புதன், 15 ஏப்ரல், 2015

சில இரகசியங்கள் இரகசியங்களாகவே போய்விடுகின்றன.

இயக்க வாழ்க்கையில இரகசியம் தான் அநேகமானவை. 2007 ஆம் ஆண்டு ஒரு போராளி இராணுவக்கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள்  காயமடைந்துவிட்டான்.அவனை எங்கட கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்குள் கொண்டுவரமுடியாது. அவனை ஒரு மருத்துவர் இரகசிய இடத்தில் வைத்து சிகிச்சை அளிக்கிறார். அந்த மருத்துவருக்கு சிகிச்சை சம்மந்தமான ஆலோசனை வழங்கவேண்டும். அந்த போராளிக்குரிய பொறுப்பாளர் என்னை அணுகினார். நான் அவர்களுடைய முகாமிற்கு சென்று தொலைபேசிக்கூடாக மருத்துவருடன் கதைத்தேன். மருத்துவர் சொன்னார் ஆள் தப்பாது என்று. காயங்கள் பற்றிய விபரத்தை அறிந்து சிகிச்சைக்குரிய ஆலோசனைகளை வழங்கினேன்.யார் யாருடன் கதைக்கிறோம் என்பது தெரியாது. இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருதடவை இப்படியே போயிற்று.ஆறு கிழமையில் அவன் முழுமையாக குணமடைந்தான். குணமடைந்ததை உறுதிப்படுத்த அந்த போராளியுடன் கதைக்கவேண்டி வந்தது. அவன் கதைத்ததமிழ் நாங்கள் வழமையாக கதைக்கும் தமிழ் இல்லை. அவனது பேச்சில் போராளிகளுக்குரிய பாசம் இருந்தது. என்றோ ஒரு நாள் உங்களை கட்டாயம் சந்திக்கவேண்டும் என்று சொன்னான் . சந்திப்பேன் என்றான். சுமார் ஆறு மாதத்திற்குப்பின் வேறு விடயமாய் பொறுப்பாளர் சந்தித்தார். அந்த போராளி முக்கியமானவன் என்றும் சில கிழமைகளுக்குமுன் சரித்திரமாகிட்டான் என்றார். கவலைகள் எப்போதும் எங்களுடனேயே பயணிக்கும். அப்பவும் அந்த போராளியின் பெயரை நான் கேட்கவில்லை.சில இரகசியங்கள் இரகசியங்களாகவே போய்விடுகின்றன.     


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக