புதன், 29 ஏப்ரல், 2015

மரணத்திற்கு முந்திய சித்திரவதைகள்



               தவறுகள் தவறுகள்தான்
வாதாடவரவில்லை
தண்டனை
ஒருவரை திருத்தத்தான்
திருந்தாதவனைக்கூட
கொல்வது நியாயமல்ல
கொலைக்குகூட
கொலை பரிகாரமல்ல
தவறு செய்யாதவன் உலகிலில்லை
மரணம்
ஒருமுறைவரும்
மரணத்திற்கு திகதி குறித்து
சவப்பெட்டியையும் காட்டி
மரணத்திற்கு முந்திய சித்திரவதைகள்
மரணத்தைவிட கொடியது
தாய் ,சக உறவுகளின்
எஞ்சியவாழ்வு
நினைவிற்கே கடினமானது    


Share/Save/Bookmark

ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

தந்தை செல்வா நினைவுதினம்

தந்தை செல்வா
தமிழர் உரிமை பெற
அகிம்சைவழியில் முயன்று
ஒப்பந்தங்கள் வரை சென்றும்
சிங்கள ஏகாதிபத்தியம்
கிழித்தது
ஒப்பந்தங்களை மட்டுமல்ல
தமிழரின் நம்பிக்கையும்தான்    

தமிழீழமே தீர்வென
வட்டுக்கோட்டையில்  வரைபுகீறி 
1977 இல்
தாயகம் முழுமனதுடன் ஏற்றிட
ஜனநாயக வெற்றி தோற்றிட
"கடவுள்தான் தமிழரை காக்கணும் "
என்று நீங்கள் சொல்லிட
வேறு வழியற்று ஆயுதபோராட்டம்
இளைஞர்களில் தீப்பற்றிக்கொண்டது

நேற்று
உங்களின் நினைவுதினம்
செம்மணி படுகொலை நாயகி
பிரதம உரை
மனம் ஏற்கவில்லை

சிங்கள அரசு புரிந்தது    
"இனப்படுகொலை" என
வட தமிழ் அரசு
முழுமனதாய் அறைகூவ
குறைப்பிரசவமாகிறது  
மீண்டும் நம்பிக்கை

தமிழரின் வாக்குகள்
கட்சிக்கானது அல்ல
ஒற்றுமைக்கானது/
எதிரிக்கு எதிரானது
வாக்குகள்
வெறும் கையடையாலமல்ல
இதயகாயத்தின் அடையாளம்

  


Share/Save/Bookmark

வெள்ளி, 24 ஏப்ரல், 2015

அன்றையநாள் மகிழ்வாயிற்று.

1991 ஆனையிறவின் மீதான ஆகாய கடல்வழித்தாக்குதல்  விடுதலைப்புலிகளுக்கும் முதல் முதலில் பாரிய காயங்களும் இறப்புகளும் ஏற்படுத்திய தாக்குதல். நான் களமருத்துவராய்  செயற்பட்டுக்கொண்டிருந்தேன் . களமுனையில் இறந்தவர்களை அரைப்பெட்டி அடித்த ரைக்டரில் கொண்டு வருவார்கள்.அவற்றையும் இறப்பை உறுதிப்படுத்திவிட்டு பின்னுக்கு அனுப்பவேண்டும்.ஒவ்வொருமுகங்களும் தெரிந்த முகம்போல இருக்கும்.இளவயது மரணங்களை பார்த்து உறுதிசெய்வது மனதுக்கு மிகப்பாரமானது.அன்றும் ஒன்றுக்கு மேல் ஒன்று அடுக்கப்பட்டு உடல்கள் கொண்டுவரப்பட்டன.பரிசோதித்து பார்க்கும் போது ஒரு உடலில் இதய துடிப்பு மெதுவாய்க்கேட்டது . விரைந்து செயற்பட்டோம்.கண் விழித்தவனை உரியமுறையில் மேலதிக சிகிச்சைக்கு  பின் அனுப்பினோம்.அன்றையநாள் மகிழ்வாயிற்று.  


Share/Save/Bookmark

செட்டிக்குள காலத்தில் மரணித்துப்போனார்கள்.

2009 இல் முள்ளிவாய்க்காலில் இருந்து வந்து ஒரு நாள் செட்டிகுளம் zone -4  முகாமில் அடைக்கப்பட்டிருந்தேன். ஒரு பின்னேரப்பொழுதில்  திடீரென ஒருபகுதியில் இருந்து அழுகையொலி கிளம்பிற்று. என்ன ஏதோ என்று தெரியாமல் சோர்ந்திருந்தபோது யாரோ சொன்னார்கள் " ஒரு சிறுமி மலக்குழியுக்குள் வீழ்ந்துவிட்டதாய்" ஓடினேன் ஏதாவது முதலுதவி செய்யலாம் என்று. அவர்கள் பிள்ளையை  zone -4  இல் உள்ள மருத்துவநிலையத்திற்கு கொண்டுசென்று கொண்டிருந்தார்கள். சிறிது நேரத்திற்குப்பின் மீண்டும் அழுகையொலி சிறுமி இறந்துவிட்டாளாம்.ஒவ்வொரு உயிர்களையும் காப்பாற்ற எவ்வளவு பாடுபட்டிருப்போம். முள்ளிவாய்க்கால் இறுதிவரை எமது செயற்பாடுகளால் தொற்றுநோய் தடுப்பில் வென்ற நாம். செட்டிக்குள அரச முகாம்களில் சுமார் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட மக்களை தொற்றுநோய்களுக்கு இழந்துவிட்டோம். என்னால் நீண்டகாலம் பராமரிக்கப்பட்ட பல கிளினிக் நோயாளர்களும் செட்டிக்குள காலத்தில் மரணித்துப்போனார்கள்.    


Share/Save/Bookmark

புதன், 22 ஏப்ரல், 2015

நண்பன் சிவமனோகரன்

நேற்று நண்பன் சிவமனோகரனின் ஆறாவது வருட நினைவுதினம். அந்தநாள்(21/04/2009) காலை வலைஞர்மடத்தில் எமது சத்திரசிகிச்சைகூடத்திலிருந்து   சுமார் ஐம்பது மீற்றர் தூரத்தில் கொத்துக்குண்டில் எங்கள் சிவா மரணமடைந்தான். கொத்துக்குண்டில் ஒன்று சரியாக எமது கூரையின் சிலாகைக்கிடையில் வந்து சிக்கி நின்றது.அதன் நேர் கீழே நான் ,வாமன்,சுதர்சன் உள்ளீடாய் எம் சகாக்கள் நின்றோம். ஒரு மருத்துவர் காயமடைந்து இருக்கிறார் என்று யாரோ வந்து சொன்னார்கள்.நான் ஓடிச்சென்று என் இருபத்திஐந்து வருட நண்பனின் இறப்பைத்தான் உறுதிசெய்தேன்.    


Share/Save/Bookmark

செவ்வாய், 21 ஏப்ரல், 2015

என்சகாக்களை பாசத்தோடு நினைந்துகொள்கிறேன்

1990 ஆரம்பங்களில் சத்திரசிகிச்சைகள் யாவும் யாழ் பொது மருத்துவமனைகளில்த்தான் செய்யப்பட்டது. பொது மருத்துவமனை நீண்ட அனுபவங்களுடன் இயங்கிக்கொண்டிருந்தது. போராளிகள் எண்ணிக்கை எப்போதுமே போதாமையோடுதான் இருக்கும். காயமடையும் போராளிகளை அநியாயமாய் இழந்துவிடக்கூடாது.எனவே களமருத்துவம் முக்கியத்துவம் ஆகிற்று.களமருத்துவபணி சவால்கள் நிறைந்தது. பணியில் மருத்துவப்போராளிகளை இழந்த துயருடனும் வெற்றி பெற்றோம் என்றுதான் நினைக்கிறேன். 
1995 இல் வன்னிக்கு இடம்பெயரும்போது சில பெரியவர்கள் சொன்னார்கள். இனி புலிகளால் பெரும்தாக்குதல்கள் செய்யமுடியாது.காயமடைபவர்களை என்ன செய்வார்கள்?.ஆனால் புலிகளின் ஒவ்வொரு மூத்தமருத்துவருக்கும் ஏதோ ஒரு எண்ணம் இருந்திருக்கும். எனக்கு இருபத்திநான்கு மணி நேரத்திற்குள் ஆயிரம் காயமடைபவர்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய சத்திரசிகிச்சை அணியை உருவாக்கவேண்டும் என்ற அவாவே இருந்தது.அதில் நாங்கள் வெற்றிபெற்றோம் என்றே நினைக்கிறேன். ஸ்ரீலங்கா அரசாங்கமோ புலிகள் காயமடைபவர்களை சிகிச்சை அளிக்கமுடியாமல் சுட்டுக்கொல்கிறார்கள் என பிரச்சாரம் செய்தது.
2006 ஆம் ஆண்டு போர் மேகம் வன்னியை சூழ்ந்துகொண்டது. மூன்று பிரதான மருத்துவதளங்களை அமைக்க அரசியல்துறை பொறுப்பாளர் விரும்பினார். புதுக்குடியிருப்பு,கிளிநொச்சி,மன்னார் இல் அமையவேண்டும். புதுக்குடியிருப்பு,கிளிநொச்சியை இரு மூத்தமருத்துவர்கள் பொறுப்பெடுத்துக்கொண்டார்கள். அவர்களது சத்திரசிகிச்சைகூடங்கள் அவ்விடங்களில் ஏற்கனவே இயங்கிக்கொண்டும் இருந்தன.
நான் மன்னார் பகுதியை பொறுப்பெடுத்தேன். சமாதானகாலத்தின்பின் எனது casualty theater  யை மீண்டும் ஆரம்பத்தில் இருந்து உருவாக்கவேண்டியிருந்தது. இம்முறை குறைந்தது மூன்று casualty  operation theater களை இயக்குவது எனமுடிவுசெய்தேன். கிளிநொச்சி பொன்னம்பல மருத்துவமனையின் theater யை இயன்றவரை casualty cases எடுக்காமால் தவிர்த்தேன்.வெற்றி தோல்விகளுக்கு அப்பால் இறுதிவரை எமது பணியில் மூச்சோடு இயங்கினோம்.பணியில் தோள் தந்து உயிர் துறந்த என்சகாக்களோடு, பணிக்கு உயிர்தந்த  உலகெலாம் பரந்துவாழும் 

என்சகாக்களையும் பாசத்தோடு நினைந்துகொள்கிறேன்.  


Share/Save/Bookmark

புதன், 15 ஏப்ரல், 2015

சில இரகசியங்கள் இரகசியங்களாகவே போய்விடுகின்றன.

இயக்க வாழ்க்கையில இரகசியம் தான் அநேகமானவை. 2007 ஆம் ஆண்டு ஒரு போராளி இராணுவக்கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள்  காயமடைந்துவிட்டான்.அவனை எங்கட கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்குள் கொண்டுவரமுடியாது. அவனை ஒரு மருத்துவர் இரகசிய இடத்தில் வைத்து சிகிச்சை அளிக்கிறார். அந்த மருத்துவருக்கு சிகிச்சை சம்மந்தமான ஆலோசனை வழங்கவேண்டும். அந்த போராளிக்குரிய பொறுப்பாளர் என்னை அணுகினார். நான் அவர்களுடைய முகாமிற்கு சென்று தொலைபேசிக்கூடாக மருத்துவருடன் கதைத்தேன். மருத்துவர் சொன்னார் ஆள் தப்பாது என்று. காயங்கள் பற்றிய விபரத்தை அறிந்து சிகிச்சைக்குரிய ஆலோசனைகளை வழங்கினேன்.யார் யாருடன் கதைக்கிறோம் என்பது தெரியாது. இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருதடவை இப்படியே போயிற்று.ஆறு கிழமையில் அவன் முழுமையாக குணமடைந்தான். குணமடைந்ததை உறுதிப்படுத்த அந்த போராளியுடன் கதைக்கவேண்டி வந்தது. அவன் கதைத்ததமிழ் நாங்கள் வழமையாக கதைக்கும் தமிழ் இல்லை. அவனது பேச்சில் போராளிகளுக்குரிய பாசம் இருந்தது. என்றோ ஒரு நாள் உங்களை கட்டாயம் சந்திக்கவேண்டும் என்று சொன்னான் . சந்திப்பேன் என்றான். சுமார் ஆறு மாதத்திற்குப்பின் வேறு விடயமாய் பொறுப்பாளர் சந்தித்தார். அந்த போராளி முக்கியமானவன் என்றும் சில கிழமைகளுக்குமுன் சரித்திரமாகிட்டான் என்றார். கவலைகள் எப்போதும் எங்களுடனேயே பயணிக்கும். அப்பவும் அந்த போராளியின் பெயரை நான் கேட்கவில்லை.சில இரகசியங்கள் இரகசியங்களாகவே போய்விடுகின்றன.     


