ஞாயிறு, 31 டிசம்பர், 2023

துடுப்பில்லா படகில் நான்

நீங்களில்லா பூமியில் 

நான் திரிகிறேன் 

ஒரு அநாதையை போல 

எண்ணி எண்ணிப்பார்க்கிறேன் 

என்னிடம் பலவும் உண்டு  

நீங்கள் தான் இல்லை 

நீங்களே என்னை நிரப்பியிருக்கிறீர்கள்

உழைப்பு, அர்ப்பணிப்பு, அழுகை, சிரிப்பு யாவும் 

கலந்த அந்த நாட்களில் நாங்கள் வாழ்ந்தோம் 

ஒவ்வொருவராய் இழக்கையில்

புழுவாய் துடித்ததும் 

ஓர்மமாய் எழுந்ததும் இன்றில்லை  

மக்களுக்காய் உயிர் சுமந்த ஆத்மபலம் இன்றில்லை 

நீங்களில்லா பூமியில் 

துடுப்பில்லா படகில் நான்      



Share/Save/Bookmark

சனி, 30 டிசம்பர், 2023

தாயிற்கு எதுவும் தெரியவில்லை

இருபது வருட சிறைவாழ்வு 

இரு தடவை சிறைக்கலவரம்

மயிரிழையில் உயிர்தப்பி  

உருமாறி விடுதலையாகி 

ஊர் ஒழுங்கையை கண்டுபிடித்து  

பலநாள் சேமித்த ஆசையுடன் வீடுவந்து 

அம்மா ! என்று திகைப்பூட்ட  

தாயிற்கு எதுவும் தெரியவில்லை 

" மறதி நோய்"


சுற்றத்தில் சுகவிசாரிப்புகள் இல்லை 

வேலிகள் மதில்களாயிற்று 

ஒரே ஒரு நண்பன் 

இங்கு குழந்தைகுட்டிகளோடு இருக்கிறான் 

தெரிந்தும் தெரியாத ஊராயிற்று 

தந்தையின் சாய்மனைக்கதிரைதான் 

தஞ்சம் தருகிறது 

விடிந்தும் விடியாத காலமிது 




Share/Save/Bookmark

வெள்ளி, 29 டிசம்பர், 2023

இரு தினக்குறிப்புகள்

 வருடங்கள் வந்து மாறுகின்றன 

ஏனோ புத்துணர்ச்சி இல்லை 


ஒரு காலம் இருந்தது 

இரு தினக்குறிப்புகள் கிடைக்கும் 

நானோ கவிதைகள்தான் எழுதுவேன் 

புதுவருட திட்டங்கள் மனதில் படிந்திருக்கும்

அதை செயல்களில்தான் எழுதுவேன் 

  

