செவ்வாய், 31 மார்ச், 2015

மணலாறு / தமிழர்களின் இதயபூமி

மணலாறு / தமிழர்களின் இதயபூமி
மூ எட்டு மணிக்குள் வெளியேறு !
ஒலிபெருக்கி அலற
பூர்வீக மக்கள் 
வளம்நிறைந்த நிலம் துறந்து
அகதியாகி
நா எட்டு வருடங்கள்  
குடியேற்றத்தோடு ஆக்கிரமிப்பு
தமிழர்நிலம் துடிதுடிக்க துண்டானது
வட ஆட்சி பெற்றும்
மீள்குடியேற்றம் இல்லை
யாவும் கண்துடைப்பிற்கே

அடுத்த நூற்றாண்டில்
ஈழத்தில் தமிழனின் வீதம்
அருகிவிடும்
சிங்கள,முஸ்லீம் வீதம்
பெருகிவிடும்
தமிழனின் உரிமைக்கேள்வி
செவிடன் காதில் ஊதப்படும் சங்கு  
புலத்தில் ஈழத்தமிழர்
சுயம் இழப்பர்
அரைவாசி தேறுவதே கடினம்  

சில தசாப்தங்களுக்கு முன்
வேலிக்கு கூட சண்டைபிடித்த
ஈழத்தமிழன் 
ஐந்து நூற்றாண்டுக்குப்பின்
ஆராய்ச்சிக்கு தேடப்படுவான்

பிறப்புவீதம் மடங்காகவேண்டும்
சுயபொருளாதாரம்
வன்னியில்,கிழக்கில்,மலையகத்தில்
நிலையாகவேண்டும்
பூர்வீக நிலங்களை இழக்காதே!
பூர்வீகத்தை இழந்துவிடுவாய்.
    

  


Share/Save/Bookmark

சனி, 28 மார்ச், 2015

உயிரின் அலைவரிசையில் ஒலிப்பது

மகளே!
கிழிந்த சட்டைக்காய் அழாதே!
கிழித்த சட்டைதான்
இங்கு latest  design

ஆச்சியின் பொக்குவாய்ச்சிரிப்பில் 
பூரித்த என் இதயத்தை
இங்கு கடந்து போகிறது  
ஒரு ஆச்சியின்  சிரிப்பு 
கட்டிய பற்களுடன்

போசனைக்குறைபாட்டால்
என் சமூகம் அவதியுற
யோ/போசனைகூடி 
அவதியுறுகிறது
இங்கு ஒருசமூகம்

பேரனின் வியர்வை ,
அண்ணனின்  குருதி கலந்த மண்ணில்
வேர்விட்டமரம் நீ
வெயிலில்
காணாமல் போகும் பனியோடு
கரைந்து போகிறேன் நான்
தாமரை இலையில் நீர்போல

அம்மா குழைத்து
உள்ளங்கையில் வைக்கும்
சோற்றுருண்டை
முழு நிலாவைவிட அழகு மகளே!
அதுதான் என் பூமி மகளே!   
பச்சை வயலும்,  
பனங்கூடலும்,குளக்கரையும்
நிசப்த காடுகளும்
ஒத்தனம் தரும் பூமியில்
ஏது சூதுவாது ?

ஆடு மாட்டின் பால்போல
வெள்ளையாய்
பனங்கள்ளும் ,கடல்நுரையும்
உன்சிரிப்பும் மகளே!
நீலம் போடாத வெண்மை மகளே!

நிலம் தொடாமல்
அந்தரத்தில் துயில்கொள்ளும்
என் மனதில் நிறைவது எல்லாம்
நீ நடந்து திரியும் மண்தான் மகளே!
உயிரின் அலைவரிசையில் ஒலிப்பது
தேசப்பாடல்மட்டும்தான் மகளே!

எட்ட இருந்தாலும்
ஒட்டி இருக்கிறாய்
அது எப்படி ?
என் அழகிய தமிழ்மகளே!


  


Share/Save/Bookmark

சனி, 21 மார்ச், 2015

அ(க)ருகிப்போவாயோ?

