செவ்வாய், 29 மே, 2012

வெற்றிடம் நிரப்ப காற்று வரும்

நண்பா!
நீ இல்லை 
இருந்தும் 
கடிதம் எழுதுகிறேன் 

தமீழீழம் எங்கும் 
எம் சுவாசம் இருந்திருக்கிறது 
இன்று எங்கும் ஆக்கிரமிப்பு 
நண்பா !
உன் புதைகுழியில்க்கூட 
நீ இல்லை 
என் ஞாபகங்கள் கிளரும் 
மாவீரர் வீடுகள் முன் 
அவன் நிற்கிறான் 

இன்னும் 
கப்பல்கள் நிற்கின்றன 
கடல் இல்லை 

இருக்கிறோம்முகவரி அற்று 
உங்கள் 
இறுதி வாக்குமூலங்களை 
சேகரித்த நாம் இருக்கிறோம்

வெற்றிடம் நிரப்ப காற்று வரும்
நம்பிக்கையை 
விதைத்துவிதைத்து 
எம் உயிர் இழுபடுகிறது 
கண் மூடினால் 
உம் முகங்கள் வரும் 
இடைவேளை அற்று 
பார்க்க விரும்பினும் 
"குற்ற உணர்வு "
ஏதோ செய்கிறது 
"இயலாமை "
எமை சாகடிக்கிறது 

நண்பா!
எதிலும் 
ஒன்றாய் இருந்து விட்டு 
பாவி! 
எமை தவறவிட்டுப்போனாய் 

 


Share/Save/Bookmark

திங்கள், 28 மே, 2012

இலங்கையில் சிங்களம் செய்தது போர்க்குற்றம் மட்டும்தானா?

போர் சட்ட விதி முறைகளுக்குள் உட்பட்டது. 
இவ்விதி முறைகளை தாண்டி போரில் திட்டமிட்டு 
செய்யப்படும் குற்றங்கள் போர் குற்றங்கள் ஆகும் .
இலங்கையில் நடந்தது போர்க்குற்றம் மட்டுமல்ல.
போர் விமானங்களாலும்,எறிகனையாலும் ,ஆழ 
ஊடுருவும் படையணியாலும் திட்டமிட்டு 
போர் வலயத்திற்கு அப்பால் செய்யப்பட்ட
மக்கள்கொலைகள் போர்குற்றங்களா ?( செஞ்சோலை வளாகத்தில் 
மாணவிகள் மீதான வான்தாக்குதலுக்கு முன் இரு ஆழ 
ஊடுருவும் படையினரை மாணவிகள் கண்டுள்ளனர்)போர் 
வலயத்திற்கு அப்பால் கொல்லப்பட்ட தமிழ்,
சிங்கள ஊடகவியலாளர்கள் .கிரிசாந்தி போல் 
கொல்லப்பட்ட தமிழ் பெண்கள்,போர் வலயம் 
தவிர்ந்துகாணாமல் போன 
பல நூறு உயிர்கள் ,கொல்லப்பட்ட பாராளமன்ற 
உறுப்பினர்கள் எல்லாம் எக்குற்றத்திட்குள் 
அடங்கும்?உண்மையில் பல கொலைக்குற்றங்கள் 
போர்க்குற்றங்கள் அல்ல திட்டமிட்ட கொடூர கொலைகள்.
ராஜபக்சாக்கள் போர்க்குற்றங்களுக்காகவும் ,கொடூர 
கொலைக்குற்றங்களுக்காகவும் தண்டிக்கப்படவேண்டும்.
-நிரோன்-


Share/Save/Bookmark

ஞாயிறு, 27 மே, 2012

ஆழ ஊடுருவும் அணி இன்னுமொரு போர்க்குற்ற சாட்சி

ஆழ ஊடுருவும் அணி 
சிறிலங்காவின் 
இன்னுமொரு 
போர்க்குற்ற சாட்சி 

ஆழ ஊடுருவும் அணியால் 
நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் 
கொல்லப்பட்டுள்ளார்கள் 
குறிப்பாக 
மருத்துவ வாகனங்கள் 
அவர்களால் குறிவைக்கப்பட்டன.

நெடுங்கேணி வைத்தியசாலைக்கான
ஆம்புலன்ஸ் தாக்கப்பட்டதில் 
மருத்துவர் உட்பட ஐந்து 
ஊழியர்கள் 
அந்த இடத்தில் 
படுகொலை செய்யப்பட்டார்கள் 
ஆனைவிழுந்தானில் 
மருத்துவ வாகனம் தாக்கப்பட்டதில் 
மருத்துவத்தொண்டர் கொல்லப்பட்டார் 
மாவீரர் நாளன்று 
ஐயன்குளத்தில் ஆம்புலன்ஸ்
மீதான தாக்குதலில் 
பத்திற்கு மேற்பட்ட 
பாடசாலை மாணவிகளான 
முதலுதவித்தொன்டர்கள்
கொல்லப்பட்டனர் 
அடம்பன் சுகாதார வைத்திய அதிகாரியின் 
வாகனம் வெள்ளாங்குளத்திற்கு அருகில் 
தாக்கப்பட்டதில் 
அதில் பயணம் செய்த பாதிரியார் உட்பட 
சிலர் கொல்லப்பட்டனர்.
மருத்துவ வாகனம் ஒன்று
கண்டி வீதியில் தாக்கப்பட்டதில் 
ஐவர் கொல்லப்பட்டனர் 

