செவ்வாய், 26 அக்டோபர், 2021

 1985 ஆம் ஆண்டு வைகாசி நடுப்பகுதி , குமுதினிப்படுகொலைக்கு அடுத்தநாள் நான் முதன் முதலாய் இரத்ததானம் வழங்க யாழ் மருத்துவமனைக்கு போயிருந்தேன். எதிர்பாராதவிதமாக இரத்தவங்கியில் அப்பாவை சந்தித்தேன். அப்பா இரத்தம் வழங்கிவிட்டு அமர்ந்திருந்தார். நானும் இரத்ததானம் வழங்க வந்திருப்பதை அறிந்து மகிழ்ந்தார். நான் இரத்தம் கொடுத்துவிட்டுவரும்வரை எனக்காக காத்திருந்தார். வைகாசி  2009 வரை இருபத்தியாறு தடவைகள் இரத்ததானம் வழங்கியிருந்தேன். எனக்கு முன்பு மலேரியா காய்ச்சல் வந்தது என்ற காரணத்தால் நான் தற்போது வசிக்கும் இந்த நாட்டில் எனக்கு இரத்ததானம் வழங்க அனுமதியில்லை.  இரத்தத்திற்கு மாற்றீடு எதுவும் இல்லை, இரத்ததானம் செய்வதில் நன்மைகளே அதிகம், தானத்தில் சிறந்த தானம் இரத்ததானம் என்றும் சொல்லப்படுகிறது .  



Share/Save/Bookmark

திங்கள், 25 அக்டோபர், 2021

 என் குடும்பப்பின்னனி விவசாயத்தோடு ஒன்றியது. எனது தந்தை, தாய் வழிப்பேரன்கள் விவசாயிகளாகவும் இருந்தாலும் இவர்கள் இருவரின்  விவசாயமும் வேறுபட்டது. தாய்வழிப்பேரனின் பிரதான விவசாயம் நெல் விதைப்பு. தந்தைவழிப்பேரனின் பிரதான விவசாயம்  மிளகாய், வெங்காயம், புகையிலை. எனது தந்தையார் இவற்றிலிருந்து வேறுபட்டு மலைநாட்டில் வற்றாளைக்கிழங்கு,கோவா, கரும்பு மாங்குளத்தில் உளுந்து, பயறு, எள்ளு, கௌப்பி என அவரது விவசாயம் மாறுபட்டிருந்தது. எனது இளைய தம்பி கொய்யா கொடித்தோடை மா பப்பாசியென நல் இனக்கன்றுகளை உருவாக்கி  மக்களுக்கு சென்றடைவதை தொழிலாக கொண்டிருந்தான். எனக்கும் விவசாயத்தில் நாட்டம் இருந்தது ஆனால் அது கைகூடவில்லை. எனது பிள்ளைகளுக்கு விவசாயத்தில் நாட்டம் இருப்பதுபோல் தெரியவில்லை, இது கவலை தருகிறது. எனது தாய் நிலம் எவ்வளவு வளமானது. எனது சகாக்களுக்கு தம் தேசம்மீது எவ்வளவு கனவு இருந்தது. உலகில் நூறுகோடி மக்கள் இரவு உணவு உண்ணாமல் இருக்கிறார்கள் என்று புள்ளிவிபரங்கள் சொல்கின்றன, இது எவ்வளவு கொடுமையானது.    



Share/Save/Bookmark

சனி, 16 அக்டோபர், 2021

முற்றுப்பெறா கனவுகள்

 மலரவன் எனது தம்பி. மலரவனின் இழப்பு என்பது எனது மனதில் ஒரு பெரிய இடைவெளியை அல்லது ஒரு பெரும் பாறாங்குழியை வைத்திருக்கிறது. மலரவன் இருபது வருடங்கள்தான் இந்த உலகில் எங்கள் கண்ணுக்குமுன் வாழ்ந்தான். எப்போதும் நகைச்சுவை ததும்பும் அவனது உரையாடல்கள், அவரவருக்கு ஏற்றதுபோல் கதைசொல்லும்  திறன் , அவனது வீரம் அறிவு அன்பு எல்லாவற்றையும் எப்படி மறக்கமுடியும். அவனது இறுதிக்காலங்களில்  கெலிக்கொப்டர் செய்யும் அவாவிலும் அவன் திரிந்தான். அதற்குரிய அறிவை சேகரிப்பதில் அவனது ஓய்வுநேரம் கழிந்து கொண்டிருந்தது. முற்றுப்பெறாத பல கனவுகளுடன் அவன் கண்மூடிப்போனான்.     



Share/Save/Bookmark
Bookmark and Share