வியாழன், 25 ஏப்ரல், 2024

அன்று கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன் இன்று மரணச்சடங்குகளே கடன் வாங்கி நடக்கிறது சுய பொருளாதாரம் கப்பலேறிவிட்டது கப்பலே இலங்கை வேந்தனுடையதுதான்


Share/Save/Bookmark

சனி, 20 ஏப்ரல், 2024

எந்த வீணையிலும் எழமுடியா இசையை மழலை மொழியில் கேட்டேன் உள்ளங்கைகளில் தெரியா ரேகைகளை ஏழையின் முகத்தில் பார்த்தேன் கவிதைகளில் எழுதா உணர்வுகளை கரும்புலியின் பிரிவில் உணர்ந்தேன் நெருப்பையும் கடந்த அனலை தாய்நிலம் பிரிகையில் சுமந்தேன்


Share/Save/Bookmark
நினைவுகளில் தொக்கி நிற்கும் கண்ணீர்த்துளிகள் உறைவதில்லை இதயங்களாய் வீழ்ந்து வெடிக்கும் சன்னங்கள் சுடும் காயங்களும் ஆறுவதில்லை பிறந்தோம் வளர்ந்தோம் தாய்(மண்)மனம் அறிந்தோம் இலகு வாழ்வு துறந்தோம் இலக்கு வாழ்விற்காய் நாலு பேர் சுமந்து போனார்கள் சாம்பலாய் பூத்தது வாழ்வு யாரோ ஒருவன் நினைவை சுமப்பான் இதுதான் நியதி


Share/Save/Bookmark

வெள்ளி, 19 ஏப்ரல், 2024

பசேலென்று குடைபோல் விரிந்திருந்த ஆலமரம் விழுதுகளையும் ஊன்றி உறுதி தளராதிருந்தது வழிப்போக்கருக்கு ஓய்விடம் சிறார்களுக்கு ஒரு சிறுவானம் திடீரென சந்தையாகும் ஆலடி சுற்றுக்கே குளிர்தரும் கற்பகம் ஆச்சியும் அறிந்த இடம் எவ்வளவு கதைகளை கேட்டிருக்கும் காலையும் மாலையும் ஊர்சுற்றி மதியம் இங்கு சந்திப்போம் இன்று பிரதேசபை தறித்துவிட்டது வெக்கையும் வேர் பிடுங்கிய குழியும் எங்களுக்குள்ளும் ஊருக்கே இணைப்பாக இருந்தது இன்றில்லை நாளை பெருங் கட்டிடம் எழும் என்கின்றனர் பறவைகள் தரிப்பிடம் இழந்து பறந்துகொண்டிருக்கின்றன


Share/Save/Bookmark

ஞாயிறு, 14 ஏப்ரல், 2024

மனிதருள் வேற்றுமையில்லை அடங்கி வாழ போவதில்லை அகங்கார அதிகாரத்திற்கு எதிர் சமதர்மம் வாழ்வின் உயிர்


Share/Save/Bookmark
உன் நினைவில் இருந்தேன் பிறக்கடித்தது எங்கோ இருக்கிறாயா? மூடநம்பிக்கை எட்டிப்பார்த்தது கனவிலும் வந்தாய் கண் திறக்க மாயமானாய் தொடர்புகளில் நீ இல்லையெனினும் என் இயங்கியலை ஆக்கிரமிக்கிறாய்


Share/Save/Bookmark

வெள்ளி, 12 ஏப்ரல், 2024

வேடர்கள் வருகிறார்கள்

வன அமைதியை கிழித்து செல்கிறது ஒரு பறவையின் கூச்சல் வேடர்கள் வருகிறார்கள் வனஉயிரிகளின் நாளாந்தம் கலைகிறது பச்சைக்காடுகளில் சிவப்பு கலக்கிறது தொங்குநாக்குகளுடன் நாய்கள் அங்குமிங்கும் திரிகின்றன நாய்கள் வனத்தில் வாழ்வதில்லை இறைச்சியோடு வரும் வேடர்களை வரவேற்கும் இருகால் உயிரினங்கள் வேடரின் நாய்களை கவனிப்பதில்லை


Share/Save/Bookmark

ஞாயிறு, 7 ஏப்ரல், 2024

வயலை தொடர்ந்திருந்தது பற்றைக்காடு சிறார் எங்களுக்கு வயல் ஒரு உலகம் அக்காடு பிறிதொரு உலகம் வயலின் குளிர்மையில் ஒன்றாவோம் காற்றில் சிலிர்ப்போம் மிதப்போம் செம்பகம் மைனா கிளியென பறவைகள் எமை பரவசப்படுத்தும் முயல்களை துரத்துவோம் பற்றைக்காட்டில் பனை கொய்யா ஈச்சமரங்கள் இன்னும் பல அணில் உடும்பு என அங்கொன்றும் இங்கொன்றுமாய் அரிய பல காட்சிகள் எதுவும் இன்றில்லை


