வியாழன், 30 ஜூலை, 2015

சதா சகாக்களின் நினைவில்--

விடுதலை இயக்கமும்
ஒரு குடும்பம்தான்
இரண்டு/மூன்று தலைமுறைகள்
ஒன்றாய் வாழ்ந்தன
கவலைகள் இருந்தன
பிணக்குகள் இருந்தன
இருந்தும்
மகிழ்வுக்கு எல்லை இல்லை
சதா சா விழுங்கிய போதும்
மக்கள் நினைவில் வாழ்வு கரைந்திற்று
பிறந்த போது
பல உறவுகள் இருந்தாலும்
இயக்க குடும்பமே
உறவின் மேலாயிற்று    
உலக சூழ்ச்சியால்
குடும்பகூடு எரிந்தாலும்
எஞ்சியோர்
அகிலமெங்கும் சிதறினர்
அநாதைகள்  ஆகினர்
கல்லில் நாருரித்து  
வாழ்வை மீள இழுத்தாலும்
ஒட்டவில்லை பூமியில்
சதா சகாக்களின் நினைவில்
பாரமாகிறது மனசு

நகரமுடியாமல்


Share/Save/Bookmark

செவ்வாய், 21 ஜூலை, 2015

எத்தனை காலம் பொய் வாழும்?

எனது
தாயை தந்தையை பார்த்து
பல ஆண்டுகள் கடந்துவிட்டன
தனித்து,தள்ளாத வயதில்
படலையை பார்த்து
எத்தனை காலம் வாழ்வர்?
வேளைக்கு உணவு ?
நோயிற்கு மருந்து?
விடியாத வீட்டில் வாழ்வு?
என் மனக்கண்ணுக்கு தெரிகிறது
எப்படிச்சொல்வது ?
நான் வரமாட்டேன் என்று
சொல்கிறேன் பொய்
"விரைவில் வருவேன் "
உயிரை கையில் பிடித்து காத்திருப்பு
எத்தனை காலம் பொய் வாழும்?


Share/Save/Bookmark

திங்கள், 20 ஜூலை, 2015

போராளி

எனக்கு
இனம்,மதம்,மொழி
பிரிவு இல்லை
மனிதரில் வேற்றுமை இல்லை
மனித சமத்துவமே எல்லை
எல்லையே என் காலை மாலை இரவு
உயிர் காத்தல் தொழில்
அன்பு : நான்வாழும் வெளி
என் அடையாளம்: போராளி      


Share/Save/Bookmark

வெள்ளி, 17 ஜூலை, 2015

என் இனத்திற்கு படிப்பினையாகட்டும்


மண்டேலா பெரும்பான்மை
ஈழத்தமிழினம் சிறுபான்மை
பெரும்பான்மை  பெரும்பான்மைதான் 
சிறுபான்மை இனத்தவர் கூட
காவடி தூக்கினர் பெரும்பான்மையினருக்காய்
படித்தவர் பலர் ஆதாயம் பார்த்தே
ஆதரவு வழங்கினர்  
இதுதான்
எங்கள் மண்ணிலும் நடந்தது நடக்கிறது
யார் மீதும் குற்றமில்லை
எல்லாம் வியாபாரம்தான்

சிறுபான்மை யினருக்கு
துணையாய் கூட நாடில்லை
முதுகில் குத்த நாடு இருந்தது
பெரும்பான்மையிற்கு  நாடும்
துணையாய் நாடுகளும் இருந்தன 
சிறுபான்மையினரோடு சேர்வதால்
ஆதாயம் இல்லை - அதனால்
சிறுபான்மையினரிலும் சிறுபான்மையே
இனத்திற்காய் பளு தூக்கிற்று
தோல்வியிலும்
எழமுடியாமல் சருகாயிற்று
எல்லாம் யதார்த்தம்தான் - இது
என் இனத்திற்கு படிப்பினையாகட்டும்



Share/Save/Bookmark

வியாழன், 16 ஜூலை, 2015

என் பணி செய்தேன்


எமக்கென்று ஒரு நாடு இருந்தது
பிச்சைக்காரர் அற்ற நாடு அது
எங்களின் உழைப்பில் ஒளிர்ந்த நாடு அது 
எண்களில் நாம் சிறியோர்தான் - இருந்தும்
உழைப்பில் உயர்ந்தோர் ஈழ வரலாற்றில் 
யாரின் கண்பட்டதோ
எதிரியோடு உலக கயவர் எல்லாம்
படை ஏவினர் எம்மீது
குழந்தை குஞ்சுகளையும் எம்முன் கொன்று
எம் உளம் சிதைத்தனர்

நாடு இழந்தேன்  ஏதிலி ஆனேன்
அந்நியமண்ணில் நாயாய்த்திரிந்தேன்  
அகதியானபோதும் சாட்சியானேன்
என்ன ஆச்சரியம்
பெரிய இடத்தவர் எல்லாம்
ஒரு அகதியை சந்தித்து போனார்கள்
இரவுகளில் நித்திரை இல்லை
நிம்மதி இல்லை
ஒன்றரைவருடம் செக்கு இழுத்தேன்
என் இனமே!
என்னை உனக்கு தெரியவேண்டாம்
என் பணி செய்தேன்
எனக்கு அது போதும்       



Share/Save/Bookmark

செவ்வாய், 14 ஜூலை, 2015

"இனப்படுகொலை "

"இனப்படுகொலை "
ஜனநாயக மொழியிலும் சொல்லப்பட்டாயிற்று
உலகம் எதிர்பார்ப்பது என்ன?
வேறு என்ன மொழியில் சொல்லவேண்டியிருக்கிறது ?
நல்லிணக்கமா? அது என்ன?
செத்தவீட்டில் கல்யாணமா?

கலாச்சாரம் அமிலமாக்கப்படுகிறது
நிலம்,கடல் திட்டமிட்டு அபகரிக்கப்படுகிறது
தொழில் தங்கு தொழிலாகிறது
சிங்களக்குடியேற்றம் வேகமாகிறது
தலையிருக்க உடலெங்கும் ஓட்டைகள்
இராணுவமும் புலனாய்வும் வாழ்வை நெரிக்கிறது
கறையான் நிரம்பிய புத்தகமாய்க்கிடக்கிறது  தேசம்
நல்லிணக்கமா? அது என்ன?
சரணடைந்தவர்  எங்கே?
செவ்வாய்க்கிரகத்திற்காய் போனார்கள்

எந்த முகத்துடன் நல்லிணக்கம்?  

பிள்ளை துயின்ற இல்லத்தை
கிளறிய சிங்கமனிதனுடன்
தாய் கைகுலுக்குவாளா?
விடுதலைக்கான ஆத்மாக்கள்
தாம் நேசித்த உயிர்களுக்கு அருகிலே
சதா விழித்திருக்கும்
எந்தவித எதிர்பார்ப்புமின்றி
நல்லிணக்கமா? அது என்ன?


Share/Save/Bookmark

சனி, 11 ஜூலை, 2015

அனைத்து உணவகங்கள்,வெதுப்பகங்களில் கடமை செய்யும் ஊழியர்களுக்கான மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு ஊழியர்களுக்கான அடையாள அட்டைகள் கிளி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையால் முதல் முதலாக இலங்கையில் வழங்கப்பட்டன ( 2000ஆம் ஆண்டுக்காலப்பகுதியில்),அனைத்து ஊழியர்களின் தனிநபர் சுகாதாரம் உட்பட்ட மருத்துவ நலன்கள் நேரடியற்றமுறையில் கண்காணிக்கப்பட்டது.கிரம ஒழுங்கில் worm treatment வழங்கப்பட்டது.      2006ஆம் ஆண்டுக்குப்பின் தமீழீழ சுகாதாரசேவைகளால் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டது. 2008 இல் தமீழீழ சுகாதாரசேவைகளால் நீதி நிர்வாகத்தினரின் உதவியுடன் வெளிடப்பட்ட உணவுச்சட்டங்கள் ,பாதுகாப்பான உணவு வழங்கலுக்கு
முக்கியமானவை.  


Share/Save/Bookmark

புதன், 8 ஜூலை, 2015

பசிக்குது



நீ இறந்து கிடந்தாய் மகளே!
தொட்டு தூக்க
என் இல்லாத கைகளை தேடினேன் மகளே !
இறுதியாய்
நீ கூறிய " பசிக்குது அப்பா------------"
முடியவில்லை மகளே!
உன்னை புதைத்துவிட்டு கூட 
போகமுடியவில்லை மகளே!
ஒரே நிம்மதியில் செல்கிறேன் மகளே!
நீ அம்மாவிற்கு துணையானாய் மகளே!
மீள ஒரு பிறப்பிருந்தால்-----



Share/Save/Bookmark

சனி, 4 ஜூலை, 2015

இளமையில் பயிர் செய்

மனிதனுக்கு சுக துக்கம் வரும் போகும்
இப்படி வரக்கூடாது
ஐம்பது வயது நெருங்குகையில்
சொந்த மண்விட்டு,வாழ்நாளில் நேசித்த மக்களை பிரிந்து
பாச உறவுகளை இழந்து
"அகதியாகி "
புதிய மொழி உலகில் வேரற்ற மரமாகி
குடும்ப சுமைபோக்க
இயந்திர உலகில்
நிரந்தரமற்ற நேர காலமற்ற வேலை
"இளமையில் பயிர் செய்" எவ்வளவு உண்மை
தொலைபேசி அழைக்கிறது
பின்னேரம் வேலையிருக்கிறதாம், வா என்கிறான்
வெளிக்கிடப்போகிறேன்.



Share/Save/Bookmark

வியாழன், 2 ஜூலை, 2015

அதுதான் இறுதி நம்பிக்கையா?

அதுதான் இறுதி நம்பிக்கையா?
வெள்ளைக்கொடியுடன் /
சமய குருவுடன் சரணடைவு
சரணடையுங்கள் ! பாதுகாப்பு தருவோம்
சிங்களம் ஒலிபெருக்கியில்
நம்பிக்கை கொடுத்தது
சர்வதேசம் தொலைபேசியில்
நம்பிக்கை கொடுத்தது
சரணடைவின் சித்திரவதைகள்
கொலைக்களமாய் இன்றும் விரிகிறது
வேதனையிலும்  சிங்களமுகம் கிழிகிறது
நம்பிக்கைவைத்த சரணடைவா?
சிங்களத்தை உலகறிய தாங்கிய வேதனையா?
இனியும் நம்பிக்கை கொள்ளலாமா?


Share/Save/Bookmark
Bookmark and Share