வெள்ளி, 27 நவம்பர், 2015

தண்டவாளத்தை
புகையிரதம் இணைக்க
நீ பிரிந்துபோகிறாய் செந்தூரா!
உன்பிரிவை
மனம் இம்மியளவும் ஏற்கவில்லை
அழுவதற்கும் என்னிடம் சக்தியில்லை
குருதி வழங்கலாம்
ஆனால் எம்மை பிழிந்து அல்ல
தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்
செந்தூரர்களே! 


Share/Save/Bookmark

ஞாயிறு, 11 அக்டோபர், 2015

டாக்டர் கெங்காதரன் ஞாபகார்த்த மருத்துவமனை உருவாக்கவேண்டும்

1984 ஆம் ஆண்டு நானும் அருணனும் யாழில் கஷ்டப்பட்ட சில இடங்களில் இலவச கல்வி நிலையங்களை உருவாக்கினோம்.நாங்களே கொட்டில்கள் போட்டு,நிலம் மெழுகி, இருப்புகள் செய்து அவற்றை உருவாக்கினோம். அவற்றை தொடர்ந்து எம்மால் நடாத்தமுடியவில்லை.
1999 இல் கிளிநொச்சியில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையூடாக பதினைந்து வயதிற்குள் பாடசாலை விலத்திய மாணவர்களை அவர்களுக்கு தேவையான பாடசாலைப்பொருட்களை வாங்கிக்கொடுத்து பாடசாலைகளுடன்   நேரடி தொடர்புகொண்டு மீள இணைத்தோம். பின் அந்த மாணவர்களை local NGO க்களுடன் தொடர்புபடுத்திவிட்டோம்.  
1999 ஆம் ஆண்டே சுகாதாரவைத்திய அதிகாரி பணிமனைக்குரிய தொண்டர்களுக்கு OXFAM நிறுவனத்தின் நிதியுதவியுடன் பத்தாம் வகுப்பு கற்கையை மீளவழங்கி பரீட்சையில் நல்ல பெறுபேறுகளை பெற உதவினோம். இதில் பலர் அடுத்தவருடமே குடும்ப மருத்துவமாது கற்கைக்கு உள்வாங்கப்பட்டார்கள்.
2007,2008 இல் வீட்டிற்கு ஒருவர் போராட்டத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டபோது எமது தலைமையுடன் நேரடியாய் தொடர்புகொண்டு உயர்தரத்தில் கெட்டிக்கார  விஞ்ஞான   மாணவர்களை ஒன்றாக்கி கற்பித்தோம். முக்கால்வாசி மாணவர்கள் பல்கலைக்கு தெரிவானார்கள்.
திலீபன் மருத்துவமனைகளுக்கு குறுகியகாலம் பொறுப்பாய் இருந்தபோது
மருத்துவமனைகளுடன் இலவச கல்வி நிலையத்தை உருவாக்க எண்ணியிருந்தேன். அதற்கு  அவகாசம் போதவில்லை.


டாக்டர் கெங்காதரன் ஞாபகார்த்த மருத்துவமனை உருவாக்கவேண்டும் என மனம் விரும்புகிறது. கடவுள் விரும்புகிறாரோ தெரியவில்லை.


Share/Save/Bookmark

வெள்ளி, 9 அக்டோபர், 2015

மலரன்னையின் " வேர் பதிக்கும் விழுதுகள் " சிறுகதைத்தொகுதி

ஈழத்தில் குறிப்பிட்டுச்சொல்லக்கூடிய பெண் எழுத்தாளர்களுள் ஒருவரான மலரன்னையின் " வேர் பதிக்கும் விழுதுகள் " சிறுகதைத்தொகுதி வெளியாகியிருக்கிறது. மலரன்னை அவர்கள் மூத்த எழுத்தாளர் கச்சாயில் இரத்தினம் அவர்களின் மகள் என்பதும் எழுத்தாளர் மலரவனின் தாயார் என்பதும் குறிப்பிடத்தக்கது.    
Share/Save/Bookmark

சனி, 26 செப்டம்பர், 2015

நேற்றைய நாளின் மனஇறுக்கம்

இன்று (27/09)
என் ஒன்றுவிட்ட சகோதரனின்
நினைவுநாள்
கிளி மீட்புப்போரில் (27/09/98)
கிளி குளக்கட்டில் எமைப்பிரிந்தான்
யாழ் பல்கலை கல்வியைக்கைவிட்டு
கவியரசன் ஆனான் - இன்று
துயிலுமில்லத்திலும் அவன் இல்லை
படமாயும் அவன் இல்லை
தெரிந்தவர் மனங்களில் மட்டும்
நேற்றைய நாளின் மனஇறுக்கம்
இன்றும் தளரவில்லை  Share/Save/Bookmark

செவ்வாய், 15 செப்டம்பர், 2015

திலீபனின் நினைவுடன்
Share/Save/Bookmark

திங்கள், 14 செப்டம்பர், 2015

ஒரு காலத்தை பூதம் விழுங்கிக்கொண்டிருக்கிறது

ஒரே நாட்டில்
பெரு இனத்தின் அடக்குமுறைக்கெதிராய்  
சிறு இனம் போராடிற்று
பெரு இனம் ஒரு அரசு
பல அரசுகளின் ஒத்தாசையும் இருந்திற்று
சிறு இனத்திலும்
சிறு பகுதியே பளு சுமந்திற்று
சில குடும்பமாயும் பளு சுமந்திற்று
போராட்டத்தை
சர்வதேசம் நசுக்கிற்று
இழப்புகளின் தோல்வியை
விடுதலையின்  தோல்வி விஞ்சிற்று
பளு தூக்கியவர் கஞ்சிக்கு ஏங்கினர்
தணல் மீது உறங்கினர்
தத்தளித்த வாழ்வில் குடும்பமாய்

மறு பக்கமும் இருந்தது
சிறு இனத்தின் ஒரு பகுதி
கலக்கிய குட்டையில் மீன் பிடிக்கிறது
அறுவடையை களவாடி
வரலாற்றை திரிக்கிறது
உயிர்ப்பூக்கள் இல்லாத பூமியில்
காகிதப்பூக்கள் கொண்டாடப்படுகின்றன

இப்படியே ஒரு காலத்தை

பூதம் விழுங்கிக்கொண்டிருக்கிறது


Share/Save/Bookmark

வியாழன், 3 செப்டம்பர், 2015

மேகம் அழுதாலும் ,கடவுள் அழுதாலும் கரைக்கமுடியா கல்லாகிறது உலகு
Share/Save/Bookmark