Share/Save/Bookmark

சனி, 6 ஏப்ரல், 2024

காணாமல் போனவனின் தாய்

2008 ஆம் ஆண்டு காலம் அவன் தாயாருடன் மல்லாவியில் வசித்தவன் வவுனியாவுக்கு போனவன் திரும்பிவரவில்லை உறவென்று ஒரு வளர்ப்புநாய் குடிசை முன்குந்தில்த்தான் அவன் உறங்குவான் காலடியில் நாய் படுத்திருக்கும் அவன் இல்லையெனில் முற்றத்தில் விழித்திருக்கும் இறுதி யுத்தத்தில் மல்லாவி இடப்பெயர்வன்று நாய் திடீரென குந்தில் ஏறிப்படுத்தபடி அங்கேயே இறந்து போயிற்று 2024 ஆம் ஆண்டு காலம் அன்று தொட்டு இன்றுவரை மகனை தேடி வவுனியா சென்று கப்பம் கொடுத்தும் ஒன்றும் இல்லை அழுவதற்கு கண்ணீர் இல்லை நாவும் வறண்டு வெடித்துப்போயிற்று மூச்சிழந்து வீழ்ந்தாள் காணாமல் போனவனின் தாய் அழுதபோதும் கண்ணீர் வரவில்லை எனின் அதன் வேதனையை யார் அறிவார்? அழும் குரலின் கேரலை கேட்டிருக்கிறாயா? துயர்ப்பாடலில் நடுங்குகிறது சுற்றம் தாயே ! இனி உனக்கு சோகம் இல்லை நீதியோடு உன் உடலும் எரியட்டும்


Share/Save/Bookmark

வியாழன், 4 ஏப்ரல், 2024

வாழ்க்கையில் கணம் இல்லை யாவரும் பரஸ்பரம் கனம் பண்ணுவார் இன்று அப்படியல்ல இடிந்து கிடந்த கட்டிடக்குவியலில் ஒற்றைக்கையை வைத்து உன்னை அடையாளம் கண்டேன் பசித்த வயிறுக்கு சோறு போட்ட கையம்மா சாகாவரம் ஒன்றை நீ கேட்டாய் அன்பை பரிசளித்தார் கடவுள் சாகாவரம் இளமையில் இனிப்பாகவும் முதுமையில் தனிமையில் கசப்பாகவும்


Share/Save/Bookmark

புதன், 3 ஏப்ரல், 2024

மகுடியில் எழும் இசைக்கு பாம்புகள் நாடிவருகின்றன இசையென்பது யாரையும் கட்டிப்போடும் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு இசை பிடிக்கும் விலங்குகளுக்கும்தான் இசை வந்த திசையில் காற்றில் உலாவும்


Share/Save/Bookmark

சனி, 30 மார்ச், 2024

பாதங்களை போரில் தொலைத்தவன் சுவடுகளை தேடிக்கொண்டிருக்கிறேன் துயரங்களை வெளிக்கு மறைத்தாலும் மனது வேர்த்துவிடுகிறது இப்போதெல்லாம் நினைவுகள் மறந்துபோகின்றன ஆனாலும் என் அண்ணனுடன் கதைக்க நிறைய வைத்திருக்கிறேன்


Share/Save/Bookmark
நாய் குரைக்கிறது பாம்பாகவும் இருக்கலாம் கள்ளனாகவும் இருக்கலாம் பாட்டி இல்லை குரைத்தலின் சத்தத்தில் சொல்லிவிடுவார் படபடப்பாக இருக்கிறது யாருக்குத்தெரியும் காற்றுக்கு ஆடும் மரக்கிளையின் நிழலை பார்த்துத்தான் நாய் குரைக்கிறது


Share/Save/Bookmark

வெள்ளி, 29 மார்ச், 2024

ஒளியும் இருளும் குழைந்திருந்த மாலைப்பொழுதில் பறவைகளின் வரிசை குலையாதிருந்தது குருதி உண்ணும் நுளம்புகளை போல மண் அள்ளி டிப்பர்கள் விரைந்தன மின்மினி வெளிச்சத்தில் சட்டென உயிர்கள் பிரிந்தன முடிந்த நாட்களைப்போல போன உயிர்களும் மீளவருவதில்லை உயிர்த்தானம் கொடுக்க வரிசைகுலையா அவதானம் தேவை குழந்தையொன்று பொத்து பொத்தென நடந்து வரும் சத்தம் போல் இதயம் அடித்துக்கொள்கிறது புதிய எதிர்பார்ப்புகளோடு


Share/Save/Bookmark
முள்ளிவாய்க்கால் இறுதிநாள் இளைய போராளிதான் நீ அரச கட்டுப்பாட்டுக்குள் யாவும் அடங்கிக்கொண்டிருந்தது கைக்குழந்தையை இருகைகளால் தூக்கி முத்தமிட்டு மனைவியுடன் அனுப்பிவிட்டு போகும் பாதையையே பார்த்துக்கொண்டிருந்தாய் அவர்கள் போய்முடியும்வரை தோளில் இருந்த துப்பாக்கியை கைகளில் மாற்றியபடி ஏதும் கதைக்காமல் வந்துகொண்டிருந்தாய் ரொட்டியொன்றை மூவர் பகிர்ந்துண்டோம் பிரிந்து நீ போனாய் சிறிது தூரம் போய் என்னை அழைத்தாய் நான் உனைப்பார்க்க நீ கையசைத்துவிட்டு போனாய் பரிமாற வார்த்தைகள் இருக்கவில்லை


Share/Save/Bookmark
ஒரு உயிர்க்கனவிருந்தது கனவை நனவாக்க துயில் தொலைத்து இயங்கினோம் கனவு வெறும் நினைவாகியது வாழும் கணங்கள் சுமையாகியது சீர் துயிலற்ற வாழ்வில் கனவில்லை


Share/Save/Bookmark

வியாழன், 28 மார்ச், 2024

மயானம் மயான அமைதிதான் இடைக்கிடை தேம்பி வரும் அழுகை சத்தம் ஆற்றுகையின் நொடிகள் அல்லது துயர்க்கிடங்கின் கிளறல் வலியின் கட்டுடைப்பு பெத்த வயிறின் ஒலி


Share/Save/Bookmark
குழந்தைகள் முதல்முதலாய் கண்திறக்க பார்த்திருக்கிறேன் முதியவர் இறுதியாய் கண்மூடப்பார்த்திருக்கிறேன் பருவம் மாற செயல் மாறுவதை பார்த்திருக்கிறேன் யாம் அறியாமல் பிறந்தாலும் பிரிவினையை பார்த்திருக்கிறேன் பிரசவவலி குழந்தையை கண்டவுடன் மறைந்துவிடும் எங்கள் வலி புற்றெடுத்துக்கொண்டிருக்கிறது


Share/Save/Bookmark

சனி, 23 மார்ச், 2024

காலை விடிகிறது

அம்மா அன்பிலான அழகான கவிதை ஆண்டவன் எழுதியது கவிஞனின் குழந்தை கவிதையா ? வறுமையா? பட்டிமன்றில் கவிஞன் காலை விடிகிறது மொட்டு பூவாக மலர்கிறது இலைமீது பனித்துளி முகப்பரு போல சூரியக்கதிர்கள் முற்றத்தில் புள்ளியிட மனதில் கோலம் படிகிறது நீலக்கடல் வானில் ஏறுகிறது கடலலைகளில் மனம் ஏறி இறங்குகிறது கைவிடப்பட்ட ஒற்றைப்படகில் என் இதயம் இருக்கிறது


Share/Save/Bookmark

வியாழன், 21 மார்ச், 2024

உங்கள் நண்பனல்ல

எந்த இலட்சியத்திற்காய் உங்களை தந்தீர்களோ அந்த இலட்சியத்திற்கு மாறாய் போபவன் உங்கள் நண்பனல்ல விலைபோகமுடியாதவனே போராளி கூட்டுக்குள் வாழ்ந்தாலும் ஒரு மெழுகுதிரியாய் ஒளிர்வான்


Share/Save/Bookmark

ஞாயிறு, 17 மார்ச், 2024

நிலம் பறிபோகிறது குடியிருப்புகள் எழுகின்றன மதத்தின் பெயரில் ஆக்கிரமிப்பு பெரும்பான்மை, அரசபலம், படைகள் காக்கைவன்னியர் , ஒற்றுமையின்மை பூர்வீகமண்ணில் இனமழிகிறது யாரிடம் முறையிடுவது? ஏதும் சொல்வதற்கில்லை


Share/Save/Bookmark
மரங்கள் மீது குற்றம் சாட்டப்படுகிறது பறவைகளை அழைத்ததாய் மரங்கள் மறுக்கின்றன பறவைகள் காவிய விதைகள்தான் மரங்களாயினவாம் மரங்களை சோடிக்கும் பறவைகளை ஏக்கத்துடன் பார்க்கிறான் வழிப்போக்கன்


Share/Save/Bookmark
அவன் என்னோடு பள்ளியில் படித்தவன் வகுப்பறை கட்டுப்பாடுகளை மீறிக்கொண்டிருப்பான் ஒரே அடிவாங்குவான் அழுவான் அடுத்தநாளும் அப்படித்தான் வீட்டிலும் அடிவாங்கிய காயங்களுடன் வருவான் பத்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்தினான் ஊரடங்கு நேரத்தினுள் இந்திய இராணுவத்தால் சுடப்பட்டான் அவனுக்கு ஒரு வியாதி இருந்திருக்கிறது பெற்றோருக்கோ ஊரவருக்கோ ஆசிரியருக்கோ அது தெரிந்திருக்கவில்லை பாவம் அவனுக்கும் அது தெரிந்திருக்கவில்லை காலப்புண் ஆறுவதில்லை


Share/Save/Bookmark

நண்பா! நீயும் நானும் ஒன்றல்ல வேறுமல்ல

நான் எழுதியதை நீயோ நீ எழுதுவதை நானோ எழுதுவதில்லை நண்பா ! நீ புலம்பெயர முடிவெடுத்தாய் புகையிரத நிலையம்வரை வந்தேன் நாற்பது வருடங்கள் நீ நட்பின் இறகில் சிறகெடுத்தும் நான் குருதி தொட்டும் எழுதிக்கொண்டிருக்கிறோம் நான் மாறிவிட்டதாய் நீ சொல்கிறாய் வலியின் விசாலம் நீ அறியாய் பல உயிருறவுகளை பறிகொடுத்தேன் இனி புது உலகம் சாத்தியமில்லை நண்பா! நீயும் நானும் ஒன்றல்ல வேறுமல்ல


