செவ்வாய், 18 செப்டம்பர், 2012

வீரர்களுக்கு சோதனை அதிகம்

பேடி 
எப்போதும் 
அதிகம் கதைப்பான் 
வீரன் 
செயலில் கதைப்பான் 
பேடி 
தக்க தருணத்தில் 
ஒளிந்துகொள்வான் 
தன் உயிரைக்காக்க 
யாரையும் காட்டிக்கொடுப்பான் 

சுமை தூக்கையில்
வீரன் தோள்கொடுப்பான் 
தேவையெனில் 
உயிரையும் கொடுப்பான் 
வீரர்களுக்கு சோதனை அதிகம் 
பேடிகள் 
பச்சோந்திகளாய் வாழ்ந்துவிடுவர்    


Share/Save/Bookmark

சனி, 15 செப்டம்பர், 2012

கிளிநொச்சி நினைவுகள்


கிளிநொச்சியின் நினைவுகள் என்னை அறியாமல் மீள மீள கண்முன் 
வந்து போகிறது.சிங்கள அரசின் சத்ஜெய இராணுவ நடவடிக்கையால் 
இழந்த கிளிநொச்சியை தமிழர் மீண்டும் கைப்பற்றினர்.2001 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் 
தமிழரின் மீள்குடியேற்றம் ஆரம்பம் ஆகிற்று.வளமான கிளிநொச்சி 
உடைந்த கட்டிடங்களாலும்,பற்றைகளாலும் உருமாறிக்கிடந்தது.ஒருநாள் 
கனகபுரத்திலிருந்து டிப்போ சந்திக்கு போகும் பாதையில் சென்று 
இடப்பக்கமாய் கண்ணன் கோயில் ஒழுங்கையால் திரும்பி மோட்டார்சைக்கிளில்  
போய்க்கொண்டிருந்தோம்.வேலிக்கரையோரமாய் நீளக்கோடுகள் 
உள்ள சாரம் ஒன்று விரித்ததுபோல் கிடந்தது.மோட்டார் சைக்கிளை 
நிறுத்தி உற்றுப்பார்த்தோம்.கிட்டத்தட்ட பாம்புகளும் குட்டிக்களுமாய் 
சுமார் இருபது இருந்திருக்கும்.உடல் புல்லரித்தது.   

ஒருநாள் முன்னிரவு எட்டு மணியிருக்கும் தமிழ்செல்வனின் 
பரவிப்பாஞ்சானில் அமைக்கப்பட்டுக்கொண்டிருந்த திலீபன் முகாமில்
முற்றத்தில் நாற்காலியில் இருந்து  கதைத்துக்கொண்டிருந்தோம்.
சிறிய ஜெனரேட்டர் போட்டு வேலை நடந்துகொண்டிருந்தது.
ஜெனரேட்டர் சத்தத்தையும் தாண்டி உஷ் என்ற சத்தம் வர வர கூடிக்கொண்டே 
வந்தது.ஒ ஒரு பெரிய நாகபாம்பு .தமிழ்செல்வன் தனது பிஸ்டலை 
உருவி சுட்டார்.வெடி பட்டது ஆனால் நாகம் சாகவில்லை.தமிழ்செல்வனின் 
பெடியங்களும் சுட்டார்கள்.இரண்டு மூன்று நிமிடங்களுக்குப்பின்தான்
நாகம் செத்தது.ஒன்பது அடி நீளம் வரும்.அப்ப கிளிநொச்சி முழுக்க ஒரே பாம்புதான்.    
  கிளிநொச்சியில் ஆங்காங்கே மிதிவெடிகளும் தமது 
வேலையைக்காட்டின.மிதிவெடிகளுக்காகவும் பாம்புகளுக்காகவும் 
கிளிநொச்சி பொன்னம்பலம் மருத்துவமனை இருபத்திநான்கு 
மணி நேரமும் இயங்கிக்கொண்டிருந்தது.வேறு மருத்துவமனைகள் 
அப்போது கிளிநொச்சி நகரில் இயங்கவில்லை.மிதி வெடி வெடிக்கும் 
சத்தம் கேட்டால் யாரோ மக்கள் காலைக்கொடுத்துவிட்டார்கள் என்று 
அர்த்தம் .போராளிகளின் வாகனம் அந்த இடம் நோக்கி விரையும். 
 ஒருநாள் தமிழ்ச்செல்வன் ,கிளி father உடன் திலீபன் முகாமில் 
கதைத்துக்கொண்டிருந்தோம்.தமிழ்ச்செல்வனின் பெடியங்கள் 
சலசலப்புடன் ஓடினாங்கள் .தமிழ்ச்செல்வன் என்ன ?என்று வினவினார்.யாரோ 
வீடு திருத்த வந்த ஆள் பக்கத்தில இருந்த கால்வாயில(கிளிநொச்சி குளத்தில இருந்து வாற) இறங்கி 
குளிச்சிருக்கு முதலை பிடிச்சிட்டுது.  தமிழ்ச்செல்வன் : ஆளுக்கு பிரச்சனையோ?
பிரச்சனையில்லை தொடையிலதான் பிடி .தமிழ்ச்செல்வன் தன்ர வாகனத்தை 
கொண்டு போகச்சொன்னார். வலது தொடையில எலும்புதான் வெள்ளையாய் 
தெரிஞ்சுது.பொன்னம்பலத்தில சேர்த்தம்.அவருக்கு குருதிக்குழாய் 
மாற்று சத்திரசிகிச்சை செய்து கால் தப்பிட்டுது.தமிழ்ச்செல்வனின் 
பெடியங்கள் நாலு பேர் இரத்தம் கொடுத்தாங்கள்.நானும் கொடுத்தன். 
கிளிநொச்சி மக்களின் மீள்குடியேற்றம்,கிளிநொச்சி நகரின் 
திட்டமிடல் ஆகியவற்றில் எனக்கும் பங்கு தரப்பட்டிருந்தது.
அதனால் என் மோட்டார்சைக்கிள் ஒழுங்கை ஒழுங்கையாய் 
ஓடிச்சு.
அன்று 2008ஆம் ஆண்டின் இறுதிநாள் எனக்குரிய அனைத்தையும் 
பின் நகர்த்திவிட்டு டிப்போ சந்தி, காக்கா கடைச்சந்தி ,கரடிபோக் ,
பரந்தன் சந்தி என போய் மீண்டும் திரும்பி காக்கா கடைச்சந்திவரை 
வந்து வாகனத்தை நிறுத்திவிட்டு விழுந்து கிடந்த தண்ணீர்த்தொட்டிக்கருகில்  
ஏக்கத்துடன் ஆளையாள் பார்த்தோம்.இனி நிற்பது உகந்தது அல்ல என்று 
என் பிரியமானவர்கள் ஆய்க்கினைப்படுத்தினார்கள்.எமது வாகனம் 
காக்கா கடைச்சந்தியால் வட்டக்கச்சி நோக்கி நகர்ந்தது.கிளிநொச்சி 
குளத்தருகில் பரவிப்பாஞ்சான் உள் வீதியைக்காண   தமிழ்ச்செல்வனின் 
ஞாபகம் நெஞ்சை அழுத்திற்று.    


-  நிரோன்-





Share/Save/Bookmark

செவ்வாய், 11 செப்டம்பர், 2012

தகப்பன்ர பெயரை எப்படி பதியிறது?


அவன் ஒரு அகதி.அவன் தற்போது வசிக்கும் நாட்டில் அவனுக்கு 
எந்த உறவினரும் இல்லை.அவன் சமாதான காலத்தில் இந்த நாட்டுக்கு 
பலத்த சிரமப்பட்டு வந்திருந்தான். அவனின் சொந்த ஊர் யாழ்ப்பாணத்தில் 
உள்ள கிராமம்.அவனுக்கு ஒரு அண்ணன் இருந்தான்.அவன் ஜெயசுக்குறு 
எதிர்ச் சமரில் வீரச்சாவு அடைந்தான்.தந்தை சிறுவயதில் இறந்துவிட தாய்தான் 
இவனையும் அண்ணனனையும் சிரமப்பட்டு வளர்த்தாள். 
தொண்ணூற்றி ஐந்தாம் ஆண்டு வன்னிக்கு இடப்பெயர்ந்து 
மல்லாவியில் உள்ள உயிலங்குளத்தில் சிறு கொட்டில் போட்டு 
வசித்தார்கள்.அவனது அண்ணனின் வித்துடல் ஆலங்குள துயுலுமில்லத்தில்
விதைக்கப்பட்டது.தாய் அந்த சிறிய காணியில் மரக்கறி தோட்டம் செய்தாள். 
அவன் ஒரு பத்திரிகையில் செய்தி வழங்குனராய் இருந்தான்.அவனுக்கு 
சிறு தொகை ஊதியம் கிடைத்தது.அது குடும்பத்தை இழுக்க போதுமாயும்
இருந்தது.செய்தியாளராய் போர்ப்பிரதேசத்தில் கடமை செய்வது மிகக்கடினமானது.
சைக்கிளில்தான்  சென்று செய்தி சேகரிப்பான். குறிப்பிட்ட இடம் 
சென்று வோக்கியில் காரியாலயத்திற்கு  செய்தி அறிவிக்கப்படும்.கூட்டம் என்றால் புதுக்குடியிருப்புக்கு 
போகவேணும் மல்லாவி வந்து மாங்குளம் போய் ஒட்டிசுட்டான் போய் அங்க இருந்து 
புதுக்குடியிருப்பு போவான் சைக்கிளில்தான்.சிலநேரம் மாற்று வழிகளும் பாவித்திருக்கிறான்.
ஜெயசுக்குறு நேரம் கடினகாலம்.பட்டினி ஆரம்பிக்கைக்கேயே 
சிறுவர் பட்டினிச்சாவு தவிர்ப்புத்திட்டம் ஆரம்பித்திட்டினம்.அதனால 
பட்டினியும் போசாக்கு குறைபாடும் வராமல் தவிர்க்கப்பட்டுவிட்டது.
எல்லா செய்திகளையும் அவன் உடனுக்குடன் வழங்கிவந்தான்.
சமாதானம் வந்தவுடன் கொஞ்சம் வசதிகள் கூடிட்டுது.மோட்டார் 
சைக்கிள் பாவனை வந்தது.அவன் தாயின் நகைகளை விற்று 
வெளிநாடுவந்தான்.மூன்று தடவையும் அவனது அகதி 
அந்தஸ்து கோரும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுவிட்டது.
இப்ப ஆறு வருசமாய் அவன் ஒளித்து வாழ்கிறான். தாயிற்கு 
இவனது உண்மை நிலை தெரியாது.
2008 ஆம் ஆண்டு நடமாடும் மருத்துவசேவையில தாயின் உடலில 
ஒரு புற்று நோய்க்கட்டி வளர்வதை அவர்கள் கண்டுபிடித்து   
உடனடியாய் ஒபரேசன் செய்யோணும் என்றிருக்கினம்.தாய் 
தொடுவிலும் மாட்டன் என்றிட்டா.மகன்ரை தொடர்பில்லை 
அவனிட்ட கேட்காமல் செய்ய மாட்டன் என்றிட்டா.ஆனால் 
அவையும் விடயில்லை.நாங்களும் உங்கட பிள்ளைகள் தானம்மா.
அன்றைக்கே அவை போகேக்க தாயையும் கூட்டிப்போய் 
கிளிநொச்சி பொன்னம்பலத்தில ஒபரேசன் செய்து மாற்றி 
அனுப்பிட்டினம்.தாய் பிறகு புது மாத்தளன் மட்டும்போய் 
வவுனியா முகாமுக்கு வந்திருந்தா.
தாய் வரயிக்க ஒரு படமும் கொண்டுவரயில்லை.
அண்ணனின்ர ஒருபடமும் இப்பயில்லை. அதோட 
அந்த காலத்தில ஒரு (ZONIKA )கமரா பத்தாயிரம் ரூபாயிட்கு வாங்கி 
வவுனியாவிற்கு போய் தொழில் செய்யிற ஒரு ஐயாவைக்கொண்டு 
கழுவி வைச்சிருந்த சுமார் நூறு அந்த நேரப்படங்கள் இல்லை.

சுமார் இரண்டு வருசமாய் ஒரு பெண்ணை விரும்பி 
கணவன் மனைவியாய் வாழுறான்.தாய் நினைச்சுக்கொண்டிருக்கிறா 
கல்யாணம் கட்டிட்டான் என்று.அவனும் நிறைய படங்கள் அனுப்பிட்டான்.
நேற்றும் தாய் கதைக்கைக்க அவனிட்டையும் அவன்ர மனிசியிட்டையும் 
சொன்னா எங்கட குடும்பத்திற்கு வாரிசுவேணும் என்று.எப்படி அவர்கள் 
பிள்ளை பெறுவது?தகப்பன்ர பெயரை எப்படி பதியிறது?  
போதாதிட்கு அவன்ர சித்தி ஒராள் போன கிழமை தாயிற்கு வந்த மாதிரியே 
புற்று நோய்க்கட்டிவந்து உரிய நேரம் கண்டுபிடிக்காமல் பெருத்து இறந்து 
போனா.அவவிற்கு காசு அனுப்பட்டாம்.தாயிற்கு தெரியுமோ?எவ்வளவு 
கஷ்டப்பட்டு வேலை செய்தாலும் அரைவாசிக்காசுதான் கிடைக்குது என்று.  







Share/Save/Bookmark

வெள்ளி, 7 செப்டம்பர், 2012

சுஜோவின் ஹைக்கூ/விடுகதைக்கவிதைகள் 4


அழவில்லை
உடைகிறது மனது 
விவாகரத்து 


உயிர் 
அறுபட்ட கணம் 
மரணம் 

இறப்பை நினையாது 
பிறப்பில் சிரிக்கும் மனிதன் 
கூர்ப்பு 

மற்றையவர் தோல்வியை நினையாது 
தன்வெற்றியை கொண்டாடல் 
தற்புகழ்ச்சி 

நாய் கிழித்த உடுப்பு 
புது டிசைன்னாகிறது 
நாகரீகம்  

உடைத்த அரிசி அரைக்கப்படுகிறது 
போருக்குப் பிந்திய போர் 
வன்னி (2010)

உலக முதல் இராஜதந்திரி 
நரியாரா?நாரதரா?
மனக்குழப்பம் 

மிதந்தவன் தப்பினான் 
தாண்டவன் 
கூழ்முட்டை 

இனத்தின் துகிலுரிந்து 
தனக்கு சுருக்கிட்டான் 
அடிவருடி 

ஏழைக்குழந்தைகளின் 
எதிர்காலத்திற்காய் எரிகிறது 
குப்பிவிளக்கு 

தண்ணியிலிருந்து 
தங்கம் வரை தங்கியிருக்கிறது 
விளம்பரத்தில் 

ஈழக்குழந்தைக்கு  
கள்ளிப்பால் ஊட்டியது 
இந்தி  

தத்தி தத்தி நடக்கிறது 
குழந்தையா?ஆட்டுக்குட்டியா?
முதுமை 


மனித ஆயுள் அடங்குவது 
காலம் காலமாய் காத்துவைத்த 
ரங்குப்பெட்டியிலோ/பணப்பெட்டியிலோ அல்ல 
சவப்பெட்டியில் "நியதி"


ஒருவன் வெல்வதற்காய் 
மற்றையவன் தோற்கிறான் 
முதலாளித்துவம்   

சீனியில் மொய்க்கும் 
எறும்புகள் 
சினிமா ரசிகர்கள் 

செத்ததில் முளைக்கும் 
புழுக்கள் 
அடைவுகடைகள் 

  சீனி மா விற்றும் 
சினிமா பார்த்தல்
குறைப்பிரசவம் 

வெள்ளிக்கிழமை 
சமையல் பாத்திரங்கள் தனி 
வாயும் வயிறும் ஒன்றுதான் 

வாக்குறுதி தரும் 
கவரிங் நகைகள் 
அரசியல் வாதிகள் 

அன்று யாழ் நூலகம்
இன்று பள்ளிவாசல் 
காவி நிறமாய் எரிகிறது  

மரம் இல்லாதவனம் 
பாலைவனம் 
மொட்டைத்தலை 

ஐயா மெழுகுமாதிரி
ஐயோ ஈரல்குலையை  காணவில்லை 
மகிந்த சிந்தனை 

காடழித்து மரம் கடத்தல் 
ஆனால் மிருகநல அமைச்சர் 
மகா நாயக்கர்கள் 

உணவைக்கண்டதும் 
காகம் கரைந்து இனத்தை அழைக்கிறது 
தேர்தல் காலத்து ஒலிபெருக்கி

ஊரெங்கும் நன்றாய் அடுப்பெரியும் 
இவன் வீட்டில் புகைதான் 
விறகுவெட்டி 

ஆட்டை சாப்பிட்டு,மாட்டை சாப்பிட்டு 
மனிசனை சாப்பிடுவது 
கடனும் வட்டியும்

இவர் அழுவதில்லை 
கண்ணீர் வற்றியதால் 
முன்னாள் போராளிகள்

திரி இழந்தன குத்துவிளக்குகள்  
வெளிச்சம் இழந்தது வீடு 
விதவைகள் 


தேன்கூட்டில் 
தேன் எடுத்துக்கொடுப்பவன் 
பத்திரிகையாளன்  

வீதியெல்லாம் தோரணங்கள் 
யாருடைய மரணம்?
தென்னங்குருத்துனுடையதா ?

மொட்டைத்தலைக்கு 
தலைவாருகிறார்கள்
மாகாணசபை (இலங்கை)    


மொட்டைத்தலைக்கும் 
முழங்காலுக்கும் முடிச்சு 
இலங்கையும் ஜனநாயகமும் 

கன்றுகளின் எதிர்காலத்தை தின்று 
வண்டி இழுக்கும் செக்குமாடு 
அரச தமிழ் அமைச்சர்கள் 

பிள்ளை இறந்தபோது -ஐயோ!
பிறக்காமல் இருந்திருக்கலாம் 
வயிறும் பசியும் 

அரைகுறையாய் எரிந்துகிடக்கும் 
அநாமோதாயப் பிணங்கள் யாருடையவை?
கறும்துணியால் கண்கள் கட்டப்பட்ட நீதிதேவதை    

பிறக்கும்போதே 
இறக்கும் செய்தி சொல்லப்படுகிறது 
பூமி உருண்டை 

நாறும் பிணத்திற்கு 
சென்ட் தடவும் தொழில் 
இலங்கை வெளிவிவகார அமைச்சர்  

கிடைப்பதும் இல்லை 
விடுவதாயும் இல்லை 
அதிஷ்ட லாபச்சீட்டு 


ஆண்டி அரசனானான் 
அரசன் ஆண்டியானான் 
அதிஷ்ட லாபச்சீட்டு 

மிருககொலைக்கு தடை 
மனித கொலைக்கு ஊக்குவிப்பு 
இலங்கை ஜனநாயக்குடியரசு 

குளத்தில் மீன் பிடிக்கிறான் 
வெள்ளைக்காரன் 
நாரைகள் 


மீள்குடியேற்றத்தில் 
ஒரு குடியேற்றம் 
புத்தர் சிலைகள் 




Share/Save/Bookmark

வியாழன், 6 செப்டம்பர், 2012

என் அம்மம்மா


இன்று காலை தொலைபேசி அடித்தது. என் அம்மம்மா 
இறந்துவிட்டாவாம்.அம்மம்மாவிற்கு தொண்ணூறு வயது.
சில நாட்களாய் கடும் சுகயீனம் உற்றிருந்தா. நேற்றும் அம்மம்மாவுடன் தொலைபேசியில் 
கதைத்தேன்.என்னால தொடர்ந்து கதைக்கேலாமல் 
கிடக்கு ராசா என்று தொலைபேசியை அம்மாவிட்ட 
குடுத்திட்டா.இறப்புகளைக்கண்டு பழகிப்பழகி வெறும் மரமாய்ப்போன 
வாழ்க்கையில் எங்கிருந்தோ கண்ணீர்த்துளிகள் வருகின்றன.
நான் பிறந்ததிலிருந்து இன்றுவரை எனக்கு அம்மம்மாவைத்தெரியும்.
நாங்கள் பிஞ்சுகளாய் இருக்கைக்க அம்மம்மா 
நிலாக்காட்டி சோறு ஊட்டுவா.நிறைய கதைகள் சொல்லுவா.
அம்மம்மா சில வருடங்கள் ஆசிரியையாய் வேலை செய்தவ.
அதுவும் சின்னப்பிள்ளைகளுக்குத்தான் படிப்பிச்சவ.அதனாலதான் 
என்று நினைக்கிறன் அவ கதைகள் சொல்லைக்க நிஜமாய் நடக்கிறதை பார்க்கிற 
மாதிரி இருக்கும். நாங்கள் திருப்பி திருப்பி சொன்ன கதைகளைக்கூட கேட்பம்.
அம்மம்மா சலிப்பில்லாமல் சொல்லுவா.  
அம்மம்மாவிற்கு அரசியல் தெரியாது.களவு பொய் தெரியாது.
யாரையுமே பிரிச்சுப்பார்க்கமாட்டா .எல்லோருக்கும் உதவி செய்வா.
அம்மம்மாவின்ர ஐயா(அப்பா) PWDஓவசியறாய் இருந்தவர்.
அம்மாவின்ர குடும்பம் எப்பவுமே நடுத்தரக்குடும்பம் தான். 

 அம்மம்மாவிற்கு எழுபிள்ளைகள்.அம்மப்பாவிட்கு சாதாரண 
வருமானம்தான்.அம்மப்பா கொஞ்சம் தண்ணியும் பாவிப்பார்.
இருந்தும் ஒருநாளும் அம்மம்மா அம்மப்பாவோட சண்டை 
பிடிச்சதை நான் பார்க்கயில்லை.எங்கட வீட்டை யார் வந்தாலும் 
சாப்பிடுற நேரமென்றா சாப்பிட்டு தேத்தண்ணீர் குடிக்கிற நேரமென்றால்   
தேத்தண்ணீ குடுத்துத்தான் அனுப்புவா. 
என்னோட என் நண்பர்கள் (திலீபன் உட்பட)வருவார்கள்.வந்தால் 
சாப்பிட்டோ/தேத்தண்ணீ குடித்தோ எங்கட வேலை பிரிக்கிற 
இடமாய் அது இருக்கும்.அம்மம்மாவிற்கு சாப்பாடு தாறதைவிட
வேறு ஒன்றையும் அறிந்திருக்கமாட்டார்.நான் எந்த நேரமும் 
வீட்டை போவன் அம்மம்மா உடன சாப்பாடு தருவா.நான் வீட்டைப்பொருத்தவரை
பொறுப்பில்லாதவன்.என்னால வீட்டுக்கு எந்த ஆதாயமும் இல்லை 
என்றதும் அவைக்குத்தெரியும்.ஆனால் ஒருநாளும் 
ஏற்றுக்கொள்ள முடியா சொல் ஒன்றை எனக்கு சொன்னதில்லை.அம்மம்மா 
சைவம் மச்சம் சாப்பிடமாட்டா.நான் ஒரு நாள் அம்மம்மாவிட்ட கேட்டன். 
அம்மம்மா மாடு சமைச்சு தருவிங்களோ என்று.அம்மம்மா சொன்னா 
கொண்டுவா சமைச்சு தாறன். நான் வாங்கி வந்து வெட்டிக்குடுக்க 
அம்மம்மா சமைச்சுத்தந்தா.ரொட்டியும் சுட்டுத்தந்தா .நான் கொண்டுபோய் 
சென்றியில பிரிச்சு சாப்பிட்டம்.இப்படி கொஞ்சக்காலம் தொடர்ந்திது.   
அவவின்ர ஒரு பேரன் வீரச்சாவு அடையிக்க    
அம்மம்மா முதல் தடவை சத்தம் போட்டு அழுததைப்பார்த்தேன்.
பிறகு அம்மப்பா இறந்து, அதட்குப்பிறகும் இரண்டு 
பேரன்கள் வீரச்சாவு அடைஞ்சிட்டாங்கள். கவலைகளுக்குள் 
வாழ்ந்தாலும் எதையுமே வெளிக்காட்டாமல் எல்லோருடமும் 
பழகி வந்தா.சில காலம் வெளி நாட்டிலும் வாழ்ந்தார்.பின் 
தாய் மண்ணில் மூத்தமகளுடன் வாழ்ந்தார்.சமாதான நேரம் 
நான் இறுதியாய் அவரை சந்தித்தேன்.  

 இறுதிவரை முழு ஞாபச்சக்தியோட அவ இருந்தா.தொலைபேசியில
குரலை வைச்சே ஆட்களை அடையாளம் காணுவா.பூட்டப்பிளைகளோட 
இறுதிக்காலமும் மகிழ்வாய்த்தான் இருந்தா.  இரண்டு வயது பூட்டி 
அம்மம்மாவின் படத்தோடு திரிகிறாளாம். படுக்கும் போதும் தலையணைக்குக்கீழ்
படத்தை வைத்துப்படுக்கிறாளாம். என்னால்த்தான் எதுவுமே அம்மம்மாவிற்கு 
செய்யமுடியவில்லை. மனதில் ஏதோவொன்று பிசைகிறது.

-நிரோன்- 

  





Share/Save/Bookmark
Bookmark and Share