சனி, 15 செப்டம்பர், 2012

கிளிநொச்சி நினைவுகள்


கிளிநொச்சியின் நினைவுகள் என்னை அறியாமல் மீள மீள கண்முன் 
வந்து போகிறது.சிங்கள அரசின் சத்ஜெய இராணுவ நடவடிக்கையால் 
இழந்த கிளிநொச்சியை தமிழர் மீண்டும் கைப்பற்றினர்.2001 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் 
தமிழரின் மீள்குடியேற்றம் ஆரம்பம் ஆகிற்று.வளமான கிளிநொச்சி 
உடைந்த கட்டிடங்களாலும்,பற்றைகளாலும் உருமாறிக்கிடந்தது.ஒருநாள் 
கனகபுரத்திலிருந்து டிப்போ சந்திக்கு போகும் பாதையில் சென்று 
இடப்பக்கமாய் கண்ணன் கோயில் ஒழுங்கையால் திரும்பி மோட்டார்சைக்கிளில்  
போய்க்கொண்டிருந்தோம்.வேலிக்கரையோரமாய் நீளக்கோடுகள் 
உள்ள சாரம் ஒன்று விரித்ததுபோல் கிடந்தது.மோட்டார் சைக்கிளை 
நிறுத்தி உற்றுப்பார்த்தோம்.கிட்டத்தட்ட பாம்புகளும் குட்டிக்களுமாய் 
சுமார் இருபது இருந்திருக்கும்.உடல் புல்லரித்தது.   

ஒருநாள் முன்னிரவு எட்டு மணியிருக்கும் தமிழ்செல்வனின் 
பரவிப்பாஞ்சானில் அமைக்கப்பட்டுக்கொண்டிருந்த திலீபன் முகாமில்
முற்றத்தில் நாற்காலியில் இருந்து  கதைத்துக்கொண்டிருந்தோம்.
சிறிய ஜெனரேட்டர் போட்டு வேலை நடந்துகொண்டிருந்தது.
ஜெனரேட்டர் சத்தத்தையும் தாண்டி உஷ் என்ற சத்தம் வர வர கூடிக்கொண்டே 
வந்தது.ஒ ஒரு பெரிய நாகபாம்பு .தமிழ்செல்வன் தனது பிஸ்டலை 
உருவி சுட்டார்.வெடி பட்டது ஆனால் நாகம் சாகவில்லை.தமிழ்செல்வனின் 
பெடியங்களும் சுட்டார்கள்.இரண்டு மூன்று நிமிடங்களுக்குப்பின்தான்
நாகம் செத்தது.ஒன்பது அடி நீளம் வரும்.அப்ப கிளிநொச்சி முழுக்க ஒரே பாம்புதான்.    
  கிளிநொச்சியில் ஆங்காங்கே மிதிவெடிகளும் தமது 
வேலையைக்காட்டின.மிதிவெடிகளுக்காகவும் பாம்புகளுக்காகவும் 
கிளிநொச்சி பொன்னம்பலம் மருத்துவமனை இருபத்திநான்கு 
மணி நேரமும் இயங்கிக்கொண்டிருந்தது.வேறு மருத்துவமனைகள் 
அப்போது கிளிநொச்சி நகரில் இயங்கவில்லை.மிதி வெடி வெடிக்கும் 
சத்தம் கேட்டால் யாரோ மக்கள் காலைக்கொடுத்துவிட்டார்கள் என்று 
அர்த்தம் .போராளிகளின் வாகனம் அந்த இடம் நோக்கி விரையும். 
 ஒருநாள் தமிழ்ச்செல்வன் ,கிளி father உடன் திலீபன் முகாமில் 
கதைத்துக்கொண்டிருந்தோம்.தமிழ்ச்செல்வனின் பெடியங்கள் 
சலசலப்புடன் ஓடினாங்கள் .தமிழ்ச்செல்வன் என்ன ?என்று வினவினார்.யாரோ 
வீடு திருத்த வந்த ஆள் பக்கத்தில இருந்த கால்வாயில(கிளிநொச்சி குளத்தில இருந்து வாற) இறங்கி 
குளிச்சிருக்கு முதலை பிடிச்சிட்டுது.  தமிழ்ச்செல்வன் : ஆளுக்கு பிரச்சனையோ?
பிரச்சனையில்லை தொடையிலதான் பிடி .தமிழ்ச்செல்வன் தன்ர வாகனத்தை 
கொண்டு போகச்சொன்னார். வலது தொடையில எலும்புதான் வெள்ளையாய் 
தெரிஞ்சுது.பொன்னம்பலத்தில சேர்த்தம்.அவருக்கு குருதிக்குழாய் 
மாற்று சத்திரசிகிச்சை செய்து கால் தப்பிட்டுது.தமிழ்ச்செல்வனின் 
பெடியங்கள் நாலு பேர் இரத்தம் கொடுத்தாங்கள்.நானும் கொடுத்தன். 
கிளிநொச்சி மக்களின் மீள்குடியேற்றம்,கிளிநொச்சி நகரின் 
திட்டமிடல் ஆகியவற்றில் எனக்கும் பங்கு தரப்பட்டிருந்தது.
அதனால் என் மோட்டார்சைக்கிள் ஒழுங்கை ஒழுங்கையாய் 
ஓடிச்சு.
அன்று 2008ஆம் ஆண்டின் இறுதிநாள் எனக்குரிய அனைத்தையும் 
பின் நகர்த்திவிட்டு டிப்போ சந்தி, காக்கா கடைச்சந்தி ,கரடிபோக் ,
பரந்தன் சந்தி என போய் மீண்டும் திரும்பி காக்கா கடைச்சந்திவரை 
வந்து வாகனத்தை நிறுத்திவிட்டு விழுந்து கிடந்த தண்ணீர்த்தொட்டிக்கருகில்  
ஏக்கத்துடன் ஆளையாள் பார்த்தோம்.இனி நிற்பது உகந்தது அல்ல என்று 
என் பிரியமானவர்கள் ஆய்க்கினைப்படுத்தினார்கள்.எமது வாகனம் 
காக்கா கடைச்சந்தியால் வட்டக்கச்சி நோக்கி நகர்ந்தது.கிளிநொச்சி 
குளத்தருகில் பரவிப்பாஞ்சான் உள் வீதியைக்காண   தமிழ்ச்செல்வனின் 
ஞாபகம் நெஞ்சை அழுத்திற்று.    


-  நிரோன்-

Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக