வெள்ளி, 19 செப்டம்பர், 2014

இவர்கள் எங்கள் மனங்களில் நிலைத்திருப்பார்கள்

கந்தசாமி ஐயா , ஒரு மூத்த பொது சுகாதார பரிசோதகர்.முன்னாள் கிளி முல்லை மாவட்டங்களின் பதில் மலேரியா தடை பொறுப்பதிகாரி, பதில் கிளிநொச்சி சுகாதரவைத்திய அதிகாரி. அன்பு ,நேர்மை மிக்க உழைப்பாளி.யாழ் அளவெட்டியை பூர்வீகமாய் கொண்டவர்.தொண்ணூறுகளில் மக்கள் யாழில் இருந்து பெருந்தொகையில் வன்னிக்கு  இடம் பெயர்ந்தபோது தமது ஊழியர்களுடன்  ஓய்வின்றி உழைத்த பெருமகன்.இக்காலத்தில் மலேரியா பெரும் பூதமாய் வன்னியை குத்தகைக்கு எடுத்திருந்தது. ஈவு இரக்கமின்றி பல உயிர்களை காவு கொண்டது.  இலங்கையின் மொத்த மலேரியா நோயாளிகளில் எழுபது வீதமான மலேரியா நோயாளிகள் வன்னியில் இருந்தனர்.மீண்டும் மீண்டும் இடப்பெயர்வுகள் அதிக துன்பங்களை தந்த நேரத்தில் அவரது கடமையை நான் பொறுப்பேற்றுக்கொண்டேன்.
எப்போதும் பொது நலனோடும் அதீத சமய நம்பிக்கைகளோடும் வாழ்ந்த கந்தசாமி ஐயா  கிளிநொச்சி வன்னேரிக்குளம் யோகர் சுவாமிகள் திருவடி நிலைய முதியோர் இல்லத்தை நடுநாயகமாய் நின்று வளர்த்தெடுத்தார். முதியோர் இல்லத்தோடு தென்னந்தோட்டத்தையும்  உருவாக்கினார். இல்லம் தனது தேவைகளை யாரையும் நம்பியிருக்காமல் தானே பூர்த்தி செய்யவேண்டும் என விரும்பினார்.   தள்ளாத வயதினிலும் அவரது உழைப்பும் கூர்மையும் குறைந்திருந்ததாய் நான் உணரவில்லை. எங்கள் அன்பான ஐயா விபத்தில் கால் முறிந்து பின் இறந்து போனார். முதியோர் இல்லத்தில் அவரது இறுதி நிகழ்வு நடை பெற்றது.இடையில் அவரது உடலை நான் பொறுப்பேற்று,எனது எல்லா வெளிக்கள ஊழியர்களையும் அழைத்து எமது அலுவலகத்தில் ஒரு அஞ்சலி நிகழ்வை நடாத்தினேன்.

காலம் வேகமாய் ஓடிவிடும் எனினும் இவர்கள் எங்கள் மனங்களில் நிலைத்திருப்பார்கள்   


Share/Save/Bookmark

திங்கள், 15 செப்டம்பர், 2014

மருத்துவ பெருந்தகை

மருத்துவ சேவை எப்போதும் இரு பிரிவுகளுக்கூடாக வழங்கப்படும்.1, Curative sector     2,   Preventive sector.  

வன்னியின் போர்ச்சூழலில் Curative sector இல் தனியார் மருத்துவமனையாக இருந்தபோதும் டாக்டர் பொன்னம்பலம் ஞாபகார்த்த மருத்துவமனைகளின் பங்களிப்பு குறிப்பிடக்கூடியது. பொன்னம்பலம் மருத்துமனை ஒலுமடுவில் ஆரம்பித்து பின் புதுக்குடியிருப்பு,கிளிநொச்சியில் இயங்கிற்று. இந்த பொன்னம்பலம் மருத்துமனையின் சேவையின் முக்கிய கர்த்தாவாக என்றும் அன்புக்குரிய மருத்துவ பெருந்தகை வைத்தியகலாநிதி கெங்காதரன் ஐயா அவர்கள் இருந்தார்கள்.ஊதியம் பெறாமல் உழைத்தார்கள்.சில ஆயிரத்திற்கு மேற்பட்ட சத்திரசிகிச்சைகளை அவர் இந்த மருத்துவமனைகளில் செய்திருக்கிறார்.   எளிமையும் வேகமும் எப்போதும் அவரிடம் குடியிருக்கும்.புல்லாங்குழல் வாசிப்பதிலும் சளைத்தவர் அல்ல.சில பொது நிகழ்ச்சிகளையும் அக்காலத்தில் நடாத்தி இருந்தார்.    ஒரு குடும்பத்தின் மூன்று  பரம்பரைக்கு பிரசவ மருத்துவராய் இருந்திருக்கிறார்.போர்ச்சூழலில் இவரது மக்களுக்கான மருத்துவப்பணி மிகவும் பெறுமதியானது .எங்கிருந்தாலும் வாழ்க.




Share/Save/Bookmark

செவ்வாய், 9 செப்டம்பர், 2014

தாய் இரந்து கேட்கிறாள்

தாய் தேடுகிறாள் பிள்ளையை
நினைவிற்கு
படங்களோ,கல்லறையோ இல்லை
வாழ்ந்த வீடும்
படித்த பள்ளியும் பாதுகாப்புவலயத்தில்
சுவடுகளையாவது யாரும்
பார்த்தீர்களா? தாய் இரந்து கேட்கிறாள்



Share/Save/Bookmark

செவ்வாய், 2 செப்டம்பர், 2014

பிரசவிக்கமுடியா உண்மைகள்

கண்ணீர்ப்புகையால்  
கலைந்துபோகும் புனைவுகள் அல்ல
கண்ணீராய் வடிகின்ற நினைவுகள்
மடிக்கனத்தோடு இறந்தன
பிரசவிக்கமுடியா உண்மைகள்
தொண்டைமுள்ளோடு
எஞ்சிய வாழ்வை தின்று தவிக்கிறான்
கரும்புலிகளின் மருத்துவன்
வழுக்(கி)கை வீழ்ந்தவனின்
இரண்டாவது வாழ்க்கை
இரத்தத்தில் மீன்பிடிக்கும்
இதயமிலா இயந்திர சக்கை


Share/Save/Bookmark
Bookmark and Share