வியாழன், 12 செப்டம்பர், 2013

மின்னஞ்சல்
இன்று காலை எனக்கு காந்தன் என்பவரிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது.
இரண்டு நாட்களுக்கு முன்பும் அவரிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது.என்னை ஞாபகம் இருக்கிறதா? எப்படி இருக்கிறீர்கள்?
அன்புடன் காந்தன் என்று மட்டும் இருந்தது.எனக்கு காந்தன் என்ற பெயரில் பலரை தெரியும் .அதில் சிலர் போராளிகள் அவர்களில் சிலர் வீரச்சாவு அடைந்துவிட்டார்கள்.நான் அவர் யார் என்று சரியாக அறியாததால் பதிலளிக்கவில்லை.
இன்று வந்த மின்னஞ்சலை திறந்தேன்.என்னை மறந்துவிட்டீர்களா?
முள்ளிவாய்க்காலின்  இறுதி நாளின் போது நான் தடி ஊன்றி  ஊன்றி
வந்தேன்.நீங்கள் ஒருவரை கூப்பிட்டு ஊன்றுகோல் ஒன்றை எடுத்து தந்தீர்களே. அந்த ஊன்றுகோலில் கூட இரத்தம் பட்டிருந்தது.நீங்கள் அதை கழுவி கொடுக்கச் சொன்னீர்களே. மறந்துவிட்டீர்களா?. அன்புடன் காந்தன் என்றிருந்தது.

இந்த சம்பவம் என் ஞாபகபரப்பில்  ஏதோ ஒருமூலையில் கிடக்கிறது.ஆனால் இந்த காந்தனின் முகம் ஞாபகத்தில் இல்லை.வேறு காந்தர்களின் முகங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து போகிறது.


Share/Save/Bookmark

புதன், 14 ஆகஸ்ட், 2013

போராட்ட ஆத்மா சாகாது
மக்கள் எழுபத்து ஏழில்
தனிநாட்டுக்கு தீர்ப்பளித்தனர்
தந்தை செல்வா
தமிழ் மக்களை கடவுளே
காப்பாற்றவேண்டும் என்றார்   
வேறுவழியில்லை
கைகளில் ஆயுதம்


நாங்கள் அடித்தால் அடிவாங்க
பயந்தாங்கோழிகளோ  
மகாத்மாக்களோ இல்லை 
அடித்தார்
திருப்பி அடித்தோம்
அடித்தவரில்
குற்றம் சொல்லா உலகு
திருப்பி அடித்தவரில்
எங்ஙனம் குற்றம் காண்பது?
எங்கள் கைகளை மட்டும் கட்டி
எதிரிக்கு ஆயுதம் கொடுத்தது
மூர்க்கமாய் கால் தடங்கள் போட்டது
முதுகை குறிவைத்தது
இயங்கிய உடல் ஓயலாம்
போராட்ட ஆத்மா சாகாது
அடிமைத்தனத்தை ஏற்காது
நீறு பூத்த நெருப்பாய்
விடுதலை தாகம்  இருக்கும்

ஒரு நாள் தீரும்


Share/Save/Bookmark

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

ஏன் மௌனம்?முஸ்லீம் மக்கள்
சிங்கள தமிழ் போரில்
தேவையான போதெல்லாம்
சிங்களத்திற்கு முண்டு தந்தனர்
சிங்களனின் புலனாய்வில்
முதுகெலும்பாய் இருந்தனர்
கிழக்கு தேர்தலிலும்
சிங்களத்துடன் கூட்டாகி
தமிழரை தோற்கடித்தனர் 
ஜெனிவாவிலும்
சிங்களத்திற்கு தோள் கொடுத்தனர்
தமிழ் இலக்கியத்திலும்
சிங்களத்திட்காய் பேசினர் 
கூட இருந்து குழிபறித்தனர்
தமிழர்கள் விழும்போதெல்லாம்
ஏறி உலக்க தவறவேயில்லை
பண்டமாற்றாய் பணம்
சிங்களம் முகத்தில் குத்த
முஸ்லீம் முதுகில் குத்தினர்

இன்று சிங்களம்
பள்ளிவாசல்களை உடைக்கிறது
வாழும் சுதந்திரத்தை பறிக்கிறது 
தமிழன் மட்டுமல்ல
நீயும் அடிமை என்கிறது

நாம் குரல் கொடுப்போம்
ஆக்கிரமிப்பை,அடாவடியை எதிர்க்க
அடுத்தவன் வாழ்வுரிமைக்காக 
ஏன் மௌனம்?

ஏன் மௌனம்?


Share/Save/Bookmark

சனி, 10 ஆகஸ்ட், 2013

ஆத்மா உலாவும் காணி

எழுபதில் கட்டிய வீடு,
முற்றத்தில் மல்லிகை பூக்களாய் சொரிய
வீடே மல்லிகை வாசம்
கிணற்றடியில்
செவ்வந்திபூக்கள் விரிந்திருக்க
நிலமெல்லாம் பாக்குகள்
தேசிமரத்தில் மஞ்சள் பல்ப்புகள்
மூடிக்கட்டியிருக்கும் மாதாளம் பழங்கள்
பழைய பூவரசிலிலும் பூக்கள் 
வளவில் ஆங்காங்கே செத்தல்கள்
அண்ணாந்து பார்த்தால் தேங்காய்க்குலைகள்
ஊஞ்சல் கட்டியிருக்கும் வேம்பு
அணில் ஓடிவிளையாடும் கொய்யா
திடுக்கிட நொங்கு விழும் சத்தம்
நாய் கூடபுகமுடியா வேலி

அம்மா,அம்மாவின் அம்மா,அம்மம்மாவின் அம்மா
அவர்களின் ஆத்மா உலாவும் காணி

கோடி ஆசையோடு வீடு பார்க்க போனோம்
வாசலில்  பூட்டு
முற்றத்தில் குறியீட்டுப்பலகை

" இராணுவத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது"  


Share/Save/Bookmark

காணாமல் போனவர்கணவன்
இந்திய இராணுவத்தால்
அல்லது
கூட இருந்தவரால்
காணாமல் போனவர்
தம்பி கடல்தொழிலில்
கடற்பீரங்கி சத்ததிற்கு பின்
காணாமல் போனவன்
மூத்தவன்
செம்மனிக்காலத்தில்
காணாமல் போனவன்
இளையவன்
முள்ளிவைக்காலுக்குப்பின்
சரணடைந்து காணாமல் போனவன்
மருமகளும்,பேரக்குஞ்சுகளும்
அவுஸ்ரேலியாவிற்கான  கடற்பயணத்தில்
காணாமல் போனவர்

இவள் வானத்தையும்
கடலையும் மாறி மாறி பார்க்கிறாள்        
Share/Save/Bookmark

புதன், 7 ஆகஸ்ட், 2013

குளிர்மையை பரிசளிக்கும் காடு
காடுகளில் வாழத்தொடங்கும் வரை
காடுகளின் சொர்க்கம் தெரிந்திருக்கவில்லை
வீடும் சுற்றமும் அற்பமாய்  போயிற்று
காடுகளில் வாழும்வரை

இன்று கலைந்த கூட்டில்
தாயை தேடும் குஞ்சுகளாய்
காடற்று வாழும் வாழ்வு 
காடுகளில் தவழும் இசையை
கேட்க மனம் மீண்டும் மீண்டும் துள்ளும்
பாலுக்கு அழும் குழந்தையைப்போல

காடுகள் அபாயமானவை
பழகாதவனுக்கு
காடுகள் அதிசயம்
நேசிப்பவனுக்கு
ஊர்வாழ்க்கை சீனி/சர்க்கரை
காட்டுவாழ்க்கை தேன் 

காட்டினுள்
மிருகங்கள் குளம் நாடிவரும் அழகு
வேட்டையால் சிதறும் கொடுமை
அழகிய ஊரில் கிபீர் இரைச்சலுடன்
குண்டு வீசுவது போல 

கொடும் வெயிலிலும்
குளிர்மையை பரிசளிக்கும் காடு
(யுத்த) காட்டுத்தீயால் வெந்தது
கூடி வாழ்ந்த உறவுகளுடன் 

காடு பத்திரமாய் வைத்திருக்குமா?
பழைய நினைவுகளை
எங்கள் சுவடுகளை

சாம்பலில் இருந்து பறவைகள் எழும்
நாளிற்காய் காத்திருக்கும் வதங்கிய மனம்
மீளவும் துளிர்க்குமா?
அந்த காடுகளைப்போல
அந்த குளிர்மை தரும் காடுகளைப்போலShare/Save/Bookmark

சனி, 3 ஆகஸ்ட், 2013

யாரும் குறிப்பெடுக்கா சோகம்

  


நேற்றுவரை
ஒன்றாய் வாழ்ந்தவரை,
வீரச்சாவு என கேட்கும் கணங்கள்
மனம் பிழிந்து சாறாகும் நிமிடங்கள்
அவர் உறவுகளை காணும் நிமிடத்துளிகள்
உலகில் யாருக்குமே வரக்கூடாது
எங்கள் பணிகளுக்குள்
உறவுகளுக்கு ஆறுதல் சொல்லி
இறுதி நிகழ்வை நடாத்தி
எல்லோரும் போன பின்
துயிலும் இல்லத்தில் இருந்து
நாங்கள் அழுவோம்
சிலர் ஊமையாய் அழுவர்
சிலர் ஒப்பாரி வைப்பர்
சிலர் சாமம் தாண்டியும்
மண்ணில் வீழ்ந்துகிடப்பர் 

யாரும் குறிப்பெடுக்கா சோகம்  


Share/Save/Bookmark

வியாழன், 25 ஜூலை, 2013

வேர்கள்

வேர்கள்
வெளியில் தெரிவதில்லை
கனிகள்,காய்கள்
ஏன் மரங்கள் கூட
கொண்டாடப்படுகையில்
வேர்களின் வியர்வையை
யாரும் துடைப்பதில்லை
மரத்தை வளர்க்க
நிலத்தை துளையிட்ட  
வேர்களின் வலி யார் அறிவார்
கனிகளை,காய்களை,மரத்தை
திருடுகையில்
வேரின் அழுகையை யார் நினைத்தார்?
வேர் என்பது
உயிருள்ள அத்திவாரம்
தாயை போல,
தாயின் தாயை போல
மரம் வானளவு வளர்ந்தாலும்
வேர்களுக்குத்தான்
தாய் மண்ணின் முத்தம்

வேர் கிழங்கானால்
மரமும் சாகும்
சுயநலர்களுக்காய்.

-நிரோன் -


Share/Save/Bookmark

வியாழன், 18 ஜூலை, 2013

முன்னாள் மூத்த பெண் போராளி

முன்னாள் மூத்த பெண் போராளி ,தொண்ணூறுகளிலேயே  இயக்கத்தில் இருந்து விலகிவிட்டார்.இப்போது திருமணம் செய்து நான்கு பிள்ளைகள்.துரதிஷ்டவசமாய் கணவன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்
விபத்தொன்றில் சிக்கி ,ஒரு காலில் பெரும் காயம் .பல தடவைகள் யாழ்ப்பாணத்தில் சத்திர சிகிச்சை செய்தும் எலும்பு பொருந்தவில்லை. இறுதியில் கொழும்பில் சத்திரசிகிச்சை செய்ய சிபார்சு செய்யப்பட்டது. அவர்களிடம் இருந்த சிறுக சிறுக சேமித்த பணமெல்லாம் முடிந்து ,இப்போது கடன் வாங்கி மூன்று தடவை கொழும்பு போய் வந்தாச்சு.இந்த முறை சத்திர சிகிச்சை செய்யும் திகதியும் நிர்ணயிக்கப்பட்டது.இருக்கின்ற ஒரே காணி ஈடு வைக்கப்பட்டது.ஏதோ பொருத்தும் பொருளும் இரண்டு இலட்சம் ரூபாயிட்கு வாங்கியும் கொடுக்கப்பட்டு இன்றுதான் சத்திரசிகிச்சை என இருந்தது.பின் இன்று சத்திர சிகிச்சை பின்போடப்பட்டுள்ளது.தாதிமார் பகிஸ்கரிப்பு போராட்டமாம். சத்திரசிகிச்சைக்குப்பின் அவரை பார்க்கவென யாழில் இருந்து ஒருவரை கூட்டிப்போயிருந்தார்.அவருக்கு நாளுக்கு ஆயிரத்து ஐநூறு கொடுக்கோணும்.நாளைக்கு டாக்டர் வந்துதான் சொல்லுவார் எப்ப சத்திரசிகிச்சை என்று. அநேகமாய் ஒரு கிழமைக்குள்ள இருக்காது.ஏனெனில் நாளைக்கு நாளன்டைக்கெல்லாம்  வேற நோயாளிகளுக்கு சத்திரசிகிச்சை போட்டிருக்கு. முன்னாள் பெண்போராளி நான்கு சிறிய பிள்ளைகளுடன் யாழ்ப்பாணத்தில் இருந்து அழுதுகொண்டிருக்கிறார்.   