மதம் பிடித்தது
மதகுருக்களுக்கு
வதம் நடந்தது
சிறு இனங்களுக்கு
நிச்சயமாய்
இந்துமத சித்தாத்தர்
இதயம் நொந்திருப்பார்
காவியுடை மட்டும்
பிக்கு கையில் சிக்கிற்று
புத்தசிந்தனைகள் தப்பிற்று
புத்தபகவான் நிர்வாணமானார் 


மனக்காயங்களோடு அகதியானோம்
மக்களுக்கு மீட்சிவர
காயங்களை குடைந்து,குடைந்து
சாட்சியானோம்
ஆட்சிமாற
சர்வதேசம் கட்சிமாறும்
சூழ்ச்சி ஆளும் உலகில்
இது புதினமல்ல
"அயல்" பெயருக்கு மட்டும்
எம்தாயக பசிக்கு ஊட்டும்
கள்ளிப்பால் "அயல்"
அது காந்தியின் தேசமல்ல
கோட்சேயின் தேசம்  
வயல் எரிந்து,வயிறு எரிந்து
நீ எரிகையில்
வெளிச்சம் அயலுக்குத்தான்
அ(க)ருகிப்போவாயோ?

துளிர்த்துவருவாயோ?    


Share/Save/Bookmark

செவ்வாய், 17 மார்ச், 2015

மருத்துவமே ஒரு சவாலானதுதான்.அதிலும் போர்க்கால மருத்துவம் மிகவும் சவாலானது.ஒரு போர்க்காலத்தில் சத்திரசிகிச்சையாளனாயும்
இருந்துகொண்டு ஒரு பலமான சத்திரசிகிச்சை அணியை உருவாக்கும் வல்லமைக்கு ஒரு தனி "தில் "  வேண்டும். Dr கதிர் ஒரு அசாத்தியமான மருத்துவ வீரன்.  பலநூறு எலும்புமுறிவு சத்திரசிகிச்சைகளை மல்லாவி மருத்துவமனையில் வெற்றிகரமாக செய்தவர்.நான் அறிந்தவரையில் எடுக்கின்ற எந்த வேலை என்றாலும் முழுமூச்சாய் செய்யும் வல்லமை படைத்தவர். மாத்தளன் மருத்துவமனையின் சத்திரசிகிச்சை அணியின் நாயகன்.அந்த காலங்களில் மாத்தளன் மருத்துமனையின் மக்கள் சேவைப்பங்களிப்பென்பது உச்சமானது. 


