வெள்ளி, 26 டிசம்பர், 2014

அனுபவம் எனக்கு பல திட்டமிடல்களில் பேருதவியாய் அமைந்தது.

எந்த கட்டிடங்களுக்கும் வரைபட மூலங்கள் முக்கியமானவை. இக்கட்டிடங்களில் செய்யப்படுகின்ற வேலைகளை,சரியான அளவான அமைவிடங்களும் இலகுபடுத்தும்.இறுதி போர்க்காலத்திலும் இரு சத்திர சிகிச்சை கூடங்கள் நிரந்தரமாய் அமைக்கவேண்டியிருந்தன.ஒரு சத்திர சிகிச்சைகூடத்தை ஒரு மருத்துவமனையுடன் அமைத்தோம்.அதன் வரைபட மூலத்தை நான்தான் வழங்கினேன்.எமது மருத்துவப்பிரிவால் அச்சத்திரசிகிச்சைகூடம் மக்களுக்குமாக அமைக்கப்பட்டது. அடுத்த சத்திரசிகிச்சைகூடம் இரகசியமாய் அமைக்கவேண்டியிருந்தது. முதலில் அதற்கான வரைபட மூலத்தை எமது தலைமைதான் தேர்ந்தது.அது shock of sober முறையில் மாடி வடிவில் இருந்தது.நானும் ஒரு வரைபடமூலத்தை கொடுத்திருந்தேன். அது நிலத்திற்கு கீழ் y வடிவில் வரும்.வாகனம் உள் வந்து v பாதையால் வெளியில் போகும். எனது வரைபடமூலம்தான் தலைமையால் தெரிவாகி கட்டப்பட்டது.எமது பகுதியில் நிரந்தரமாய் இயங்கிய பெரிய சத்திரசிகிச்சைகூடங்களின் வரைபட மூலங்களில் எனக்கும் ஒரு பங்கு இருந்தது.இந்த அனுபவம் எனக்கு பல திட்டமிடல்களில் பேருதவியாய் அமைந்தது.


Share/Save/Bookmark

வெள்ளி, 19 டிசம்பர், 2014

மூத்தவனும் இளையவனும்மூத்தவன் மூன்று நேரம்
சாப்பிட்டு ,
இடைக்கிடை
கடைகளிலும் வெட்டி வருவான்
இளையவனோ களமுனையில்
காலை உணவு இரவில் வரும்
சிலவேளை புளித்தாலும்
மிச்சம் விடுவதில்லை
நாளை உணவு கிடைக்குமோ
கிடைக்காதோ
எல்லாம் எம் கையில் இல்லை  
மூத்தவன் கறியில் உப்பு பார்ப்பான்
இருக்கும் உணவோடு
முட்டைப்பொரியலும் கேட்பான்
காலை மாலை என குளித்து
மடிப்பு கலையா உடுப்போடு
உந்துருளியில் வலம் வருவான்
இளையவனோ
பலநாள் போட்ட உடுப்போடு
ஈரம் ஊறி குளிர் பிடித்தாலும்
மாற்றி விட ஆள் இல்லாமல்
சென்றியில் குறிபார்த்து தவம் இருப்பான்    

இளையவனுக்கு ஓய்வில்லை
படுக்க இடமில்லை
கோழித்தூக்கமே வாழ்க்கையாயிற்று
சதா முகம் வீங்கியே இருப்பான்
மூத்தவனுக்கும்
முகம்  வீங்கியே இருக்கும்
மிதமிஞ்சிய நித்திரையால்    

தாயிற்கு பிள்ளைகள்
இரு கண்கள்போல்
ஆனந்தமானாலும்
கவலையானாலும்
கண்ணீர்
இரு கண்களிலிருந்தும் தான்