யாரில் குற்றம்? அநேகமாய் எல்லோரும் படிக்கும் வயதில் போராட்டத்திற்கு வந்தவர்கள்.அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையிட்கு
எதையும் படித்தறியும் சூழல் இருக்கவில்லை.ஆளணி பற்றாக்குறையால்
பலரின் வேலையை ஒராளே செய்யவேண்டியிருந்தது.சாதாரண வாழ்க்கையிட்கு திரும்பும் போது சுமை அதிகமாய் இருக்கிறது.


 ஓவியன்   


Share/Save/Bookmark

செவ்வாய், 16 ஜூலை, 2013

எனக்கு எங்கட மக்களின் ஞாபகம் வந்தது

ஆசையோடு வாழ்ந்த தாயகம் இழந்து,அகதியாய் நாடு மாறியிருந்தேன்.யாரும் தெரிந்தவரும் இல்லை.யாரும் கேட்பாருமில்லை.அகதி வாழ்வின் தணல் கொடுமையானது. ஒரு நாள் காலை கைத்தொலைபேசி எழுப்பிற்று.ஒ சிறுவயதில் எனக்குத்தெரிந்த உறவினர் ஒருவர்தான் அழைத்திருந்தார்.நீண்ட காலத்திற்கு பிறகு கதைக்கிறேன். ஏன்ரா இதுக்குள்ள போனநீ என்றார்.எனக்கும் திடீரென ஒருமாதிரியாய் போய்விட்டது.நான் சொன்னேன் இரண்டில ஒருபக்கம் நிற்கோணும் நான் ஒருபக்கம் நின்றேன் என்றேன்.ஏன்?எங்களை மாதிரி நடுநிலையாய் நின்றிருக்கலாம் என்றார். நான் சொன்னேன் எங்கட வீட்டு பிரச்னைக்கு நாங்கள் நடுநிலை என்று நிற்கிறது அவனோட நிற்கிறது என்றுதானே அர்த்தம் என்றேன்.வேற இரண்டு வீட்டாரின் பிரச்னைக்கு நாங்கள் நடுநிலையாய் நிற்கலாம் அது ஏற்றுக்கொள்ளக்கூடியது என்றேன்.அவர் திடீரென தொலைபேசியை வைத்துவிட்டார்.

 எனக்கு எங்கட மக்களின் ஞாபகம் வந்தது.களமுனையில் பங்கர் அடிக்கவும் வருவார்கள்.எல்லைப்படையாகவும் வந்தார்கள்.எதிரியின் பிரதேசத்திட்குள்ளும் இரகசிய வேலைகளை செய்தார்கள் .கைதாகி கவனிப்பார் அற்று இன்றும் சிறைக்குள்ளும் வாழ்கிறார்கள்.ஒரே மனிதர்கள் எப்படி இரண்டாகிப்போனார்கள்?  


ஒரு வருடத்திற்கு பின் அவரே மீண்டும் தொலைபேசி எடுத்தார்.எப்படி இருக்கிறாய்?என்று கூட கேட்கவில்லை.நீ எப்படி இருக்கிறாய் என்று தெரியுமென்றார்.நீ நடு ரோட்டில நிற்கிறது விளங்குதா?என்றார்.அவர் சுயநலன்களோட வாழும் ஒரு நல்ல மனிதர்.அவர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் நீங்கள் எப்படி?என்றேன்.தனக்கு எந்தக்குறையும் இல்லை என்றார்.சந்தோசம் என்றேன்.சந்தோசத்தை பற்றி உனக்கு தெரியுமா?என்றார்.சந்தோசம் அவரவர் மனதை பொறுத்தது என்றேன்.  
உனது பிள்ளைகளைப்பற்றியாவது யோசித்திருக்கிறாயா?என்றார்.
ஓரளவு யோசித்திருக்கிறேன் என்றேன். ஓரளவு என்றால்? . கொஞ்சம் என்றேன். உங்களுக்கு உலகம் விளங்காது என்றார்.அவனவன் என்னத்தை வெளியால கதைச்சாலும் உள்ளுக்கு தங்களை பார்த்துக்கொண்டு போயிடுவாங்கள் என்றார்.   வாழ்க்கையை தொலைச்சுப்போட்டியல் என்றார்.நான் சொன்னேன் .அப்படியல்ல.வாழ்ந்த வாழ்க்கையில திருப்தியும்,வந்த பாதையிட்கு எந்தக்காயமும் செய்யாத மகிழ்வும் உண்டென்றேன்.அவர் என்ன யோசித்தாரோ கோபம் வந்துவிட்டது தொலைபேசியை பொத்தென்று வைத்துவிட்டார். என் தேசத்தில் தாய்,தந்தையில்லா பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலை எனக்குள் தணலாய் பரவிக்கொண்டிருந்தது.ஓவியன்


Share/Save/Bookmark

ஞாயிறு, 14 ஜூலை, 2013

அந்த நேரத்திலும் நான் சிரித்தேன்

முள்ளிவாய்க்காலில்  இருந்து மக்கள் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள் நுழைந்து கொண்டிருந்தார்கள்.வட்டுவாகல் பகுதியை தவிர்த்து எல்லாப்பக்கம் இருந்தும் துப்பாக்கி சன்னங்கள் கீச்சு கீச்செனெ வந்துகொண்டிருந்தது. நானும் எனது ஒரு போராளியும் மண்மூட்டை மறைப்பில் இருந்து கதைத்துக்கொண்டு இருந்தோம்.சன்னம் பட்டு சில மக்கள் கீழ் விழுவதும் உறவினர் கதறும் ஒலியும் குறைவில்லாமல் கேட்டுக்கொண்டிருந்தது. என்னுடன் இருந்த போராளி ஒவ்வொருமுறை மக்களின் அழுகுரல் வரும்போதும் ஓடிப்போய் பார்த்து முடிந்ததை செய்துவிட்டு வருவான்,தேவையெனில் என்னையும் அழைப்பான். அருகில் இருந்த சனங்கள் படிப்படியாய் போய் எல்லாம் வெளிச்சுக்கொண்டு வந்தது. வண்டு மேலே சுற்றிக்கொண்டு இருந்தது.திடீரென கடற்படையின்  பீரங்கிப்படகில் இருந்து ஏவப்பட்ட இரண்டு பீரங்கிக்குண்டுகள் எமக்கு அருகில் வீழ்ந்து வெடித்தது.எமக்கு அருகில் இருந்த மண்மூட்டைகள் சிதறின.எங்களுக்கு பெரிதாய் பிரச்சனை ஒன்றும் இல்லை.எனது கண்ணுக்குள்ளும் ஒரு காதுக்குள்ளும் மண் போய் விட்டது.அதை சிறிது நேரத்தில் சரிப்பண்ணிவிட்டேன். நடந்து போய்க்கொண்டிருந்த மக்களில் மூவர் நிலத்தில் கிடந்தனர்.மற்றையவர்கள் ஒ என்று அழுதார்கள். என்னுடன் நின்ற போராளி சத்தம் போட்டு கேட்டான் யாருக்கும் காயமா?
உதவி தேவையா?காயம் இல்லை மூன்று பேர் இறந்திட்டினம் என்ற பதில் மட்டும் அங்காலப்பக்கம் இருந்து வந்தது.இது இப்ப எங்களுக்கு பழகியிருந்தது. பின் அந்த மூவரையும் விட்டு விட்டு போய் விட்டார்கள்.என்னுடன் இருந்த போராளி சொன்னான் அடிச்சவன் எப்படியும் திருப்பி அடிப்பான்.எனக்கு முகம் கழுவ தண்ணீர் தேவைப்பட்டது. தான் எடுத்துவருவதாய் சொன்னான்.வேண்டாம் நான் போகிறேன் என்று உடலங்களுக்கு அருகில் இருந்த குன்றுக்கு (கிணறு)போனேன். கிணற்றில் தண்ணீர் எடுத்து முகத்தை கழுவி விட்டு ,திரும்பி இறந்து கிடந்தவர்களை பார்த்தேன்.அதில் இருவர் வயது போனவர்கள் மற்றையது ஒரு சிறுவன் பத்து வயது வரும்.அந்த சிறுவனில் உயிர் இருப்பதிற்கான  அறிகுறி தென்பட்டது.அருகில் போய் திருப்பிப் பார்த்தேன்.அவனில் காயங்கள் இல்லை.தேவையான முதலுதவியை செய்து ,கிணற்றில் தண்ணீர் அள்ளி அவன் முகத்தில் அடித்தேன் அவன் எழுந்துவிட்டான்.எழுந்ததும் போதாதென்று அழத்தொடங்கிவிட்டான். இவனுக்கு ஒரு பிளேன்டி கொடுத்தால் நல்லா இருக்குமென்றான் என்னோடு நின்ற போராளி ,அந்த நேரத்திலும் நான் சிரித்தேன்,நாங்கள் குடிச்சாலும் நல்லாய் இருக்கும் என்றேன். அந்த சிறுவன் இறந்திருப்பவர்கள் தாத்தாவும் ஆச்சியும் என்றான்.தாய் தகப்பனை கேட்டான்.அவன் அழ அழ பாதைக்கு கூட்டிப்போனோம்.இராணுவப்பகுதிக்கு சென்று கொண்டிருந்த எங்களுக்கு தெரிந்த ஒருவருடன் இவனை ஒப்படைக்கும் பொறுப்பை கொடுத்து அனுப்பினோம்.  


