திங்கள், 25 மே, 2015

முயற்சி இல்லாமல் உயர்ச்சி இல்லை                   பயிரில் கலந்த பசுமையை
                   பிரித்துவிட துடிக்கும் எதிரி
                   உயிரில் கலந்த வாழ்வை
                   உதறமுடியாமல் துடிக்கும் மக்கள் - அவர்
                   பெருமூச்சில் காயும் கண்ணீர்

                  இருள் களைந்து ஒளி வரும்
                  விலங்கு உடைய சுதந்திரவெளி திறக்கும்
                  முயற்சி இல்லாமல் உயர்ச்சி இல்லை


Share/Save/Bookmark

வெள்ளி, 22 மே, 2015

திலீபனிடம் ஒரு "அசட்டுச்சிரிப்பு"

1984
நானும் அருணனும்
ஊர் ஊராய் "களத்தில்" பத்திரிகை
விற்றுத்திரிந்தோம்
பொழுது புலர புறப்பட்டு
பொழுது சாய வருவோம்
அன்றும் ஒரு மதியம்
அரச உத்தியோகத்தர் ஒருவரின்
பேச்சில் தலைகுனிந்தோம்
நீங்கள் யாரடா? பள்ளிக்கூடம் தெரியுமாடா?
வீட்டில கஞ்சிக்கும் வழியில்லையா?
சாதித்தொழிலும் தெரியாதா?
நாம் எதுவும் கூறவில்லை
சைக்கிளை எடுத்து புறப்பட
மீண்டும் அழைத்தார்
உங்களுக்கு வெட்கமில்லையா?
நாம் எதுவும் கூறவில்லை
காசு தந்து பத்திரிகை கேட்டார்
அருணன் என்னைப்பார்த்தான்
நான் தலையாட்ட
காசுவாங்கி பத்திரிகை கை மாறிற்று
பாதை நீள நாம் கதைக்கவில்லை
அருணன் நடந்ததை திலீபனிடம் கூற
திலீபனிடம் ஒரு "அசட்டுச்சிரிப்பு"
பத்திரிகையை தொடர்ந்து வெளியிடவேண்டும் 


Share/Save/Bookmark

புதன், 20 மே, 2015

ஒரு சிறு பிரச்சனைதான்

ஒரு சிறு பிரச்சனைதான்
அதனால்
தாயும் சாப்பிடவில்லை
மகனும் சாப்பிடவில்லை
அதனால்
மகளும் சாப்பிடவில்லை
குடிசையில்
வறுமை நிரம்பியிருந்தாலும்
ஒரு நாளும் இப்படி நடந்ததில்லை
மகனும் மகளும் பள்ளிபோய் வந்தனர்
தாய் சமைத்துவைத்தும்
யாரும் சாப்பிடவில்லை
கதைபேச்சும் இல்லை  
தந்தையை முள்ளிவாய்க்காலில்
இராணுவத்திடம் ஒப்படைத்து
ஆறுவருடம்
தந்தையை தேடித்தேடியே
தாய் தேய்ந்து போனாள்
நேற்று மகன் சொன்னான்
அப்பா உயிரோடு இல்லை
அவங்கள் கொலை செய்திட்டாங்கள்  
அப்பாவிற்கு உரியதை செய்வம் அம்மா
தாய் குழம்பிப்போனாள்
கணவனே உலகம் என வாழ்பவள்
மகனை அடித்துவிட்டாள் 
ஒரு நாள் கழிந்தும்
குடிசையில் முன்னேற்றம் இல்லை
நேற்று தொலைபேசியில் கதைத்தேன்
இருவரும் தங்களில் பிழை என்றனர்
அழுதழுது
தங்களுக்குள் கதைக்கத்தொடங்கினார்


  


Share/Save/Bookmark

செவ்வாய், 19 மே, 2015

20/05/2008 பொழுது சாயும் நேரம்

20/05/2008 பொழுது சாயும் நேரம் , நான் விசுவமடுவில் நின்றேன். எனக்கு ஒரு அறிவித்தல் கிடைக்கப்பெற்றது. தளபதி பால்ராஜ் முல்லைத்தீவில் சாவு அடைந்துவிட்டதாகவும் postmortem report தருமாறு கேட்கப்பட்டேன். நான் உடனடியாய் கிளிநொச்சி அடைந்து வாமனையும் அழைத்துக்கொண்டு துண்டியை (postmortem செய்யுமிடம்) அடைந்தேன். நானும் வாமனும் postmortem செய்துவிட்டு எமது அலுவலகத்திற்கு வந்து  postmortem report யை உரியவர்களிடம் எழுதி கொடுத்தேன். இரவு 11.30 மணி இருக்கும் இரட்ணம் மாஸ்டர் வந்தார் . நாளை காலை குறிப்பிட்ட ஒரு இடத்தில் அஞ்சலி செய்வதாகவும் தலைவர் உங்களுக்கும் அழைப்பு விடுமாறு சொல்லியதாய் சொன்னார். நான் எனது வேலைப்பளு காரணமாய் அஞ்சலி நிகழ்விற்கு செல்லவில்லை.தலைவர் அதை புரிந்திருப்பார்.   


