வெள்ளி, 11 மே, 2012

அந்த தாயிற்கு மூத்த மகன் இறந்தது தெரியாது.

அந்த அம்மாவிற்கு மூன்று ஆண்பிள்ளைகள் .
அந்த செழிப்பான செம்மண்ணில் அவர்களது 
வாழ்வு எவ்வளவு அழகாக இருந்தது.மூன்று 
பேருமே விளையாட்டில் வீரர்கள்.அவர்களது 
வீட்டில் கேடயங்களுக்கு குறைவிருக்காது.
மூத்தவன் மகாஜனா கல்லூரியில் கிரிக்கட்,
உதைபந்தாட்ட அணிகளில் இருந்தான்.உயரம் பாய்வதில் யாழ்மாவட்டத்தில் 
முதலாவதாய் வந்தான்.கொக்குவில் 
தொழில்நுட்பக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தான். 
   இரண்டாமவன் உயர்தரம் சித்தி அடைந்து இருந்தான் .
மூன்றாமவன் யாழ் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி 
இருந்தான்.தொண்ணூறுகளின் முன்கால் பகுதியில் 
மூவரும் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் 
இணைந்துகொண்டார்கள் .1995 ஆம் ஆண்டு இடப்பெயர்வில் 
இரண்டாம் மகன் வீரச்சாவாம் என்ற வதந்தியை 
கேட்டு தந்தை மாரடைப்பால் இறந்துபோனார்.
தந்தையின் இறுதிநிகழ்வு அவர் ஆசையாய் 
வளர்த்த பிள்ளைகள் இல்லாமல் நடந்து 
முடிந்தது.எனக்கு இப்பவும் ஞாபகம் இருக்கிறது.அவர் இடது 
கையால் சோறுகுழைத்து மூன்று பிள்ளைகளுக்கும் 
தீத்திவிடுவது. 
தாய் தலைவருக்கு ஒருமகனை வீட்டிற்கு விடுமாறு
கடிதமெழுதி ,இரண்டாவது மகன் வீடுவந்து சேர்ந்தான்.
மூன்றாவது மகன் ஓயாத அலைகள் இரண்டில் 
வீரச்சாவு எய்தினான்.என்னால் அந்த வீரச்சாவு 
நிகழ்விற்கு வேலைப்பளு காரணமாய் போக 
முடியவில்லை.சில நாட்கள் கழித்துப் போனேன்.
தாய் கத்திக்குளறியது இப்போதும் என் ஞாபகத்தில் 
உறைந்துஇருக்கிறது. 
மூத்த மகன் பல நடவடிக்கைகளை
வெற்றிகரமாய்ச் செய்தான்.இடைநிலை 
பொறுப்பாளராய் வளர்ந்திருந்தான்.2008 இலும் 
ஒரு நடவடிக்கையை வெற்றிகரமாய் செய்திருந்தான்.
துறைப்பொருப்பாளரூடாக தலைவர் அவர்கள் அவனை 
அழைத்திருந்தார்.தலைவர் அவர்கள் கூப்பிடுகிறார் 
என்றவுடன் போட்டிருந்த உடுப்போடேயே 
போயிருந்தான்.முகத்தை பார்த்தவுடனேயே 
தலைவர் சொன்னாராம்.நீர் அந்த நடவடிக்கையில 
வீரச்சாவடைந்த போராளியை நினைக்கிறீர்.
உண்மையிலேயே அப்படித்தான்.நானும் 
அந்த நடவடிக்கையிட்கு சிறு உதவி செய்திருந்தேன்.
எனக்குஅந்த வீரச்சாவு அடைந்த போராளி பற்றி 
சொல்லச்சொன்னாராம்.
மிகவும் சொகுசாக வாழ்ந்தபடியால்
இழப்புகளை தாங்கக் கூடிய மனம் அவனிடம் 
இருக்கவில்லை.
முள்ளிவாய்க்காலில் , அந்த இறுதி நாட்களில் 
களமுனையில் பகுதிப்பொறுப்பாளராய் இருந்தான்.
வைகாசி மாத முன் நாட்களில் நான் அவனை சந்தித்தேன்.
எவ்வளவு கஷ்டங்களுக்குள்ளும் அவனது குழந்தைதன 
முகம் அப்படியே இருந்தது.வைகாசி 15 இல் கள வீரச்சாவு 
அடைந்தான்.   
  அந்த தாயிற்கு மூத்த மகன் இறந்தது தெரியாது.
எப்படிச் சொல்லுறது என்று தெரியவில்லை.
சொல்ல பயமாய் இருக்கிறது .அவனது தந்தையிற்கு 
நடந்ததுபோல் ஏதும் நடந்திடுமோ? நான் வைகாசி 15 
இல் அந்த தாயுடன் கதைப்பேன்.மகனைப்பற்றி 
தெரியாது என்றே சொல்வேன்.போன வருசமும் 
இப்படித்தான்.
                         - நிரோன் -


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக