சனி, 31 மார்ச், 2012

அமைதி தேவைப்படும் நேரமெல்லாம் துயிலுமில்லம் போவோம்

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் வன்னி இருந்தது.இராணுவ
கட்டுப்பாட்டு பிரதேசத்திக்குள் இருந்து வி.பு. பிரதேசத்திற்குள்
போனதும் உடம்பில புது இரத்தம்  ஊறும் .அந்த நாள் இனி வருமா?
மனம் ஏங்கிச் சாகிறது.தமிழரின்  நிர்வாகம் .வேகமானியுடன் காவல்துறை 
ஒளிச்சு நிக்கும் .பிடிபட்டால் fine தான் தப்ப ஏலாது.வன்னியிக்க 
எங்க போனாலும் மனசு நிறையும்.பாண்டியன் ஐஸ் கிரீம் வேறு எங்கயும் 
குடிக்கமுடியாது.சேரன் ரோல்ஸ் எழுதவே வாயூறுது . சேன்ட நாசிகூறி 
சொல்லி வேலையில்லை பிரைட் ரைஸ்,சூப் என்றால் இளம்தென்றல்தான் .
பாண்டியனில பத்து ரூபாயோட காலை சாப்பாடு சாப்பிடலாம் .இதற்குள்ள 
1/9 வேற .பைந்தமிழ் பாண் என்ன அருமை. எல்லாக் கடையும் அந்த மாதிரிதான்.எங்கும் சிறந்த  தொற்று நோய் கட்டுப்பாடு.
                                 கிளிநொச்சி சந்தைக்கு போனால் என்ன சந்தோசமாய் 
இருக்கும்.எல்லாருமே சொல்லுவினம் சந்தை என்றால் சந்தைதான்.
என்ன திட்டமிடல் . வசதி குறைந்த இடத்தில இருந்த சந்தோசத்திட்க்கு 
ஈடு இணையில்லை.களவு இல்லை எந்த பயமுமில்லை பிச்சைக்காரர் இல்லை .ஒரு கிலோ அரிசி ஒருக்காலும் நாற்பது ரூபா தாண்டினதில்லை.
                              கடற்கரையில நின்று மீன் வாங்கோணும் ,வயல்கரைகளில 
காலையில/மாலையில இருந்து கதைக்கோணும்,குளக்கரையில கொக்குகளை நத்தைகொத்திகளை கலைத்து விளையாடோணும்.காலை விடிந்ததென்று கோழி கூவோணும் ,
காகங்கள் கரையோணும் , குமுளமுனைக்கு  போய் லாப்பழம் சாப்பிட  வேணும். நெடுங்கேணியில  போய்  பச்சைஅரிசி சோறும் பன்றியும் 
தயிரும் சாப்பிடவேணும் .பூனகரிக்குப்  போய் கூழ் காய்ச்சிக் குடிக்க வேணும் .   வன்னியில காட்டிறைச்சி , தேன், பழங்கள் எந்த குறையுமே 
இல்லை.சுயநலமற்ற மக்களை சந்திக்க வேணுமா? அதற்கு நிறைய 
போராளிகள் உண்டு . காதுக்குள்ள கோயில் மணியோசை கேட்டுக்கொண்டே 
இருக்கும்.குரங்குகள் குட்டியோட மரம் தாவும்,எருமைகள் நீருக்குள்ள மூழ்கி எழும்,மாடுகள் பட்டியாய் மேயும்,கன்றுகள் துள்ளி விளையாடும். மண்ணின் வாசமும் நீர்க் குளியலும் ஆகா சுகம்தான்.
                                                                    அமைதி தேவைப்படும் நேரமெல்லாம் துயிலுமில்லம் போவோம்.யாருக்கும் தெரியாத மனதொன்று நேர்த்தியாய் அங்கு கதை பேசும், மீண்டும் வருவோம் சொல்லி நாம் புறப்படுவோம்.
                                             நகமும் சதையுமான வாழ்வு தாமரை இலையில் நீர் போலாயிற்று.


Share/Save/Bookmark

வியாழன், 29 மார்ச், 2012

உண்மைக்கதைகள்-07

கணவன் ,மனைவி ஒரே தொழிலில் இருப்பது அருமை.சிலர் மருத்துவராக
இருந்திருக்கிறார்கள்.ஆசிரியராக இருந்திருக்கிறார்கள் .படைப்பாளிகளாக
இருந்திருக்கிறார்கள்.ஏன் வலைப்பதிவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.
ஈழத்தில் போராளிகளாக இருந்திருக்கிறார்கள்.ஒருபடிமேல் போய்
மாவீரர்களாக இருக்கிறார்கள்.
                                                          அவள் 90 களின் ஆரம்பத்தில் விடுதலைப்புலிகள்
அமைப்பில் இணைந்து போராளியானாள்.அமலி  அவளது பெயர் . பெருஞ் சமரொன்றில் வயிற்றில் காயமடைந்து குடலில் ஒருபகுதி அகற்றப்பட்டது.
மருத்துவக்கல்லூரி ஆரம்பித்த  போது தகுதியின் அடிப்படையில் அதில்
கற்க தெரிவாகினாள் .மருத்துவப்படிப்புடன் காயமடையும் போராளிகளுக்கான
மருத்துவக்கடமையையும் செய்து வந்தாள் .இவள் ஒரு இளகிய மனம்
கொண்ட போராளி கடமையில் எப்போதும் கண்ணாய் இருப்பாள் .இவளது
தங்கையும் ஒரு போராளி ஜெயசுக்குறு சண்டையில் வயிற்றில் காயமடைந்து
சத்திர சிகிச்சையால் உயிர் தப்பினாள்  ,பின் கிளிநொச்சி சண்டையில் வீர
மரணம் எய்தினாள் . தங்கை மீது மிகுந்த பாசம் கொண்ட இவள் கலங்கினாலும்
கடமையில் உறுதியாய் இருந்தாள் .
                                                    களமுனைத்தளபதி ஒருவனை திருமணம் செய்தாள்.
அவர்களுக்கு மூன்று குழந்தைகள்.போராளிக்குடும்பங்கள் மிகப்பாசமானவை
இக்குடும்பமும் அதற்கு விதிவிலக்கல்ல.
                                                    2006 ஆம் ஆண்டு முழங்காவில் மருத்துவமனைக்கு
மருத்துவராய் கடமை செய்ய தொடங்கினாள் . ஓவியனுக்கு மூன்று
சத்திரசிகிச்சை கூடங்கள் இருந்தன.அதில் ஓன்று முழங்காவிலில் இயங்கிற்று.அச்சத்திரசிகிச்சைகூடத்தின் பொறுப்பு மருத்துவராய்
கடமை செய்தாள் .ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் மக்களுக்கான
சத்திரசிகிச்சைகள்,பல்கிளினிக்,கண்கிளினிக் என்பன நடைபெறும் .
வேலைமுடிய சாப்பிடத்தொடங்குகையில் அவள் ஒருபோதும்
எங்களுடன் உணவருந்தியதில்லை.தனது குழந்தைகளுடன்தான்
சாப்பிட வேண்டும் என போய்விடுவாள் .அவள் பொறுப்பில்/பராமரிப்பில்  எப்போதும் இருநூறு காயமடைந்தவர்கள் இருப்பார்கள்.
                                                   அந்த சத்திரசிகிச்சைக்கூடம் ஜெயபுரம் ,வட்டக்கச்சி,
சுதந்திரபுரம்,தேவிபுரம், முள்ளிவாய்க்கால் என இடர்களுடன் இடம்பெயர்ந்து அவள்
கடமையின் போது முள்ளிவாய்க்கால் மருத்துவமனையில் வீரச்சாவு
எய்தினாள். அவளது இறுதி நிகழ்வின்  போது கூட பாதுகாப்பு
காரணங்களால் அதிக பேர் பங்குபற்றவில்லை.அவளது வீரமரணம்
சாதாரணகாலத்தில் நிகழ்ந்திருந்தால் பலகிராம மக்கள் ஒன்றாய்
வந்திருப்பார்.குழந்தைகளுக்கு அவளது இறப்பை விளங்கும் வயது
அல்ல.அவளது பண்பான கணவன் விக்கி விக்கி அழுதது கண்முன் நிக்கிறது.
குழந்தைகளை  பேத்தியாருடன் இணைத்துவிட்டு களம் சென்றவன்
இறுதிக்களத்தில் மீளவில்லை.
                                             எத்தனையோ உயிர்களை காத்தவரை
கடவுள் காப்பாற்றாதது ஏன்? உண்மை மனிதர்களின் குழந்தைகள்
எங்கெங்கு இருப்பார்களோ?

                                                                              -நிரோன்-











Share/Save/Bookmark

ஞாயிறு, 25 மார்ச், 2012

விடுதலையை உயிராய் நேசித்த புனிதன்



எளிமையில் என்றும் வாழ்ந்தாய் 
கருணையை இதயத்தில் சுமந்தாய் 
மாவீரர் நினைவில் சதா மூழ்குவாய் 
இலட்ச்சியத்தில் இளகாய்   
வீரனுக்கு உன்னைவிட யார் இவ்வுலகில் உண்டு 
தலைவனாய் இருந்தும் இறுதிவரை 
தலையணை அற்றே படுத்துறங்குவாய்
அர்ப்பணிப்பின் ஆணிவேர் நீதான் 
பலவீனம் அற்ற மனிதன் 
விடுதலையை உயிராய் நேசித்த புனிதன் 

   




Share/Save/Bookmark

சனி, 24 மார்ச், 2012

முள்ளிவாய்க்கால் , வைகாசி 17-சில மணித்துளிகள்

முள்ளிவாய்க்கால் , வைகாசி 17 , எங்கள் ஆட்சி மண்ணை துறந்த எங்களின்
இறுதி நிமிடங்கள் - அந்த நேர உணர்வின் சில பகுதி
                                                         நானும் சுதனும் என்ன செய்வது என்ற திடமான
முடிவற்று இருந்தோம்.எம்மோடு இருந்தவரை நேற்று பிற்பகல் கதைத்து
இராணுவ பகுதிக்குள் அனுப்பி இருந்தோம்.எந்த காரணம் கொண்டும்
சரணடைய வேண்டாம் .பொது மக்கள் போன்றே செல்லுங்கள் என்றே
சொல்லி அனுப்பி இருந்தோம்.போகும் பொது ஒவ்வொருவரும் வந்து
நீங்கள் என்னமாதிரி?நாங்களும் நிக்கிறோம் என்ற பிடிவாதங்களை
தளர்த்தியே அனுப்பி வைத்தோம்.சுதனும் நேற்றிரவே போயிருக்கலாம் .
என்னை விட்டு போக மறுத்துவிட்டான்.அநேக மக்கள் நேற்று இரவே
இராணுவ பிரதேசத்திற்குள் சென்றுவிட்டார்கள்.எங்களுடைய
வோக்கிக்கு ஒரு நிலையத்திலிருந்தும் ஒரு பதிலும் இல்லை.
நாங்கள் வெளிக்கிடுவோம் கடைசி மக்களோட நாங்கள் வெளிக்கிடுவோம் .


நேற்று முழுக்க பல மக்கள் ,போராளி மாவீரர் குடும்பங்கள் வந்து கேட்டார்கள் நாங்கள் என்ன
செய்யிறது.நீங்கள் கவனமாய் போங்கோ!  பலர் எங்கள் முன் அழுதுவிட்டு
போனார்கள்.நாங்கள் என்ன செய்வது? உண்மையில் யாருக்கும்
ஆலோசனை சொல்லும் (மன )நிலையில் நாங்கள் இல்லை.
                                              சுதன் வோக்கியை உடைத்தான்.குப்பியை
 மணலுக்குள்ள புதைப்பம் என்றான்.நான் வேண்டாம்
பிறகு சனம் வரையிக்க குழந்தைகள் தெரியாமல் விளையாடிடுங்கள்
என்றன்.அவன் அப்ப மலசலகூடக்குழியிக்க போடுவமா?  என்றான்.
நானும் ஆம் என்றேன் .எனது இரட்டை குப்பியை ஒருமுறை கண்
கொட்டிப் பார்த்துக்கொடுத்தேன்.குப்பி மருந்து இருந்தும் குப்பி
இல்லாமல் இயக்கம் கஷ்டப்பட்டது ஞாபகம் வந்தது.தகட்டை
கொடுக்கும் போது முன்பு தகடு தொலைத்தால் ஆறு மாதம் சமையல்
தண்டனை ஞாபகம் வந்தது.இப்ப நான் இயக்கம் இல்லையோ என்ற வேதனையும் மனசை வாட்டிற்று.
                                              எல்லாப்பக்கத்திலேயும் ஆமி ,ரவுண்ட்ஸ்
எல்லாப்பக்கத்தில இருந்தும் கூவுது. எங்கட கணிப்பிக்கு நாங்கள்
இருந்த இடத்தில இருந்து வட்டுவாகல் பக்கமாய் 150 மீற்றரில
ஆமி இருப்பான் . மெதுவாய் குனிந்து குனிந்தே போய்க்கொண்டிருந்தோம்.
கையில எலும்பு உடைஞ்ச ஒரு பெடியனை தடியை support ஆய் கட்டி
அனுப்பினேன்.சுதன் கால் எலும்பு உடைந்த ஒரு ஐயாவிற்கு மண்
மூட்டையில இருந்து சாக்கு உருவி இருதடிக்குள்ள தள்ளி தூக்கிக்
கொண்டு போகச்சொன்னான்.ஒரு சாக்கு என்றதால அது போதவில்லை
கால் தொங்கிற்று நான் போய் காலை தடியோட சேர்த்து கட்டிவிட்டேன்.
ஒரு பிணத்தில இருந்த சாரத்தை கிழித்து எலும்புமுறியாத இரு
காயங்களுக்கு கட்டுப்போட்டேன். ஒரு இளவயது தாய் கத்திக்
குளறினா தனது கணவனை காப்பாற்றுமாறு கெஞ்சினா வயிற்றில
பெரிய காயம் ஆனால் உயிர் இருந்தது .நூறு வீதம் ஆள் தப்பாது .
அம்மா நீ போ அம்மா நீ வீணாய் சாகப்போறாய் நான் எரிந்த வாகனம்
ஒன்றின் கவரில் நின்று கெஞ்சிப்பார்த்தேன். அம்மா இனி உங்க சனமில்லை
நீ வாம்மா அவள் கேட்கவில்லை அவள் கத்திக்கொண்டே இருந்தாள்.
                                              சுதன் சிறு குன்றுக் கிணற்றிலிருந்து   வாளியிலே மண்ணோடு தண்ணீர் கிள்ளினான் .இறுதியாய் இரத்தக்கை கழுவி மிகுதி நீரைக்குடித்தேன் .வியர்த்து முதுகில் இருந்த எரிகாயம் எரிந்து கொண்டிருந்தது.
சில மீற்றர் தூரத்தில் முதலாவது ஆமியை கண்டேன் .அவன் மரம்
ஒன்றின் பின் துப்பாக்கியை எம்மை நோக்கி நீட்டிய படி இருந்தான்.இப்போதும்
அந்த தாயின் அழுகுரல் கேட்டுக்கொண்டிருந்தது.