Share/Save/Bookmark

திங்கள், 11 மார்ச், 2024

அங்குதான் அவர்கள் இருக்கிறார்கள்

என் அனுபவங்கள் எனக்கானவை அதேபோல் உங்களதும் நெருப்பு மழைக்குள் இறங்கியும் ஏதோ ஒரு கரை சேர்ந்தேன் உள்காயங்களோடு ஆற்றுப்படுத்த இதயத்தையே சிறகாக்கி விசுறுகிறேன் நினைவு சோரும்வரை இழப்புகளின் வலி திணறி எழ மூச்சுத்திணறி மீள்வேன் யாருமறியாமல் நாளையும் விடியுமா? கசியா இரகசியமாய் மூடியிருந்த வாழ்வு எரிந்துபோகுமா? இதயசிறகு படபடக்க உயிர் காவுகிறேன் வழிப்போக்கனாக மலையடிவாரத்தில் ஏதோ கிறுக்கிப்போனான் கவிஞன் வழிமாறிய குயிலொன்று அதை பாடுகிறது இன்னோர் பிரபஞ்சத்திற்கு கேட்கிறது அங்குதான் அவர்கள் இருக்கிறார்கள்


Share/Save/Bookmark

சனி, 2 மார்ச், 2024

நிலவில்லை கதைப்பதற்கு வேறு கதையில்லை துணையுமில்லை காரிருளில் ஆந்தையின் கண்கள் பயமில்லை இது யாராக இருக்கும் ? விடியும்வரை அசையாமல் இரு தாய் நிலத்து ஆத்மாவாக இருக்குமோ?


Share/Save/Bookmark

புதன், 28 பிப்ரவரி, 2024

மௌனம் புதைந்திருக்கிறது கவலைக்கடலுக்குள் அஞ்சலி சகோதரா! மரணம் எல்லோருக்கும் வரும் சிலருக்கு ஆயுள் கணக்கிலில்லை காலத்தை மீறி வாழ்வர்


Share/Save/Bookmark

சனி, 24 பிப்ரவரி, 2024

சத்தமில்லாத யுத்தம்

இரத்தம் குடிப்பது யுத்தம் அடக்குமுறையும் ஆணவமும் யுத்தத்தின் விதை சமநீதி இல்லா உலகில் யுத்தம் தளைத்துவிடுகிறது கல்வி செல்வம் வீரம் யுத்தத்திலும் ஊட்டச்சத்து யுத்தம் இல்லையெனில் இன்று பலநாடுகள் இல்லை சில இனங்கள் இருந்திருக்கும் யுத்தமில்லா பூமி ஓர் கனவு நீதி அரசாண்டால் அது நனவு நவீன உலகில் சமாதானம் ஒரு பொறி சத்தமில்லாத யுத்தம்


Share/Save/Bookmark

வியாழன், 22 பிப்ரவரி, 2024

அவனைத்தேடி எத்தனை விழிகள் காத்திருக்கும்

கடலையே பார்த்துக்கொண்டிருந்தேன் அலைகள் தாவி விழுந்து கொண்டிருந்ததன எழுவானம் சிவந்து கொண்டிருந்தது நீ கையசைத்துப்போனாய் - ஏதோ சொல்லவந்தும் சொல்லாமல் போனாய் நிமிர்நடைக்கும் புன்னகைக்கும் குறைவில்லை இடைவெளி அகன்றுகொண்டிருந்தது நீ மறையும்வரை பார்த்துக்கொண்டிருந்தேன் மாலைநேரம் கடலோரம் நின்றுகொண்டிருந்தேன் கடல் அலைகளற்று இருந்தது "நீ வரமாட்டாய்" செய்தி மட்டும் வந்தது அடிவானில் செவ்வானம் மறைந்தது விக்கல் ஒன்று தொண்டைக்குழியில் சிக்கிற்று உடலினுள் தீ ,உயிர் பிழிய நகர்ந்தேன் அவனைத்தேடி எத்தனை விழிகள் காத்திருக்கும்


Share/Save/Bookmark

ஞாயிறு, 18 பிப்ரவரி, 2024

சிறுவர்களின் எதிர்காலத்தை நினைக்க பயமாக இருக்கிறது.

2008 ஆம் ஆண்டு பிற்காலம் , கரடிப்போக்கிற்கும் கிளி பிள்ளையார் கோயிலுக்கும் இடையில் அமைந்திருந்த பசுமை கட்டிடத்திற்கு மேற்கட்டிடத்தில் Children development council ( CDC ) நிர்வாகக்கூடம் நடைபெற்றது. CDC இற்கு பொறுப்பாக ரவி அண்ணை ( சூட்டி, மகேந்தி அவர்களின் அண்ணன் ) இருந்தார். பிரான்சிஸ் அடிகளார் CDC யின் தலைவராக இருந்தார். CDC வடகிழக்கு மாகாணத்திலுள்ள ஐந்து வயதிற்கு ( முன்பள்ளி) குறைந்தவர்களின் முன்னேற்றத்திற்காக TRO அமைப்பின் கீழ் உருவாக்கப்பட்டிருந்தது. CDC யின் ஆலோசகராக நான் இருந்தேன். அதுதான் CDC யின் இறுதிக்கூட்டம் என்று அன்று நான் நினைக்கவில்லை. கூட்டம் முடிந்தபின்பும் ரவி அண்ணை, நான், பிரான்சிஸ் அடிகளார் நீண்டநேரம் உரையாடினோம். உரையாடலில் சிறுவர்களுக்கான திட்டங்களும் கரிசனைகளுமே இருந்தன.அதற்குப்பின் எவ்வளவோ நடந்து முடிந்துவிட்டது. இப்போது வாழும் சிறுவர்களின் எதிர்காலத்தை நினைக்க பயமாக இருக்கிறது. எனக்குத்தான் இப்படியிருக்கிறதோ தெரியவில்லை.