Share/Save/Bookmark

செவ்வாய், 12 மே, 2015

லோலோ இந்த சம்பவத்திலேயே காயமடைந்தார்.

அந்த நாள் , வைகாசி-12/2009. நான் சத்திரசிகிச்சைகூடத்தில் இருந்து அருகிலுள்ள ஓய்வு tent இற்கு வந்திருந்து ஒரு குத்தியில் குந்தியிருந்தேன். எனக்கு அருகில் இசைவாணனும் தனது பொய்க்காலை கழற்றிவைத்துவிட்டு குந்தி இருந்தார். எனக்கு முன்னாள் நின்று எமது தொற்று நோய்த்தடுப்பு பொறுப்பாளர் லோலோ   தொற்று நோய்த்தடுப்பு சம்மந்தமாக கதைத்துக்கொண்டு இருந்தார். திடீரெனெ ஷெல் வரும் சத்தம் அருகில் கேட்டது, வெடித்தவுடன் எரியத்தொடங்கியது.எங்களுக்கு பின்புறமாகவும் மேற்பக்கமும் எரிந்து கொண்டிருந்தது.நான் திடீரெனெ முன்பக்கமாய் ஓடினேன்.லோலோவும் ஓடிவிட்டார் . இசைவாணனை காணவில்லை . நான் குனிந்தபடி திரும்பிப்போனேன்.இசைவாணன் நிலத்தில் ஊர்ந்தபடி வந்துகொண்டிருந்தார். நான் குனிந்தபடி போய் பொய்க்காலை தூக்கிவந்து இசைவாணனிடம் கொடுத்தேன். அந்த பகுதியே எரிந்துகொண்டிருந்தது.சுற்றவர மக்கள் ஓலம் காதைகிழித்தது . லோலோ இந்த சம்பவத்திலேயே காயமடைந்தார். எனக்கு முதுகிலும் காலிலும் எரிகாயங்கள் ஏற்பட்டது.  


Share/Save/Bookmark

திங்கள், 11 மே, 2015

போற்றப்படவேண்டியவர்கள்

2009 இறுதிப்போருக்குப்பின் சுமார் 3 இலட்சம்  மக்கள் அரசால் செட்டிக்குள பகுதியில் நடாத்தப்பட்ட திறந்தவெளி முகாம்களுக்குள் அடைக்கப்பட்டனர். தொற்று நோய்களாலும் , உரிய மருத்துவ சிகிச்சை இன்றியும் மூவாயிரத்திற்கு மேற்பட்ட மக்களை இழந்தோம். முள்ளிவாய்க்கால் வரை தொற்று நோயில் இருந்து காத்த மக்களை இங்கு இழந்துபோனோம். மக்கள் துன்பங்களை ,கெடுபிடிகளை அனுபவித்தனர். அரசாங்கம் பொய்த்தகவல்களை வெளியுலகிற்கு சில  தமிழ் அதிகாரிகளின் துணையோடு சொல்லிற்று.
விடுதலைக்காய் போராடியவர் வாழ்வு நிர்க்கதியாயிற்று. உள் நாட்டிலும் வெளி நாட்டிலும் எம் மக்களுக்கு/போராளிகளுக்கு  உதவ தகுந்த தமிழர் கட்டமைப்புகள் இருக்கவில்லை.போராடிய மக்கள் தாங்களாக இழுத்து இழுத்து எழுந்தார்கள்.அரசியல் உள்நோக்கில் சில உதவிகள் தெளிக்கப்பட்டதை மறுப்பதற்கில்லை.
எம் மக்களின் காயங்கள்/ வேதனைகள்  மாறாத இக்காலத்தில் தங்களது வேதனைகளை/ காயங்களையும் தாண்டி வெளியுலகிற்கு உண்மையை துணிந்து வெளிப்படுத்திய நேரடிசாட்சிகள் என்றும் போற்றப்படவேண்டியவர்கள்.
  


Share/Save/Bookmark

வெள்ளி, 8 மே, 2015

சுதர்சன்

சுதர்சன், மருத்துவப்போராளியாய் ,களமருத்துவனாய் இரவு பகலென ஓய்வற்று உழைத்தவன். சுதர்சனை நினைக்கையில் கஜேந்திரன்,அன்பு,மணிமாறனின் நினைவுகளை தவிர்க்க முடியவில்லை.
  x ray technician, பல்மருத்துவன் பின் தமீழீழ சுகாதாரசேவையின் பல்மருத்துவப்பிரிவின் பொறுப்பாளானாகையில்  இன்னும் ஒரு படியுயர்ந்தான். அவனும் அவனின் பற்சிகிச்சைப்பிரிவும் பல பல ஆயிரம் மக்களுக்கு  அந்த போர்ச்சூழலிலும்  பற்சிகிச்சை வழங்கியமை போற்றப்படவேண்டியது.அவனின் பற்சிகிச்சைப்பிரிவு பற்சிகிச்சை வழங்க செல்லாத பாடசாலை புலிகளின் கட்டுப்பாட்டுப்பிரதேசத்தில் இருந்திருக்க நியாயமில்லை.