ஓவியன்


Share/Save/Bookmark

வியாழன், 11 ஜூலை, 2013

நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ சில விடயங்களை செய்ய எதிரி தூண்டுகிறான்

எண்பதுகளில் சுகந்தன்/ரவிசேகரம் என்ற போராளி விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தார்.யாழ் பல்கலைக்கழகத்தின் மாணவராக இருந்த அவர் மறுமலர்ச்சிக்கழகத்தின் முக்கிய செயட்பாட்டாளராய் இருந்தார்.அவருடைய சொந்த ஊர் மாதகல் ஆகும்.

சிறிலங்கா அரசு தமிழர்களின் தாயகத்தை சிதைக்க சிங்களக் குடியேற்றங்களை விரைவு படுத்திக்கொண்டிருந்த காலம்.   
மணலாறில் கென் பார்ம்,டொலர் பார்ம் என்பன தமிழர்களின் வளமான   விவசாயப்பண்ணைகள்  அந்த பண்ணைகளையும் ஆக்கிரமித்து சிங்கள குடியேற்றம் நடை பெற்றது. குற்றம் செய்த சிங்கள மக்களை குடியேற்ற பாவித்தார்கள் .குடியேற்றங்கள் எப்போதும் நிரந்தர ஆக்கிரமிப்பிற்கு வழிகோலும். அதனால் அப்போது ரெஜி அண்ணை,மாத்தையா அண்ணை தலைமையில் அந்த குடியேற்றங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
அதில் சிங்களமக்கள் கொல்லப்பட்டார்கள்.

சாதாரண சிங்கள மக்கள் கொல்லப்பட்டது சில போராளிகளுக்கு கவலையை கொடுத்தது.சுகந்தன் அண்ணாவும் தலைவருடன் இது விடயமாய் கதைக்க தமிழ் நாட்டிற்கு சென்றார்.தலைவர் அவர்கள் நடைமுறையில் சில விடயங்கள் தவிர்க்க முடியாது என்று சொல்லிவிட்டார்.சுகந்தன் அண்ணா இயக்கத்தில் இருந்து விலத்துவதாய்
துண்டு கொடுத்துவிட்டு வந்துவிட்டார்.விலத்திபோகும் போதும்  அவருடன் இருந்த சயனைற்றை சுகந்தன் அண்ணாவின் விருப்பப்படி ,
சுகந்தன் அண்ணா வைத்திருக்க அனுமதிக்கப்பட்டது.பின் கச்சேரியடியில்
  சிங்கள இராணுவத்தின் ஒரு சுற்றிவளைப்பில் சுகந்தன் அண்ணா சயனைட் உண்று மரணமானார். அது மிகவும் கவலையானது.

பின் ஒரு காலத்தில் தலைவரிடம் இவ்விடயத்தை கதைத்தேன்.தலைவரும் மிகவும் கவலைப்பட்டார். குடியேற்றத்தை இல்லாமல் செய்ய வேறு என்ன செய்யலாம்? யாரோடையும் பேச்சுவார்த்தை நடத்தினால் போய்விடுவார்களா? நடைமுறையில்
வேறு தேர்வு இல்லையே.உயிர்களின் மதிப்பை நான் உணர்கிறேன்.
எங்களுடைய மனச்சாட்சியையும் தாண்டித்தான் நடைமுறை வாழ்வு இருக்கிறது.நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ சில விடயங்களை
செய்ய எதிரி தூண்டுகிறான் என்று சொன்னார் அண்ணை.