பாடசாலை மாணவரை 
ஏற்றும் பஸ்வண்டி தாக்கப்பட்டு 
பல பாடசாலைப்பிள்ளைகள் 
கொல்லப்பட்டும் 
பாரிய காயத்திற்கும் உள்ளாகினர்  
இதைவிட 
பாராளமன்ற உறுப்பினர்,
உதவி அரசாங்க அதிபர்,
மனித உரிமை ஆர்வலர் என 
திட்டமிட்டு கொல்லப்பட்டனர் 
அன்றாடம் உழைக்கும் மக்கள் பலர் 
ஏதுமறியாமல்கொல்லப்பட்டனர் 

இறுதி யுத்தக்காலத்தில் 
மக்களுடன்,புலிகளுடன் கலந்து
மக்களுக்கும் புலிகளுக்கும் 
இடைவெளியை உருவாக்க முயன்றனர் 

இதுவரை 
வழமைபோல் 
சிறிலங்காவால் மறுக்கப்பட்ட 
பொய்களில்ஒ ன்று 
அவர்களால்வெளித்தெரியும் போது 
ஆழ ஊடுருவும் அணியினர் ,
அதை வழி நடத்தியோர் ,ஜனாதிபதி போன்றோரை 
சர்வதேச குற்ற விசாரணைக்கு உட்படுத்தி 
பாதிக்கப்பட்டவர்களுக்கு 
பரிகாரம் காணப்படவேண்டும் 

-நிரோன்- Share/Save/Bookmark

சனி, 26 மே, 2012

ஈழம் எப்படி இருக்கிறது?

இலங்கை சுதந்திரம் அடைந்ததாய் 
கருதப்படும் 1948ஆம் ஆண்டிலேயே சிங்கள ஆட்சி 
குடிமைச்சட்டத்தை அறிமுகப்படுத்தி அரைவாசி 
மலையகத்தமிழரை அவர்களது விருப்பத்திற்கு 
மாறாய் இந்தியாவிற்கு நாடு கடத்திற்று.பத்து 
வருடம் ஆகமுன்பே தனிச்சிங்கள சட்டத்தை 
கொண்டுவந்ததுடன் அகிம்சைப்போராட்டத்தையும் 
வன்முறை மூலம் அடக்கிற்று.இனப்படுகொலையுடன் 
தமிழரின் சொத்துக்களையும் திட்டமிட்டு அபகரித்து வந்தது.
அடுத்து தரப்படுத்தல் 
மூலம் தமிழர்களில் மலையாய் நின்ற கல்வியை 
மட்டமாய் தரப்படுத்திற்று.வேறுவழியற்று தமிழ் 
தலைவர்கள் தனிநாடே எங்களுக்கான தீர்வு என 
முன் வைக்க மக்கள் ஏகோபித்த ஆதரவை அதற்கு 
தந்தனர்.அகிம்சை தோற்றதால் ஆயுத போராட்டம் 
தவிர்க்க முடியாமல் போயிற்று.சிங்களம் தமிழ் 
பகுதிகளை ஊடறுத்து பாரிய சிங்கள குடியேற்றத்தை 
செய்தது.செய்கிறது.உலக நாடுகள் இலங்கையின் 
பூகோள முக்கியம் கருதி போட்டி போட்டு 
இலங்கைக்கு உதவின.தங்களுக்குள் உள்ள போட்டியை 
இலங்கையை கையுக்குள் போடுவதற்காய் பாவித்தன.
போராளிகளை அழிக்கும் போர்வையில் சிங்களம் 
திட்டமிட்டு தமிழரை அழித்தது. அழிக்கிறது.
இலங்கை வழமை போல் உதவி பெற்றபின் சில நாடுகளுக்கு 
தனது நன்றியின்மையை காட்டிற்று.அதனால் சில நாடுகள் 
உண்மைகளை பேசதளைப்படுகின்றன.உண்மையில் 
உலகம் சிங்களத்துடன் சேர்ந்து அழித்தது அற்புதமாய்,
புதுமையாய் வீறுடன்எழுந்த சிறு நாட்டை.இப்போது தமிழரின் 
பூர்வீக மண் சிங்களக்குடிஏற்றத்தாலும் ,கலாச்சார 
சீர்கேட்டிட்குள்ளும் திட்டமிட்டு தள்ளப்பட்டுள்ளது.
ஈழத்தமிழர்களின் எண்ணிக்கை இருபது வீதத்திலிருந்து
பதினோரு வீதமாய் குறைந்துள்ளது.ஈழத்தமிழரின் 
பூர்வீக நிலத்தில் நாற்பது வீதம் குடியேற்றங்களால் 
ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
ஈழத்தமிழ் இனத்தின் எதிர்காலம் ஈழத்தில் 
கேள்விக்குறியாகுமா?இதுதான் உலகின் 
விருப்பமா?        