வைகாசி-17,பெரும்பாலான சனங்கள்  இராணுவப்பிரதேசத்திற்குள் போய் விட்டிருந்தார்கள். நான் சுதர்சனை இராணுவப்பிரதேசத்திற்குள்  போகுமாறு திருப்பித்திருப்பி சொன்னேன். அவன் நான் உரியவர்களுடன் சென்றபின் போவதாய் திருப்பித்திருப்பி சொன்னான். இராணுவம் எல்லாப்பகுதியாலையும் எங்களை நெருங்கிவிட்டது. சுதர்சன் எங்களுக்குரிய எல்லோருக்கும் மீண்டும்   மீண்டும் தொடர்பெடுத்தான். ஒருவரின் வோக்கியும் வேலை செய்யவில்லை. கடைசியில் கொஞ்ச சனம் இராணுவப்பிரதேசம் நோக்கி போய்க்கொண்டிருந்தார்கள். சுதர்சன் சொன்னான் " இதுதான் கடைசி சனம் இதையும்விட்டால் போகேலாது, தலைவரை எப்படியும் பாதுகாப்பாய் கொண்டுபோய் இருப்பார்கள், நாங்கள் போவோம்" எனக்கும் யாவும் சரிபோல் பட்டது. அந்தக்கணத்தில்த்தான் இராணுவப்பகுதிக்கு
போக தீர்மானித்து, போகிற  கொஞ்ச சனங்களுடன் இணைந்தோம்.

   எனது கணிப்பின்படி மக்கள் இனி இங்கு இருக்க சந்தர்ப்பம் இல்லை. எனக்கு தரப்பட்ட மக்களுக்குறிய பணியை ஓரளவு நிறைவு செய்ததாய் மனம் சொன்னாலும், எனக்கு தரப்பட்டஏதோ பணி ஒன்றை செய்யதவறிச் செல்வதாய் ஆழ்மனம் குறுகுறுத்துக்கொண்டிருந்தது.  


Share/Save/Bookmark

திங்கள், 4 மே, 2015

முள்ளிவாய்க்கால் - 2009முள்ளிவாய்க்காலில் அந்த இறுதி நாட்கள். வைகாசி /15,16,17/2009. இந்த நாட்கள்தான் மக்கள் போர்க்காலத்தில் அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாட்கள். சத்திரசிகிச்சை கூடத்தை மீள இயக்க முற்பட்டும் முடியாமல் போன நாட்கள். முதலுதவியும், conservative  management  உடனும் எங்கள் மக்கள் பணி குறுக்கப்பட்டாலும் , இறுதிவரை  எங்கள் பணியில் தளர்வற்றிருந்தோம். 


Share/Save/Bookmark

ஞாயிறு, 3 மே, 2015

பத்மலோஜினி அக்கா

1990-1995 இக்காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் , வன்னியில்  நடந்த அநேகசண்டைகளில் நான் மருத்துவ sub main பகுதியில் கடமை செய்தேன். பத்மலோஜினி அக்கா மருத்துவ main பகுதியில் கடமை செய்தார். எங்கட முன்னிலைக்கு பொதுவாக சாப்பாடு சரியான நேரத்திற்கு வராது. சிலநேரம் பழுதாகித்தான் வரும் .  sub main யில் மருந்து குறைந்துதென்றால் போற வாகனத்தில ( பொதுவாக ரைக்டர்)  போய் மருந்து எடுத்துக்கொண்டு, கட்டாயம் அக்கா இருக்கிறதில நல்ல சாப்பாடு தருவா,சாப்பிட்டிட்டு என்னோடு நிற்பவர்களுக்கும் ஏதாவது கொண்டுவருவன்.எல்லாமே நேற்றுப்போல் இருக்கிறது. அக்கா தாயாய்,மூத்த சகோதரியாய் எங்களோடு வாழ்ந்தார்.

சண்டை வென்றால்/தோற்றால் அக்காவின் முகத்தில் தெரியும் .

எனக்கு நல்ல ஞாபகம் இருக்கிறது மண்கிண்டிமலை (23/07/93) வெற்றித்தாக்குதல் நான் sub main பகுதியில் கடமை செய்தேன்(எனது sub main உம் தளபதி பால்ராஜின் கட்டளைப்பகுதியும் ஒரே இடத்தில் இருந்தது). பத்மலோஜினி அக்கா மருத்துவ main பகுதியில்(குமுளமுனை)கடமை செய்தார். வெற்றிபெற்று main இற்கு போய் அக்காவிற்கு பல புது தகவல்களை சொன்னேன் . அக்காவின் சந்தோசம் இன்றும் கண்முன் நிற்கிறது.     


Share/Save/Bookmark

சனி, 2 மே, 2015

சமாதானம்
Share/Save/Bookmark

வெள்ளி, 1 மே, 2015

மேதினம் 2015
Share/Save/Bookmark