ஓவியன்


Share/Save/Bookmark

திங்கள், 8 ஜூலை, 2013

நாட்கள் எண்ணப்படுகின்றன,யார் முந்துறமோ தெரியாது?.

வசந்தன் மாஸ்டர் ஒரு சிறந்த பயிற்சி ஆசிரியர்.கராத்தேயில் கறுப்புப்பட்டி பெற்றவர்.தற்காப்பு கலையில் கிட்டத்தட்ட பைத்தியம்தான் அவருக்கு.எவ்வளவு விடயங்களை அவர் அதில் பயின்று வைத்திருந்தார். தான் கற்ற விடயங்களை இளம்போராளிகளுக்கு பயிற்றுவிப்பதில் அவருக்கு அலாதி பிரியம். வசந்தன் என்றவுடன் மனதில் படிகிறது அந்த கள்ளமில்லா வெண்சிரிப்பு, எங்கு கண்டாலும் நின்று கதைத்துப்போகும் தோழமை.
அவன் இறுதியுத்த காலத்தில் தலைமைச் செயலகத்தில் ஆயுதப்பொருட்களின் சேமித்து விநியோகத்திற்கு பொறுப்பாய்இருந்தான்.
இறுதி யுத்த நேரத்தில் ஆயுத வழங்கலை சர்வதேசம் தடுத்ததால் எமது கையிருப்பு மிகவும் குறைந்துவிட்டது.இருந்த ஆயுதப்பொருட்களை மிகக் கஸ்டப்பட்டு சேமித்து விநியோகித்தான். அந்த இறுதிநாட்களில் ஒரு நாள் அவனது ஒரு வாகனம் நிரம்பிய ஆயுதப்பொருட்களில் எதிரியின்  துப்பாக்கி சன்னம் பட்டு சிறிது எரியத்தொடங்கியது.முழுதும் எரிந்து முடியும் முதல் இயன்ற அளவு பொருட்களை இறக்க வசந்தன் முயன்று கொண்டிருந்தான். மற்றயவர்கள் கத்தினார்கள் வசந்தன்னை உது வெடிக்கும் இறங்குங்கோ.எனக்கு தெரியும் இது வெடிக்கும் ஆனால் அதுக்கிடையில இறக்கிறதை இறக்கிறன். அவன் ஓரளவை இறக்கிப்போடும்போது அது வெடித்துச் சிதறியது.அந்த சிறு எரிமலையை சற்று தொலைவில் இருந்து நாங்களும் பார்த்தோம்,எங்களுடைய வசந்தனும் சிதறி எரிவதை தெரியாமல். நேற்றுப்பின்னேரம்தான்இடுப்பில் கட்டிய பிஸ்டலுமாய் வந்து நின்று கதைத்துப்போனான் நாட்கள் எண்ணப்படுகின்றன,யார் முந்துறமோ தெரியாது?.

லோலோ,தமீழீழ சுகாதாரசேவைகளின் தொற்று நோய்த்தடுப்பு பிரிவுக்கு பொறுப்பாக இருந்தான்.இவ்வளவு இடம்பெயர்வுகளுக்கும் மக்களுக்கு தொற்று நோய்கள் வராமல் காத்ததில் இவனது  உழைப்பு இருந்தது.எப்போதும் மக்களுக்கு தொற்று நோய்கள் வந்தாலும் என்று ஒரு பொதி மருந்தை களஞ்சியப்படுத்தி வந்தான்.அந்த மருந்து பயன்படுத்தாமலே இருந்தது.இறுதி நாட்களில் ஒரு முன்னிரவு எதிரியின் பொஸ்பரஸ் குண்டுக்கு அவன் காயப்படும் போது,அந்த மருந்துகளும் எரிந்துவிட்டன. அவன் காயப்பட்டு ,பின் வீரச்சாவு அடையும்வரை தொற்று நோய்கள் ஏதாவது வந்ததா?என்றே வினவிக்கொண்டிருந்தான்.


ஓவியன்


Share/Save/Bookmark