வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

பத்மலோஜினி அக்கா

பத்மலோஜினி அக்கா யாழ் மருத்துவ பீடத்தின்  முதலாம் அணியில்  கல்வி கற்று,பின் வல்வெட்டித்துறை மருத்துவமனையில் பொறுப்பு மருத்துவ அதிகாரியாய் இருந்து எண்பதுகளின் இறுதியில் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்துகொண்டவர்
தொண்ணூறாம் ஆண்டு ஈழப்போர் இரண்டு ஆரம்பமானபோது கோட்டையில் இராணுவம் இருந்தது.கோட்டையில் இருந்து இராணுவம் செல் அடிக்க தொடங்க யாழ் மருத்துவமனையில் இருந்து அநேகமான ஊழியர்கள் பயம் காரணமாக  வெளியேறிவிட்டனர்.வசதியுள்ள நோயாளர்களும் வெளியேறிவிட்டனர். எஞ்சிய நோயாளர்களை கவனிப்பது மிகக் கடினமாய் இருந்தது.காயமடைந்தவர்கள் தொடர்ச்சியாய் வந்துகொண்டு இருந்தார்கள்.
மானிப்பாய் மருத்துவமனைக்கு நோயாளர்களை மாற்றும்வரை என்னால் முடிந்ததை செய்துகொண்டு இருந்தேன். அப்படியான துயர் நாள் ஒன்றில்  பத்மலோஜினி அக்காவை முதல் முதலாய் யாழ் மருத்துவமனையில் சந்தித்தேன். அவர் எல்லா நோயாளர்களையும் பார்வையிட்டு அறிவுரைகள் தந்து போனார். அதற்குப்பின் களமருத்துவர்களாய் வடபகுதியில் நடந்த அநேக சண்டைகளில் ஒன்றாய் கடமையாற்றினோம். தொண்ணூற்றி ஐந்தாம் ஆண்டு இடப்பெயர்வின் போது எல்லா நோயாளர்களையும் பாதுகாப்பாய் இடம்மாற்றி சாவகச்சேரி மருத்துவமனைக்கு வந்து முழு அளவில் கடமை செய்தோம்.
தொண்ணூற்றி ஆறாம் ஆண்டு எல்லா காயமடைந்த போராளிகளுடன் வன்னியில் தஞ்சமடைந்தோம்.அக்கா மற்றைய மூத்தமருத்துவர்களுடன் இணைந்து போராளிகளுக்கு சிகிச்சை அளித்ததுடன் விடுதலைப்புலிகளின் மருத்துவபிரிவை வளர்க்க அயராது பாடுபட்டார். விடுதலைப்புலிகளுக்கு எப்போதுமே ஆளணி பற்றாக்குறை ஒரு பெரும் பிரச்சனையாய் இருந்து வந்தது.மருத்துவபிரிவும் துல்லியமாய்  வளரவேண்டியிருந்தது.விடுதலைப்புலிகள் வென்றாலும் தோற்றாலும் மருத்துவபிரிவு தனது சுமையோடு வளர்ந்தது. அக்கா சமாதானகாலத்தில் சில வருடங்கள் கிழக்கு மாகாணத்தில் மக்களுக்கு மருத்துவசேவை வழங்குவதில் முழுமூச்சாய் ஈடுபட்டார்.கருணாவின் பிளவுடன் மீண்டும் வன்னிக்கு வந்து தியாக தீபம் திலீபன் மருத்துவமனைகளின் நிர்வாகத்தினை பொறுப்பெடுத்தார்.நிர்வாகப் பொறுப்பாளராய் மட்டுமன்றி அதன் மருத்துவ மேலாளராயும் இருந்தார். கிளிநொச்சி,புதுக்குடியிருப்பில் சிறப்பாக இயங்கிய பொன்னம்பலம் மருத்துவமனைகளில் பொது மக்களுக்கான மருத்துவ கிளினிக்குகளையும் நடாத்திவந்தார்வன்னியில் மருத்துவவசதிகள் அற்ற ஒன்பது இடங்களில் திலீபன் மருத்துவமனைகள் இயங்கிவந்தன.நாளாந்தம் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட வெளிநோயாளர்கள் இந்த ஒன்பது திலீபன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். மருத்துவ தவறுகள் தோன்றாமல் அக்கா வழி நடத்தினார். தனது மருத்துவ அறிவை ஊடகங்களுக்கூடாக மக்களுக்கு கொண்டு சென்றார்.
 இறுதியுத்தத்தின் பிற்காலங்களில்  தனது திலீபன் மருத்துவமனைக்குரிய
மருத்துவ போராளிகளை  காயமடையும் மக்களுக்கு சிகிச்சை வழங்க அரச மருத்துவமனைகளுக்கும் ,காயமடையும் போராளிகளுக்கு   சிகிச்சை வழங்க இயக்க சத்திர சிகிச்சைகூடங்களிற்கும் பிரித்துவிட்டார்.முள்ளிவாய்க்கால் அரச மருத்துவமனை மீது இராணுவம் நடாத்திய தாக்குதலில் செவ்வானம்,இறையொளி ஆகிய மருத்துவ போராளிகள் வீரமரணம் அடைந்தனர். இறுதி நாட்களில் ஒரே சத்திரசிகிச்சைகூடத்தில் அக்காவும் நானும் ஒன்றாக பணி செய்தோம்.அக்கா உடல் நலன் குன்றி இருந்தாலும் உரிய நேரத்திற்கு கடமைக்கு வந்து முழுப்பணியும் செய்துதான் போவார்.
முள்ளிவாய்க்காலின்  இறுதிநாளில் இராணுவத்தினரிடம் சரணடைந்து அக்கா காணாமல் போனார்.இறுதியாய் இராணுவ பிரதேசத்திற்குள் போகும்போது கூட காயமடைந்த பொதுமகன் ஒருவருக்கு சிகிச்சை அளித்துவிட்டுத்தான் போயிருக்கிறார்.

தன்னை அர்ப்பணித்து விலைமதிப்பற்ற மருத்துவசேவையை வழங்கிய எங்களது அக்காவிற்காய் மருத்துவ உலகம் குரல் குடுக்கவில்லை.நாங்கள் வாழும்வரை அக்காவும் எங்களோடு வாழ்வார்.அக்காவால் உயிர் காப்பாற்றப்பட்டவர்களைப்போல .


Share/Save/Bookmark

ஞாயிறு, 23 பிப்ரவரி, 2014

ஒரு உலகம் வேண்டும்

ஒரு உலகம் வேண்டும்
சமயம் , இனம் , மொழி
வேறுபாடுகளே வேண்டாம்
எல்லோருக்கும் எல்லாம்
கவலைகள் இல்லாமல் ,
இருந்தால்
யாவரும் பங்கிட்டு வாழும்
ஒரு உலகம் வேண்டும்
உயிர்கள் மதிக்கப்படும்
ஒரு உலகம் வேண்டும் 


Share/Save/Bookmark

சனி, 22 பிப்ரவரி, 2014

துயரம் பூதமாய் வளர்கிறது

உலகம்
ஒரு பக்கத்திற்கு
ஆயுதத்தை அள்ளிக்கொடுத்தது
ஒரு பக்கத்திற்கு
ஆயுதங்கள் போவதை தடுத்தது
வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டது
கபடம் கலந்த வரவழைப்பால்  
வீரர்கள் சரணடைந்தார்கள்
காணாமல் போனார்கள்
தோள் கொடுத்த மக்கள்
சிதைந்துபோனார்கள்
துயரம் பூதமாய் வளர்கிறது   


Share/Save/Bookmark

புதன், 12 பிப்ரவரி, 2014

அம்மா

அம்மா
இருந்த உணவை பகிர்ந்து
எம் வயிறு நிரப்பி
நீரை மட்டும் நீ குடித்து
சிரித்தபடி எமை வளர்த்தாய்
வளர்ந்தால்
உன்னை பார்ப்பார் என்றோ
படித்து பெரியவர் ஆவார் என்றோ
நீ கனவு கண்டிருப்பாய்
எதுவும் நடக்கவில்லை
யாருக்கும் உதவும் உன்மனம்
பிள்ளைகளோடு பிறந்ததால்
பிள்ளைகள் உன்னோடு இல்லை
ஒருபோதும் நீ நினைத்திருக்கமாட்டாய்
உன் இறுதிசடங்கில் கூட
உன் பிள்ளைகள் வரமாட்டார் என்று 
அம்மா நீ விரும்புவாயோ
இல்லையோ
அடுத்த பிறப்பிலும்

நீதான் எமக்கு அம்மாவாகவேண்டும்


Share/Save/Bookmark

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014

மக்களுக்காய் வாழ்ந்தவர் நினைவில் நனைகிறோம்.

குமாரி ,யாழ் லங்கா சித்த ஆயுள்வேத கல்லூரியில் கல்வி கற்றவர்.பெண் மருத்துவ போராளியாய் அவரை தொண்ணூறுகளில் இருந்து நான் அறிவேன்.2006 களில் அவர் தமீழீழ சுகாதார சேவைகளின் ஓர் அலகான  சுதேச மருத்துவ பிரிவின் துணைப் பொறுப்பாளராய் நியமிக்கப்பட்டிருந்தார்.  
 அவர் ஒரு குழந்தையின் தாயாக இருந்தார்.அவரது கணவர் களமுனையி ல் காயமடைந்து ஒரு காலை தொடையோடு இழந்திருந்தார்.இந்நிலையிலும் குமாரி அவர்கள் தன் கடமையை நேர்த்தியாய் செய்துகொண்டிருந்தார். சுதேச மருத்துவ பிரிவின் கீழ் மூலிகை பண்ணையொன்று   கிளிநொச்சி ஐம்பத்தைந்தாம் கட்டை சந்திக்கருகில்  இயங்கிவந்தது.சுமார் எழுநூறு வகை மூலிகை தாவரங்கள் அங்கு பராமரிக்கப்பட்டுவந்தன. வன்னியில் எங்கு என்னென்ன மூலிகைகளை பெறலாம் என்பதை அவர் அறிந்து வைத்திருந்தார்.வடமாகாணத்தில் கடமை புரிந்த ஆயுள்வேத மருத்துவர்களோடு சிறந்த இணைப்பை வைத்திருந்தார்

நாம் இயன்ற அளவில் முழு அளவிலான நடமாடும் மருத்துவ சேவைகளை கஸ்டப்பிரதேசங்களிலும் பாதுகாப்பு அற்ற பிரதேசங்களிலும்
நடாத்திவந்தோம். அதில் சுதேச மருத்துவமும் ஒரு அங்கமாக இருந்தது.அங்கெல்லாம் சுதேசமருத்துவராய் குமாரி அக்கா சேவை வழங்கிக்கொண்டு இருப்பார்.தனது குழந்தையையும் கூட்டிக்கொண்டு அடிக்கடி கிளைமர் அடிபடும் பிரதேசங்களான நெடுங்கேணி,சேமமடு,குஞ்சுக்குளம், தட்சனாமருதமடு,இலுப்பைக்கடவை என்று எல்லா இடங்களிலும் மருத்துவசேவையில் பங்கேற்றார்.
சுதேச மருத்துவபிரிவின் கீழ்திலீபனாசுதேச மருந்து உற்பத்தி நிலையம் இயங்கிவந்தது.ஐம்பதிற்கும் மேற்பட்ட சுதேச மருந்துகள் உற்பத்தி செய்யப்பட்டன.போர் உச்சம் பெற்றிருந்தபோதும் ஒரு தொகுதி மருந்துகள்
கையிருப்பில் இறுதிவரை வைத்திருந்தோம்.
”சுதேச ஒளிஎன்ற காலாண்டு இதழையும் சுதேச மருத்துவபிரிவு நடாத்திவந்தது. ஐந்து இதழ்கள் வெளியாகியிருந்தன.பல ஆயுள்வேத மருத்துவர்கள் ஆக்கங்களை எழுதியிருந்தனர்.சுதேச மருத்துவ கற்கை நெறியொன்றை சுகாதார விஞ்ஞானக்கல்லூரியில் ஆரம்பிக்கும் திட்டங்களோடு இருந்தோம்.  
முள்ளிவாய்க்காலில் ,அந்த இறுதிநாட்களில் மருத்துவ விடுதியில் கடமையில் இருந்தபோது எதிரியின் செல்வீச்சில் குமாரி வீரமரணம் அடைந்தார்.  

மக்களுக்காய் வாழ்ந்தவர் நினைவில் நனைகிறோம்.


Share/Save/Bookmark

புதன், 5 பிப்ரவரி, 2014

சிவமனோகரன் (1963-2009)



நண்பாஎண்பதுகளில்
ஒரு கூட்டுக்குள் வளர்ந்தோம்
தொண்ணூறுகளில்
நீ கூடுவிட்டுபோனாய் - இருந்தும்
கூடு போகும் இடமெல்லாம்
சுமை பிரித்து அருகில் இருப்பாய்
அன்றும் வலைஞர்மடத்தில்
எம் அருகில்
Cluster குண்டில் நீ மடிந்தாய்
ஓடிவந்தோம்
இரண்டரை தசாப்த நட்புடன்
நீ கையசைக்காமல் போய்விட்டாய் 

உன் மனைவியோடு சேர்ந்துகொண்டாய்


Share/Save/Bookmark

திங்கள், 3 பிப்ரவரி, 2014

எங்கே என் குழந்தை




Share/Save/Bookmark
Bookmark and Share