புதன், 19 நவம்பர், 2014

மாணவப்பிஞ்சுகள் உயிர் துறந்தன

கார்த்திகை மாதமெனில் பல நினைவுகள் வரிசையில் வரும். 27/11/2007அன்று மாவீரர் நாள் மாணவ முதலுதவியாளர்கள் முதலுதவி கடமைக்காக , மதியப்பொழுதில் ஐயன்கன்குளம் திலீபன் மருத்துவ மனையில் இருந்து ஆலங்குளம் துயுலும் இல்லத்திற்கு நோயாளர் காவும் வண்டியில்(Ambulance) சென்றனர் .   ஸ்ரீலங்கா இராணுவத்தின் கிளைமோர்த்தாக்குதலில் பதினொரு பாடசாலை மாணவப்பிஞ்சுகள் உயிர் துறந்தன.ஐயன்கன்குளம் கிராமமே சோகத்தில் மூழ்கியது.நான் குறுகிய காலம் திலீபன் மருத்துவமனைகளுக்கு பொறுப்பாக இருந்தேன்.அப்போது தமீழீழ சுகாதாரசேவைகளின் பத்தாயிரம் முதலுதவியாளர்களை உருவாக்கும் திட்டத்தின் கீழ் திலீபன் மருத்துவமனைகளிலும் முதலுதவிவகுப்புகளை ஆரம்பித்துவைத்தேன்.   
  கடவுளே!உயிர்களை காக்கவே முதலுதவியாளர்களை உருவாக்கினோம் ,இழப்பதற்கல்ல.    


Share/Save/Bookmark

ஞாயிறு, 9 நவம்பர், 2014

காத்திருப்பு

ஆயிரம் ரூபா பணத்தை
தட்டிப்பறித்தான் தாதா
பணம் இழந்தவன் குளறினான் 
அயல்களுக்கு கேட்டது
அயல்கள் வந்தன உதவி புரிவதுபோல்
புரிந்தன உதவி தாதாவிற்கே 
பணம் பத்தும் செய்யும்
வெள்ளைப்புறா நரியாயிற்று

தாதா விழா எடுத்து
ஐம்பது சதத்தை திருப்பி கொடுக்கிறான்
கொல்லைப்புரத்தில் உடுபுடவை  மட்டுமல்ல 
அத்திவாரமேபறிபோகிறது
ஒட்டுண்ணி  ஐம்பது சதத்தை
வரப்பிரசாதம் என்கிறான்
அணில் ஏறவிட்ட நாயாய் "காத்திருப்பு"

Share/Save/Bookmark

சனி, 8 நவம்பர், 2014

கடைசி நிமிடங்கள்

கள அருகிலும்
மருத்துவமனைகளிலும்
கண் மூடிப்போனவரின்
கடைசி நிமிடங்கள் - மனதில்
ஏற்றப்பட்ட ஆணிகள்

அன்றும் அப்படித்தான்
" என் அம்மாவிற்கு----"
அவன் கண் மூடினான்
பத்திரிகையில் விலாசம் தேடி
வன்னேரிக்குளத்திலிருந்து 
வேரவில் போனேன்
வளர்பிறையோடு  

இடம்பெயர்ந்திருந்த
ஏழைக்கொட்டிலில்
அம்மாவோடு பிள்ளைகளும்
எப்படிச்சொல்வது ?
சொல்லாமலே விடைபெற்றோம்   

பத்துவருடம் கழித்து
வள்ளிபுனத்தில்
அம்மாவை காண்கிறேன்
வயிறு பிளந்து குடல் தெரிய
முகம் வியர்த்துக்கிடக்கிறாள்
எல்லாப்பிள்ளைகளையும்
"செல்" தின்றதாய் சொல்கிறாள்
பிள்ளை!என்னைக்காப்பாற்றாதே!
அவள் தப்பமாட்டாள்  
அந்தத்தாயிடம்
அவள் மகன் சொன்னதை
ஒப்புவிக்கிறேன்
" அடுத்தபிறப்பிலும்
உனக்குத்தான் பிள்ளையாய்
பிறப்பேன் அம்மா.
அம்மா நீ அழக்கூடாது,
நீ அழக்கூடாது."
வாயில் ஒருபுன்சிரிப்போடு
அம்மாவும் கண் மூடிப்போனாள்
Share/Save/Bookmark