ்ந்தவன், சிறுவயதிலேயே போராட்ட வாழ்வின்

இன்ப துன்பங்களை அறிந்தவன். ஏற்கனவே இவனது இரண்டு இலக்கியப்புத்தகங்கள்

வெளிவந்துவிட்டன. இந்த சிறுகதைத்தொகுதியும் இவனை யார் என்று உலகிற்கு துல்லியமாய்

வெளிக்காட்டும்.

2009 ஆம் ஆண்டில் எமது போராட்டத்தில் ஏற்பட்ட சடுதியான மாற்றங்களால் சிங்கள அரசின் அதிகாரப்பிடி அதிகரித்துவிட்டது. சிங்கள அரசு எமது போராட்ட வரலாறை தவறாக புனைவதன் ஊடாக எமது மக்களின் விடுதலைக்கனவை இல்லாமல் ஆக்க பிரயத்தனப்படுகிறது, இதற்காக எமது விடுதலை வரலாறை இலக்கியவடிவில் தவறாக புனைய அரசோடு நேரடியாகவும் மறைமுகமாகவும் இயங்கும் சில தமிழர்களையும் வீச்சாக பயன்படுத்திவருகிறது. தமிழரிடம் எந்த அதிகாரமும் இல்லாத இக்காலத்தில் தமிழர் விடுதலை அவாவி துணிந்து எழுதுகிற  எழுத்தாளர்களுள் கவிமகனும் ஒருவர். அவர் தொடர்ந்தும் எமது மக்களின் விடுதலைக்குரலாக ஒலிக்கவேண்டும் என வாழ்த்துகிறேன்.


நன்றி

 

கா.சுஜந்தன்



Share/Save/Bookmark

வெள்ளி, 27 அக்டோபர், 2023

காஸா குழந்தைகள்

தலைமயிர் பொசுங்கிவிட

அவிந்த முதுகுடன் ஓடிவருகிறாய்  

முடியவில்லை 

கண்களை மூடிக்கொள்கிறேன் 

என்னடா செய்தார்கள்?

துயில முடியவில்லை 

ஓங்கி அறைகிறது 

ஏங்கி அழும் 

மழலைகளின் அழுகையொலி 

இரவும் பகலாகிறது 

இறந்து கிடப்பது   

காஸா குழந்தைகள் மட்டுமல்ல 

அவர் பிஞ்சு கனவுகள் மட்டுமல்ல

தர்மம் அற்ற உலகமும்தான்

கொலைஞர் குழந்தைகள் 

இதை அறியாமல் இருக்கட்டும்

ஏக்கங்களோடு விரியும் புகைமண்டலத்தில்

எஞ்சிய விளையாட்டுப்பொருட்களை 

எதற்கும் உதவா "ஐ நா" சேகரிக்கட்டும்








Share/Save/Bookmark

வெள்ளி, 29 செப்டம்பர், 2023

ஒரேவழி

 நாம் அறிந்தே 

தேவேந்திரமுனை தெவிநுவரவானது  

மணலாறு வெலிஓயாவானது 


எதுவும் செய்யமுடியாது 

இதுவும் கடந்துபோகும் 

அரைநூற்றாண்டில் 

ஆனையிறவு அனுராதபுரமாகும் 

யாரையும் திட்டாதீர்கள் 

உங்களையே திட்டிக்கொள்ளுங்கள் 

சிங்கள பௌத்தமாய் மாறுவதே ஒரேவழி 


 




Share/Save/Bookmark

ஞாயிறு, 10 செப்டம்பர், 2023

 முகில்கள் வீழ்ந்து கிடந்தன நீரோடையில்,  தீக்குளித்தது அந்திவானம் , அமாவாசை நாளொன்றில்  நிலாவோடு பேசமுடியாமல் அந்தரிக்கிறது குழந்தைமனம் .  



Share/Save/Bookmark

சனி, 19 ஆகஸ்ட், 2023

எனக்குத்தெரிந்த முதல் photographer எனது அம்மாதான்

 எனக்குத்தெரிந்த முதல் photographer எனது அம்மாதான். எங்களது சிறுவயது படங்களை எல்லாம் அம்மாதான் எடுத்தார்.  எல்லாம் கறுப்பு வெள்ளை புகைப்படங்கள் , இப்போதும் யாரிடமாவது இருக்கலாம், அவைதான் எவ்வளவு அழகானவை.  இன்று உலக புகைப்படத்தினம். எவ்வளவோ புகைப்படங்களை பார்த்து கடந்துவந்தாலும் அந்த புகைப்படங்களின் பெறுமதி அதிகம்தான்.