அந்த தினக்குறிப்புகள் இப்போது கிடைப்பதில்லை 

வருடமுடிவில் ஏக்கம் மட்டும் வந்துபோகிறது 

(பாசக்)கடல் வற்றுவதில்லை 

அவர் இயல்பும் அழகும் 

எப்போதும் எனக்குள் மாறுவதில்லை 

பார்வைக்கு அது ஒரு கடல் 

உள்ளுக்குள் ஒரு இயங்கு உலகம்

புதுவருடம் இவர் நினைவுகளுடன்   



Share/Save/Bookmark

செவ்வாய், 26 டிசம்பர், 2023

யாவருக்குமான சுதந்திர உலகு

 கடவுள் உண்டு 

அதற்கு மேல் பிரிவுகள் என்னிடம் இல்லை 

மனிதனுக்குள் பாகுபாடும் இல்லை 

ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவம் இருக்கும் 

அதை மதிக்கிறேன் 

அதை தாண்டவும் விருப்பவில்லை 

நான் நானாகவும் நீ நீயாகவும் இருப்போம் 

தனித்துவங்களால் நிரம்பிய உலகு 

இடைவெளியை நிரப்பும் புரிந்துணர்வு 

யாவருக்குமான சுதந்திர உலகு 



Share/Save/Bookmark

என் உள்ளங்கைகளை உற்றுப் பார்க்கிறேன்

புனிதர்களின் புதைகுழிகளுக்கு 

மூன்று மூன்று தடவைகளாய்   

மண் அள்ளி அள்ளி போட்ட 

என் உள்ளங்கைகளை உற்றுப் பார்க்கிறேன் 

எந்த பந்தமும் இதற்கு ஈடில்லை 


எங்கும் செல்லலாம் வாழலாம் 

உம் நினைவில்லாமல் எதுவுமில்லை   


வயலும் கடலும் காடும் குளமும் 

கலையும் பண்பாடும் எங்கள் தேசம் 

செம்மொழித்தமிழும் தாய்த்திருநாடும் 

ஒன்றோடொன்றான தமிழீழம் 



Share/Save/Bookmark

யானை சாப்பிட்ட விளாம்பழம்

 ஆதிதொட்டு 

மாற்றங்கள் நடக்கின்றன 

பல மொழிகள்   

சில விலங்கினங்கள் 

சில மனித இனங்கள் 

உலகில் இன்று இல்லை 

மனிதன் மட்டுமல்ல 

இயற்கையும் துணைபோகும் 


நிலைப்பதற்கு 

தனித்துவம் மட்டும் போதாது 

சூழலோடு இணைந்த பலமும் தேவை  


வேரிழந்த புலம்பெயர்வு ஆபத்து 

இன்று நீ அறியாய் - இது 

தாயக கோட்டையின்  

அத்திவாரங்கள் கிண்டப்படும் காலம் 

ஏதோ ஒரு மாயையில் உழலும் கோலம் 

யானை சாப்பிட்ட விளாம்பழம்  




Share/Save/Bookmark

ஞாயிறு, 24 டிசம்பர், 2023

 அவன் 

தலைமாற்றி வெளிநாடு போனவன் 

இன்று 

படித்த பாடசாலையால் கௌரவிக்கப்பட்டான்

சரி பிழைகளுக்கு அப்பாலும் 

ஒரு வாழ்வு இருக்கிறது     



Share/Save/Bookmark

ஆளும்வர்க்கம் வேறு என்ன செய்யும்?

 பழங்குடி மக்களுக்கு விடுதலை இல்லை 

ஒருகாலம் 

இன்றைய பலநாடுகள் அவர்களுடையது 

உலகமெலாம் அருகிப்போகிறார்கள் 

அவர்களிடமும் இசை நிறைந்த வாழ்விருக்கிறது 

எங்களை ஒத்த குருதியே அவர்களிடமும் ஓடுகிறது

இருந்துமென்ன ?

அவர் வேதனையின் பாடல் யாரும் கேட்பதில்லை  

உணர்வுகளை உணர ஆட்களில்லை 

அவர் வேரடியை /மொழியை யார் அறிவார் ?

புதுவருடம் வருகிறது - அதை 

உலகம் வர்ணமயமாய் கொண்டாடும் 

அவர் இதை அறியார்  

வாழ்விடங்களை தாண்டிவரா குரல் 

பல வித்தைகள் தெரிந்தும் விஞ்ஞானம் வளரவில்லை 

அவர்களை ஆராய்ச்சியிற்கு பயன்படுத்தும்  

நவீனத்தால் யாது செய்யமுடியும்?

 

 


 



Share/Save/Bookmark

சனி, 23 டிசம்பர், 2023

பார்வை மொழிகளுக்கூடாக பேசுதல்

  

இறுதிநாள்

முன்பள்ளி மாணவர் இருவர் 

ஒருவரை ஒருவர் பார்த்தபடி 

கையசைத்துப் போகின்றனர் 

உயர்தரமாணவர் இருவர்   

ஒருவரை ஒருவர் பார்த்தபடி 

பிரிந்து போகின்றனர்

பல்கலைமாணவர் இருவர்   

ஒருவரை ஒருவர் பார்த்தபடி 

பிரிந்து போகின்றனர்

பார்வை மொழி 

எதை பேசுகிறது ?