வியாழன், 30 ஜூலை, 2015

சதா சகாக்களின் நினைவில்--

விடுதலை இயக்கமும்
ஒரு குடும்பம்தான்
இரண்டு/மூன்று தலைமுறைகள்
ஒன்றாய் வாழ்ந்தன
கவலைகள் இருந்தன
பிணக்குகள் இருந்தன
இருந்தும்
மகிழ்வுக்கு எல்லை இல்லை
சதா சா விழுங்கிய போதும்
மக்கள் நினைவில் வாழ்வு கரைந்திற்று
பிறந்த போது
பல உறவுகள் இருந்தாலும்
இயக்க குடும்பமே
உறவின் மேலாயிற்று    
உலக சூழ்ச்சியால்
குடும்பகூடு எரிந்தாலும்
எஞ்சியோர்
அகிலமெங்கும் சிதறினர்
அநாதைகள்  ஆகினர்
கல்லில் நாருரித்து  
வாழ்வை மீள இழுத்தாலும்
ஒட்டவில்லை பூமியில்
சதா சகாக்களின் நினைவில்
பாரமாகிறது மனசு

நகரமுடியாமல்


Share/Save/Bookmark

செவ்வாய், 21 ஜூலை, 2015

எத்தனை காலம் பொய் வாழும்?

எனது
தாயை தந்தையை பார்த்து
பல ஆண்டுகள் கடந்துவிட்டன
தனித்து,தள்ளாத வயதில்
படலையை பார்த்து
எத்தனை காலம் வாழ்வர்?
வேளைக்கு உணவு ?
நோயிற்கு மருந்து?
விடியாத வீட்டில் வாழ்வு?
என் மனக்கண்ணுக்கு தெரிகிறது
எப்படிச்சொல்வது ?
நான் வரமாட்டேன் என்று
சொல்கிறேன் பொய்
"விரைவில் வருவேன் "
உயிரை கையில் பிடித்து காத்திருப்பு
எத்தனை காலம் பொய் வாழும்?


Share/Save/Bookmark

திங்கள், 20 ஜூலை, 2015

போராளி

எனக்கு
இனம்,மதம்,மொழி
பிரிவு இல்லை
மனிதரில் வேற்றுமை இல்லை
மனித சமத்துவமே எல்லை
எல்லையே என் காலை மாலை இரவு
உயிர் காத்தல் தொழில்
அன்பு : நான்வாழும் வெளி
என் அடையாளம்: போராளி      


Share/Save/Bookmark

வெள்ளி, 17 ஜூலை, 2015

என் இனத்திற்கு படிப்பினையாகட்டும்


மண்டேலா பெரும்பான்மை
ஈழத்தமிழினம் சிறுபான்மை
பெரும்பான்மை  பெரும்பான்மைதான் 
சிறுபான்மை இனத்தவர் கூட
காவடி தூக்கினர் பெரும்பான்மையினருக்காய்
படித்தவர் பலர் ஆதாயம் பார்த்தே
ஆதரவு வழங்கினர்  
இதுதான்
எங்கள் மண்ணிலும் நடந்தது நடக்கிறது
யார் மீதும் குற்றமில்லை
எல்லாம் வியாபாரம்தான்

சிறுபான்மை யினருக்கு
துணையாய் கூட நாடில்லை
முதுகில் குத்த நாடு இருந்தது
பெரும்பான்மையிற்கு  நாடும்
துணையாய் நாடுகளும் இருந்தன 
சிறுபான்மையினரோடு சேர்வதால்
ஆதாயம் இல்லை - அதனால்
சிறுபான்மையினரிலும் சிறுபான்மையே
இனத்திற்காய் பளு தூக்கிற்று
தோல்வியிலும்
எழமுடியாமல் சருகாயிற்று
எல்லாம் யதார்த்தம்தான் - இது
என் இனத்திற்கு படிப்பினையாகட்டும்Share/Save/Bookmark

வியாழன், 16 ஜூலை, 2015

என் பணி செய்தேன்


எமக்கென்று ஒரு நாடு இருந்தது
பிச்சைக்காரர் அற்ற நாடு அது
எங்களின் உழைப்பில் ஒளிர்ந்த நாடு அது 
எண்களில் நாம் சிறியோர்தான் - இருந்தும்
உழைப்பில் உயர்ந்தோர் ஈழ வரலாற்றில் 
யாரின் கண்பட்டதோ
எதிரியோடு உலக கயவர் எல்லாம்
படை ஏவினர் எம்மீது
குழந்தை குஞ்சுகளையும் எம்முன் கொன்று
எம் உளம் சிதைத்தனர்

நாடு இழந்தேன்  ஏதிலி ஆனேன்
அந்நியமண்ணில் நாயாய்த்திரிந்தேன்  
அகதியானபோதும் சாட்சியானேன்
என்ன ஆச்சரியம்
பெரிய இடத்தவர் எல்லாம்
ஒரு அகதியை சந்தித்து போனார்கள்
இரவுகளில் நித்திரை இல்லை
நிம்மதி இல்லை
ஒன்றரைவருடம் செக்கு இழுத்தேன்
என் இனமே!
என்னை உனக்கு தெரியவேண்டாம்
என் பணி செய்தேன்
எனக்கு அது போதும்       Share/Save/Bookmark

செவ்வாய், 14 ஜூலை, 2015

"இனப்படுகொலை "

"இனப்படுகொலை "
ஜனநாயக மொழியிலும் சொல்லப்பட்டாயிற்று
உலகம் எதிர்பார்ப்பது என்ன?
வேறு என்ன மொழியில் சொல்லவேண்டியிருக்கிறது ?
நல்லிணக்கமா? அது என்ன?
செத்தவீட்டில் கல்யாணமா?

கலாச்சாரம் அமிலமாக்கப்படுகிறது
நிலம்,கடல் திட்டமிட்டு அபகரிக்கப்படுகிறது
தொழில் தங்கு தொழிலாகிறது
சிங்களக்குடியேற்றம் வேகமாகிறது
தலையிருக்க உடலெங்கும் ஓட்டைகள்
இராணுவமும் புலனாய்வும் வாழ்வை நெரிக்கிறது
கறையான் நிரம்பிய புத்தகமாய்க்கிடக்கிறது  தேசம்
நல்லிணக்கமா? அது என்ன?
சரணடைந்தவர்  எங்கே?
செவ்வாய்க்கிரகத்திற்காய் போனார்கள்

எந்த முகத்துடன் நல்லிணக்கம்?  

பிள்ளை துயின்ற இல்லத்தை
கிளறிய சிங்கமனிதனுடன்
தாய் கைகுலுக்குவாளா?
விடுதலைக்கான ஆத்மாக்கள்
தாம் நேசித்த உயிர்களுக்கு அருகிலே
சதா விழித்திருக்கும்
எந்தவித எதிர்பார்ப்புமின்றி
நல்லிணக்கமா? அது என்ன?