Share/Save/Bookmark

வெள்ளி, 16 பிப்ரவரி, 2024

அவன் அப்படியொன்றும் அதிகம் கேட்கவில்லை சில்லறை இருந்தால் தாங்கோ சாமி பாவம் நவீன மகிழூந்தில் வந்திறங்கியவரிடம் அது இருந்திருக்க சாத்தியமில்லை துளிர்த்த போது விரிந்த போது தெரிந்த ஓளி பழுத்த இலைகள் வீழ்ந்த போது இல்லை இருந்தும் சருகாகி உரமாகியது தாய்மண்ணில்


Share/Save/Bookmark
சோ வென துரத்தி வருகிறது மழை கொடியில் காய்ந்த காயாத உடுப்புகளுடன் தாவாரத்திற்குள் ஓடி வர சொர் என பொழிகிறது தாய்மண்மடி வாசம் மூக்கினுள் மழைவிட்ட பின்பும் மனதிற்குள் தூவானம்


Share/Save/Bookmark

வியாழன், 15 பிப்ரவரி, 2024

பூமி சுற்றிக்கொண்டிருக்கிறது காலம் ஓடிக்கொண்டிருக்கிறது முதுமை வெளிவாசலில் நிற்கிறது நினைவுகளில் மட்டும் சில படங்கள் உணவுக்கும் சுவையில்லை எதுவும் கூடவரப்போவதில்லை கடைசியாய் கண்கள் மூடுகையில் எந்த படம் ஓடியிருக்கும் ?


Share/Save/Bookmark
நீண்ட கனவுக்குப்பின்னால் எங்களுக்கென்று எதுவுமிருந்ததில்லை பெருங்கனவு கனவானதும் இழப்புகளின் ஊமைக்காயம் இதயத்தினுள் வளர்ந்து கொண்டிருக்கிறது உப்புக்குருதியில் வளரும் காயத்திற்கு மருந்தில்லை முடிவுமில்லை பனிமூடும் இரவுகளில் தனித்திருக்கிறேன் பனிப்படர்க்கையின் வெண்நிறம் ஆவிகளின் உடைபோல சூழ்ந்திருக்கிறது மூச்சு விடவும் ஆவிவருகிறது யாவும் உறைந்திருக்க கடிகாரம் மட்டும் ஓடிக்கொண்டிருக்கிறது சொல்வழி கேளாதவன் போல குருதிற்குள் வாழ்ந்த என்னிடம் "குருதியின் நிறம் சிகப்பு" என சொல்கிறான் ஒருவன் ஓ! அப்படியா என நகர்கிறேன் ஆச்சரியமாய் பார்க்கிறான் இரக்கமற்றவன் என நினைக்கிறான் பூசி மெழுகிய இரண்டாவது வாழ்க்கையில் எதையும் நினைத்துவிட்டுப்போகட்டும்


Share/Save/Bookmark

சனி, 10 பிப்ரவரி, 2024

பறவை ஒன்று பறந்துபோகிறது கூடவே அதன் நிழலும் என்னை கடந்து போகிறது செய்தியொன்றை தந்துவிட்டு வானில் சிறகடித்துபோகிறது இருள் வருகிறது வீடு போ ! நாடு இல்லாதவனுக்கு ஏது வீடு? மஞ்சள்ஒளி அந்திவானை தந்துவிட்டு கடல் மீது குந்தியிருக்கிறது சூரியன் எச்சினமும் மறைகிறது அவ்வழகில் இக்கணம் தொடராதோ? சூரியனையும் விழுங்குகிறது கடல் துயரில் அமிழ்ந்து கண்களை திறக்க நிலாவொளி ஆறுதல் தருகிறது அதில் அம்மாவின் முகம் தெரிகிறது


Share/Save/Bookmark
மெல்லிய குளிரில் மனம் குளிரும் அதீத குளிரில் மனம் உறையும் உடலும் ஒருநாள் நிரந்தரமாய் குளிரும் குளிரும் வாழ்வில் வெப்பமும் இருக்கும்


Share/Save/Bookmark

ஞாயிறு, 4 பிப்ரவரி, 2024

எனக்குள் உண்மையாக வாழ்தல் என்பதே என் நடைமுறை யார் மீதும் கோபதாபம் இல்லை வாழ்வின் நிச்சயமின்மையை உன் போல் நானும் அறிவேன் எதுவும் எப்போதும் நடக்கலாம் ஒருவரை ஒருவர் ஆற்றுப்படுத்துவோம்


Share/Save/Bookmark

சனி, 3 பிப்ரவரி, 2024

அன்று காடு வெட்டி களனியாகி செழித்திருந்த ஊர் ஆட்டுக்குட்டிகள் மே மே சத்தமிட தாயாடு ஓடிவந்தது ஒளித்திருந்த ஓநாயொன்று அன்று தாயாடையிழந்தோம் குட்டிகள் தனித்தன வலி சுமந்து வளர்த்தோம் இன்று அநாதை இல்லங்கள் அங்கும் இங்கும் எங்கும்