Share/Save/Bookmark

ஞாயிறு, 20 மே, 2012

தேசியத்தலைவர் எப்போதும் தமது மக்களின் விடுதலையையும் ,சுபீட்ச்ச வாழ்வையுமே நினைத்தார்

தேசியத்தலைவர் அவர்கள் எப்போதும் 
தமது மக்களின் விடுதலையையும் ,சுபீட்ச்ச வாழ்வையுமே   
நினைத்தார்.வரலாறுகளில் புனைவுகள் 
வரக்கூடாது என்பதில் மிகக் கவனமாக 
இருந்தார்.தொண்ணூறுகளின் நடுப்பகுதிகளுக்குப்பின் 
நிதர்சனம் நிறுவனம் தம் வரலாறை எழுத 
விரும்பிற்று.அரசியல் துறை பொறுப்பாளர் 
அவர்கள் தலைவரிடம் கேட்டார் :முன்பு 
அந்நிறுவனத்திற்கு பொறுப்பாக இருந்தவர் 
இயக்கத்தில் இருந்து ஏற்கனவே விலத்தி 
இருந்தார்.அவரது பெயரை இணைக்கலாமா?
என்பதே கேள்வி.தலைவர் உடனே சொன்னார் 
அப்ப நீங்கள் பொய்யோ எழுதப்போறிங்கள்?
அரசியல் பொறுப்பாளர் உடன் தலைவரின் 
எண்ணத்தைப் புரிந்து கொண்டார்.     
தலைவர் அவர்கள் 2007 ஆம் ஆண்டில் ஒருநாள்
எங்களுடன் கதைத்துக்கொண்டு இருக்கும் போது
ஜெயசுக்குறு கதை வந்தது அந்த சண்டையை 
அவன் நன்றாக வழி நடத்தினான் என்றார்.
அந்த அவன் அப்போதுஇயக்க வரலாற்றில் பெரும் 
துரோகி ஆகியிருந்தான்.தலைவர் எப்போதும் 
உண்மையாக இருந்தார்.
துரோகி கருணா மீதான நடவடிக்கையின் போது 
ஒரு மருத்துவ அணியே செல்ல ஒழுங்குபடுத்தப்பட்டது.
தலைவர் அவர்கள் தலையிட்டு இரு மருத்துவ 
அணிகள் செல்லுமாறு கட்டளையிட்டார்.இரு 
பகுதியும் எங்களின் போராளிகள் ,எந்தப் பாகுபாடும் 
இருக்கக்கூடாது என்பதில் உறுதியாய் இருந்தார்.
வழமைக்கு மாறாய் மிகத்துயரோடே எம்மை 
வழி அனுப்பினார். 

-நிரோன் -


Share/Save/Bookmark

வெள்ளி, 18 மே, 2012

முள்ளிவாய்க்கால் கவிதைகள்

முள்ளிவாய்க்கால் ஓரத்திலே 
விடிவு முடிவான காலத்திலே
அங்கும் இங்கும் எங்கும் ஒப்பாரிகள் 
முதுமையான பசுமை நினைவை  
சுமக்கும் வாய்க்கால் 
இப்போது பயங்கரமாய் 
இரத்தம் கலந்த சிவப்பாய் 
மனிதரை அல்ல 
சடலங்களை சுமக்கிறது 

கந்தகப்புகையை 
சுவாசித்து வாழ்ந்த மக்கள் 
கையில்லாமலும் காலில்லாமலும் 
சிறைப்பிடிக்கப்பட்டார்கள் 

- ஓவியா-

 முற்காலத்தில் 
மக்கள் ஆடிப்பாடி வாழ்ந்த ஊர் 
நேற்று 
அழுகுரல் எழுந்து 
ஊழித் தாண்டவமாடி 
இன்று 
சுடுகாட்டுச் சாம்பலாய்க்கிடக்கிறது 

தொடர் வேவுவிமான இரைச்சலில் 
மழையாயிற்று எறிகணை 
இழந்த உறவுகள் போக 
எஞ்சியவர் சித்தம் இழந்தனர் 
எல்லாம் சூன்யமாயிற்று 
அழுகுரல் நிரம்பிய மண் 
அதிர்விலிருந்து மீளவில்லை 
முள்ளிவாய்க்கால் 
முள்ளாய் தொண்டையில் சிக்கிற்று 

-சுருதி(junior)_


Share/Save/Bookmark

செவ்வாய், 15 மே, 2012

செயலில் வாழ்ந்த வீரன் நீ

சகோதரனே !
இன்று 
உன் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் 
ஒன்றாய் வளர்ந்தோம் 
ஓரணியில் விளையாடினோம் 
கால அழைப்பை ஏற்று 
இன விடுதலைக்காய் உழைத்தோம் 
உனக்கும் எனக்கும் 
ஏழு வயது இடைவெளி -ஆனால் 
ஒரே நாளில் பிறந்தோம் 
எங்கு நின்றாலும் 
நம் பிறந்த நாளில் 
உன்னை நினைப்பேன் 
நீயும் அப்படித்தான் 