Share/Save/Bookmark

திங்கள், 15 டிசம்பர், 2014

போராளிகளின் வாழ்க்கையில் வருகின்ற துன்ப துயர்களை காலம் கரைப்பதில்லை

போராளிகளின் வாழ்க்கையில் வருகின்ற துன்ப துயர்களை காலம் கரைப்பதில்லை.அன்று அண்ணையை சந்தித்தோம்.அடுத்த நாள்கருணா” எதிர் நடவடிக்கையிற்கு  வெளிக்கிடவேண்டும்.அண்ணையின் முகத்தில் ஆடவில்லை. எல்லோர் முகத்திலும் சோகம் அப்பிக்கிடக்கிறது.அண்ணா சொல்கிறார் " ஒரு சத்திரசிகிச்சை அணி போதாது ,இரண்டு பக்கமும் எங்கடதான்" மதிப்புக்குரிய மூத்தமருத்துவர் ஒருவரின் பெயரை சொல்கிறார்.அடுத்தநாள் புறப்படுகிறோம். மனது அந்தரப்படுகிறது. மாத்தையாவிற்கு எதிர் நடவடிக்கையிற்கு நிற்கும் போதும் இதே சஞ்சலம் இருந்தது.நல்ல காலம் காயம்வராததால் தப்பிவிட்டேன்கருணாவின் பக்கத்தில் நிற்கின்ற சத்திரசிகிச்சை அணியும் நாங்கள் பயிற்றுவித்து உருவாக்கிய அணிதான். அவர்கள் நல்லாச்செய்வார்கள் என்ற நம்பிக்கை மனதில் சிறு சந்தோசத்தைதர  அந்த அணியினரின் முகங்கள் ஒன்றன் பின் ஒன்றாய் மனதில் வந்துபோகிறது.அவர்கள் அனுப்பிய  Walkman  உம் Oxford  English Dictionary  உம் போனமாதம்தான் கிடைத்தது.அவர்கள் எங்களின் உடன்பிறவா சகோதரர்கள்.இவற்றைவிட பல தடவைகள்  ஜெயசுக்குறு எதிர் நடவடிக்கையில் காயப்பட்டு எம்மால் காப்பாற்றப்பட்ட பலர் அங்கால் நிற்கிறார்கள்.பலர் செஞ்சோற்றுக்கடனுக்காக நிற்கிறார்கள்.நடவடிக்கை முடியும் வரை மனது பட்ட அவஸ்தையை எப்படி எழுதுவது?   காயப்பட்டுவந்தவர்களில் எந்தப்பாகுபாடும் காட்டப்படவில்லை.   மாவீரர் என்பது உயர் கௌரவம். போராட்டத்திற்கு சென்று அநியாயமாய் இறந்தவரால் எம்மனது என்றும் ஆறாதபுண்தான்.  


Share/Save/Bookmark

ஞாயிறு, 14 டிசம்பர், 2014

போரின் இறுதிவரை

95,96 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலிருந்து மக்கள் வன்னிக்கு இடம்பெயர்ந்த போது மக்கள் தொகை வீக்கமாய் பெருத்தது.மக்களின் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்வது வன்னியின் மருத்துவ செயப்பாட்டு அணிக்கு பெரும் சவாலாக இருந்தது.அந்தக்காலத்தில் மக்களுக்கு கடமையாற்றிய  அனைத்து மருத்துவ சுகாதார உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் போற்றப்படவேண்டியவர்கள்.அனைத்து மருத்துவ அடிப்படைகளும் கஷ்டங்களின் மத்தியில் உருவாக்கப்பட்டன.


அந்த காலத்தில் அங்கு மக்களுக்கான கண் பார்வை திருத்தம்  ( Refractory  error correction  )- (Optometry ) ஒரு அணியை உருவாக்கினேன். இந்த அணிக்கூடாக மக்கள் தங்களுக்கு உரிய கண்ணாடிகளுக்கான prescription பெறக்கூடியதாய் இருந்தது. 1999 ஆம் ஆண்டு கிளி முல்லை மாவட்டங்கள் உள்ளீடாய் எமது கட்டுப்பாட்டு பிரதேசத்தில் உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் சுகாதாரவைத்திய அதிகாரி பிரிவுகளுக்கு ஊடாக கண் பரிசோதனை செய்து சுமார் 2000 மாணவர்களுக்கு unicef நிறுவனத்தின் உதவியோடு கண்ணாடிகள் வழங்கினோம்.சமாதானகாலத்தில் வடகிழக்கின் ஏனைய பிரதேசத்திலும் தம்பணியை இவ்வணி சிறப்புற செய்திற்று.போரின் இறுதிவரை இவ்வணி செயலாற்றியது குறிப்பிடத்தக்கது.