Share/Save/Bookmark

சனி, 11 ஜூலை, 2015

அனைத்து உணவகங்கள்,வெதுப்பகங்களில் கடமை செய்யும் ஊழியர்களுக்கான மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு ஊழியர்களுக்கான அடையாள அட்டைகள் கிளி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையால் முதல் முதலாக இலங்கையில் வழங்கப்பட்டன ( 2000ஆம் ஆண்டுக்காலப்பகுதியில்),அனைத்து ஊழியர்களின் தனிநபர் சுகாதாரம் உட்பட்ட மருத்துவ நலன்கள் நேரடியற்றமுறையில் கண்காணிக்கப்பட்டது.கிரம ஒழுங்கில் worm treatment வழங்கப்பட்டது.      2006ஆம் ஆண்டுக்குப்பின் தமீழீழ சுகாதாரசேவைகளால் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டது. 2008 இல் தமீழீழ சுகாதாரசேவைகளால் நீதி நிர்வாகத்தினரின் உதவியுடன் வெளிடப்பட்ட உணவுச்சட்டங்கள் ,பாதுகாப்பான உணவு வழங்கலுக்கு
முக்கியமானவை.  


Share/Save/Bookmark

புதன், 8 ஜூலை, 2015

பசிக்குதுநீ இறந்து கிடந்தாய் மகளே!
தொட்டு தூக்க
என் இல்லாத கைகளை தேடினேன் மகளே !
இறுதியாய்
நீ கூறிய " பசிக்குது அப்பா------------"
முடியவில்லை மகளே!
உன்னை புதைத்துவிட்டு கூட 
போகமுடியவில்லை மகளே!
ஒரே நிம்மதியில் செல்கிறேன் மகளே!
நீ அம்மாவிற்கு துணையானாய் மகளே!
மீள ஒரு பிறப்பிருந்தால்-----Share/Save/Bookmark

சனி, 4 ஜூலை, 2015

இளமையில் பயிர் செய்

மனிதனுக்கு சுக துக்கம் வரும் போகும்
இப்படி வரக்கூடாது
ஐம்பது வயது நெருங்குகையில்
சொந்த மண்விட்டு,வாழ்நாளில் நேசித்த மக்களை பிரிந்து
பாச உறவுகளை இழந்து
"அகதியாகி "
புதிய மொழி உலகில் வேரற்ற மரமாகி
குடும்ப சுமைபோக்க
இயந்திர உலகில்
நிரந்தரமற்ற நேர காலமற்ற வேலை
"இளமையில் பயிர் செய்" எவ்வளவு உண்மை
தொலைபேசி அழைக்கிறது
பின்னேரம் வேலையிருக்கிறதாம், வா என்கிறான்
வெளிக்கிடப்போகிறேன்.Share/Save/Bookmark

வியாழன், 2 ஜூலை, 2015

அதுதான் இறுதி நம்பிக்கையா?

அதுதான் இறுதி நம்பிக்கையா?
வெள்ளைக்கொடியுடன் /
சமய குருவுடன் சரணடைவு
சரணடையுங்கள் ! பாதுகாப்பு தருவோம்
சிங்களம் ஒலிபெருக்கியில்
நம்பிக்கை கொடுத்தது
சர்வதேசம் தொலைபேசியில்
நம்பிக்கை கொடுத்தது
சரணடைவின் சித்திரவதைகள்
கொலைக்களமாய் இன்றும் விரிகிறது
வேதனையிலும்  சிங்களமுகம் கிழிகிறது
நம்பிக்கைவைத்த சரணடைவா?
சிங்களத்தை உலகறிய தாங்கிய வேதனையா?
இனியும் நம்பிக்கை கொள்ளலாமா?


Share/Save/Bookmark

சனி, 27 ஜூன், 2015

வருமுன் பாதுகாப்புப்பணி

மக்களை சுகாதார அறியுடையவராய் மாற்ற பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்தோம். மலேரியா தடைபகுதியின் பூச்சியியல் பிரிவு, தமீழீழ சுகாதாரசேவைகளின் பற்சிகிச்சைப்பிரிவு, தொற்று நோய்த்தடுப்பு பிரிவு களுக்கூடாக ஆயிரத்திற்கு மேற்பட்ட exhibition களை வன்னியில் போர்ச்சூழலில் நடாத்தியிருந்தாலும் கிளிநொச்சி சுகாதாரவைத்திய அதிகாரி பணிமனைக்கூடாக நடாத்தப்பட்ட நான்கு exhibition களும் பெரியளவில் நடாத்தப்பட்டன. 1999 ஆம் ஆண்டு அக்கராயன் மகாவித்தியாலயத்தில் நடாத்தப்பட்ட exhibition இணை சுமார் பத்தாயிரம் மக்கள் பார்வையிட்டனர். அக்கராயனிலும் வட்டக்கச்சியிலும் நடாத்தப்பட்ட exhibition களில் தமீழீழ மருத்துவக்கல்லூரியினரும் பங்கு பற்றியிருந்ததால் குறிப்பாக உயர்தரவகுப்பு விஞ்ஞான மாணவர்கள் மிகுந்த பயனடைந்தனர். exhibition களில் கலைநிகழ்ச்சிகளையும் தொடர்ச்சியாய் நடாத்தினோம். "குறைந்த விலையில் சத்துள்ள உணவு தயாரிப்பு " சத்துக்கள் பணவிரய விபரங்களுடன் உணவகத்தையும் வட்டக்கச்சியில் நடாத்தியிருந்தோம்.  மிதிவெடி, விபத்து பாதுகாப்பு, முதலுதவி, nutrition , தாய் சேய் பராமரிப்பு ,தொற்று நோய் தடுப்பு என பல விடயங்கள் விலாவாரியாக மக்களிடம் எடுத்துச்செல்லப்பட்டது. கௌசல்யன் நடமாடும் மருத்துவசேவை யுடனும் exhibition களை பாதுகாப்பு கேள்விக்குறியான பிரதேசங்களில் ( நெடுங்கேணி, தட்சணா மருதமடு, -----------)நடாத்தியிருந்தோம்.  

 எமது வருமுன் பாதுகாப்புப்பணியில் exhibition களையும் ஒருவடிவமாக பயன்படுத்தினோம். 1990 களின் பிற்பகுதியில் இலங்கையின்  தொற்று நோய்கூடியபிரதேசமாய் (குறிப்பாக மலேரியா,typhoid fever ) எமது பகுதி இருந்தது. 2000 களின் ஆரம்ப காலங்களில் இலங்கையின்  தொற்று நோய்குறைந்த பிரதேசமாய்  எமது பகுதி மாறிற்று.