ஒரு குழந்தையின் மனநிலை கருதி 
நீண்ட நாள் காத்திருந்த இலக்கு 
கையிற்கு எட்டியபோதும் 
கைவிட்டு வந்தவன் நீ 
மீண்டும் சென்று வென்றுவந்த 
செயலில் வாழ்ந்த வீரன் நீ 

உனது தாக்குதல்கள் 
எங்கும் பேசப்பட 
நீயோ 
ஏதும் அறியாதவனாய் நகர்வாய்
வீரனே 
உனக்கு ஞாபகம் இருக்கிறதா?
நான் உன் வீடு வந்து திரும்பும் போது
நீதான் என்னை 
சைக்கிளில் ஏற்றிவந்து 
பஸ்ஸில் நான் ஏறும்வரை 
காவல் நிற்பாய் 
எனது உருவம் தெரியும்வரை 
கை அசைப்பாய்  
அந்த நாள் மீளவருமா?

முள்ளிவாய்க்காலில் 
கூப்பிடு தூரத்தில் நான் நிற்க 
ஏன் எனக்கு கை அசைக்காமல் போனாய்?
மயிரிழைகளில் உயிர்தப்பி
கடமையில் மூழ்கிக்கிடந்தேன் நான் -நீ
இவ்வுலகில் இல்லை என்று அறியாமல் 

உன் தாய் 
நீ வருவாய் என்று 
காத்திருக்கிறாளேடா!
என்னடா சொல்ல ?Share/Save/Bookmark

திங்கள், 14 மே, 2012

ஒரு இனத்தின் அழிவு உலகக்கண்ணுக்கு முன்னால் நடக்கிறதே!

இன்று யாழ்ப்பாணத்தில் குறைந்தது இருவருக்கு 
ஒருஅரச பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். 
வன்னியில் குறைந்தது ஒருவருக்கு ஒரு அரச படை 
நிறுத்தப்பட்டுள்ளது.வன்னியில் பிறக்கும் ஒவ்வொரு 
பிள்ளையை நோக்கியும் குறைந்தது ஒரு துப்பாக்கி 
நீட்டப்படுகிறது.கிழக்கின் நிலைமையிலும் எந்த 
மாற்றங்களும் இல்லை.வடக்கின் ஆளுநர் செம்மனிப்படுகொலை
உள்ளீடாய் கொலைகளுடன் சம்மந்தப்பட்ட ஒரு 
இராணுவ அதிகாரி,கிழக்கில் கொலைகளில் 
கை கழுவும் கடற்படை அதிகாரி.இங்கு நடப்பது இராணுவ ஆட்சி அற்று வேறு என்ன?
இவை போதாதென்று எலும்புத்துண்டுக்காய் அலையும் 
அடிவருடிகளும் அவர் பரிவாரங்களும் வேறு.

    எங்கள் போராட்டத்தை இந்தியாவுடன் சர்வதேசமும் 
சேர்ந்து அழித்தது. ஐந்தில் ஒரு மக்கள் கொலை 
செய்யப்பட்டுவிட்டார்கள்.ஐந்தில் இரு மக்கள் 
புலம்பெயரப்படுத்தப்பட்டுவிட்டார்கள்.
எமது மண்ணில் கொலைகளும்,தற்கொலைகளும் 
காணாமல்போதல்களும் ,வெள்ளை வான் கடத்தல்களும் 
கலாச்சார சீரழிவும் மலிந்து கிடக்கிறது.இராணுவ 
ஆட்சியை ஜனநாயக ஆட்சியாய் சர்வதேசம் 
ஏற்பதுபோல் காட்டுவது வெந்த புண்ணில் 
வேல் பாய்ச்சுகிறது.
அமைச்சர்கள் அங்கீகாரம் பெற்ற
கொலையாளிகளாய்.எந்த நேரமும் எதுவும் 
நடக்கலாம்.பௌத்த பிக்குகளின் நடத்தைகள் 
எந்தவிதத்திலும் புத்தபகவானுடன் தொடர்புபடவில்லை.
இலங்கை எனும் நாட்டில் புத்தபகவானின் கொள்கைகளை 
காப்பாற்ற சர்வதேசம் தலையிடவேண்டும்.சிறுபான்மையினருக்கு 
மத சுதந்திரம் உள்ளீடாய் அனைத்து சுதந்திரமும் சர்வதேச 
துணையுடன் காவுகொள்ளப்பட்டுள்ளது. 
இலங்கைத்தமிழர் ஜனநாய வழியில் தமது
தனித்து வாழும் உரிமையை உலகுக்குஎல்லா வழிகளிலும் 
வெளிச்சமாய் ஒப்புவித்துள்ளனர்.ஐ.நா வின் 
மனிதாபிமானம் இதுவரை எமை தொடவில்லை.
எமது வாழும் உரிமையை மீட்டுத்தரவில்லை.
எமது இழப்பு போதாதென்று இன்னும்ஐ.நா பார்த்திருக்கிறதா?
ஒரு இனத்தின் அழிவு உலகக்கண்ணுக்கு முன்னால் நடக்கிறதே!  Share/Save/Bookmark

சனி, 12 மே, 2012

இலங்கையின் இனவரலாறு


இலங்கையின் ஆதிக்குடிகள் இயக்கரும்,நாகரும்தான்.
அவர்கள் இந்து சமயத்தையே பின்பற்றிவந்துள்ளனர்.