Share/Save/Bookmark

வியாழன், 11 டிசம்பர், 2014

குழந்தையின் மனதில் கடவுள் உண்டு

மனிதரில் வேற்றுமை இல்லை
மறு இனத்தை,மதத்தை மதிக்காதவர்
தன் இனத்தை,மதத்தை மதிப்பவறல்ல
"விடுதலை/சுதந்திரம்"இனம் மதம் கடந்தது
வாழ்வின் அத்திவாரம்

குழந்தையின் மனதில் கடவுள் உண்டு
அவ்மனதை சேறாக்குகிறான் மனிதன்  
"அதிகாரம்/ஆணவம்" அது நோய் அல்ல
அதையும் கடந்தது

 உயிரின் முதல் அசைவை
அறிந்தவள் அம்மா
அது "வலி"தராத உதை

எங்களுக்காய் போராடி ,அங்கமிழந்து
போரின் பின் உதவிகோரும் /பெறும்
அவன்முகத்தை பத்திரிகையில் பார்க்கையில்
வீழ்கிறது
நொறுங்கிய  இதயமும்
கடைசிச்சொட்டு கண்ணீரும்Share/Save/Bookmark

சனி, 6 டிசம்பர், 2014

மருத்துவசேவை

வன்னியின் இறுதிப்போர்க்காலத்தில் ஸ்ரீலங்காவின் ஆழ ஊடுருவும் படையணி மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தது.இந்த படையணியின் கிளைமோர்த்தாக்குதலால் மருத்துவ ஊழியர்,பாடசாலை மாணவர்,பாதிரியார்,உதவி அரச அதிபர்,முதலுதவியாளர்,சாதாரண மக்கள் ,புலிகள் என  பலர் கொல்லப்பட்டனர்.எனவே சில பிரதேசங்கள் அதிக அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருந்தன.குறிப்பாக மன்னாரில் எமது கட்டுப்பாட்டு பிரதேசம் , நெடுங்கேணி ,ஒட்டுசுட்டான் பகுதிகளை சொல்லலாம். இந்த பிரதேசங்களில் வாழ்ந்த மக்களின் மருத்துவ தேவைகளை இயன்றவரை பூர்த்தி செய்வதற்கு எம்மாலானவற்றை செய்தோம்.மருத்துவ நிலையங்களுக்கு எம்மால் பயிற்றப்பட்ட மருத்துவர்களை நியமித்து நேரடியாய் மேற்பார்வை செய்து வந்தோம்.கௌசல்யன் நடமாடும் மருத்துவ சேவையை தேவையான ஊர்களுக்கு சென்று நடத்திவந்தோம்.எங்கள் உயிர்களை பணயம் வைத்து எங்கள் மக்களுக்கு சேவையை வழங்கினோம். ஒட்டுசுட்டானில் ,பெரியமடுவில் சேவை செய்த மருத்துவர்கள் இன்று எம்மோடு இல்லை.
எமது நடமாடும் மருத்துவ சேவை நீண்டகாலமாய் இயங்கிவந்தது.இச்சேவையினர் மருத்துவசேவை குறைந்த இடங்களுக்கு சென்று தங்கள் சேவையை செய்வதுடன் விடுதலைப்புலிகளின் நிர்வாகத்திற்கு கீழ் இருந்த அனைத்து சிறுவர்,முதியோர்,வேறுபாதிப்புற்றோர் நிலையங்களுக்கு கிரம ஒழுங்கில்  சென்று மருத்துவசேவையை  வழங்கி வந்தனர். இந்த சேவை அணியினரின் மீது ஸ்ரீலங்காவின் ஆழ ஊடுருவும் படையணி இருதடவைகள் கிளைமோர்த்தாக்குதல் நடத்திற்று. ஆனைவிழுந்தானில் எமது ஒரு ஊழியரை நாம் இழந்தோம்.நடமாடும் சேவை  அணியினர் போரின் இறுதியில் நடமாடமுடியாமல் போனாலும் ஒரு நிலையான இடத்தில் இருந்து இறுதிவரை மக்களுக்கு சேவையை வழங்கினர்

இறுதி மூன்று வருட போர்க்காலத்தில்  மக்களுக்கான  மருத்துவ குறைநிரப்பி சேவையை இயன்றவரை வழங்க முயற்சித்தோம்.