Share/Save/Bookmark

செவ்வாய், 16 ஜூன், 2015

மீண்டது அந்தநாள் ஞாபகம்

1990
கோட்டையில் சண்டை
யாழ் மருத்துவமனை
மானிப்பாயிற்கு இடமாற்றம்
சுமார் நாற்பது  படுக்கை நோயாளிகளுடன்
நடு இரவில் மாவடி,வட்டுக்கோட்டையிற்கு
தனியொருவனாய் போனேன்
ஒரு கைவிடப்பட்ட வீட்டில்
கிணற்றுக்கு வாளி இல்லை
எதுவுமே இல்லை
பகுதிப்பொறுப்பாளரின்  தொடர்புவர
ஒரு நாள் ஆயிற்று
பிஸ்கட் உணவாயிற்று
பாடசாலை சிறு மேசை உதவியுடன்
வாழை இலையில் toilet எடுத்தேன்
படிப்படியாய் உதவிகள் கிடைத்தது
வசதிகள் பெருகின
பின் அந்தப்பகுதியிலேயே
நான்கு மருத்துவவீடுகள் வைத்திருந்தேன்
இருபத்தி ஐந்து வருடங்கள் கடக்கின்றன
இன்று
அன்று உதவி செய்த நண்பனின் தொடர்பு
மீண்டது அந்தநாள் ஞாபகம்      


Share/Save/Bookmark

புதன், 10 ஜூன், 2015

எலும்பில்லாதவரின் வேஷம், விஷம் கலந்த பாசம்

கையில்லை,காலில்லை,
இடுப்புக்குகீழ் வழங்கவில்லை
மனநிலை சரியில்லை
முன்னாள் போராளிகள்தானே!
உயிரை பணயம் வைத்துவாழ்ந்தவர்தானே
இதையும் தாங்கட்டும் !
உயிர்போக (முன் )
தெள்ளு கழன்று போகிறது
யதார்த்தம்தான்

எலும்பில்லாதவரின் வேஷம்

விஷம் கலந்த பாசம்


Share/Save/Bookmark

ஞாயிறு, 7 ஜூன், 2015

சில கேள்விகளுக்கு நான் விடை அளித்ததில்லை.

சில கேள்விகளுக்கு நான் விடை அளித்ததில்லை.
வன்னியில் இருந்து எப்படி மலேரியாவை  பிரித்தீர்கள்? பலர் கேட்டிருக்கிறார்கள் என்னிடம் .

எதுவுமே ஒரு நாளில் நடந்து முடிவதில்லை.  ஒரு புத்தகம் எழுதக்கூடிய வேலைத்திட்டங்கள் எங்கள் உழைப்பில் இருந்தது. இந்த அனுபவங்கள் பின்னாளில் சிக்குன்குன்யா,டெங்கு நோய்களில் இருந்தும் எம்மக்களை காக்க உதவிற்று. ஆளணிப்பற்றாக்குறை,பொருளாதாரத்தடை, மருந்துத்தடைகளுக்கூடும் ஸ்ரீ லங்காவைவிட பல படி உயரத்தில் எமது வருமுன்காப்பு பணி இருந்தது.இதனால் இருபகுதிகளும் தொற்று நோய்த்தடுப்பிலும் வேறுபட்டிருந்தன. வன்னிமண் வீரத்தை மட்டுமல்ல மக்கள் பணியையும் மறக்காது.
முழுமையான போர்ச்சூழலில் ஒரு தோளில் விடுதலைப்போராட்ட சுமையையும் மறு தோளில் மக்கள் பணியையும் இறுதிப்போர்க்கணம்வரை சுமந்தோம். 


Share/Save/Bookmark

திங்கள், 25 மே, 2015

முயற்சி இல்லாமல் உயர்ச்சி இல்லை                   பயிரில் கலந்த பசுமையை
                   பிரித்துவிட துடிக்கும் எதிரி
                   உயிரில் கலந்த வாழ்வை
                   உதறமுடியாமல் துடிக்கும் மக்கள் - அவர்
                   பெருமூச்சில் காயும் கண்ணீர்

                  இருள் களைந்து ஒளி வரும்
                  விலங்கு உடைய சுதந்திரவெளி திறக்கும்
                  முயற்சி இல்லாமல் உயர்ச்சி இல்லை


Share/Save/Bookmark

வெள்ளி, 22 மே, 2015

திலீபனிடம் ஒரு "அசட்டுச்சிரிப்பு"

1984
நானும் அருணனும்
ஊர் ஊராய் "களத்தில்" பத்திரிகை
விற்றுத்திரிந்தோம்
பொழுது புலர புறப்பட்டு
பொழுது சாய வருவோம்
அன்றும் ஒரு மதியம்
அரச உத்தியோகத்தர் ஒருவரின்
பேச்சில் தலைகுனிந்தோம்
நீங்கள் யாரடா? பள்ளிக்கூடம் தெரியுமாடா?
வீட்டில கஞ்சிக்கும் வழியில்லையா?
சாதித்தொழிலும் தெரியாதா?
நாம் எதுவும் கூறவில்லை
சைக்கிளை எடுத்து புறப்பட
மீண்டும் அழைத்தார்
உங்களுக்கு வெட்கமில்லையா?
நாம் எதுவும் கூறவில்லை
காசு தந்து பத்திரிகை கேட்டார்
அருணன் என்னைப்பார்த்தான்
நான் தலையாட்ட
காசுவாங்கி பத்திரிகை கை மாறிற்று
பாதை நீள நாம் கதைக்கவில்லை
அருணன் நடந்ததை திலீபனிடம் கூற
திலீபனிடம் ஒரு "அசட்டுச்சிரிப்பு"
பத்திரிகையை தொடர்ந்து வெளியிடவேண்டும் 


Share/Save/Bookmark

புதன், 20 மே, 2015

ஒரு சிறு பிரச்சனைதான்

ஒரு சிறு பிரச்சனைதான்
அதனால்
தாயும் சாப்பிடவில்லை
மகனும் சாப்பிடவில்லை
அதனால்
மகளும் சாப்பிடவில்லை
குடிசையில்
வறுமை நிரம்பியிருந்தாலும்
ஒரு நாளும் இப்படி நடந்ததில்லை
மகனும் மகளும் பள்ளிபோய் வந்தனர்
தாய் சமைத்துவைத்தும்
யாரும் சாப்பிடவில்லை
கதைபேச்சும் இல்லை  
தந்தையை முள்ளிவாய்க்காலில்
இராணுவத்திடம் ஒப்படைத்து
ஆறுவருடம்
தந்தையை தேடித்தேடியே
தாய் தேய்ந்து போனாள்
நேற்று மகன் சொன்னான்
அப்பா உயிரோடு இல்லை
அவங்கள் கொலை செய்திட்டாங்கள்  
அப்பாவிற்கு உரியதை செய்வம் அம்மா
தாய் குழம்பிப்போனாள்
கணவனே உலகம் என வாழ்பவள்
மகனை அடித்துவிட்டாள் 
ஒரு நாள் கழிந்தும்
குடிசையில் முன்னேற்றம் இல்லை
நேற்று தொலைபேசியில் கதைத்தேன்
இருவரும் தங்களில் பிழை என்றனர்
அழுதழுது
தங்களுக்குள் கதைக்கத்தொடங்கினார்


  


Share/Save/Bookmark

செவ்வாய், 19 மே, 2015

20/05/2008 பொழுது சாயும் நேரம்

20/05/2008 பொழுது சாயும் நேரம் , நான் விசுவமடுவில் நின்றேன். எனக்கு ஒரு அறிவித்தல் கிடைக்கப்பெற்றது. தளபதி பால்ராஜ் முல்லைத்தீவில் சாவு அடைந்துவிட்டதாகவும் postmortem report தருமாறு கேட்கப்பட்டேன். நான் உடனடியாய் கிளிநொச்சி அடைந்து வாமனையும் அழைத்துக்கொண்டு துண்டியை (postmortem செய்யுமிடம்) அடைந்தேன். நானும் வாமனும் postmortem செய்துவிட்டு எமது அலுவலகத்திற்கு வந்து  postmortem report யை உரியவர்களிடம் எழுதி கொடுத்தேன். இரவு 11.30 மணி இருக்கும் இரட்ணம் மாஸ்டர் வந்தார் . நாளை காலை குறிப்பிட்ட ஒரு இடத்தில் அஞ்சலி செய்வதாகவும் தலைவர் உங்களுக்கும் அழைப்பு விடுமாறு சொல்லியதாய் சொன்னார். நான் எனது வேலைப்பளு காரணமாய் அஞ்சலி நிகழ்விற்கு செல்லவில்லை.தலைவர் அதை புரிந்திருப்பார்.   


Share/Save/Bookmark

செவ்வாய், 12 மே, 2015

லோலோ இந்த சம்பவத்திலேயே காயமடைந்தார்.

அந்த நாள் , வைகாசி-12/2009. நான் சத்திரசிகிச்சைகூடத்தில் இருந்து அருகிலுள்ள ஓய்வு tent இற்கு வந்திருந்து ஒரு குத்தியில் குந்தியிருந்தேன். எனக்கு அருகில் இசைவாணனும் தனது பொய்க்காலை கழற்றிவைத்துவிட்டு குந்தி இருந்தார். எனக்கு முன்னாள் நின்று எமது தொற்று நோய்த்தடுப்பு பொறுப்பாளர் லோலோ   தொற்று நோய்த்தடுப்பு சம்மந்தமாக கதைத்துக்கொண்டு இருந்தார். திடீரெனெ ஷெல் வரும் சத்தம் அருகில் கேட்டது, வெடித்தவுடன் எரியத்தொடங்கியது.எங்களுக்கு பின்புறமாகவும் மேற்பக்கமும் எரிந்து கொண்டிருந்தது.நான் திடீரெனெ முன்பக்கமாய் ஓடினேன்.லோலோவும் ஓடிவிட்டார் . இசைவாணனை காணவில்லை . நான் குனிந்தபடி திரும்பிப்போனேன்.இசைவாணன் நிலத்தில் ஊர்ந்தபடி வந்துகொண்டிருந்தார். நான் குனிந்தபடி போய் பொய்க்காலை தூக்கிவந்து இசைவாணனிடம் கொடுத்தேன். அந்த பகுதியே எரிந்துகொண்டிருந்தது.சுற்றவர மக்கள் ஓலம் காதைகிழித்தது . லோலோ இந்த சம்பவத்திலேயே காயமடைந்தார். எனக்கு முதுகிலும் காலிலும் எரிகாயங்கள் ஏற்பட்டது.  


Share/Save/Bookmark

திங்கள், 11 மே, 2015

போற்றப்படவேண்டியவர்கள்

2009 இறுதிப்போருக்குப்பின் சுமார் 3 இலட்சம்  மக்கள் அரசால் செட்டிக்குள பகுதியில் நடாத்தப்பட்ட திறந்தவெளி முகாம்களுக்குள் அடைக்கப்பட்டனர். தொற்று நோய்களாலும் , உரிய மருத்துவ சிகிச்சை இன்றியும் மூவாயிரத்திற்கு மேற்பட்ட மக்களை இழந்தோம். முள்ளிவாய்க்கால் வரை தொற்று நோயில் இருந்து காத்த மக்களை இங்கு இழந்துபோனோம். மக்கள் துன்பங்களை ,கெடுபிடிகளை அனுபவித்தனர். அரசாங்கம் பொய்த்தகவல்களை வெளியுலகிற்கு சில  தமிழ் அதிகாரிகளின் துணையோடு சொல்லிற்று.
விடுதலைக்காய் போராடியவர் வாழ்வு நிர்க்கதியாயிற்று. உள் நாட்டிலும் வெளி நாட்டிலும் எம் மக்களுக்கு/போராளிகளுக்கு  உதவ தகுந்த தமிழர் கட்டமைப்புகள் இருக்கவில்லை.போராடிய மக்கள் தாங்களாக இழுத்து இழுத்து எழுந்தார்கள்.அரசியல் உள்நோக்கில் சில உதவிகள் தெளிக்கப்பட்டதை மறுப்பதற்கில்லை.
எம் மக்களின் காயங்கள்/ வேதனைகள்  மாறாத இக்காலத்தில் தங்களது வேதனைகளை/ காயங்களையும் தாண்டி வெளியுலகிற்கு உண்மையை துணிந்து வெளிப்படுத்திய நேரடிசாட்சிகள் என்றும் போற்றப்படவேண்டியவர்கள்.
  