Share/Save/Bookmark
அடர்ந்த வனம் துள்ளித்திரிந்த மான்கள் தெத்திய முயல்கள் தொங்கிய குருவிகளின் கூடு யாவும் பொசுக்கிப்போயிற்று காட்டுத்தீயின் கோரம் புகைந்து கொண்டிருக்கிறது (அஸ்த) மனம்


Share/Save/Bookmark

இறுதி கையசைப்பின் நினைவ

பஞ்சனைக்குள் வாழ்ந்த நீ நெருப்பாற்றுக்குள் போய் வந்தாய் ஒவ்வொரு தடவையும் போய் திகிலூட்டும் கதைகளோடு வந்தாய் சிலதடவை விழுப்புண்ணோடும் போனாய் வந்தாய் கதைகளற்று வானமே இடிந்து எம்மீது வீழ்ந்தது இறுதி கையசைப்பின் நினைவு அம்மாவிடம் இன்னும் உயிரோடு இருக்கிறது ஏதோ ஒரு செய்தியோடு


Share/Save/Bookmark

வெள்ளி, 2 பிப்ரவரி, 2024

கேட்டது குழந்தை

கொட்டும் மழை நீரை சேமிக்க முடியவில்லை கேட்டது குழந்தை எப்படி என் தாகம் தீர்ப்பாய்? உடல் உழைப்பில்லை கண்டதெல்லாம் உண்று நோய் இறக்குமதி கேட்டது குழந்தை எப்படி என்னைக்காப்பாய்?


Share/Save/Bookmark

செவ்வாய், 30 ஜனவரி, 2024

மீளவும் வரப்போவதில்லை

புகைப்படம் பார்க்கிறேன் கண்கள் அசைய மறுக்கிறது நீ உயிராய் என் முன் யாவும் காட்சியாய் விரிகிறது கனதியான வாழ்வு மீளவருகிறது ஆவலில் உற்றுப் பார்க்கிறேன் நீயில்லை எதுவும் நிஜமில்லை கண்ணீர்ப்படலம் உன்னை மறைக்கிறது பறவையொன்று உள்ளங்கையில் இறங்கிற்று சிறகினில் கவிதையினை கிறுக்கிறேன் அது உயர பறக்கையில் பாடலாகிறது நண்பா! நீ மட்டுமில்லை நீயும் நானும் உலாவிய ஒழுங்கைகள் வடலி நிறை பனை வெளி உணவு தரும் குடிசைகள் மீளவும் வரப்போவதில்லை


Share/Save/Bookmark


Share/Save/Bookmark

திங்கள், 29 ஜனவரி, 2024

மலரன்னை " யாழ் முத்து" விருது பெறுகிறார்



Share/Save/Bookmark

ஞாயிறு, 28 ஜனவரி, 2024

வேரறுந்த வாழ்வில் வாசமில்லை

என் சிறுபராயம் தாய்வழி பேரனுடனான சம்பாஷணை இலக்கியத்தின் ஒரு முகம் பூர்வீகம் மறுமுகம் வாழ்வியல் அதன் அகம் தோட்டமும் துரவும் வண்டிலுமாய் எனக்குள் ஓடுகிறது பந்தம் மூதாதையர்களை தேடும் பயணம் என்னோடு முடிந்துவிடுமா? புலம்பெயர்ந்ததின் விளைவு எங்கு போய் முடியும்? முதுசொம்களை தொலைத்த வாழ்வில் பவுசு இருந்தென்ன? இழப்பதற்கு எதுவுமில்லையெனினும் தாய்நிலம் துறவாதீர் ! தாயைப்போல யாருமில்லை வேரறுந்த வாழ்வில் வாசமில்லை தாகத்திற்கு கானல் நீர் தீர்வுமில்லை


Share/Save/Bookmark

வெள்ளி, 26 ஜனவரி, 2024

எனது வாழ்விடம் காணாமல் போயிற்று

ஒரு சிறிய ஊர் அநேகருக்கு அநேகரை தெரியும் ஆள் ஆளுக்கு பட்டப்பெயர்கள் இருக்கும் பொலிஸ் வந்ததில்லை யாருக்கும் ஒன்றென்றால் ஊரே ஒன்றாகும் பகட்டுமில்லை பட்டினியுமில்லை ஆசிரியர் மாணவரை தந்தை பெயர் சொல்லியே அழைப்பர் செருப்புகளற்று நடந்துதிரியும் பட்டம் ஏற்றும் மணல் வெளி பறவையொன்று வானத்தில் படர்ந்து கடலில் இறங்கி வள்ளத்தில் ஏறிற்று என்ற புனைவற்ற கிராமம் பறவைகள் மாடுகளில் மரங்களில் முற்றத்தில் நாளும் கூடும் சந்தையோடு கோலாகல கோயில் திருவிழாக்களும் நாடகங்களும் தாச்சி விளையாட்டும் வேறு என்ன வேணும்? பொய் இல்லை போட்டி இருக்கும் வண்டில்ச்சவாரி கிட்டியடியென நாளும் பொழுதும் நீளும் எனது அழகிய வாழ்விடம் ஒரு பகலுக்கும் இரவுக்கும் இடையில் காணாமல் போயிற்று


Share/Save/Bookmark

ஞாயிறு, 21 ஜனவரி, 2024

இழப்பதற்கும் எதுவுமில்லை

மனதிற்குள் சுழலும் கூரான சக்கரம் 

சதா உழலும் நெருடும்வலி 

யாரோடும் பகிரா காயம் 

உயிரிருக்கும்வரை தீமிதிப்பு 


கனவுமில்லை இதயமுமில்லை 

சிரிப்பதிலும் உயிரில்லை 

நினைப்பதுபோல் நிஜமுமில்லை 

இழப்பதற்கும் எதுவுமில்லை




Share/Save/Bookmark

சனி, 20 ஜனவரி, 2024

இடைநடுவில் 

நின்றுபோன தொடர்பாடல் 

எங்குபோனாய் நீ ?

நெருக்கடியில் 

நொறுங்கிப்போன இதயம் 

சரிசெய்துவர 

உன் தொடர்பு இல்லை 

விடைகள் இல்லா கேள்விகள்  

நீர்க்குமுழிகளாய் பெருத்து உடைகின்றன 

நிழலுக்குள் ஒளிந்திருக்கும் ஒளி போல 

எனக்குள் நீ இருப்பாய் 

இப்படிக்கு 

விடியாத காலையில் 

விடைபெற்றுப்போனவன் 



Share/Save/Bookmark

மனதில் வெட்கையெனினும் வளவினுள் வெள்ளம்

 நான் சிறுவன் 

வேலியில் ஒரு பெரிய பூவரசு 

அம்மம்மாவின் வயதிருக்கும்

பச்சை இதயமாய் விரிந்த இலைகள் 

மஞ்சள் இலைகளின் நிலக்கோலம் 

இலைகள் ஆட்டுக்கு குழை  

எங்களுக்கு பீப்பீ 

சிறார்களுக்கு உள்ளங்கை கோப்பை 

பூவரசு அணில்களின் கோட்டை   

புலுனிகளின் கச்சேரி மேடை 

கண்களுக்கு மட்டுமல்ல மனதிற்கும் குளிர்மை     

பூவரசின் நீண்டகிளைகள்

கதியால்களாகும் நம்பிக்கை 

பூவரசம்பூ பூவுலகின் அதிசயம் 

  

பிறிதொருநாள் 

பூவரசு பட்டு விறகாகியிருந்தது

அந்த இடத்தில மதில் ஓடிற்று 

நிழல் இல்லை 

மதில் மேல் பூனை 

மனதில் வெட்கையெனினும்

வளவினுள் வெள்ளம்         



Share/Save/Bookmark

வெள்ளி, 19 ஜனவரி, 2024

"கவிதையை எழுதாதே கவிதையாய் வாழ்"

 "கவிதையை எழுதாதே 

கவிதையாய் வாழ்"

 

நண்பா!

நீ வாசிக்கமுடியாமல் போன 

கவிதையை 

நான் எழுதப்போவதில்லை 

அதுவும் 

உன்னோடு போனதாய் இருக்கட்டும் 

உன்னருகில் வரும் நாள் 

உனக்காய் நான் எழுதுவேன் 

தோழ மை கொண்டு 




Share/Save/Bookmark

ஞாயிறு, 14 ஜனவரி, 2024

இன்னும் நாம் உயிர்க்கவில்லை

வாழவேண்டிய தோழன் வீழ்ந்தான் 

ஒவ்வொரு தோழராய் இழந்தபடி - தினம்   

மனம் பிசையும் வேதனையை சுமந்தபடி 

தணல் மீது தொடர்ந்தும் நடந்தோம் 

மயிரிழையில் உயிர்தப்பி தப்பி

எதற்கும் தயாராய் உழைத்தோம் 

உலகமறியா அர்ப்பணிப்புகளுடன் 

ஒருநாள் யாவும் முடிந்தாயிற்று 

எதுவுமில்லை 

யாரும் காணா இருள் 

அழக்கூட முடியவில்லை 

வெறும் துடிக்கும் இதயத்தை 

கையிற்குள் இறுக்கிப் பொத்தியபடி 

வாழும் பிணமாக ஊர்ந்தோம்  

இன்னும் நாம் உயிர்க்கவில்லை  



Share/Save/Bookmark

 போராளியாதல் 

ஒன்றும் இலகுவல்ல 

புலம்பெயர்வதை போல 

பாசம் கனவு உதறிப்போதல் 

ஒன்றும் எளிதல்ல 

அன்றே இறப்பது போல

நாடிழத்தல் 

ஒன்றும் இலகுவல்ல 

கண்களை இழப்பது போல    



Share/Save/Bookmark

சனி, 13 ஜனவரி, 2024

அவன் சரணடையமுன் நெஞ்சோடு அனைத்திருந்த மகனை மனைவியிடம் கொடுத்தான் மகனோ அவனின் சட்டையை பிடித்திருந்தான் தாய்தான் அந்த பிடியை இளக்கினார் தாய் மனைவியிடம் விடைபெற்று மகனை முத்தமிட்டு விட்டு பேரூந்தில் ஏறியவன்தான் எந்த செய்தியும் இல்லை


Share/Save/Bookmark

வெள்ளி, 12 ஜனவரி, 2024

நெஞ்சினுள் ஒரு நெருஞ்சிமுள்

 வழுக்கையாறு வாய்க்காலிருந்து 

கூப்பிடு தூரத்தில் மூன்று வயல்கள்

வரம்புக்கட்டுவதும் மூலைகொத்துவதும்

நெல் விதைப்பதும் களைபிடுங்குவதும் 

வயலின் பசுமையில் நாங்களும் இருந்தோம் 

இருபோக விதைப்பு 

சிலகாலம் ஒருபோகமானது 

மூன்று வயல்களிலும் 

வெவ்வேறு நெல்லினங்கள் விதைப்போம் 

ஒன்று பிழைத்தாலும் மற்றையது கைவிடாது 

நானறிந்து நட்டம் ஏற்பட்டதில்லை    

இறுதி பலவருடங்கள் 

யாரோதான் செய்தார்கள் 

செய்தார்களோ இல்லையோ தெரியவில்லை  


பயிர்களோடு சேர்ந்து அசையும் மனம்

புலுனிகளும் வேறு குருவிகளும் பாடும் இசை 

வயலோடும் வயலை சுற்றியும் நட்புவட்டம்      

முதல் நெல்லில் பொங்கும் பொங்கல் 

அரிசிமா மணக்கும் கொழுக்கட்டை 

அறுவடையும் சூடடிப்பும் 

வைக்கோலும் அந்த சுனையும் 

எப்படி மறப்பது?


மூன்று தலைமுறையின் 

வியர்வை கலந்த மண் 

பார்க்க ஆட்கள் இல்லை 

வயல் விற்பனையாயிற்று 

வயலில்லா முதல் பொங்கல் நெருங்குகிறது 

நெஞ்சினுள் ஒரு நெருஞ்சிமுள் 

வயல்கள் வீடாக மாறும் காலம் 



Share/Save/Bookmark

ஞாயிறு, 7 ஜனவரி, 2024

 அம்மா!

ஒரு அதிசய உலகம்தான் 

அம்மாவின் பாசவலைக்குள் சிக்கியிருக்கும் பிள்ளைகள் 

அம்மா நித்திரை கொள்வதை காணுவதில்லை 

நோய் நொடியிருந்தாலும்  

அம்மா குடும்பத்திற்காக இயங்கிக்கொண்டிருப்பார் 

அவரது துயர் யாரும் அறிவதில்லை 

அம்மா பிள்ளைகளை நிமிர்த்திவிடும் நெம்புகோல் மட்டுமல்ல 

   

தீரா கடனுடன் வாழும் பிள்ளைகள்  



Share/Save/Bookmark

 அரசியல் பகை நிரந்தரமுமில்லை 

தற்செயலானது  தற்குறியானது 

ஆபத்தானது  அதிசயமானதும் - அது 

மிகைப்படுத்தலால் உறங்குவதுமில்லை  

கொள்கைகளோடு சேர்ந்ததுமில்லை 

கூலிகளால் தீர்மானிக்கப்படுகிறது 

மதம் மதங்கொள்வதும் 

சிறிய இனம் இரையாவதும் 

இன்று நேற்று வந்ததில்லை 

உரிமையை பறிப்பதில் தொடங்கி 

உயிரெடுப்பதில் முடியும் 



Share/Save/Bookmark

சனி, 6 ஜனவரி, 2024

 அவரவருக்கு 

அவர் இலட்சியம் / எதிர்பார்ப்பு பெரியது 

அவர்களது வாழ்வு அவர்களுக்கானது 

அடுத்தவர் தலையிடுவது முறையல்ல

எல்லாராலும் எல்லாம் செய்யமுடிவதில்லை 

சொல்லும் செயலும் ஒன்றாயிரு  

தனித்திருந்தாலும் தனித்துவமாயிரு    



Share/Save/Bookmark

புலம்பெயர்வு

 புலம்பெயர்வு 

வசதி வாய்ப்புகளை தந்திருக்கலாம் 

ஏன்? 

(போலிப்)பெருமையை கூட தந்திருக்கலாம் 

இருந்துமென்ன 

அவரது சந்ததி அடையாளம் இழக்கும்நாள்

வெகுதொலைவில் இல்லை  

உழைப்பின் வலி தீரமுன்      

கொடுக்கும் விலை கொடியது

புலம்பெயர்ந்தோர் புலன்பெயர்ந்தவரல்ல 

நீரும் எண்ணெயுமாய் அங்கும் இங்கும்     



Share/Save/Bookmark

வெள்ளி, 5 ஜனவரி, 2024

 குழந்தைகளுடன் 

நட்பாகும் மருத்துவன் 

வாழ்நாள் பேறுபோல

குழந்தை வளர வளர 

நட்பின் வயதும் வளரும் 

குழந்தை பெரியவராக 

அவரது உலகம் வானத்தில் விரிந்திக்கும் 

நட்சத்திரங்களாய்

குழந்தையும் மருத்துவனை மறப்பதில்லை 

மருத்துவனும் குழந்தையை மறப்பதேயில்லை  

நீண்ட இடைவெளியில்  திடுதிப்பென சந்திக்கையில் 

குழந்தையே மருத்துவனாகிறான்

மருத்துவனே குழந்தை போல்

ஒரு நோயாளியாக     



Share/Save/Bookmark
Bookmark and Share