புத்தபகவானின் இயற்பெயர் சித்தாத்தன் .அவரது 
தந்தையின் பெயர் சுத்தோதணன் .இவர் ஒரு 
இந்து சமயத்தவரும்,அரசரும் ஆவார். கி.மு 560 ஆவது ஆண்டில் நேபாளத்தில் பிறந்த சித்தாத்தன் 
தனது 29 ஆவது வயதில்துறவியாகி புத்த சமயத்தை உருவாக்கினார். கி.முன் (247-207)தேவ நம்பிய தீசன் அனுராத புரத்தை தலை நகராய்க்கொண்டு   
ஆட்சிசெய்தான்.அப்பொழுதே பௌத்தம் முதன் முதலாய் இலங்கையிட்கு வந்தது . கி.பின் ஆறாம் நூற்றாண்டில் மகாவம்சம் என்ற நூல் 
தாதுசேனன் அரசனின் சகோதரனான மகாநாம தேரரால் 
பாளி மொழியில்தொகுக்கப்பட்டது.பௌத்தத்தில் இரு 
பிரிவுகளான மகாயானம்,தேரவாதம் ஆகியவற்றிட்கிடையிலான 
போட்டியினாலேயே அப்போது தமிழ் மொழியில் பௌத்த 
போதனைகள் நடந்தபோது அதில் அதிக முக்கியத்துவம் 
மகாயானத்திட்கு கொடுக்கப்பட்டதால் பாளிமொழி
பாவனையை தேரவாதம் எடுத்துக்கொண்டது.உண்மையில் 
அப்போது சிங்களமொழி இல்லை.   அதன் பின்பே சிங்கள மொழி உருவாக்கம் பெற்றது.
அதனால்சிங்கள மொழி அதிக தமிழ் சொற்களையும் அதன் எழுத்துவடிவங்களையும் உள்வாங்கிக்கொண்டது.
பௌத்த துறவிகள் இணைந்து தம்மதீப'க் கொள்கையை உருவாக்கினர்.
இதன்படி இலங்கைபெளத்தர்களுக்குரிய நாடு,
சிங்கள இனத்தவர் தேரவாத பெளத்தத்தின் பாதுகாவலர்கள்.என்ற 
தோற்றம் உருவாகிற்று.அப்போது பல தமிழர்கள் மகாயானம்
பௌத்தத்தை தழுவி வாழ்ந்து வந்தார்கள்.ஆனால் சிங்கள ஆட்சி 
மாற்றங்களுடன் அவர்கள் சிதைக்கப்பட்டார்கள் . பௌத்த 
துறவியால் பௌத்தத்தை வளர்ப்பதற்காக புனையப்பட்ட 
மகாவம்சத்திலேயே கி.முன் அனுராதபுரத்தை தலை நகராய்க்கொண்டு   
இலங்கையை நல்லாட்சி செய்த எட்டு தமிழ் மன்னர்களின் 
சிறு வரலாறுகள் கூறப்பட்டுள்ளன.  
சிங்கள வரலாற்றை கூறும் நூலானசூலவம்சத்தின் நாயகன் 
மகாபராக்கிரமபாகு(கி.பி.1140-1173)இவன் ஈழத்தின் வடக்கில் உள்ள வல்லிபுரம் என்னும் ஊரில்பிறந்தவன் .
இவனது அரண்மனைப்புலவர் போஜராஜ பண்டிதர்
இவரேசரஜோதிமாலைஎன்ற சோதிட நூலை தமிழிலே எழுதியவர். 
வரலாற்றின்படி இயக்க நாகர்கள் திராவிடர்களாகவும் ,இந்துக்களாகவும் 
கி.முன் ஐந்தாம் நூற்றாண்டில் தவறான செயல்களுக்காக இந்தியாவிலிருந்து
நாடுகடத்தப்பட்ட 
விஜனும்,அவனது சகாக்களும் ஆரியராகவும் இந்துக்களாகவும் பின் 
இவர்கள் இயக்கர்,நாகர் இனப்பெண்களை திருமணம் செய்து வந்த 
பரம்பரையினர் சிங்களராக பரிணமித்துள்ளனர்.தமிழரில் இருந்து 
சிங்கள இன,மொழி தோன்றியதும் இந்து சமயத்தில் இருந்து 
புத்த மதம் எழுந்ததும் ஏற்றுக்கொள்ளப்படவேண்டியது.
வியாபார நோக்கோடு அவ்வப்போது இலங்கை வந்த  அரபு முஸ்லீம் வர்த்தகர் மீண்டும் தாம் கடலில்
செல்ல வேண்டிய திசைக்கு செல்வதற்குத் துணையாகக் கூடிய காற்று வீசும் வரை
இங்கு தங்க வேண்டியேற்பட்டது. தமக்குத் தேவையான திரவியங்களை உள்நாட்டில்
இருந்து திரட்டிக்கொள்வதற்கும், கொண்டுவந்த வர்த்தகப் பொருட்களை
உள் நாட்டில் விநியோகிப்பதற்கும் அரபு முஸ்லீம் வர்த்தகர்களில் சிலர் இங்கு தங்கினர்.
இவ்வாறு தற்காலிகமாகத் தங்கும் காலத்தில் வர்த்தகர்கள் துறைமுக நகர்களில் வாழ்ந்த
பெண்களை விவாகம் புரியும் வழக்கம் இருந்தது. இஸ்லாம் விபசாரத்தைத் தடை செய்து,
பலதார மணத்தை அங்கீகரித்திருந்ததால் இங்கு வந்த அரேபிய வர்த்தகர்கள் இஸ்லாத்தை ஏற்ற 
பெண்களை திருமணம் செய்தனர். இதனால் முஸ்லீம் சமூகம் உருவாகிற்று.முஸ்லீம்கள் 
இலங்கையில் முதலில் கி.பின் பத்தாம் நூற்றாண்டில் பேருவளை என்ற பிரதேசத்தில் 
குடியேறியதாய் வரலாறு சொல்கிறது.    Share/Save/Bookmark

வெள்ளி, 11 மே, 2012

அந்த தாயிற்கு மூத்த மகன் இறந்தது தெரியாது.

அந்த அம்மாவிற்கு மூன்று ஆண்பிள்ளைகள் .
அந்த செழிப்பான செம்மண்ணில் அவர்களது 
வாழ்வு எவ்வளவு அழகாக இருந்தது.மூன்று 
பேருமே விளையாட்டில் வீரர்கள்.அவர்களது 
வீட்டில் கேடயங்களுக்கு குறைவிருக்காது.
மூத்தவன் மகாஜனா கல்லூரியில் கிரிக்கட்,
உதைபந்தாட்ட அணிகளில் இருந்தான்.உயரம் பாய்வதில் யாழ்மாவட்டத்தில் 
முதலாவதாய் வந்தான்.கொக்குவில் 
தொழில்நுட்பக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தான். 
   இரண்டாமவன் உயர்தரம் சித்தி அடைந்து இருந்தான் .
மூன்றாமவன் யாழ் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி 
இருந்தான்.தொண்ணூறுகளின் முன்கால் பகுதியில் 
மூவரும் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் 
இணைந்துகொண்டார்கள் .1995 ஆம் ஆண்டு இடப்பெயர்வில் 
இரண்டாம் மகன் வீரச்சாவாம் என்ற வதந்தியை 
கேட்டு தந்தை மாரடைப்பால் இறந்துபோனார்.
தந்தையின் இறுதிநிகழ்வு அவர் ஆசையாய் 
வளர்த்த பிள்ளைகள் இல்லாமல் நடந்து 
முடிந்தது.எனக்கு இப்பவும் ஞாபகம் இருக்கிறது.அவர் இடது 
கையால் சோறுகுழைத்து மூன்று பிள்ளைகளுக்கும் 
தீத்திவிடுவது. 
தாய் தலைவருக்கு ஒருமகனை வீட்டிற்கு விடுமாறு
கடிதமெழுதி ,இரண்டாவது மகன் வீடுவந்து சேர்ந்தான்.
மூன்றாவது மகன் ஓயாத அலைகள் இரண்டில் 
வீரச்சாவு எய்தினான்.என்னால் அந்த வீரச்சாவு 
நிகழ்விற்கு வேலைப்பளு காரணமாய் போக 
முடியவில்லை.சில நாட்கள் கழித்துப் போனேன்.
தாய் கத்திக்குளறியது இப்போதும் என் ஞாபகத்தில் 
உறைந்துஇருக்கிறது. 
மூத்த மகன் பல நடவடிக்கைகளை
வெற்றிகரமாய்ச் செய்தான்.இடைநிலை 
பொறுப்பாளராய் வளர்ந்திருந்தான்.2008 இலும் 
ஒரு நடவடிக்கையை வெற்றிகரமாய் செய்திருந்தான்.
துறைப்பொருப்பாளரூடாக தலைவர் அவர்கள் அவனை 
அழைத்திருந்தார்.தலைவர் அவர்கள் கூப்பிடுகிறார் 
என்றவுடன் போட்டிருந்த உடுப்போடேயே 
போயிருந்தான்.முகத்தை பார்த்தவுடனேயே 
தலைவர் சொன்னாராம்.நீர் அந்த நடவடிக்கையில 
வீரச்சாவடைந்த போராளியை நினைக்கிறீர்.
உண்மையிலேயே அப்படித்தான்.நானும் 
அந்த நடவடிக்கையிட்கு சிறு உதவி செய்திருந்தேன்.
எனக்குஅந்த வீரச்சாவு அடைந்த போராளி பற்றி 
சொல்லச்சொன்னாராம்.
மிகவும் சொகுசாக வாழ்ந்தபடியால்
இழப்புகளை தாங்கக் கூடிய மனம் அவனிடம் 
இருக்கவில்லை.
முள்ளிவாய்க்காலில் , அந்த இறுதி நாட்களில் 
களமுனையில் பகுதிப்பொறுப்பாளராய் இருந்தான்.
வைகாசி மாத முன் நாட்களில் நான் அவனை சந்தித்தேன்.
எவ்வளவு கஷ்டங்களுக்குள்ளும் அவனது குழந்தைதன 
முகம் அப்படியே இருந்தது.வைகாசி 15 இல் கள வீரச்சாவு 
அடைந்தான்.   
  அந்த தாயிற்கு மூத்த மகன் இறந்தது தெரியாது.
எப்படிச் சொல்லுறது என்று தெரியவில்லை.
சொல்ல பயமாய் இருக்கிறது .அவனது தந்தையிற்கு 
நடந்ததுபோல் ஏதும் நடந்திடுமோ? நான் வைகாசி 15 
இல் அந்த தாயுடன் கதைப்பேன்.மகனைப்பற்றி 
தெரியாது என்றே சொல்வேன்.போன வருசமும் 
இப்படித்தான்.
                         - நிரோன் -