இறந்த எஜமானனை 

பார்த்துக்கொண்டிருக்கும் நாய் 


வேலைக்கு போகும் 

தாயை பிரியும் குழந்தை 

வெளிநாடும் போகும் 

நண்பனை பிரியும் தோழன் 

இறுதி களத்திற்கு செல்லும் 

வீரனை பிரியும் சகா

    

  



Share/Save/Bookmark

சுடலைவரை லஞ்சம் வந்துநிற்குது

வட்டியிற்கு கடன் வாங்கி 

கடன் கொடுக்கும் நாடு 

பஞ்சம் பட்டினியில் தள்ளிவிட்டு 

ஏப்பம்விடும் அதிகாரம் 

லஞ்சம் மலிந்து 

சுடலைவரை வந்துநிற்குது

கெட்டகேட்டிற்கு குஞ்சம் கட்டி 

ஒய்யாரத்திற்கு  குறைவில்லை   



Share/Save/Bookmark

வெள்ளி, 22 டிசம்பர், 2023

கற்றது கையளவுதான்

 முதியமுகத்தில் தெரியும் வரிகளில் 

யாரும் வாசிக்கமுடியா எழுத்துகள் 

அக்கதைகளை  AI ஆவது கிரகிக்குமா ?

எழுதிய கதைகளை வாசிக்கமுடியவில்லை 

எழுதாத கதைகளை எப்போது வாசிப்போம்?

இன்று இருமி இருமி ஏதோ 

சொல்லமுனையும் மனிதனால் 

அன்று அடுப்பெரிந்தது 

வீடு நிறைந்தது   

மூட்டை தூக்கிய முதுகுகளின் கூலி 

எப்போது தீர்க்கப்படும்?

கடவுள்களில் கூட 

பாகுபாடு காட்டும் உலகம் 

மனிதர்களை விட்டுவிடுமா?

முதியவரின் சுவாசம் 

காற்றோடு கலந்தபடியே நின்று விடக்கூடும் 

நாளங்கள் பளிச்சென தெரியும் கைகால்களில் 

ஓடிக்கொண்டிருக்கும் வாய்க்கால் 

ஓய்ந்துவிடக்கூடும்  

அது இன்றாக இருக்கக்கூடுமா? 

எனக்குள் ஊடுருவும் அவரது கண்கள் 

ஏதோ ஒன்றை தேடுகின்றன 

அது என்ன?

கற்றது கையளவுதான் 

  



Share/Save/Bookmark

வியாழன், 21 டிசம்பர், 2023

துளிரும் பயிரை எரிப்பதா?

 கயிறு திரிப்பது போல் உயிரை திரிப்பதா?

துளிரும் பயிரை எரிப்பதா?

துயரில் வயிறு  புகையிதே?

கண்ணீரில் இருதயம் நனையிதே 


எல்லோரிடமும் 

குறைகள் நிறைகள் உண்டு 

விகிதம் வேறுபடலாம் 

குறைகளை தூத்தாதே 

நிறைகளை மதி 

குறைநிறை என்பது அவரவர் மதிப்பீடுதான்  



Share/Save/Bookmark

ஞாயிறு, 17 டிசம்பர், 2023

அவசரத்தில் ஓடியிருக்கிறாரா?

 சாற்றப்பட்டிருக்கிறது யன்னல் 

பூட்டப்பட்ட கதவில் தொங்குகிறது ஆமைப்பூட்டு 

எந்த அரவங்களும் இல்லை 

அப்பு எங்கே ? 

மூடப்பட்ட கக்கூஸில் புகை வரவில்லை 

முற்றத்தை நிரப்பியிருக்கிறது கொட்டிய இலைகள் 

கிணற்றடி வாய்க்கால் காய்ந்துகிடக்கிறது 

இறந்துவிட்டாரா? புலம்பெயர்ந்துவிட்டாரா?

மருத்துவமனையிலா? வீட்டை விற்றுவிட்டாரா? 

ஆவென்று திறந்திருக்கிறதே படலை

அவசரத்தில் ஓடியிருக்கிறாரா? 