Share/Save/Bookmark

வெள்ளி, 8 மே, 2015

சுதர்சன்

சுதர்சன், மருத்துவப்போராளியாய் ,களமருத்துவனாய் இரவு பகலென ஓய்வற்று உழைத்தவன். சுதர்சனை நினைக்கையில் கஜேந்திரன்,அன்பு,மணிமாறனின் நினைவுகளை தவிர்க்க முடியவில்லை.
  x ray technician, பல்மருத்துவன் பின் தமீழீழ சுகாதாரசேவையின் பல்மருத்துவப்பிரிவின் பொறுப்பாளானாகையில்  இன்னும் ஒரு படியுயர்ந்தான். அவனும் அவனின் பற்சிகிச்சைப்பிரிவும் பல பல ஆயிரம் மக்களுக்கு  அந்த போர்ச்சூழலிலும்  பற்சிகிச்சை வழங்கியமை போற்றப்படவேண்டியது.அவனின் பற்சிகிச்சைப்பிரிவு பற்சிகிச்சை வழங்க செல்லாத பாடசாலை புலிகளின் கட்டுப்பாட்டுப்பிரதேசத்தில் இருந்திருக்க நியாயமில்லை.


வைகாசி-17,பெரும்பாலான சனங்கள்  இராணுவப்பிரதேசத்திற்குள் போய் விட்டிருந்தார்கள். நான் சுதர்சனை இராணுவப்பிரதேசத்திற்குள்  போகுமாறு திருப்பித்திருப்பி சொன்னேன். அவன் நான் உரியவர்களுடன் சென்றபின் போவதாய் திருப்பித்திருப்பி சொன்னான். இராணுவம் எல்லாப்பகுதியாலையும் எங்களை நெருங்கிவிட்டது. சுதர்சன் எங்களுக்குரிய எல்லோருக்கும் மீண்டும்   மீண்டும் தொடர்பெடுத்தான். ஒருவரின் வோக்கியும் வேலை செய்யவில்லை. கடைசியில் கொஞ்ச சனம் இராணுவப்பிரதேசம் நோக்கி போய்க்கொண்டிருந்தார்கள். சுதர்சன் சொன்னான் " இதுதான் கடைசி சனம் இதையும்விட்டால் போகேலாது, தலைவரை எப்படியும் பாதுகாப்பாய் கொண்டுபோய் இருப்பார்கள், நாங்கள் போவோம்" எனக்கும் யாவும் சரிபோல் பட்டது. அந்தக்கணத்தில்த்தான் இராணுவப்பகுதிக்கு
போக தீர்மானித்து, போகிற  கொஞ்ச சனங்களுடன் இணைந்தோம்.

   எனது கணிப்பின்படி மக்கள் இனி இங்கு இருக்க சந்தர்ப்பம் இல்லை. எனக்கு தரப்பட்ட மக்களுக்குறிய பணியை ஓரளவு நிறைவு செய்ததாய் மனம் சொன்னாலும், எனக்கு தரப்பட்டஏதோ பணி ஒன்றை செய்யதவறிச் செல்வதாய் ஆழ்மனம் குறுகுறுத்துக்கொண்டிருந்தது.  


Share/Save/Bookmark

திங்கள், 4 மே, 2015

முள்ளிவாய்க்கால் - 2009முள்ளிவாய்க்காலில் அந்த இறுதி நாட்கள். வைகாசி /15,16,17/2009. இந்த நாட்கள்தான் மக்கள் போர்க்காலத்தில் அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாட்கள். சத்திரசிகிச்சை கூடத்தை மீள இயக்க முற்பட்டும் முடியாமல் போன நாட்கள். முதலுதவியும், conservative  management  உடனும் எங்கள் மக்கள் பணி குறுக்கப்பட்டாலும் , இறுதிவரை  எங்கள் பணியில் தளர்வற்றிருந்தோம். 


Share/Save/Bookmark

ஞாயிறு, 3 மே, 2015

பத்மலோஜினி அக்கா

1990-1995 இக்காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் , வன்னியில்  நடந்த அநேகசண்டைகளில் நான் மருத்துவ sub main பகுதியில் கடமை செய்தேன். பத்மலோஜினி அக்கா மருத்துவ main பகுதியில் கடமை செய்தார். எங்கட முன்னிலைக்கு பொதுவாக சாப்பாடு சரியான நேரத்திற்கு வராது. சிலநேரம் பழுதாகித்தான் வரும் .  sub main யில் மருந்து குறைந்துதென்றால் போற வாகனத்தில ( பொதுவாக ரைக்டர்)  போய் மருந்து எடுத்துக்கொண்டு, கட்டாயம் அக்கா இருக்கிறதில நல்ல சாப்பாடு தருவா,சாப்பிட்டிட்டு என்னோடு நிற்பவர்களுக்கும் ஏதாவது கொண்டுவருவன்.எல்லாமே நேற்றுப்போல் இருக்கிறது. அக்கா தாயாய்,மூத்த சகோதரியாய் எங்களோடு வாழ்ந்தார்.

சண்டை வென்றால்/தோற்றால் அக்காவின் முகத்தில் தெரியும் .

எனக்கு நல்ல ஞாபகம் இருக்கிறது மண்கிண்டிமலை (23/07/93) வெற்றித்தாக்குதல் நான் sub main பகுதியில் கடமை செய்தேன்(எனது sub main உம் தளபதி பால்ராஜின் கட்டளைப்பகுதியும் ஒரே இடத்தில் இருந்தது). பத்மலோஜினி அக்கா மருத்துவ main பகுதியில்(குமுளமுனை)கடமை செய்தார். வெற்றிபெற்று main இற்கு போய் அக்காவிற்கு பல புது தகவல்களை சொன்னேன் . அக்காவின் சந்தோசம் இன்றும் கண்முன் நிற்கிறது.     


Share/Save/Bookmark

சனி, 2 மே, 2015

சமாதானம்
Share/Save/Bookmark

வெள்ளி, 1 மே, 2015

மேதினம் 2015
Share/Save/Bookmark

புதன், 29 ஏப்ரல், 2015

மரணத்திற்கு முந்திய சித்திரவதைகள்               தவறுகள் தவறுகள்தான்
வாதாடவரவில்லை
தண்டனை
ஒருவரை திருத்தத்தான்
திருந்தாதவனைக்கூட
கொல்வது நியாயமல்ல
கொலைக்குகூட
கொலை பரிகாரமல்ல
தவறு செய்யாதவன் உலகிலில்லை
மரணம்
ஒருமுறைவரும்
மரணத்திற்கு திகதி குறித்து
சவப்பெட்டியையும் காட்டி
மரணத்திற்கு முந்திய சித்திரவதைகள்
மரணத்தைவிட கொடியது
தாய் ,சக உறவுகளின்
எஞ்சியவாழ்வு
நினைவிற்கே கடினமானது    


Share/Save/Bookmark

ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

தந்தை செல்வா நினைவுதினம்

தந்தை செல்வா
தமிழர் உரிமை பெற
அகிம்சைவழியில் முயன்று
ஒப்பந்தங்கள் வரை சென்றும்
சிங்கள ஏகாதிபத்தியம்
கிழித்தது
ஒப்பந்தங்களை மட்டுமல்ல
தமிழரின் நம்பிக்கையும்தான்    