                                                     - நிரோன்-


 
                                                    


Share/Save/Bookmark

வெள்ளி, 23 மார்ச், 2012

தயவுசெய்து உங்கள் வாழ்விற்காய் இனத்தை பணயம் வைக்காதீர்.

உலக தமிழர் ஒன்றாய் நின்று சிங்களத்திற்கு சிறு அடி கொடுத்துள்ளனர்.வைகாசி 18 உடன் யாவும் முடிந்தது என்றே
சிங்களம் கர்ச்சித்தது.சுயநலனுக்காய் காட்டிக்கொடுக்கும் சில
தமிழ் கோடரிகளையும் பாவித்து தமிழர்களில் அக்கறையுள்ளவர்
போல் வேசமிட்டு தமிழ் இன,நில அழிவை திட்டமிட்டு
முன்னகர்த்துகிறது. திரைக்கு முன்னும் பின்னும் இனச்சுத்திகரிப்பு நடை பெறுகிறது.
                                           தமிழர்கள் சோர்ந்து விடாமல் இனப்படுகொலையை,
சிங்களத்தின் உண்மைமுகத்தை உலகத்திற்கு தெரிவித்து
வருவது பெருமைகொள்ளத்தக்கது.கடமை சார்ந்தது.உலகமெல்லாம் பரப்புரையை நாம் தொடரவேண்டியிருக்கிறது. இனத்தை,இன அடையாளங்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எல்லா
தமிழருக்கும் பொதுவானது.
                                        ஐ நா விசாரணை அறிக்கையையோ/ஐ நா தீர்மானத்தையோ
சிங்களம் மதிக்கப்போவது இல்லை.நஞ்சூறிய ஆக்கிரமிப்பு இனம்.கண்
மூடி பால் குடிக்கும் வதை அரசியல் புரியும் திமிர் முத்திய சர்வாதிகார மனம் .
                                தமிழர்களே! நீங்கள் எங்கிருந்தாலும் ,விடுதலைக்காய்
உழைக்காவிட்டாலும் விடுதலைக்கு எதிராய் ஒரு துரும்பளவேனும்
பாதகத்தை செய்திடாதீர்.விடுதலைக்காய் அனைத்து தியாகங்களும்
செய்பட்டாயிற்று.  தயவுசெய்து உங்கள் வாழ்விற்காய் இனத்தை
பணயம் வைக்காதீர்.
                                  ஈழத்தமிழனுக்கு கிடைத்த /அநேகரால் விரும்பப்பட்ட
ஒரே ஒரு தலைவன் பிரபாகரன்தான். அதீத அர்ப்பணிப்புகளால்
அவன் என்றும் தம் மக்களுடன் வாழ்வான்.எல்லாத்தமிழரும்
முடிந்தவரை சர்வதேசத்திற்கு எம் நியாயங்களை ஏதோ ஒருவகையில்
சொல்வோம்.எங்களுக்குள் அடிபடுவதை தவிர்ப்போம்.இலட்ச்சியம்
சாவதில்லை நிரூபிப்போம்.

                                             - நிரோன்- 


Share/Save/Bookmark

சனி, 17 மார்ச், 2012

பசில் ஐயா சொல்கிறார் மேற்குலகத்திட்க்கு தேவை என்றால் கடன்குடுக்கலாமாம்.



பசில் ஐயா சொல்கிறார்
மேற்குலகத்திட்க்கு தேவை என்றால்
கடன்குடுக்கலாமாம்.
எப்பிடி ஐயா
வாங்கின கடனில
ஒருதுளியும் திருப்பிக்கொடுக்கவில்லை
இதுக்குள்ள எப்படி ஐயா
போன கிழமைதான்
மண்ணெண்ணெய்,கின்ணெண்ணை எல்லாம்
விலை ஏறிச்சு
எல்லாத்திலேயும் பத்து வீதம்
நீங்கள் வாங்குறதால
உங்களை
mr 10 percent எண்டெல்லோ கூப்பிடீனம்
அதுல ஏதாவது குடுக்க கிடக்கே?
பிள்ளை
நாங்கள் ஒன்றும் யோசிச்சு கதைக்கிறதில்லை
இப்படி கதைச்சனியோ என்றால்
இல்லை என்றுதான் சொல்லுவோம்
எப்பிடி மூளை ?
பசில் ஐயா
இப்ப கணணி உலகம்
எல்லாத்தையும் சாட்சியாய் வைச்சிருப்பாங்கள்
நான் எத்தனை தடவை பிடிபட்டுட்டன்.
போடா பிள்ளை
தம்பியின்ற வெள்ளை வான் தெரியுமே ?
எரிவாயு வான் தெரியுமே?
உலகம் விரியல்ல சுருங்கிற்றுது பிள்ளை.
கீ கீ கீ 