Share/Save/Bookmark

வெள்ளி, 18 ஆகஸ்ட், 2023


 



Share/Save/Bookmark

வெள்ளி, 4 ஆகஸ்ட், 2023


 



Share/Save/Bookmark

சனி, 22 ஜூலை, 2023

2010


 



Share/Save/Bookmark

புதன், 19 ஜூலை, 2023


 



Share/Save/Bookmark

ஞாயிறு, 16 ஜூலை, 2023

அப்படி என்னதான் இருக்கிறது இதற்குள்





 



Share/Save/Bookmark

சனி, 15 ஜூலை, 2023

களத்தில் வீழ்ந்தவர்கள்


 



Share/Save/Bookmark

சனி, 8 ஜூலை, 2023

ஈழத்தமிழினம் 2023

 




Share/Save/Bookmark

செவ்வாய், 4 ஜூலை, 2023

முள்ளிவாய்க்கால்




 



Share/Save/Bookmark

திங்கள், 3 ஜூலை, 2023

நண்பா! பகைவா!

என் சகதோழன் மரணிக்கையிலும் 

எம் பகைவன் மரணிக்கையிலும் 

என்னால் சுமக்கமுடிவதில்லை 

அவர் குழந்தைகளின் முகங்களை 


நண்பா! பகைவா!

நீயும் பார்த்திருப்பாய் 

தாயின் புத்திரசோகத்தை

எப்படி கடந்திடுவோம் ?

இந்த பாதாளத்தினை  


பகைவனே!

ஏன் நான் உனை வெறுக்கிறேன் ?

என் மக்களின் சுதந்திரத்தை தடுக்கிறாய் 

உன் பிள்ளைகளையே தாயையோ 

நான் வெறுத்ததில்லை 

உன்னால் அது முடியுமா?


நான் என் மக்களை நினைக்கிறேன்

எப்போதும் என் மக்களை நேசிக்கிறேன் 

நீ அதிகாரத்தை நேசிப்பதாய்

நான் நினைக்கிறேன் 

அது தவறாகவும் இருக்கலாம் 

ஏன் என் தாயகத்தை அபகரிக்கிறாய்? 

  



Share/Save/Bookmark

சனி, 1 ஜூலை, 2023

இயற்கையை அழிக்கிறாய், உன் சந்ததிதான் பழி சுமக்கும்


 



Share/Save/Bookmark

செவ்வாய், 27 ஜூன், 2023

தற்கொலை ஒரு நோய்


 



Share/Save/Bookmark

வெள்ளி, 23 ஜூன், 2023

மனிதன் ஒரு அபூர்வம்

 மனிதன் ஒரு அபூர்வம் 

பூமியில் போதிய உணவில்லாமல் 

தகுந்த உறைவிடம் இல்லாமல்

யாருமில்லாமல் பலர் இருக்க 

சந்திரனில் வாழ ஆய்வுசெய்கிறான்   

 




Share/Save/Bookmark

புதன், 21 ஜூன், 2023

சோகம் கரைக்க கடற்கரையிற்கு வந்தேன்

சோகம் கரைக்க கடற்கரையிற்கு வந்தேன் 

கடல் அலைகளாகி எனைத்தேடிவந்து 

சுகம் விசாரித்தபடி இருந்தது 

மீன்கள் விதவிதமாய் நடனமாடி 

என்நிலைமாற்ற முயன்றன 

நீலவானம் கடலில் இறங்கி   

வருவதுபோலிருந்தது  

பாய்மரங்கள் அசைந்தன 

படகுகள் பாடிப்போயின 

கொக்குகள் என்னைப்பார்க்கவேயில்லை 

குடிசைகளின் ஆரவாரங்களில் 

மணலினுள் புதையாதபடி நகர்கிறேன் 




Share/Save/Bookmark

செவ்வாய், 20 ஜூன், 2023

அப்படித்தான் வளர்க்கப்பட்டிருக்கிறோம்

 எனக்கு எப்போதும் தேவைப்படுகிறது 

சுதந்திரம் 

அதற்காக 

நான் கொடுத்த விலைகள் அதிகம் 

எதுவும் 

சுதந்திரத்திற்கு ஈடில்லை 

அதிக மகிழ்வு போல 

அதிக கவலையும் என்னைப்பாதிக்கிறது 

எவ்வளவுதான் சுதந்திரத்தை விரும்பினாலும் 

எனக்குள் ஒரு எல்லை இருக்கிறது 

அதை கடந்து போகமுடியாது 

அப்படித்தான் வளர்க்கப்பட்டிருக்கிறோம் 



Share/Save/Bookmark

சனி, 17 ஜூன், 2023

ஓய்வு கிடைத்ததோ?

 இரவு படுக்க நேரமாகிவிட்டது 

எல்லோரும் சாப்பிட்டபின்

பிள்ளைகளுக்கு பல் தீட்டி,படுக்க வைத்து   

பாத்திரங்கள் கழுவி 

தோய்த்த உடுப்புகள் மடித்து  

அடுத்தநாள் வேலைகளை நினைத்தபடி 

படுக்கைக்கு போக பதினொரு மணி 

காலை ஐந்து மணிக்கு எழுந்து 

ஓய்வெடுக்காமல் 

ஒவ்வொரு வேலையாய் முடித்து

சதா செல்லம்கொஞ்சம் 

சின்னமகளை நேசரியில் விட்டு விட்டு

காலையுணவை உண்டபின்   

செய்ய வேண்டிய வேலைகளை 

மனதில் பட்டியலிட்டுவர 

டிப்பரில் யமன் அசுரவேகத்தில் வந்தான் 

 



Share/Save/Bookmark

வெள்ளி, 16 ஜூன், 2023

வெட்கப்படுதல்

இலங்கையில் 

நீண்டகாலம் வாழ்வது 

லயங்கலாய்த்தான் இருக்கும் 

லயங்களின் கதைகளை 

கூடைகளில் சுமக்கமுடியாது திண்டாடும்   

லயமனிதரின் குருதியை  

தேநீராய் பருகும் உலகு 

மனித உரிமைபேசி கொழுக்கிறது

அரச அதிகாரம்    

சாக்கடையில் முகம் கழுவி சிரிக்கிறது 

நண்பனே! மலைகள் கதைப்பதை 

தேயிலைசாயமிட்டாவது எழுதிவிடு !

 

    



Share/Save/Bookmark

சனி, 10 ஜூன், 2023

நீ சம்மந்தப்பட்ட வரலாறை நீயே எழுதாமல் போனால் யாரோ ஒருவர் எழுதுவர். அது உண்மை வரலாறாய் இருக்காது.

 நான் அடுத்த வருடமும் உயிருடன் இருந்தால் எனக்கு அறுபது வயது வந்துவிடும். இப்போதே உடல் களைத்துவிட்டது. ஐம்பது மணித்தியாலங்களுக்கு மேல் தொடர்ந்து சத்திரசிகிச்சைகளை செய்த காலமும் என் வாழ்வில் இருந்திருக்கிறது. இப்போது உடல், உள்ளம் களைத்துப்போனதை உணர்ந்தாலும் ஓய்வெடுக்கமுடியாது. சம்பளம் கூடாமல் வாழ்க்கைச்செலவு படிப்படியாக அதிகரித்துச்செல்கிறது, நின்று நிதானித்து யோசிக்கமுடியவில்லை. பின்வயது காலங்களில் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்களுக்கு என் நிலைதான் இருக்கும் என்று நினைக்கிறேன் ஆனால் இது ஒரு பிரச்சனை இல்லை. காப்பெட் ரோட்டில் சொகுசு வாகனத்தில் போவதுபோல் இல்லாமல் கல்ரோட்டில் வண்டிலில் போவதுபோல் இருக்கும், பயணம் தொடரும்.    



Share/Save/Bookmark

ஞாயிறு, 4 ஜூன், 2023

சூரியனின் கோபமுகம் தெரிகிறது 

மரத்திற்கு கீழ் ஒதுங்குகிறேன் 

இலைகள் கூட அசையவில்லை 

பிசுபிசுக்கிறது தேகம் 

தண்ணீர் கேட்கிறது தாகம்

குடம் அசைய போகிறாள் பெண் 

என் இதயத்தையும் பறித்தபடி 

ஆதவனுடன் நேசமாகிறேன்


----------------------------------------------------------

நீயும் நானும் ஒன்றல்ல 

அனுபவங்கள் எங்களை பிரித்தன 

நட்சத்திரங்கள் கூட இல்லா இரவில்

வினாடிகள் நகர்கின்றன    




Share/Save/Bookmark

சனி, 3 ஜூன், 2023

நான் யார்?