தமிழீழமே தீர்வென
வட்டுக்கோட்டையில்  வரைபுகீறி 
1977 இல்
தாயகம் முழுமனதுடன் ஏற்றிட
ஜனநாயக வெற்றி தோற்றிட
"கடவுள்தான் தமிழரை காக்கணும் "
என்று நீங்கள் சொல்லிட
வேறு வழியற்று ஆயுதபோராட்டம்
இளைஞர்களில் தீப்பற்றிக்கொண்டது

நேற்று
உங்களின் நினைவுதினம்
செம்மணி படுகொலை நாயகி
பிரதம உரை
மனம் ஏற்கவில்லை

சிங்கள அரசு புரிந்தது    
"இனப்படுகொலை" என
வட தமிழ் அரசு
முழுமனதாய் அறைகூவ
குறைப்பிரசவமாகிறது  
மீண்டும் நம்பிக்கை

தமிழரின் வாக்குகள்
கட்சிக்கானது அல்ல
ஒற்றுமைக்கானது/
எதிரிக்கு எதிரானது
வாக்குகள்
வெறும் கையடையாலமல்ல
இதயகாயத்தின் அடையாளம்

  


Share/Save/Bookmark

வெள்ளி, 24 ஏப்ரல், 2015

அன்றையநாள் மகிழ்வாயிற்று.

1991 ஆனையிறவின் மீதான ஆகாய கடல்வழித்தாக்குதல்  விடுதலைப்புலிகளுக்கும் முதல் முதலில் பாரிய காயங்களும் இறப்புகளும் ஏற்படுத்திய தாக்குதல். நான் களமருத்துவராய்  செயற்பட்டுக்கொண்டிருந்தேன் . களமுனையில் இறந்தவர்களை அரைப்பெட்டி அடித்த ரைக்டரில் கொண்டு வருவார்கள்.அவற்றையும் இறப்பை உறுதிப்படுத்திவிட்டு பின்னுக்கு அனுப்பவேண்டும்.ஒவ்வொருமுகங்களும் தெரிந்த முகம்போல இருக்கும்.இளவயது மரணங்களை பார்த்து உறுதிசெய்வது மனதுக்கு மிகப்பாரமானது.அன்றும் ஒன்றுக்கு மேல் ஒன்று அடுக்கப்பட்டு உடல்கள் கொண்டுவரப்பட்டன.பரிசோதித்து பார்க்கும் போது ஒரு உடலில் இதய துடிப்பு மெதுவாய்க்கேட்டது . விரைந்து செயற்பட்டோம்.கண் விழித்தவனை உரியமுறையில் மேலதிக சிகிச்சைக்கு  பின் அனுப்பினோம்.அன்றையநாள் மகிழ்வாயிற்று.  


Share/Save/Bookmark

செட்டிக்குள காலத்தில் மரணித்துப்போனார்கள்.

2009 இல் முள்ளிவாய்க்காலில் இருந்து வந்து ஒரு நாள் செட்டிகுளம் zone -4  முகாமில் அடைக்கப்பட்டிருந்தேன். ஒரு பின்னேரப்பொழுதில்  திடீரென ஒருபகுதியில் இருந்து அழுகையொலி கிளம்பிற்று. என்ன ஏதோ என்று தெரியாமல் சோர்ந்திருந்தபோது யாரோ சொன்னார்கள் " ஒரு சிறுமி மலக்குழியுக்குள் வீழ்ந்துவிட்டதாய்" ஓடினேன் ஏதாவது முதலுதவி செய்யலாம் என்று. அவர்கள் பிள்ளையை  zone -4  இல் உள்ள மருத்துவநிலையத்திற்கு கொண்டுசென்று கொண்டிருந்தார்கள். சிறிது நேரத்திற்குப்பின் மீண்டும் அழுகையொலி சிறுமி இறந்துவிட்டாளாம்.ஒவ்வொரு உயிர்களையும் காப்பாற்ற எவ்வளவு பாடுபட்டிருப்போம். முள்ளிவாய்க்கால் இறுதிவரை எமது செயற்பாடுகளால் தொற்றுநோய் தடுப்பில் வென்ற நாம். செட்டிக்குள அரச முகாம்களில் சுமார் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட மக்களை தொற்றுநோய்களுக்கு இழந்துவிட்டோம். என்னால் நீண்டகாலம் பராமரிக்கப்பட்ட பல கிளினிக் நோயாளர்களும் செட்டிக்குள காலத்தில் மரணித்துப்போனார்கள்.    


Share/Save/Bookmark

புதன், 22 ஏப்ரல், 2015

நண்பன் சிவமனோகரன்

நேற்று நண்பன் சிவமனோகரனின் ஆறாவது வருட நினைவுதினம். அந்தநாள்(21/04/2009) காலை வலைஞர்மடத்தில் எமது சத்திரசிகிச்சைகூடத்திலிருந்து   சுமார் ஐம்பது மீற்றர் தூரத்தில் கொத்துக்குண்டில் எங்கள் சிவா மரணமடைந்தான். கொத்துக்குண்டில் ஒன்று சரியாக எமது கூரையின் சிலாகைக்கிடையில் வந்து சிக்கி நின்றது.அதன் நேர் கீழே நான் ,வாமன்,சுதர்சன் உள்ளீடாய் எம் சகாக்கள் நின்றோம். ஒரு மருத்துவர் காயமடைந்து இருக்கிறார் என்று யாரோ வந்து சொன்னார்கள்.நான் ஓடிச்சென்று என் இருபத்திஐந்து வருட நண்பனின் இறப்பைத்தான் உறுதிசெய்தேன்.    


Share/Save/Bookmark

செவ்வாய், 21 ஏப்ரல், 2015

என்சகாக்களை பாசத்தோடு நினைந்துகொள்கிறேன்

1990 ஆரம்பங்களில் சத்திரசிகிச்சைகள் யாவும் யாழ் பொது மருத்துவமனைகளில்த்தான் செய்யப்பட்டது. பொது மருத்துவமனை நீண்ட அனுபவங்களுடன் இயங்கிக்கொண்டிருந்தது. போராளிகள் எண்ணிக்கை எப்போதுமே போதாமையோடுதான் இருக்கும். காயமடையும் போராளிகளை அநியாயமாய் இழந்துவிடக்கூடாது.எனவே களமருத்துவம் முக்கியத்துவம் ஆகிற்று.களமருத்துவபணி சவால்கள் நிறைந்தது. பணியில் மருத்துவப்போராளிகளை இழந்த துயருடனும் வெற்றி பெற்றோம் என்றுதான் நினைக்கிறேன். 
1995 இல் வன்னிக்கு இடம்பெயரும்போது சில பெரியவர்கள் சொன்னார்கள். இனி புலிகளால் பெரும்தாக்குதல்கள் செய்யமுடியாது.காயமடைபவர்களை என்ன செய்வார்கள்?.ஆனால் புலிகளின் ஒவ்வொரு மூத்தமருத்துவருக்கும் ஏதோ ஒரு எண்ணம் இருந்திருக்கும். எனக்கு இருபத்திநான்கு மணி நேரத்திற்குள் ஆயிரம் காயமடைபவர்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய சத்திரசிகிச்சை அணியை உருவாக்கவேண்டும் என்ற அவாவே இருந்தது.அதில் நாங்கள் வெற்றிபெற்றோம் என்றே நினைக்கிறேன். ஸ்ரீலங்கா அரசாங்கமோ புலிகள் காயமடைபவர்களை சிகிச்சை அளிக்கமுடியாமல் சுட்டுக்கொல்கிறார்கள் என பிரச்சாரம் செய்தது.
2006 ஆம் ஆண்டு போர் மேகம் வன்னியை சூழ்ந்துகொண்டது. மூன்று பிரதான மருத்துவதளங்களை அமைக்க அரசியல்துறை பொறுப்பாளர் விரும்பினார். புதுக்குடியிருப்பு,கிளிநொச்சி,மன்னார் இல் அமையவேண்டும். புதுக்குடியிருப்பு,கிளிநொச்சியை இரு மூத்தமருத்துவர்கள் பொறுப்பெடுத்துக்கொண்டார்கள். அவர்களது சத்திரசிகிச்சைகூடங்கள் அவ்விடங்களில் ஏற்கனவே இயங்கிக்கொண்டும் இருந்தன.
நான் மன்னார் பகுதியை பொறுப்பெடுத்தேன். சமாதானகாலத்தின்பின் எனது casualty theater  யை மீண்டும் ஆரம்பத்தில் இருந்து உருவாக்கவேண்டியிருந்தது. இம்முறை குறைந்தது மூன்று casualty  operation theater களை இயக்குவது எனமுடிவுசெய்தேன். கிளிநொச்சி பொன்னம்பல மருத்துவமனையின் theater யை இயன்றவரை casualty cases எடுக்காமால் தவிர்த்தேன்.வெற்றி தோல்விகளுக்கு அப்பால் இறுதிவரை எமது பணியில் மூச்சோடு இயங்கினோம்.பணியில் தோள் தந்து உயிர் துறந்த என்சகாக்களோடு, பணிக்கு உயிர்தந்த  உலகெலாம் பரந்துவாழும் 

என்சகாக்களையும் பாசத்தோடு நினைந்துகொள்கிறேன்.  


Share/Save/Bookmark

புதன், 15 ஏப்ரல், 2015

சில இரகசியங்கள் இரகசியங்களாகவே போய்விடுகின்றன.

இயக்க வாழ்க்கையில இரகசியம் தான் அநேகமானவை. 2007 ஆம் ஆண்டு ஒரு போராளி இராணுவக்கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள்  காயமடைந்துவிட்டான்.அவனை எங்கட கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்குள் கொண்டுவரமுடியாது. அவனை ஒரு மருத்துவர் இரகசிய இடத்தில் வைத்து சிகிச்சை அளிக்கிறார். அந்த மருத்துவருக்கு சிகிச்சை சம்மந்தமான ஆலோசனை வழங்கவேண்டும். அந்த போராளிக்குரிய பொறுப்பாளர் என்னை அணுகினார். நான் அவர்களுடைய முகாமிற்கு சென்று தொலைபேசிக்கூடாக மருத்துவருடன் கதைத்தேன். மருத்துவர் சொன்னார் ஆள் தப்பாது என்று. காயங்கள் பற்றிய விபரத்தை அறிந்து சிகிச்சைக்குரிய ஆலோசனைகளை வழங்கினேன்.யார் யாருடன் கதைக்கிறோம் என்பது தெரியாது. இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருதடவை இப்படியே போயிற்று.ஆறு கிழமையில் அவன் முழுமையாக குணமடைந்தான். குணமடைந்ததை உறுதிப்படுத்த அந்த போராளியுடன் கதைக்கவேண்டி வந்தது. அவன் கதைத்ததமிழ் நாங்கள் வழமையாக கதைக்கும் தமிழ் இல்லை. அவனது பேச்சில் போராளிகளுக்குரிய பாசம் இருந்தது. என்றோ ஒரு நாள் உங்களை கட்டாயம் சந்திக்கவேண்டும் என்று சொன்னான் . சந்திப்பேன் என்றான். சுமார் ஆறு மாதத்திற்குப்பின் வேறு விடயமாய் பொறுப்பாளர் சந்தித்தார். அந்த போராளி முக்கியமானவன் என்றும் சில கிழமைகளுக்குமுன் சரித்திரமாகிட்டான் என்றார். கவலைகள் எப்போதும் எங்களுடனேயே பயணிக்கும். அப்பவும் அந்த போராளியின் பெயரை நான் கேட்கவில்லை.சில இரகசியங்கள் இரகசியங்களாகவே போய்விடுகின்றன.     


Share/Save/Bookmark

செவ்வாய், 7 ஏப்ரல், 2015

கல்லறை இல்லாதபூமியில்

தாயே!
உன் மரண அறிவித்தல் பார்த்தேன்
உளம் உருகி கருகிப்போனேன்

அம்மாவுக்கு மூன்றுபிள்ளைகள்
கடைக்குட்டி " மாவீரன்
ஒரு தடவை காப்பாற்றினேன்
பின் வித்துடலாய் வந்தான்     
பத்துவருடங்களுக்கு முன்
தாயை
பத்துவருடங்களின் பின்
யாழில் பார்த்தேன்
மீனுக்கு முள்ளெடுத்து    
பழஞ்சோறு தந்தாள்
மூத்தபிள்ளைகளுக்காய்
மட்டுமல்ல
சின்னவனின் கல்லறைக்கும்
விளக்கேற்ற வாழ்வதைச்சொன்னாள்    
சின்னவனின் நினைவுகளில்
பொக்குவாய் நிறைந்து
முழு நிலாவாய் தெரிந்தாள்

தாயின் மரண அறிவித்தலில்
சின்னவனின் பெயரில்லை
பயம்
வாழ்வின் பிடிப்பையும் தின்னுமா
கல்லறை இல்லாதபூமியில்
அமாவாசை இருட்டு  

    

  


Share/Save/Bookmark