Share/Save/Bookmark

செவ்வாய், 3 மார்ச், 2015

மருத்துவப்பெருந்தகை கெங்காதரன் ஐயா

மருத்துவப்பெருந்தகை கெங்காதரன் ஐயாவை 95 ஆம் ஆண்டளவில்  யாழ் மருத்துவமனையில் முதல் முதலாய் சந்தித்தேன்.கையில் ஏற்பட்ட காயம் ஒன்றிற்கு சிகிச்சை பெறவந்திருந்தார்.காயத்துடனும் மலர்ந்தமுகத்துடனேயே இருந்தார் நான் இறுதியாய் சுதந்திரபுரத்தில் சந்திக்கும் பொழுதும் அதே மலர்ந்தமுகம்தான். அவரை அதற்கு முன்பு சந்திக்காது இருந்தாலும் அவரை அறிந்திருந்தேன்.யாழ்ப்பாணத்தில் உருவாகிய தனியார் மருத்துவக்கல்லூரியின் ஸ்தாபகர்களில் ஒருவராயும் ஐயா இருந்தார்.
இரண்டாவது, மூன்றாவது, --- தடவைகள்  ஒலுமடுவில் இயங்கிய பொன்னம்பலம் மருத்துவமனையில் பற்சிகிச்சை கிளினிக் நடாத்த சென்றபோது சந்தித்தேன்.பின் துணுக்காய்,கிளிநொச்சி  பொன்னம்பலம் மருத்துவமனைகளில் நெருக்கமானோம்.
ஐயா மிகவும் எளிமையானவர்,மென்மையானவர் ஆனால் அதீத சுறுசுறுப்பானவர். பத்துவருடங்கள் அரசசேவையில் இருந்தார்.முல்லைத்தீவு மாவட்ட வைத்தியாலையின் மாவட்டவைத்திய அதிகாரியாய் 1960 களில்
இருந்தார்.அப்போது பெட்ரோல்மக்சின் உதவிடன் அவசர சிசேரியன் சத்திரசிகிச்சை செய்து தாயையும் பிள்ளையையும் காப்பாற்றியவர்
  ஐயா மருத்துவத்துறையில் ஒரு சகலகலாவல்லவர். அவரிடம் எப்போதுமே ஒரு நீதி இருந்தது. அதுதான் அந்த ஓய்வற்ற உழைப்பைக்கொடுத்தது.அவர் பல பல ஆயிரம் மக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்திருக்கிறார். பல ஆயிரம் சத்திரசிகிச்சைகளை செய்திருக்கிறார். ஆறு தசாப்தங்கள் மருத்துவப்பணி செய்திருக்கிறார்.
சுகாதார விஞ்ஞானக்கல்லூரியின் தலைவராக நியமிக்கும் போதும் அன்போடு ஏற்றுக்கொண்டார்.சுகாதார விஞ்ஞானக்கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழாவின் போது  மாணவர்களுக்கு ஐயா பட்டமளிப்பது இன்றும் மனக்கண்முன்னால் விரிகிறது.
 புல்லாங்குழலை தானாகவே பயின்று ,அந்த இசையாலும் மக்களை மகிழ்வூட்டிய வள்ளல். இவரது புல்லாங்குழல் இசை இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்திலும்  பல தடவைகள் ஒலிபரப்பானது குறிப்பிடத்தக்கது.  
      . ஐயாவும் அவர் மனைவியும் மிகவும் தங்களுக்குள் அன்பாக இருந்தவர்கள். இவரது மனைவி பாம்பு தீண்டி எதிர்பார்க்காமல் உயிர் இழந்தவர். மனைவியின்  திடீர் இழப்பிற்குபின் ஐயா எப்படி மீள் எழுவார் என்று ஐயுற்றோம்.ஐயா மீள எழுந்து தன் அளப்பரிய சேவையை தொடர்ந்தார். ஐயா மருத்துவராயும் அவர் மனைவி தாதியாகவும்   தாங்களே தயாரித்த சுகாதார கருத்தூட்டல்கள் இன்றும் என் காதுகளுக்கு கேட்கிறது.
ஐயாவிற்கு மெக்கானிக் அறிவும் இருந்தது. பல உபகரணங்களை அவரே திருத்துவார். எதையும் வீணாக்கவிடமாட்டார். மிகவும் சிக்கனமாய் பொன்னம்பலம் மருத்துவமனை இயங்கவேண்டும் என்பதிலும் கரிசனையாய் இருந்தார். மூத்த போராளியொருவர் இறுதிப்போரின் பின் 
நீண்டகாலம் புனர்வாழ்வு பெற்று  வெளிவந்து ஐயாவை சந்தித்திருக்கிறார். ஐயா ஒரு இலட்சம் ரூபாவை கொடுத்து ஐம்பது ஆயிரம் உமக்கு மிகுதி ஐம்பது ஆயிரம் ரூபாவை நீர் நல்லாவரும்போது தரவேண்டும் என்று கொடுத்திருக்கிறார்.இதுதான் ஐயா.ஐயாவின் தென்னந்தோட்டத்தில் பல ஏழைக்குடும்பங்களை குடியேற்றி வாழவும் வழிகாட்டியவர்ஐயாவின் வன்னியில் வாழ்ந்தகாலம்  ஒரு வரலாற்றின் தடம்      
தேசியத்தலைவர் அவர்களால் ஐயாவிற்கு" மாமனிதர் " விருது வழங்க கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. இறுதிப்போர்ச்சூழல்

அக்கணத்தை தின்றுவிட்டதுஐயாவின் உடலைச்சுமந்து வன்னியெங்கும் அஞ்சலி செய்ய இயலாத மனம் துடிக்கிறது. போய்வாருங்கள் ஐயா. வன்னியில் வீசும் காற்றிலாவது எங்கள் எல்லோரினதும் உரையாடல்கள் கலந்திருக்கும்.       


Share/Save/Bookmark
Bookmark and Share