Share/Save/Bookmark

ஞாயிறு, 6 மே, 2012

விடுதலைக்கு உண்மையாய் உழைத்தார்கள்

இலங்கையில் இனக்கலவரம் நடைபெறவில்லை.
ஒரு இனத்தை ஒரு இனம் படுகொலைதான் செய்தது.
அரசால் திட்டமிடப்பட்டு நாடாத்தப்பட்ட 1983ஆம் ஆண்டுஇனப்படுகொலையின் பின் உணர்வு உள்ள எல்லா தமிழ் இளைஞரும் ஏதோ ஒரு போராட்ட 
இயக்கத்துடன் இணைந்தார்கள்.அவனும் 1984இல்தனது எட்டாம் 
வகுப்பில் ஒரு இயக்கத்துடன் இணைந்துகொண்டான். அவனது இயக்கப்பெயர் துளசி . அவன் இந்தியாவில் இராணுவ பயிற்சி பெற்றான்.1987இல் அந்த இயக்கத்தை விடுதலைப்புலிகள் 
கலைக்க ஆணையிட அந்த இயக்கம் கலைக்கப்பட்டது.
அவன் வீடு வந்து சேர்ந்தான்.
விடுதலைப்புலிகள் அமைப்பில் ஆளணி பற்றாக்குறை 
அறிவிப்பு வர 1990 இல் மீண்டும் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் 
இணைய முயல ,அதற்கு முதலே அவனது ஒரே ஒரு 
தம்பி விடுதலை புலிகளில் இணைந்துவிட்டான்.வீட்டுப் 
பொறுப்பு அவன் மீது வீழ்ந்தது.வீட்டை சமநிலைப்படுத்த 
முயன்றான்.1995இல் இடப்பெயர்வர குடும்பத்துடன் வன்னிக்குச் சென்றான்.
அவனது தம்பி மாவீரன் ஆகியிருந்தான்.
வன்னியில் மக்களின் வருகையால் மனிதாபப் பணிகளின்
தேவை அத்தியாவசியமாக அவனும் அதில்ஒருவனாய் மிக 
முக்கிய பணி செய்தான். போராட்டத்தோடையே நிற்கோணும்,
அதற்கு எங்களால முயன்றதை செய்யோணும் என்பதில் மிக 
உறுதியாய் இருந்தான்.போராட்டத்தை/விடுதலையை 
உண்மையாய் நேசித்த போராளிக்கு அவன் முன்புஎந்த இயக்கத்தை 
சேர்ந்திருந்தாலும் மக்களின் விடுதலையே தாரக மந்திரம்.
தங்கள் மனநிலையை அவர்கள் வெளிப்படுத்துவதில்லை.         
அவன் வசதியான குடும்பத்தை சேர்ந்தவன் . வெளிநாடு
செல்வதாயின் அவன் சென்றிருக்கலாம்.அவன் அப்படி செய்யவில்லை.
வன்னியில் மனிதாபாப் பணி செய்து கொண்டிருந்த பெண் ஒருவரை 
விரும்பி திருமணம் செய்து கொண்டான்.
சமாதானகாலத்தில் சொந்த ஊரான யாழ்ப்பானத்திட்கு சென்று
போர் மேகம் சூழ மீண்டும் வன்னிக்கு வந்தான். 
இப்போது முக்கிய மனிதாபப்பணிக்கான பொறுப்பு.
அவனைவிட்டால் அந்தபணிக்கு பொருத்தமாய் வன்னியில் 
எவரும் இருக்கவில்லை.மிக வெற்றிகரமாய் அப்பணியை 
செய்தான். 
அவன்,அவனது மனைவி,அவனது ஒரே பிள்ளை
கொத்துக்குண்டால் காயமடைந்தார்கள்.ஆனாலும் 
கப்பல் மூலம் திருகோணமலைக்குச் செல்ல மறுத்துவிட்டான்.
இந்த மக்களை விட்டிட்டு நான் போக மாட்டன்.இந்த 
மக்களுக்கு நடக்கிறதே என் குடும்பத்திற்கும் 
நடக்கட்டும்.மீண்டும் இரட்டைவாய்க்காலில் இவன் துப்பாக்கி ரவைக் 
காயம் ஏற்று மயிரிழையில் தப்பினான்.முள்ளிவாய்க்காலில்   
பொஸ்பரஸ் குண்டால் எரிகாயத்திட்கு உள்ளானதுடன் இவன் 
குடும்பம் மயிரிழையில் உயிர் தப்ப இவனது அனைத்து 
சொத்துக்களும் எரிந்து போயிற்று.இறுதியில் முள்ளிவாய்க்காலில் 
இருந்து இராணுவ பகுதிக்குள் வந்த பின் இவனை பார்த்தேன்.
சலரோக நோயாளியான இவன் உருவமே மாறி இருந்தான்.
நேற்று அவனுடன் கதைத்தேன் அவர்கள் (விடுதலைப்புலிகள்)
விடுதலைக்கு உண்மையாய் உழைத்தார்கள் என்று சொன்னான்.
தனது பங்களிப்பு போதாது என்று சொன்னான் .