யாரோ வரும் அரவம் கேட்கிறது 

திரும்பிப்பார்க்கிறேன் 

அநாதைப்பிணம் , போனமாதம் , தலை சுற்றுகிறது 

எங்கிருந்து வருகிறாய்?

திடுக்குற்றேன் "சிறையிலிருந்து"

ஏன் அழுகிறாய்?

வீட்டுக்குள் ஒரு கனவு இருந்ததே 

 



Share/Save/Bookmark

சனி, 16 டிசம்பர், 2023

இராணுவம் ஏவிய செல் விழுந்து முழங்கியது

 இராணுவம் ஏவிய செல் விழுந்து முழங்கியது 

ஈனக்குரல் எங்கிருந்தோ வருகிறது 

புகை வந்த திசை நோக்கி ஓடினேன் 

ஒரு தாய் பாரிய வயிற்றுக்காயம் 

கால்கள் இரண்டும் சிதைந்து கிடக்கிறது 

அருகில் கிடந்த குழந்தையை தூக்கி 

முத்தமிட்டு கிடத்தியபின் இறக்கிறாள் 

இறப்பை உறுதி செய்வதைவிட 

வேறு என்ன செய்யமுடியும்

குழந்தையை சோதிக்கிறேன் 

எந்த காயங்களும் இல்லை  

குழந்தையின் கன்னத்தில் 

தாயின் முத்த அடையாளம் 

நெற்றியில் இரு கண்ணீர்த்துளிகள் 



Share/Save/Bookmark

இருள் இன்னும் கலையவில்லை

 இருள் இன்னும் கலையவில்லை 

வேலையிடம் செல்லும் காலைப்பேருந்து

எனைப்பார்த்து புன்னகைத்து போகிறார்கள் 

பொம்மைகள் போல உடையணிந்த குழந்தைகள் 

அவர்களுக்குள் எப்போதும் ஆனந்தம் 

அவர்களால் விடியும் எனது காலை    

கண்களை மூடினேன் 

காஸாவின் குழந்தைகள் 

உணவில்லை, சேர்ந்து விளையாடியவர் இல்லை ,

தந்தையில்லை , இருட்டுலகம் 

இழப்பின் வலி அவர்களுக்குத்தான் 

மற்றவர்களுக்கு வெறும் செய்தி

வலிகளுக்குப்பின்னால் ஐநாவின் தோல்வி 

மனிதர்களுக்குள் வாழும் மிருககுணம் 

கூர்ப்புக்கொள்கையை உறுதிசெய்கிறது   

பேருந்தின் மணியோசையில் திடுக்குற்றேன் 

மீண்டும் கண்களை மூடுகிறேன் 

நான் காவிய குழந்தைகளின் உடல்கள், 

சிறுவர்களின் கைகால்கள்,பிஞ்சு பாதங்கள் 

நெஞ்சை உழுது அழுத்த 

கண்ணீர் கன்னத்தை சுட 

ஒட்டிய கண்கள் திறக்கின்றன 

நான் இறங்கவேண்டிய இடம் கடந்தும்

இருள் இன்னும் கலையவில்லை  

 



Share/Save/Bookmark

எங்கு போனாய் நீ

 நண்ப! 

தேச விடுதலைக்காய் 

சுவாசித்தவன் நீ 

கள அருகில் மூச்சை நிறுத்திக்கொண்டாய் 

ஓடி வந்தேன் 

உறுதி செய்து பணிந்தபின் 

கடமை அழைத்தது 

உடல் கணச்சூடு கூட இறங்கவில்லை 

சில மணித்துளிகள் கூட 

உன்னோடு நிற்கவில்லை 

மன்னித்துவிடு !

நீ என்னை அறிவாய் 


காயமடைந்த குழந்தையை தூக்கியபடி 

ஒருவன் ஓடிக்கொண்டிருந்தான் 

அவனுக்குப்பின்னால் 

நானும் ஓடிக்கொண்டிருந்தேன் 


பின் காலங்களில் 

எவ்வளவு நாட்களை  

வீணாக செலவளித்திருப்பேன் 

அன்று சாத்தியப்படவில்லையடா 


உன் கதையை என்னில் ஏற்றிவிட்டு 

எங்கு போனாய் நீ  



Share/Save/Bookmark

ஞாயிறு, 10 டிசம்பர், 2023

யதார்த்தம் கசப்பாக இருந்தாலும் உண்மையானது.

 அந்தக்கிராமங்களில் உள்ள ஒழுங்கைகள் குச்சொழுங்கைகள் யாவற்றிற்கும் என்னைத்தெரியும் ஆனால் இப்போது அங்கு வாழும் சந்ததிக்கு என்னைத்தெரியாது. என் பெயரை யாராவது ஒருவர்  இப்போதும் கதைக்கக்கூடும், இன்னும் பத்து வருடங்களில் அதுவும் இருக்காது. யதார்த்தம் கசப்பாக இருந்தாலும் உண்மையானது. மாயவுலகில் சோடித்து மகிழ்வதில் அர்த்தம் இல்லை. ஒருகாலம் அந்த காலத்தின் ஒரு பாத்திரமாக இருந்திருக்கலாம் இன்று ஒரு சாட்சியாகத்தான் இருக்கமுடியும்.  



Share/Save/Bookmark

சனி, 9 டிசம்பர், 2023

 ஓடி ஓடி இறகுகளை சேர்க்கிறேன் 

ஆயுளுக்குள்  சிறகுகளாய் கோர்ப்பேன் 

ஒரு பறவைபோல் சுதந்திரமாய் பறக்க 

வேறு என்ன செய்ய முடியும்?



Share/Save/Bookmark

அதுவரை நினைவுகளுடன் வாழ்வேன்

கண் முன் உயிர்போயிற்று 

இறுதி பேச்சும் என்னோடு 

சுமையோடு தொடர் பயணம் 

 

கள அருகாமையில்  

என் மடியில் மூச்சு நின்றது 

என்னைப்பார்த்தபடியே இருந்தன கண்கள் 


இறுதி நாட்களை அறிந்தபின்  

அளவளாவிய கதைகள் 

இப்படியும் வாழமுடியுமா? 


எதிர்பாரா பிரிவில் 

தொக்கி நிற்கும் இதயம் 

ஏதும் செய்யமுடியா அவலநிலை 


ஒன்றாக கூடி உணவு சமைத்ததும் 

சுற்றியிருந்து அதை ருசித்ததும் 

இன்றுபோல் இருக்கிறது 


அந்நியமண்ணில் தனித்தலைந்தாலும் 

அர்ப்பணித்தவர் தொடர் நினைவுகளுடன் 

ஒருநாள் எரிந்து சாம்பலாவேன் 

  

உங்கள் பயணத்தை தொடரமுடியாமல் 

கையறுநிலையில் சாவதைவிட

நினைவுகளுடன் வாழ்வது கடினமில்லை  

  



Share/Save/Bookmark

ஞாயிறு, 3 டிசம்பர், 2023

கரும்புலி

 எல்லா உயிரினங்களை போல மனிதர்களுக்கும் ஆயுள்காலம் உண்டு, இதுதான் நியதி . வெளியில் தெரியும் மனிதர்களும் அவர்களுக்குள் உள்ள மனிதர்களும் ஒரேமாதிரி இருப்பது அரிது. இக்கணங்களில் கரும்புலிகளோடு பழக கிடைத்த பொழுதுகளை பேறாக கருதுகிறேன்.           



Share/Save/Bookmark

சனி, 2 டிசம்பர், 2023

தலைவன்

 ஒரு தலைவன் 

மூத்த சகோதரனாகியதில் 

நிறைந்திருக்கிறது 

" மனிதம் "


இனத்தின் விடுதலைக்காக 

உயிரை அர்ப்பணிக்கும் 

மனநிலையில் வாழ்தல் 

அவர்களுக்கானது 

மரணம் தோற்றுவிடுகிறது  



Share/Save/Bookmark
Bookmark and Share