Share/Save/Bookmark

வெள்ளி, 16 மார்ச், 2012

அந்த பாலகனின் உடலைப்பார்க்க மனது பிசைகிறது

அந்த பாலகனின் உடலைப்பார்க்க மனது பிசைகிறது.எந்த களவும்
தெரியாத பிள்ளை, குழந்தை மனம் இம்மியளவும் குறையாத பாலகன் .
பாடசாலை தவிர்ந்து எப்போதும் தாயின் பார்வை அவன்மீது இருக்கும் .
                                   பாடசாலைக்கு பின்பக்கம் என்வீடு,என்வீட்டுக்கு
பின்புறம் அவன் பாடசாலை விட்டு வந்து நிக்கும் முகாம்.பாடசாலையிலோ
அன்றி பின்முகாமிலோ ஏதாவது அனர்த்தமாயின் மாமா வீட்டிற்கு
ஓடிவிடு இது தாயின் கட்டளை.
                                பாடசாலைப்பாடங்களில் படுசுட்டி.ஆங்கிலப்போட்டிகளில்
எப்போதும் மாவட்ட பரிசுகளை வெல்வான்.2008 ஆம் ஆண்டுக்கான
போட்டியின்போது அவன் பேசியதையும் தந்தைவழி பேரனுக்கு அருகில்
நின்று பேசிக்காட்டியது கண்முன் நிற்கிறது.
                                   உங்களுக்கும் கடாபி மாமாவுக்கும் ஏப்ரல் fool இற்கு
கூழ் முட்டை அடிச்ச கதையை சொல்லுங்கோ .இவனது அண்ணனும்
இவனது வயதில் இந்தக்கதையை திருப்பித்திருப்பி கேட்பான்.இப்போது
கதை கேட்க யாருமில்லை.
                            தாய் வழிப்பேரனின் இழப்பின் போதுஅந்தக்குடும்பம்
கவலையில் மூழ்கிப்போயிற்று.அவனது பெயர்கூட தாய்மாமனின்
பெயர்தான்.அவனது பிள்ளைப்பருவத்தின் ஒவ்வொரு காலமும்
மீள மீள நினைவில் வருகிறது.அவனது பிஞ்சு நெஞ்சை துப்பாக்கி ரவைகள் துளைக்கும்போது நல்ல காலம் அவனது உயிர்த்தாய் உயிரோடு இருக்கவில்லை.அவனது அழகான கண்கள் மீண்டும்
பேசாதா? மனம் ஏங்கித்துடிக்கிறது.    


Share/Save/Bookmark

சனி, 10 மார்ச், 2012

உண்மைகள் மறைக்கப்படுவது கொடுமையானது

மனித உயிர்கள் உன்னதமானவை.மனித அன்பு நிலைக்கவேண்டியது.
போர் கொடூரமானது.மனிதன் அமைதியாகவும்,மனச்சாட்சி வழி
நடந்து அன்பில் அமிழ்தலே நல்லவாழ்வு.  இவற்றுடன் சுதந்திரம் பெற்றவாழ்வே நிறைவாழ்வு.
                               ஒரு இனத்தின் உரிமை,நிலம் பறிக்கப்பட்டு,இன அடையாளம் ,
உயிர்கள் இழக்கப்படும்போது அந்த இனம் மீது போர் திணிக்கப்படுகிறது.
இனத்தின் வாழ்வுரிமையை காக்க போராளிகள் உருவாகிறார்கள்.அநேகர் 
 மனச்சாட்சியை மீறமுடியாமல் போராளியாகிறார்கள்.
போரின் முடிவில் ஒரு இனத்தின் அதிக நல்லவர்களை இழந்து போகிறோம்.அங்கவீனம் அடைந்த போராளிகளின் எஞ்சிய வாழ்வும்
போராட்டமாகிறது.
போராளிக்குடும்பங்கள் வசதி அற்றவராகவும்,கல்வியில் தாழ் நிலையிலும்
விடப்படுகிறார்கள்.
                               போராளிகள் தாம் கொண்ட இலச்சியத்திட்காய் செய்யும்
தியாகங்களை எப்படி எழுதி முடிப்பது? அன்பு நிறை உள்ளங்களை
கண்முன்னால் இழக்கும் அவலம் அதிகம் போருடன் கலந்தது.
                               போர் உச்சகாலங்களில் பலமுள்ள எல்லோரும்
ஏதாவது நேரடி/மறைமுக உதவியை போராளிகளுக்கு/மக்களுக்கு செய்யவேண்டும்.தாங்கள்
ஒளித்துக்கொள்வது / தப்பமுனைவது அழகல்ல. போராட்டத்தை
விமர்சனம் செய்பவர்கள் தாங்கள் தகுதியானவரா என தராசில்
நிறுத்துப்பார்க்க வேண்டும்.
                               ஒருவனை பத்து பேர் சேர்ந்து அடித்ததை பெரு வீரமாய் ,
இல்லாத ஒருவனை மேலும் விமர்சித்து எழுதுகிறார் கையாலாகாதவர்.
வீரமும் தியாகமும் ஈழத்தில் விளைந்தது என்றால் அது மிகையாகாது.
அதை விளைப்பித்தான் ஒரு சுத்த வீரன்.
                          உண்மைகள் மறைக்கப்படுவது கொடுமையானது.ஆனால்
அதுதான் நடக்கிறது.
                             எம் இனத்தை விடுதலை பெற வைப்பதற்காய்  விரும்பியோ விரும்பாமலோ எல்லா முயற்சியும் எடுக்கப்பட்டது. தவறுகள் இருக்கலாம் ஆனால் அது
இன்று உண்மைக்கு மாறாக மிக பெரிதாக எம் இனத்தவரால் கூட காட்டப்படுவது மிகக் கவலை தருகிறது.
                           அன்று திலீபன் சொன்னான் " நாம் எல்லா போராளிகளும்
இறந்தால் தமீழீழம் தருவார்கள் எனில் இந்த கணமே அனைவரும்
இறக்க தயாராய் இருக்கிறோம்.இது முள்ளிவாய்க்கால் காலத்திலும்
கடமையில் இருந்த அனைத்து போராளிகளின் மனநிலையிலும்
இருந்தது.

                                   
                           
                               


Share/Save/Bookmark

வியாழன், 8 மார்ச், 2012

உண்மைக்கதைகள்-06

அவன் ஒரு போராளி மருத்துவன்.பல ஆயிரம் சத்திர சிகிச்சைகளை செய்தவன்.
வெற்றி பெற்ற சத்திரசிகிச்சையாளன்.வேகம் கூடிய சத்திரசிகிச்சையாளன் .
அவனால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டன .மகப்பேறு சத்திரசிகிச்சை
உள்ளீடாய் அனைத்து சத்திரசிகிச்சைகளையும் செய்தான்.
                                                    நாலாம் கட்ட ஈழப்போரில் கண்ணாடியுடன் சத்திர
சிகிச்சை செய்யவேண்டிய நிர்ப்பந்தம் ஆரம்பித்தது.கண்ணாடியுடன்
செய்வது முன் வெறும் கண்ணோடு செய்ததைப்போல் சௌகரியமாக
இருக்கவில்லை.என்றாலும் சத்திரசிகிச்சைகள் வெற்றிகரமாக சென்றன.
                                                  இராணுவம் மாத்தளனை கைப்பற்றியபின் அவர்களின்
  ஒரு சத்திரசிகிச்சை கூடம் வலைஞர்மடத்தில் இயங்கிற்று.இரவு சத்திரசிகிச்சைகள் முடித்து பாயில் படுத்தான்.வழமையாக படுக்கும் போது
கண்ணாடியை தலைக்கருகில் வைத்தே படுப்பது வழமை.காயம் வந்தால்
உடன் செல்லக்கூடியதாய் இருக்குமாகையால்.அன்று இரவு இரண்டு மணிக்கு
படுத்தனர் .மூன்றரைக்கு எழுப்பினார்கள் .எழும்பும் போது இருட்டில் அவனது
கால் உலக்கியே கண்ணாடி உடைந்து பாதத்தில் இரத்தம் எடுத்தது.கண்ணாடி
ஒன்றை அவன் விருப்பத்திற்கு உரிய சகா,மாவீரன் இசை ஒழுங்குசெய்து
தந்தான்.அந்நேரங்களில் கண் பரிசோதிக்கவோ, கண்ணாடி எடுக்கும்
வசதியோ அங்கில்லை . அக்கண்ணாடி ஐம்பது வீதம்தான் பொருந்திற்று.
இறுதிவரை அங்கு உரிய கண்ணாடியில்லாமல் மிகக்கடினப்பட்டு சத்திர சிகிச்சை செய்தான்.
                                         அவன்தான் விடுதலைப்புலிகள் மருத்துவப்பிரிவில்
கண் பரிசோதித்து கண்ணாடி பெறும் பிரிவை ஆரம்பித்தவன்.1996 இல் இருந்து
2003 வரை கிளி பொது மருத்துவமனையில் கண் கிளினிக்கையும் நடாத்தினான்.அவன் ஆரம்பித்த பிரிவால்
இலங்கையின் வடகிழக்கு பகுதியில் பல ஆயிரம் பேர் பயனடைந்தனர்.
ஆனி 2009 இற்கு பின் இன்றுவரை பல இடங்களில் பரிசோதித்தும்,பரிசோதிக்காமலும், எட்டு
தடவை கண்ணாடி எடுத்தாயிற்று. ஒரு கண்ணாடியிலும் திருப்தி இல்லை.
அதீத பாவனையால் கண் பாதித்தது என்கிறார்கள்.
 கண் பார்வை குறைபாட்டால் அவன் வாழ்வு கடினமாக இருக்கிறது.
                                         சிறு வயதில் மாபிள் விளையாட்டில் கதாநாயகனாய்
இருந்தான்.அவன் அடித்து வெல்லும் மாபிள்களை தம்பிமார் சாரக்கட்டில்
கொண்டுவருவார்கள் .  வெல்லும் மாபிள்களில் அரைவாசியை அவர்
அவருக்கே திருப்பிக்கொடுப்பான். தோற்பவர்களுக்காகவும்  விளையாடிக்கொடுப்பான்.அப்படி இருந்தும் ஆயிரத்து எண்ணூறு
மாபிள்களை தங்கள் கிணற்றினுள் போட்டார்கள். பின் துப்பாக்கி
சுடுவது,அம்பு எய்வதிலும் மற்றயவர்களுக்கு சளைத்தவன் அல்ல.

                                                          -நிரோன்-                                      


Share/Save/Bookmark

வெள்ளி, 2 மார்ச், 2012

உண்மைக்கதைகள் -05

அது எண்பத்திநான்காம் ஆண்டாக இருக்க வேண்டும் அவர்கள் இருவரும்
எதிரெதிராய் சந்தித்துக்கொள்வார்கள்.ஆனால் இருவரும் வெவ்வேறு
இயக்க உறுப்பினராய்,சிவாவும் ஓவியனும் ,ஓவியனோ ஒவ்வொரு
தடவையும் முறைப்பான் சிவா தலையை குனிந்து சென்றுவிடுவான்
இருவரும் முன் பின் அறிமுகமில்லாதவர்தான்.
                                      சிலகாலத்திட்குப்பின் சிவாவும் ஓவியன் சார்ந்த
இயக்கத்தில் கடமை செய்ய மாறி வந்தான்.இப்போது அவர்களுக்கிடையில்
புரிந்துணர்வு உருவாகிற்று.சிவா பிராமண சமூகத்தை சேர்ந்தவன்.
அவனுக்கு இந்த வாழ்வு கடினமாக இருந்திருக்கும். தங்குமிடத்தில்
எப்போதும் அசைவ உணவே வரும்.அவன் சாப்பிடுவதில்லை.கடையில்
ஏதாவது வாங்கி சாப்பிட்டு வயிறை நிரப்புவான் அனேகமாக பூந்தி
லட்டுத்தான்.அவன் கூட செலவளிப்பதாகவும் குற்றமும் அவன் மீது
வீழ்ந்தது.அவன் பாவம் அவன் என்ன செய்வான்.
                                    யாழ்ப்பாணம் முழுக்க சைக்கிள் அடிச்சுத்தான்
வேலை அவன் தெல்லிப்பளை,வல்வெட்டித்துறை உள்ளீடாய் பல
இடங்களில்
முதலுதவி வகுப்புக்கள் எடுத்தான்.திலீபனின் உண்ணாவிரத
காலத்தில் மாறி மாறி அம்புலன்சிட்குள் தவம் இருந்தான் .
                                    இந்தியன் ஆமிக்காலம் அவன் செஞ்சிலுவை
சங்கம் ஒன்றுக்கு சொந்தமான இடத்தில் தங்கி இருந்தான்.
அந்த இடத்தில் இயக்கத்தின் சில சந்திப்புகள் யாருக்கும்
தெரியாமல் நடக்கும் .யாருக்கும் ஐயுறவும் வரவில்லை.
                                    ஒருமுறை மன்னாருக்குரிய நோட்டீஸ்களும் ,
சுவரொட்டிகளும் அனுப்ப வேண்டும்.சிவாவும்,ஓவியனும்
தனித்தனியாக சைக்கிளில் பஸ் நிலையத்திற்குள் கொண்டுவந்தார்கள்.
மன்னார் மினி பஸ்ஸில் சீட்டை பிரட்டி சீட்டிற்கு கீழ் யாரும்
அறியாமல் வைத்தார்கள்.அர்ச்சுனன் அந்த பஸ்ஸில் போகிறான்.
இயக்க பிரதேசம் வரும்போது அதை எடுத்து போவான்.அர்ச்சுனனுக்கு
முகத்தால் சைகை காட்டி இருவரும் வெவ்வேறு திசையால்
போனார்கள்.இப்போது சிவா,அர்ச்சுனன் ஓவியன் இணைபிரியா
நண்பர்கள்.
                              இது இரண்டாம் ஈழப்போர் ஆரம்ப காலம் யாழ் வைத்தியசாலை இயங்கவில்லை.சிவாவின்
பொறுப்பில் மருத்துவ வீடுகள் மானிப்பாயில் ஓவியனின் பொறுப்பில்
மருத்துவ வீடுகள் வட்டுக்கோட்டையில் அர்ச்சுனன் மன்னாரில்.
சிவாவின் வீடுகள் எப்போதும் மிக துப்பரவாக இருக்கும் உதாரணம்
காட்டி கதைப்பார்கள்.பின் சிவா யாழ்ப்பணத்தில் ஜேம்ஸ்,ரோய்
மருத்துவ வீடுகளுக்கு பொறுப்பாய் செல்ல ஓவியன் சுதுமலை
வீடுகளுக்கும் யாழில் இருந்த அருணா வீட்டுக்கும் பொறுப்பாய்
வந்தான்.(களமுனையில் போராளிகள் குறைந்த நிலையில்
காயமடைந்த போராளிகளை விரைவில் குணப்படுத்தி மீள களமுனைக்கு
செல்ல துணைபுரிதல் முக்கிய இயக்க பணியாக இருந்தது).