 

நான் ஒரு விவசாய பின்னணியில் வளர்ந்தவன். நான் சரியென்று நினைப்பதை  நோக்கி நகர்ந்துகொண்டிருப்பேன். தனிப்பட்ட யார் மீதும் இன்றல்ல என்றும் காழ்ப்புணர்ச்சி என்னிடம் இல்லை . என்னை பெரியளவில் பிரச்சாரப்படுத்திக்கொள்பவன் அல்ல. நானும் எனக்கான பணியுமாகவே ஓடிக்கொண்டிப்பேன். என்னை நோக்கி நேரிடையாகவும் மறைமுகமாகவும் கல்லெறிந்து கொண்டேயிருப்பார்கள், அது எனக்கு பொருட்டல்ல.  என் கண் முன்னால் கண்ட தியாகங்களை அல்லது அர்ப்பணிப்புக்களை என் வாழ்நாள் முழுதும் மறக்கமாட்டேன். எப்போதும் விலைபோகாமல் வாழ முயற்சிப்பவன். வாழ்க்கை என்பது ஒரு ஓடும் வாய்க்கால்தான், விரும்பியோ விரும்பாமலோ நகர்ந்தே செல்லவேண்டும்.      

  



Share/Save/Bookmark

புதன், 31 மே, 2023

நாடற்றவனின் அனுபவங்கள்

புரியாத மொழிப்பாடல்களையும் 

கேட்கிறது மனம் 

இசையோ குரலோ 

மனதோடு கோர்வையாகிவிடுகிறது 

சில புரிந்த  மொழிப்பாடல்கள்கூட 

மனதை ஏனோ ஆற்றுப்படுத்துவதில்லை 

தாய்நிலமிழந்து அந்தரத்தில் கழிகிறது  நொடி 


கண்கள் தெரியாதவனை 

 தினம் தினம் 

 விதவித உடையுடுத்தி 

 கைபிடித்து கூட்டிப்போகிறாய் 

 வந்த பாதைகூட தெரியவில்லை 

 வந்துவிட்டேன் அம்மா 

எனக்குள் நான் அடங்கிப்போகிறேன்


மலையுச்சிக்கும் வந்து போகிறது நிலவு  

காலமீட்டலை சுட்டிப்போயிற்று இரவு    

நெஞ்சோடு முட்டிப்போகிறது அழுகை

விடிகாலையில் புதிய பயணம் 

நாடற்றவனின் சுவடுகளை விட்டுப்போகிறேன்



 


 




Share/Save/Bookmark

செவ்வாய், 9 மே, 2023

10.05.23

 சிறைக்குள் இருந்து 

விடுதலையை தேடியவன் 

வெளியில் வந்து 

திக்குமுக்காடுகிறான் 

சுவாசிப்பதற்கு



Share/Save/Bookmark

MAY 18











 



Share/Save/Bookmark

சனி, 29 ஏப்ரல், 2023

நான் என் கனவுகளை மறக்க விரும்புகிறேன்

 எனக்கும் மற்றவர்களைப்போல எதிர்காலக்கனவுகள் இருந்தன. என் பதின்ம வயதிலேயே என்மக்களுக்காக அவற்றை மறந்தேன். இன்று நட்டாற்றில் நிற்கும் போது மனது வலித்தாலும் நான் சென்றுவந்த பாதையில் ஒரு ஆத்மதிருத்தியிருக்கிறது. அது எங்கு சென்றிருந்தாலும் எனக்கு கிடைத்திருக்காது. நான் என் கனவுகளை மறக்க விரும்புகிறேன், ஆனால் அது வேதனையானது.



Share/Save/Bookmark

ஞாயிறு, 16 ஏப்ரல், 2023

பதில் இல்லை

அப்பாவின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன் 

அப்பாவும் பார்ப்பது போலவே இருந்தது

அப்பா! உங்கள் மகனை தெரியவில்லையா? 

நீங்கள் எதுவும் கதைக்கவில்லையே அப்பா!

பதில் இல்லை 

படம் மீதினில் ஒரு துளி கண்ணீர் 

பதில் இல்லை  

அப்பாவும் இரக்கமாய் பார்ப்பது போலவே இருக்கிறது 




Share/Save/Bookmark

திங்கள், 10 ஏப்ரல், 2023

ஸ்ரீ லங்கா


 



Share/Save/Bookmark

சனி, 1 ஏப்ரல், 2023

வாழ்க்கையும் ஒரு பெரும்கனவுதான்

 இன்னுமொரு உலகம் 

எழுந்ததுடன் கலைந்த(து) கனவு 

படபடத்து சீராகிற்று இதயம் 

வியர்வையில் கலந்திருந்தது பயம் 

உண்மையில்லை 

பெருமூச்சு ஏறி இறங்கிற்று 


பரம்பரை ஒரு அஞ்சலோட்டம்

வாரிசு இல்லாதவன் வெளியேறுகிறான் 

வாழ்க்கையும் ஒரு பெரும்கனவுதான்    



Share/Save/Bookmark

வெள்ளி, 31 மார்ச், 2023

"என் தனித்துவத்தை மதி "

  உலகம் 

என்னை பிழிந்து எடுக்கிறது 

எங்கு தொடங்கியது பிரிவினை ? 

"என் தனித்துவத்தை மதி "

அங்குதான் தொடங்கியது   




Share/Save/Bookmark

வியாழன், 30 மார்ச், 2023

ஏதோ நம்பிக்கையில்

இலைகள் 

மரங்களில் பசுமையை விரித்திருந்தன

இன்னுமொருநாள் 

மஞ்சளை பூசி மகிழ்ந்திருந்தன

பிரிதொருநாள் சருகாகின 

எதுவந்தபோதும்

அசையா மரங்கள் மீண்டும் துளிர்த்தன

ஏதோ நம்பிக்கையில்   

 



Share/Save/Bookmark

ஞாயிறு, 26 மார்ச், 2023

இன மத மொழிகடந்து எப்போதும் என் சீவியம்

 இன மத மொழிகடந்து 

இப்போதல்ல 

எப்போதும் என் சீவியம்  


அடக்குமுறை 

எவருக்காகினும் எவ்வடிவிலாயினும் 

என்கைகள் அவர் தோளணைக்கும்   

என் இதயம் அவருக்காய் துடிக்கும் 


வலி அறிந்தவன் 

எவரின் வலியும் அறிவான் 

வழிதிறக்க குரலாவது தருவான்    




Share/Save/Bookmark

சனி, 18 மார்ச், 2023

திடீரென அப்பா படமாகிப்போனார்

 கைபிடித்து நடக்கப்பழக்கி

என் காலில் நிற்கவைத்தார் 

அப்பாவுக்குள்ளால் 

உலகை பார்த்தோம் 

திடீரென  

அப்பா படமாகிப்போனார் 

எங்கும் தேடி எனக்குள் தேடுகிறேன் 

முன்னும் பின்னுமாய் நகர்கிறது காலம் 



Share/Save/Bookmark

மழை நின்ற பின்பும்--

 சூரியன் இல்லாத இந்த இரவிலும் 

வியர்த்துக்கொண்டு இருக்கிறது 

மழை நின்ற பின்பும் 

ஒழுகிக்கொண்டிருக்கிறது ஓலைக்குடிசை 

உன்னை இழந்த பின்பும் 

கூடாரமிடுகின்றன உன்நினைவுகள் 

தந்தை இல்லாதபோதும் 

அவர் உருவில் மகன்     



Share/Save/Bookmark

செவ்வாய், 14 மார்ச், 2023

யாரோ சொல்லத்தவறிய கவிதை 

இருளினுள் ஒளியால் எழுதப்படுகிறது  

பறவைகள் கூடடையும்போது - இது 

குஞ்சுகளின் குதூகலம்போல தெரிகிறது  



Share/Save/Bookmark

சனி, 4 மார்ச், 2023

இதுவரை வாசித்ததை அசைபோடுகிறேன்

என்னிடம் கர்வம் இல்லை 

துளி கோபம் இல்லை 

எள்ளளவும் பொறாமை இல்லை 

மன்னித்துவிடு !

இல்லாததை கடன் கொடுக்கமுடியாது 

திரும்பிவிடு !

வாழ்வு புத்தகத்தில் இறுதிப்பக்கங்களை 

நம்பிக்கையொளியில்  

புயல் ஓய்ந்த அமைதியோடு வாசிக்கிறேன்  

இதுவரை வாசித்ததை அசைபோடுகிறேன்

என்னை விட்டுவிடு !  

நாட்கள் மீதமிருந்தால் உனக்காகவும் யாசிப்பேன்

என் பாடலை என்னை பாடவிடு!  



Share/Save/Bookmark

யார் பேச்சும் கேட்கமாட்டாய் !

 மனிதனின் வாழ்வுமட்டுமல்ல 

விலங்கின் வாழ்வும்  குறுகியதுதான்

இருந்துமென்ன 

இருக்குமட்டும் புரிவதில்லையவர்  

பூமியிருக்கிறது 

எம்பரம்பரைகளின் கதைகளை அறிந்த  

பூமியிருக்கிறது

சாட்சியாக வானமிருக்கிறது 

மூச்சாகும் காற்று இருக்கிறது 

இருந்துமென்ன

பேச்சிருக்கும்வரை 

உனது ஆட்சிதான் 

யார் பேச்சும் கேட்கமாட்டாய் ! 



Share/Save/Bookmark

வியாழன், 2 மார்ச், 2023

 கவிதை என்று எழுதிக்கொண்டிருந்தேன் 
நான் அறியாமலே 
அது பாதையாய் நீண்டிருக்கிறது 
திக்கற்று 
எங்கோ வந்து நிற்கிறேன்  
பேனா,தாள்களற்று கணினியாகி 
எழுதஎழுத அம்மம்மா வாசிப்பா 
எதை எழுதினாலும் "அருமை " என்பா 
எழுதியபின் பிள்ளை வாசிக்கிறாள் 
ம் எதுவும் புரியவில்லை என்கிறாள்    



Share/Save/Bookmark

சனி, 25 பிப்ரவரி, 2023

அவரவர் வாழ்வு அவரவர் விருப்பம்

   

முகத்திரை (நிகாப் ) மூடி 

கடந்துபோகிறாள் தங்கை 

அவளுக்குள்ளும் ஒரு உலகம்  

அவ் உலகில் அவள் மட்டும்தான் 

சிரிப்பாளா? அழுவாளா? 

யார் அவள் ?

கூட்டினுள் மகிழும் பறவையா?  

தவறு செய்யாத ஆயுள்கைதியா ?

என் தேசவிடுதலைபற்றி 

இவளிடம் எப்படி சொல்லுவேன் ?

அவரவர் வாழ்வு அவரவர் விருப்பம்




Share/Save/Bookmark

சாம்பலாய் பூத்துக்கிடப்பது அதே கனவுதான்

 ஒன்றானதும் ஒன்றாகாததுமாய்

அமைதியும் அஸ்தமனமும் ஒட்டியிருக்கிறது 

பிரிவும் நினைவும்போல 

அளவு கடந்த தியாகங்களை 

அறிந்தவை 

அந்தமண்ணும்  இந்தவானமும்தான் 

குருதியால் எழுதிய வரலாறை 

எரித்தாலும்

தோண்டி தோண்டி எடுத்து எரித்தாலும் 

சாம்பலாய் பூத்துக்கிடப்பது 

அதே கனவுதான்   



Share/Save/Bookmark

சனி, 11 பிப்ரவரி, 2023

 அதிவேக இலத்திரனியல் ஊடகவுலகில்   

முகவரி அற்று நான் வாழ்ந்தேன்  

ஒரு கனா கூட காணமுடியாமல் 

நித்திரையை தொலைத்திருந்தேன் 

தாய்நாடு இழத்தலின் வேதனையை 

உடலணுவெல்லாம் சுமந்திருந்தேன்

 

தேசக்குழந்தை பிறக்குமென்று 

தாலாட்டுப்பாடலொடு காத்திருந்தவர்

விடியுமென்று விடிய விடிய விழித்திருந்தவர் 

இதயம் எரிய எரிய   

யாருமறியாமல் உலகப்பந்தில் ஓடித்திரிந்தனர் 

 



 



Share/Save/Bookmark

ஞாயிறு, 1 ஜனவரி, 2023

கா.சுஜந்தனின் "ஊன்றுகோல்" நாவல்


 



Share/Save/Bookmark
Bookmark and Share