                                                                                        - நிரோன்- 


Share/Save/Bookmark

சனி, 5 மே, 2012

தாய் நிலத்தில் இப்போது என்ன நடக்கிறது

தாய் நிலத்தில் இப்போது என்ன நடக்கிறது.சிங்கள அரசு 
சிங்கள குடியேற்றத்தை முன்பைவிட வேகமாய் செய்கிறது.
குறிப்பாக முல்லை மாவட்டம் இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
முல்லை மாவட்டத்தில் வசிக்கும் முல்லை பாராளமன்ற 
உறுப்பினர் எவரும் இப்போது இல்லை.இது சிங்களத்திற்கு 
வசதியாய் அமைந்து விட்டது.அரசினதும்,ஆளுனரதும் ,
முஸ்லீம் அமைச்சர் ஒருவரினதும் எடுபிடிகளாய் சில 
அரச உத்தியோகத்தர்கள் அவர்களுக்கு துணை போகிறார்கள்.
இது மிகுந்த வேதனை தருகிறது.முல்லை கடலில் அதிக 
சிங்களர் மீன் பிடிக்கிறார்கள். புத்தர் சிலைகள் தமிழர் பகுதி எங்கும் முளைக்கின்றன.
சிங்கள அரசுடன் அபிவிருத்தி பேசும் தமிழ் ஒட்டுண்ணிகள் 
அதைப்பற்றி மூச்சு பேச்சில்லை.சொந்த நலனுக்காய் 
தமிழர் நில/இன சிதைப்பிட்கு துணை போகிறார்கள் .கலாச்சார சீரழிவுகள் நாளும் அதிகரித்துச்செல்கிறது.
கவனிப்பார் யாரும் இல்லை.தற்கொலைகளும்,கொலைகளும்,
கடத்தல்களும் ,காணாமல்போதல்களுக்கும் குறைவில்லை.
வேலியே பயிரை மேய்கையில் யார் தான் என்ன செய்யமுடியும்? 
விலைவாசிகளின் உயர்வுடன் சாதாரண மக்களே ஈடுகொடுக்க
முடியாமல் இருக்கையில் போரால் பாதிக்கப்பட்டவரால் 
என்ன செய்ய முடியும்?நில ஆக்கிரமிப்பில் இராணுவமும் 
அரச அரசியல் வாதிகளும் கொடிகட்டிப்பறக்கிறார்கள்.தமிழர்களின் காணிகள் சிங்கள முஸ்லீம் மக்களுக்கு 
விற்கப்படுகின்றன.தமிழர் பகுதிகளில் சிங்கள அரச 
ஊழியர்கள் கணிசமாய் நியமிக்கப்படுகிறார்கள்.
தமிழ் மக்கள் மனதில் என்றுமில்லாத பயமும்,விரக்தியும் இருக்கிறது.எமது அடையாளங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டு,
பழைய பல முதிசங்கள் சிங்கள தேசத்திற்கு எடுத்துச் 
செல்லப்படுகின்றன.கதைக்க யாரும் இல்லை.விடுதலைப்புலிகளோடு சேர்ந்திருந்துவிட்டு முள்ளிவாய்க்கால் வரை
நிற்காமல் இடையில் தம் சொந்த நலனுக்காய் தப்பியோடியவர்களில் சிலர் அரசுசார் நலன்பெற்று 
தம் குற்ற உணர்வையும் போக்க விடுதலைப்புலிகளை சாடி வாழ்கிறார்கள்.
தமிழர்களின் மனதில் தமிழ் தேசியம் நிறைந்திருக்கிறது.
இதை குலைக்க அரசும்,அரசுடன் இணைந்திருக்கும் தமிழ் 
முஸ்லீம் கட்சிகளும் அதித பிரயத்தனம் எடுக்கின்றன.
தமிழர் ஒன்றுபட்டு எம்மை தக்கவைக்க வேண்டிய நிலை 
என்றுமில்லாதவாறு இன்று இருக்கிறது.
   


 Share/Save/Bookmark