                               1992 இல் மருத்துவ பிரிவிற்கும் பொறுப்பாய்
இருந்த மாத்தையா அவர்களால் சில காரணங்களை காரணம்
காட்டி சிவா இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்டான்.அக்காலத்தில்
அவன் மிக கவலை கொண்டிருந்தான்.
                              1997 ஆம் ஆண்டு ஒலுமடு பிரதேசத்தில் சிவாவை
ஓவியன் கண்டான்.ஓவியன் ஒவ்வொரு ஞாயிறும் பற்சிகிச்சை
வழங்க ஒலுமடுவில் இயங்கிய பொன்னம்பலம் மருத்துவமனைக்கு
வருவான்.அதையறிந்து சிவா ஓவியனை சந்திக்க வந்திருந்தான்.
எப்போதும் விடுதலை போராட்டத்துடன் சேர்ந்து வாழவேண்டும்
என்பதில் உறுதியாய் இருந்தான்.வேலை அற்று சோர்வுடன்
காணப்பட்டான்.சிவாவை சர்வதேச செஞ்சிலுவை சங்க
நடமாடும் மருத்துவ சேவையுடன் உதவி மருத்துவராய்
இணைக்க ஒழுங்குபடுத்திக்கொடுத்தான்.
                            சிவா மக்களுக்கு நிறைவான சேவை வழங்கி,
கிராம சுகாதார வழங்குனர்களின் கல்விபுகட்டலிலும்
சிறந்த பங்கு வகித்தான்.வசதிகள் குறைந்த வன்னி மண்ணில்
அந்த காலங்களில் மக்களுக்கு சேவையாற்றிய அவன்
மனித உச்சமாக தெரிகிறான்.
                             சமாதான காலத்தில் யாழ்ப்பாணத்தில்
இருந்தான்.
                           நான்காம் ஈழப்போர் ஆரம்பமாகுவதட்கு
சிலமாதம் முன் மீண்டும் வன்னி வந்தான்.நேரடியாய் ஓவியனிடமே
வந்தான்.யாழ்ப்பான தற்போதைய நிலையை விளக்கி மீண்டும்
அங்கு செல்ல விரும்பவில்லை என்றான்.ஓவியன் அவனை
மீள இயக்கத்தில் இணைய கேட்டான்.சிவா விரும்பவில்லை.
இப்போது சிவா திருமணம் முடித்திருந்தான்.அவனது மனைவி
யாழில் ஆசிரியையாய் கடமை புரிந்தாள்.
                               சிவா ஓவியனுடன் கலந்தாலோசித்து மனநோயியல்
சிகிச்சை கடமை செய்ய முடிவெடுத்தான்.அரசசாரா நிறுவனம்
ஒன்றினூடு கடமை செய்ய தொடங்கினான்.இரண்டு கிழமைக்கு
ஒரு தடவை ஓவியனுக்கு மனநோய் சம்மந்தமான அறிக்கை
கொடுத்து விவாதித்து வந்தான்.    இக்காலப்பகுதியில் இவனது
மனைவி சிங்கள இராணுவத்தின் துப்பாக்கி ரவை தற்செயலாய்
பாய்ந்து இறந்து போனாள்.மனைவி காயப்பட்டிருக்கும்
காலத்தில் கூட அருகில் இருக்க முடியாமல் மிகக் கவலையில்
இருந்தான்.
                        இறுதிவரை மனநோய் சிகிச்சையை கிளி,முல்லையென
மோட்டார் சைக்கிள் பயணத்துடன் வழங்கிவந்தான்.
                       2009 சித்திரை இருபதில் மாத்தளன் இராணுவத்திடம்
வீழ்ந்தவுடன் மிக வருந்தினானாம்.2009 சித்திரை இருபத்தி இரண்டு அன்று
வலைஞர்மடத்தில்
ஓவியனை சந்திக்க சிவா வந்த வேளை வெறும் பத்து மீற்றர் தூரத்தில் கொத்துக்குண்டுக்கு இரையாகி
சிவா தனது மக்களை பிரிந்தான்.ஓவியனால் சிவாவின் இறப்பைத்தான்
உறுதிப்படுத்த முடிந்தது.
                          விடுதலைப்புலிகளால் நாட்டுப்பற்றாளர் கௌரவம்
வழங்கப்பட்டு அவனது உடல் முள்ளிவாய்க்காலில் விதைக்கப்பட்டது.

                                                                              - நிரோன்-

 
                                   



Share/Save/Bookmark
Bookmark and Share