ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

சாட்சி அல்லது வாக்குமூலம்
-சுருதி-

2009 “விரோதி” வருடமாய்ப் பிறந்தது
கிளிநகர் வெறிச்சோடிப்போயிற்று
மீள் பிரசவத்தின் பின் பத்து வயதுதான்.
வயதின் அழகும், துள்ளலும் அகன்று
அலங்கோலமானது ஆசைநகர்
உழைப்பை, சொத்தை உறிஞ்சி எழுந்தநகர்.
எல்லாம் இழந்து ஏதிலியாய்க்கிடக்கிறது.
கடைகள், வீடுகள், கூரைகள் இழந்து.
ரைக்டர் ரைக்டராய், லொறி லொறியாய்
உயிர் மனிதர் ஊர் துறந்து,
மடு, அடம்பனில் தொடங்கிய பயணம்
வந்த வெள்ளம் இருந்த வெள்ளத்தையூம்
அள்ளிப்போவது போல்
ஏன் இந்த அவலம்
பிறந்த ஊரில், பூர்வீகம் வாழ்ந்த மண்ணில்
தம் உழைப்பில் மட்டும் வாழ்ந்தவருக்கு
ஏன் இந்த அவலம்
பச்சைப்பிஞ்சுகள், இயலாமுதியோர் என
இடம்பெயரும் இடர்
வாகனங்கள் பத்து அடி நகர
பத்துமணி எடுத்திற்று.
பரந்தன், முல்லைவீதி
வரலாற்றில் மனிதரால் நிரம்பிற்று.
மனித பிதுங்கலால்
அழகுமுகங்கள் கலை(ள) இழந்தன.
அந்த கோடி அழகான வாழ்வை இழந்து
உயிரைத் தூக்கிப்போயின உடல்கள்.
தர்மபுரம், வட்டக்கச்சி, விஸ்வமடு
நிரம்பியது மனிதரால்.
பூர்வீகமக்கள் வாழ்விடம் தந்தனர்.
ஊர் ஊரான இடப்பெயர்வின் வலியோடு
நகரின் இடப்பெயர்வூம்
வலியை எழுத வார்த்தைகள் போதாது.



Share/Save/Bookmark
Bookmark and Share