Share/Save/Bookmark

புதன், 19 நவம்பர், 2014

மாணவப்பிஞ்சுகள் உயிர் துறந்தன

கார்த்திகை மாதமெனில் பல நினைவுகள் வரிசையில் வரும். 27/11/2007அன்று மாவீரர் நாள் மாணவ முதலுதவியாளர்கள் முதலுதவி கடமைக்காக , மதியப்பொழுதில் ஐயன்கன்குளம் திலீபன் மருத்துவ மனையில் இருந்து ஆலங்குளம் துயுலும் இல்லத்திற்கு நோயாளர் காவும் வண்டியில்(Ambulance) சென்றனர் .   ஸ்ரீலங்கா இராணுவத்தின் கிளைமோர்த்தாக்குதலில் பதினொரு பாடசாலை மாணவப்பிஞ்சுகள் உயிர் துறந்தன.ஐயன்கன்குளம் கிராமமே சோகத்தில் மூழ்கியது.நான் குறுகிய காலம் திலீபன் மருத்துவமனைகளுக்கு பொறுப்பாக இருந்தேன்.அப்போது தமீழீழ சுகாதாரசேவைகளின் பத்தாயிரம் முதலுதவியாளர்களை உருவாக்கும் திட்டத்தின் கீழ் திலீபன் மருத்துவமனைகளிலும் முதலுதவிவகுப்புகளை ஆரம்பித்துவைத்தேன்.   
  கடவுளே!உயிர்களை காக்கவே முதலுதவியாளர்களை உருவாக்கினோம் ,இழப்பதற்கல்ல.    


Share/Save/Bookmark

ஞாயிறு, 9 நவம்பர், 2014

காத்திருப்பு

ஆயிரம் ரூபா பணத்தை
தட்டிப்பறித்தான் தாதா
பணம் இழந்தவன் குளறினான் 
அயல்களுக்கு கேட்டது
அயல்கள் வந்தன உதவி புரிவதுபோல்
புரிந்தன உதவி தாதாவிற்கே 
பணம் பத்தும் செய்யும்
வெள்ளைப்புறா நரியாயிற்று

தாதா விழா எடுத்து
ஐம்பது சதத்தை திருப்பி கொடுக்கிறான்
கொல்லைப்புரத்தில் உடுபுடவை  மட்டுமல்ல 
அத்திவாரமேபறிபோகிறது
ஒட்டுண்ணி  ஐம்பது சதத்தை
வரப்பிரசாதம் என்கிறான்
அணில் ஏறவிட்ட நாயாய் "காத்திருப்பு"

Share/Save/Bookmark

சனி, 8 நவம்பர், 2014

கடைசி நிமிடங்கள்

கள அருகிலும்
மருத்துவமனைகளிலும்
கண் மூடிப்போனவரின்
கடைசி நிமிடங்கள் - மனதில்
ஏற்றப்பட்ட ஆணிகள்

அன்றும் அப்படித்தான்
" என் அம்மாவிற்கு----"
அவன் கண் மூடினான்
பத்திரிகையில் விலாசம் தேடி
வன்னேரிக்குளத்திலிருந்து 
வேரவில் போனேன்
வளர்பிறையோடு  

இடம்பெயர்ந்திருந்த
ஏழைக்கொட்டிலில்
அம்மாவோடு பிள்ளைகளும்
எப்படிச்சொல்வது ?
சொல்லாமலே விடைபெற்றோம்   

பத்துவருடம் கழித்து
வள்ளிபுனத்தில்
அம்மாவை காண்கிறேன்
வயிறு பிளந்து குடல் தெரிய
முகம் வியர்த்துக்கிடக்கிறாள்
எல்லாப்பிள்ளைகளையும்
"செல்" தின்றதாய் சொல்கிறாள்
பிள்ளை!என்னைக்காப்பாற்றாதே!
அவள் தப்பமாட்டாள்  
அந்தத்தாயிடம்
அவள் மகன் சொன்னதை
ஒப்புவிக்கிறேன்
" அடுத்தபிறப்பிலும்
உனக்குத்தான் பிள்ளையாய்
பிறப்பேன் அம்மா.
அம்மா நீ அழக்கூடாது,
நீ அழக்கூடாது."
வாயில் ஒருபுன்சிரிப்போடு
அம்மாவும் கண் மூடிப்போனாள்
Share/Save/Bookmark

வெள்ளி, 24 அக்டோபர், 2014

எங்கே அந்த "பாதங்கள்"?

மயிரிழையில்
உயிர்தப்பிய கணங்களால்
நீளமானது என்வாழ்வு

கடும்பயிற்சியோடும்
பொறுப்பை சுமந்து
ஓய்வுமறந்த உடல்
நோயைச்சுமக்கிறது

பறவைகளோடு
பறந்து திரிந்த மனம்
பாலைவனத்தில்
குந்தியிருக்கிறது
பாறாங்கல்லாய்

நெடுந்தீவிலிருந்து
அம்பாறைவரை
மன்னார் தொடங்கி
சம்பூர்வரை
சுவடுகள் இருக்க
எங்கே அந்த "பாதங்கள்"?    


Share/Save/Bookmark

வெள்ளி, 19 செப்டம்பர், 2014

இவர்கள் எங்கள் மனங்களில் நிலைத்திருப்பார்கள்

கந்தசாமி ஐயா , ஒரு மூத்த பொது சுகாதார பரிசோதகர்.முன்னாள் கிளி முல்லை மாவட்டங்களின் பதில் மலேரியா தடை பொறுப்பதிகாரி, பதில் கிளிநொச்சி சுகாதரவைத்திய அதிகாரி. அன்பு ,நேர்மை மிக்க உழைப்பாளி.யாழ் அளவெட்டியை பூர்வீகமாய் கொண்டவர்.தொண்ணூறுகளில் மக்கள் யாழில் இருந்து பெருந்தொகையில் வன்னிக்கு  இடம் பெயர்ந்தபோது தமது ஊழியர்களுடன்  ஓய்வின்றி உழைத்த பெருமகன்.இக்காலத்தில் மலேரியா பெரும் பூதமாய் வன்னியை குத்தகைக்கு எடுத்திருந்தது. ஈவு இரக்கமின்றி பல உயிர்களை காவு கொண்டது.  இலங்கையின் மொத்த மலேரியா நோயாளிகளில் எழுபது வீதமான மலேரியா நோயாளிகள் வன்னியில் இருந்தனர்.மீண்டும் மீண்டும் இடப்பெயர்வுகள் அதிக துன்பங்களை தந்த நேரத்தில் அவரது கடமையை நான் பொறுப்பேற்றுக்கொண்டேன்.
எப்போதும் பொது நலனோடும் அதீத சமய நம்பிக்கைகளோடும் வாழ்ந்த கந்தசாமி ஐயா  கிளிநொச்சி வன்னேரிக்குளம் யோகர் சுவாமிகள் திருவடி நிலைய முதியோர் இல்லத்தை நடுநாயகமாய் நின்று வளர்த்தெடுத்தார். முதியோர் இல்லத்தோடு தென்னந்தோட்டத்தையும்  உருவாக்கினார். இல்லம் தனது தேவைகளை யாரையும் நம்பியிருக்காமல் தானே பூர்த்தி செய்யவேண்டும் என விரும்பினார்.   தள்ளாத வயதினிலும் அவரது உழைப்பும் கூர்மையும் குறைந்திருந்ததாய் நான் உணரவில்லை. எங்கள் அன்பான ஐயா விபத்தில் கால் முறிந்து பின் இறந்து போனார். முதியோர் இல்லத்தில் அவரது இறுதி நிகழ்வு நடை பெற்றது.இடையில் அவரது உடலை நான் பொறுப்பேற்று,எனது எல்லா வெளிக்கள ஊழியர்களையும் அழைத்து எமது அலுவலகத்தில் ஒரு அஞ்சலி நிகழ்வை நடாத்தினேன்.

காலம் வேகமாய் ஓடிவிடும் எனினும் இவர்கள் எங்கள் மனங்களில் நிலைத்திருப்பார்கள்   


Share/Save/Bookmark