Share/Save/Bookmark

செவ்வாய், 7 ஏப்ரல், 2015

கல்லறை இல்லாதபூமியில்

தாயே!
உன் மரண அறிவித்தல் பார்த்தேன்
உளம் உருகி கருகிப்போனேன்

அம்மாவுக்கு மூன்றுபிள்ளைகள்
கடைக்குட்டி " மாவீரன்
ஒரு தடவை காப்பாற்றினேன்
பின் வித்துடலாய் வந்தான்     
பத்துவருடங்களுக்கு முன்
தாயை
பத்துவருடங்களின் பின்
யாழில் பார்த்தேன்
மீனுக்கு முள்ளெடுத்து    
பழஞ்சோறு தந்தாள்
மூத்தபிள்ளைகளுக்காய்
மட்டுமல்ல
சின்னவனின் கல்லறைக்கும்
விளக்கேற்ற வாழ்வதைச்சொன்னாள்    
சின்னவனின் நினைவுகளில்
பொக்குவாய் நிறைந்து
முழு நிலாவாய் தெரிந்தாள்

தாயின் மரண அறிவித்தலில்
சின்னவனின் பெயரில்லை
பயம்
வாழ்வின் பிடிப்பையும் தின்னுமா
கல்லறை இல்லாதபூமியில்
அமாவாசை இருட்டு  

    

  


Share/Save/Bookmark

திங்கள், 6 ஏப்ரல், 2015

1999 ஆம் ஆண்டு கிளிநொச்சி

1999 ஆம் ஆண்டு கிளிநொச்சி சுகாதார அதிகாரி பணிமனையால்  கிளிநொச்சி சுகாதார அதிகாரி பணிமனை பிரிவிற்குள் பல ஆய்வுகளை செய்தோம். அதன்படி குழந்தைகளின் பிறப்புநிறை இரண்டுகிலோவைவிட குறைவாக இருந்தது ( இலங்கையின் சராசரி இரண்டரை கிலோ) கர்ப்பவதியின் நிறை அதிகரிப்பு 5.4 கிலோவாக (இலங்கையின் சராசரி 7.5 கிலோ) இருந்தது.சுமார் ஆயிரம் மாணவர்கள் பாடசாலையை இடைநிறுத்தியிருந்தார்கள். பாடாசாலைக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொடுத்தோம் அப்படியிருந்தும் பெரும்பாலான மாணவர்களை பாடசாலைக்கு உள்ளீர்க்கமுடியவில்லை. உண்மையிலேயே உணவுதான் அவர்களின் பிரச்சனையாக இருந்தது. போசாக்கு சம்மந்தமான பல வேலைத்திட்டங்களை ஆரம்பித்தோம்.போசாக்கு கல்வியூட்டலை ஆசிரியர் , மாணவர், வீடுகள்வரை முழுமைப்படுத்தினோம். பல கண்காட்சிகளை நடாத்தினோம்.சிறுவர் பட்டினிச்சாவு தவிர்ப்பு திட்டத்தை தொடர்ந்து உலக உணவுத்திட்டத்தின் (WFP )    need  assessment இற்கான கிளி முல்லை மாவட்டத்திற்கான consultant ஆக WFP ஆல் நியமிக்கப்பட்டேன். புலிகளின் கட்டுப்பாட்டில் கிளி முல்லை மாவட்டங்களுக்கு அப்பால் மன்னார்,வவுனியா,யாழ்ப்பாணத்தின் சிறுபகுதிகளும் இருந்தது. நான் முழுமையான விபரத்தையே அறிக்கையாக கொடுத்தேன்.WFP ஏற்றுக்கொண்டு என் அறிக்கையில் உள்ள ஆலோசனைகளுக்கு ஏற்ப தங்களது உணவு திட்டத்தை எங்கள் பிரதேசத்தினுள்ளும் அமுல்ப்படுத்தினார்கள். இச்செயற்பாடும் எனக்கு எமது கட்டுப்பாட்டு பிரதேசத்தில் தொற்று நோய்களைகட்டுப்படுத்துவதில் உதவிற்று. 2005 ஆம் ஆண்டுக்காலத்தில் பிறப்புநிறை சராசரி 2.9 கிலோவாக இருந்தது ( இலங்கையின் சராசரி இரண்டரை கிலோ) கர்ப்பவதியின் சராசரி நிறை அதிகரிப்பு 8.7 கிலோவாக (இலங்கையின் சராசரி 7.5 கிலோ) இருந்தது.  

    

  


Share/Save/Bookmark

ஞாயிறு, 5 ஏப்ரல், 2015

ஆனந்தபுரத்தில் உக்கிரசமர் நடந்துகொண்டிருந்தது

ஆனந்தபுரத்தில் உக்கிரசமர் நடந்துகொண்டிருந்தது. ஆனந்தபுரத்தினுள் சத்திரசிகிச்சைகூடம் அமைக்கமுடியுமா? என என்னிடம் வினவப்பட்டது.ஏற்கனவே எமது சத்திரசிகிச்சைகூடங்கள் மாத்தளன் ( சத்திரசிகிச்சைகூடம்- 3), முள்ளிவாய்க்காலில் (   சத்திரசிகிச்சைகூடம்- 1)
அதிவினைத்திறனுடன் இயங்கிக்கொண்டிருந்தன.   சத்திரசிகிச்சைகூடம்- 2 , ஏற்கனவே மக்களின் நலன்கருதி  முள்ளிவாய்க்கால் மருத்துவமனையுடன் இணைத்திருந்தேன். அதன் பொறுப்பு மருத்துவர் கமலினி அவர்களும் கடமையின்போதே செல்வீச்சால் எமைவிட்டு பிரிந்திருந்தார். மற்றைய  சத்திரசிகிச்சை கூடங்களின் வினைத்திறனில் எப்பாதிப்புகளும் ஏற்படாமல் நான் சிறு சத்திரசிகிச்சை அணியை ஒன்றாக்கி(தொற்றுநோய் தடுப்பு பொறுப்பாளரை மட்டும் விட்டு விட்டு) போவதற்கான ஏற்பாடுகளை செய்து காத்திருந்தோம். சுதர்சன்தான் அணிக்கு தேவையான அடிப்படை பொருட்களையும் ஒன்றாக்கினான்.  சத்தியாவும்,சில மருத்துவ போராளிகளும் ஆனந்தபுரத்தினுள் உச்சகடமையில் இருந்தார்கள்.அவர்களையும் என்னோடு இணைக்கும் எண்ணம் எனக்கு பலத்தைதந்தது.  இரவு இரண்டு மணிக்கு போகத்தேவையில்லை என்றபதில் வந்தடைந்தது. 

    

  


Share/Save/Bookmark

வியாழன், 2 ஏப்ரல், 2015

எங்கே எம் பிள்ளை?

இராணுவம் முன்னேற ஒவ்வொரு இடங்களுமாய் விடுபட்டுக்கொண்டு இருக்கும். இறுதியில் இடம்மாறும் சத்திரசிகிச்சைகூடமாய் எங்கள்   சத்திரசிகிச்சைகூடம் இருக்கும். இயன்றவரை எல்லா பொருட்களையும் அனுப்பிவிட்டு, சரிபார்த்துவிட்டு போகும் இறுதிக்கணங்கள் (மன்னாரிலிருந்து). மார்கழி 31
2008  மதியநேரம் , நாங்கள் காக்கா கடைச்சந்தியில் நின்றோம். நான் சந்தியில் நின்று A-9 பாதையை பார்த்தேன். பாதை நீட்டுக்கு நாய்கள் சிலதை தவிர எவருமே இல்லை. மனம் கனத்தது. சுதர்சன் இராணுவம் உள்ளுக்கு வந்திருக்கும்,போவோம் போவோம் என கரைந்துகொண்டிருந்தான்( முள்ளிவாய்க்கால் வரை) . அவனது திருமணத்தில் அவனது தந்தையும் தாயுமாய் நானும் மனைவியுமே இருந்து நடாத்தினோம். எங்கே எம் பிள்ளை?  


Share/Save/Bookmark
Bookmark and Share