சனி, 12 ஜனவரி, 2013

இது எப்படி சாத்தியமாகும்?


பின்னேரம் நாலு மணிக்கே இருட்டிவிட்டது.வெளியால சரியான குளிர்
சுருண்டு படுக்கையில் கிடந்தான் ரகு .அவன் இந்த நாட்டுக்கு வந்து இரண்டு வருடங்களாகிறது இன்னும் அகதி அந்தஸ்த்து கிடைக்கவில்லை.நண்பனுடன் இந்த அறையில் இருக்கிறான்.நண்பன்
இங்கு வந்து ஏழு வருடங்கள் அவனுக்கு அகதி அந்தஸ்த்து கிடைத்து
ஒரு கொம்பனியில வேலையும் செய்கிறான். இன்று நண்பனுக்கு மனக்கஷ்டத்தை கொடுத்துவிட்டதாய் இவனது மனம்
சொல்லிக்கொள்கிறது.
இன்று இவனின் நண்பனின் நண்பனுக்கு ஐம்பதாவது பிறந்த நாள் கொண்டாட்டம்.அதற்கு வருமாறு நண்பன் இவனையும் அழைத்தான்.
இவன் மறுத்துவிட்டான்.நண்பன் தனது நண்பனிடம் சொல்லியும் அழைப்பு விட்டான்.ரகுவோ குறை நினைக்கவேண்டாம் என்றுவிட்டான்.
அது இவனது நண்பனுக்கு மனத்தாக்கமாய் இருக்கவேண்டும்.நண்பனோ
எதையும் வெளிக்காட்டவில்லை .  ரகு இருபத்தி ஐந்து வருடங்கள் இயக்கத்தில் இருந்தான்.பின் மிகுந்த சிரமத்தின் மத்தியில் இந்த நாட்டுக்கு வந்து சேர்ந்தான்.இவன் வெளி நாட்டுக்கு வரும் எல்லாச் செலவுகளையும் நண்பனே பொறுப்பேற்றான்.
இன்றைய இவனது செய்கை இவனைக்குடைகிறது.
 இந்த நாட்டில் ஐம்பதாவது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் சாதாரணமானவை. அக்கொண்டாட்டங்கள் மன ரீதியாக நல்ல உத் வேகங்களையும் கொடுக்கும்.ரகுவுக்கு இப்படியான நிகழ்வுகளில்
பங்கு பற்றுவது மிகக்கடினமாக இருக்கிறது.அதனை அவனால் விளங்கப்படுத்தவும் முடியவில்லை.அவனை மற்றயவர்கள் புரியமாட்டார்கள் . அது அவனது பிரச்சனை.
இவனது வாழ்நாளில் முக்கிய காலங்களை தனது இனத்தின் விடுதலைப்போராட்டத்தில் கழித்திருந்தான்.அதனாலும் வெளி உலகம்
இவனுக்கு புரியாமல் போயிற்று.ஒரு முறை பாம்பு கடித்தபோது கூட
சிகிச்சைக்கான பரிசோதனைக்கு நடுவிலும் வேலை செய்து கொண்டிருந்தான். இவனது திருமண நாள் அன்று கூட வேலைக்குப்பிறகுதான் திருமண மண்டபத்திற்கு போனான்.அடுத்த நாள்
காலையே வேலைக்கு கூப்பிட்டுவிட்டார்கள்.இவனுக்கு உலகம் தெரிந்திருக்கவில்லை.இப்போது தனித்து புது உலகில் வந்து வாழும் போதும் நடைமுறைகளை அனுசரித்துப்போகும் பக்குவத்தை இவன்
பெறவில்லை. 
போராளிகள் வாழ்ந்த உலகிலிருந்து புது உலகிற்கு வரும்போது அதிக மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.
ரகுவிற்கு பதினைந்து வயதில் ஒரு பிள்ளை இருக்கிறது.மனைவியும்
பிள்ளையும் ஊரில் இருக்கிறார்கள்.திருமணம் செய்ததிற்கு ஒரு நாள் கூட
குடும்பமாய் சினிமா தியட்டரில் படம் பார்த்ததில்லை.மனைவியும் இதைப்பற்றி ஒரு நாளும் அவனிடம் கதைத்ததில்லை.ஆனாலும் போராட்ட காலத்தில் வாழ்ந்த வாழ்வே சிறந்தது என்று ரகுவும் அவனது
மனைவியும் சொல்கிறார்கள்.

- சுருதி -


Share/Save/Bookmark