சனி, 29 மார்ச், 2014

தினம் ஆயிரம் ஞாபகங்கள்

தினம் ஆயிரம் ஞாபகங்கள் மனதை தின்கின்றன.அதில் ஒன்றாய் கிளாலி ஞாபகங்களும்.தொண்ணூறாம் ஆண்டு யுத்தம் தொடங்கியவுடன் ஆனையிறவு பாதை மூடப்பட்டுவிட்டது.தொண்ணூற்றி ஒன்றில் இராணுவத்தின் பலவேகயா -1 நடவடிக்கையுடன்  கொம்படி- ஊரியான்  பாதை பாவனைக்கு வந்தது.ஐயோ அந்த பாதை பயணம் நினைத்துப்பார்ப்பதுக்கே கொடுமையானது. சேறும் சகதியுமான அந்த பாதையில் ற்றைக்டர் ரகவாகனங்கள்தான் போருதவியாய் இருந்தன.பிரயாணம் செய்த மக்கள் மிக்க துன்பங்களை அனுபவித்தனர்.பல மக்கள் சைக்கிளில் பிரயாணம் செய்தார்கள்.
தொண்ணூற்றி இரண்டாம் ஆண்டு இராணுவத்தின் பலவேகயா-2 நடவடிக்கையின் பின் மாற்று வழியில்லாமல் கிளாலி பாதை நடைமுறைக்கு வந்தது
கிளாலியிலிருந்து மக்கள் வள்ளங்களில் பதினைந்து கடல் மைல்கள் தாண்டி பூநகரி நல்லூர் பிரதேசத்திற்கு செல்வார்கள்.பூநகரி நாகதேவன்துறையில் இருந்து புறப்படும் ஸ்ரீலங்கா கடற்படை ரோந்துப்படகுகள் இவ்வள்ளங்களை   இடைமறித்து வாளினால் வெட்டியும் ,துப்பாக்கியால் சுட்டும் கொல்லத்தொடங்கினர்.எனவே கடற்புலிகள்  இம்மக்களின் பயணத்திற்கு பாதுகாப்பு கொடுக்கவேண்டி ஏற்பட்டது.  

எரிபொருள் தட்டுப்பாடு உச்சமாக இருந்த அக்காலத்தில் ஒரு வள்ளத்துடன் பல வள்ளங்கள் சேர்ந்து தொடுவையாக கிளாலிகடலில் சென்றன மக்கள்  மட்டுமல்லாமல் சைக்கிள், மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களும் எடுத்துச் செல்லப்பட்டன. பரல்களை கட்டி பாரிய பாதை ஒன்று ஏற்படுத்தப்பட்டு கார், லொறி போன்ற வாகனங்களும் எடுத்துச் செல்லப்பட்டன.1992 ஆம் ஆண்டு பிற்பகுதியில் ஆரம்பித்த இக் கடற்பயணங்கள் 1996 சித்திரை  மாதம் யாழ். குடாநாடு அரச படையினரின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் வரும் வரை இடம்பெற்றது.
இப்பயணத்தில் சிங்களப்படையால் காயமடையும் மக்களுக்காகவும்,
காவல் புலிகளுக்காகவும் ஒவ்வொரு பயண இரவுகளின் போதும் நாங்களும்
மருத்துவ முதலுதவி அணியாய் வந்து கடற்கரையில் இரவு முழுக்க தங்கி போவோம்.மக்கள் காயமடையாமல், இறக்காமல் போனால் காவலுக்கு செல்லும் புலிகள் நிம்மதியாய் நிலையம் திரும்புவர்.நாங்களோ மக்களும் பாதுகாப்பாய் சென்று/வந்து , புலிகளும் பாது காப்பாய் வந்தால்த்தான் நிம்மதியாய் எம் உறைவிடம் திரும்புவோம்.

எனக்கு நன்கு ஞாபகம் இருக்கிறது.கிளாலியை பிடிக்க ராணுவம் நெருங்கிக்கொண்டிருக்க,எமக்குரியவை எல்லாவற்றையும் முடிந்தவரை வன்னிக்கு அனுப்பி விட்டு இறுதியாய் புறப்பட்ட வள்ளங்களில் கிளாலியில் இருந்து  புறப்பட்டோம்.இராணுவ கெலிக்கொப்டர்கள் எங்கள் வள்ளங்களை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்து கொண்டிருந்தது. இடையில் ஒரு வள்ளம் தீப்பிடிக்க அதில் இருந்தவர்களை கடற்புலி  வள்ளம் காப்பாற்றிற்று.நல்லூர் கரையில் இறங்கி ஏக்கத்தோடு கிளாலி கரையை கண்களால் மேய்ந்தேன்.எத்தனை இரவுகள் கிளாலிக்கரையில் நித்திரை இழந்து கிடந்திருப்பேன்இந்த கிளாலிக்கடலில் எத்தனை மக்கள் இறந்திருப்பார்கள்


Share/Save/Bookmark

புதன், 19 மார்ச், 2014

குழந்தைகள் இலக்கு வைக்கப்படுவர்

குழந்தைகள்
விமானம்,செல் வீச்சு,பீரங்கி ,
ஆழ ஊடுருவும் படையணி,
இராணுவத்தாக்குதலால்
கொல்லப்பட்டார்கள்
குடும்பங்களோடு சரணடைந்து
காணாமல் போனார்கள்
"பாலச்சந்திரன்" உணவு கொடுத்து
கொல்லப்பட்டான்
வயிற்றில் குழந்தையோடு
தாய் கைது செய்யப்படுகிறார்
இன்று "விபூசிகா" கதை கட்டி
கைது  செய்யப்படுகிறார்
இனச்சுத்திகரிப்பில்
குழந்தைகள் இலக்கு வைக்கப்படுவர் 


Share/Save/Bookmark

வியாழன், 13 மார்ச், 2014

பேசப்படாதவர்

எமது விடுதலைப்போராட்டத்திட்காய் உழைத்தவர் பலர் .அதில் சிலர் வெளியில் பேசப்படாதவர்களாய் இருந்தார்கள்.அதில் இந்த தொழிலாளிகளும் அடக்கம்.
தொண்ணூறுகளில் அரியாலை துண்டியில் வீரச்சாவு அடைந்த போராளிகளின் வித்துடல்களை பழுதாகாமல் சீராக்கும்  நிலையம் அமைக்கப்பட்டது.இங்கு கடமை செய்பவர்கள் போர்க்காலங்களில் இரவு பகலென வேலை செய்வார்கள்.ஒருவித அர்ப்பணிப்புடன் வேலை செய்வார்கள்இடப்பெயர்வுகளோடு விஸ்வமடு ,பனிச்சங்குளம்,கனகபுரம் (கிளிநொச்சி),முரசுமோட்டையென  இவர்களும் தொடர்ந்து இடம்பெயர்ந்தார்கள். கிளிநொச்சி கனகபுரத்தில்தான் அதிககாலம் இருந்திருப்பார்கள் . எங்கு அமைந்திருந்தாலும் "துண்டி" என்ற சங்கேத மொழியில்தான் இந்த நிலையம் அழைக்கப்பட்டது.
எமது போராளிகளின் வித்துடல்கள் இராணுவத்தால் மீட்கப்படும்போது ,அவ்வுடல்கள் நாட்செல்லத்தான் செஞ்சிலுவைச்சங்கம் மூலம் எங்களுக்கு கிடைக்கும்.அநேகமாய் அவ்வுடல்கள் பழுதாகித்தான் வரும் . இத்தொழிலாளிகள் முழு அர்ப்பணிப்புடன் வேலை செய்து உரிய வீடுகளுக்கோ /இடங்களுக்கோ கொண்டு செல்ல உதவுவார்கள். இந்த தொழிலாளிகளின் அர்ப்பணிப்பு கற்பனைகளுக்கு அப்பாற்பட்டது. விடுதலைப்புலிகளால் மீட்கப்படும் இராணுவ உடல்களில் நல்ல நிலையில் உள்ள உடல்களைத்தான் இராணுவம் பொறுப்பேற்கும்.மிகுதி
உடல்கள் விடுதலைப்புலிகளால் எரியூட்டப்படும். விடுதலைப்புலிகள் தங்களது எல்லா உடல்களையும் பெற்றுக்கொள்ள விரும்பினர்.
துண்டியை ஒழுங்கமைப்பதில் அரசியல்துறை துணைப்பொறுப்பாளர் தங்கன் அவர்களின் பங்கு அளப்பரியது. இறுதி இடப்பெயர்வில் மாவீரர் துயிலும் இல்லங்களை அமைப்பதிலும் தங்கன் அரும்பாடுபட்டார்.தேவிபுரம் பகுதியில் வித்துடல்களை விதைக்கையில் நீர்மட்டம் மேல் இருந்ததால் தொடர்ந்து அவ்விடத்தில் விதைப்பதை நாம் நிறுத்த கூறினோம்.பின்  இரணைப்பாலை பின்  முள்ளிவாய்க்காலில்  வித்துடல்கள் விதைக்கப்பட்டன. இறுதிவரை மாவீரர்களை விதைக்கும்போது ,அவர்களுக்கு மரியாதை செய்யும் மூன்று துப்பாக்கி வெடிச்சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. 

தங்கன் அவர்கள் இறுதிப்போரின் பின் பிரான்சிஸ் அடிகளாருடன் இணைந்து சரணடைந்து காணாமல்   போனார்.தங்கன் அவர்களுடன் தங்கனின் மனைவியும் இரு பிள்ளைகளும் சரணடைந்து  காணாமல்   போனார்கள்.


Share/Save/Bookmark

புதன், 12 மார்ச், 2014

FATHER FRANCIS JOSEPHFATHER FRANCIS JOSEPH
இவர் ஒரு பாதிரியார்.சென் பற்றிக்ஸ் கல்லூரியின் முன்னாள் அதிபர்.தமீழீழ கல்வி மேம்பாட்டுப்பேரவையின் தலைவர்.கிளிநொச்சியில்
சிறப்பாக இயங்கிய ஆங்கிலக்கல்லூரியின் முதுகெலும்பு.வாழ்நாள் முழுவதும் மனித முன்னேற்றத்திட்காய் தன்னை செயலில் ஒப்புவித்தவர்.
தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின்  கீழ் CHILDREN DEVELOPMENT COUNCIL (CDC)எனும் அரசசார்பற்ற நிறுவனம் இயங்கிவந்தது.இந்த நிறுவனம் இலங்கையின் வடகிழக்கு பிரதேசங்களில்
உள்ள மாணவர்களின் மேம்பாட்டுக்காக (குறிப்பாக முன்பள்ளி மாணவர்) உருவாக்கப்பட்டது.இந்நிறுவனத்தை இ.இரவி அவர்கள் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் நிர்வகித்துவந்தார்.இந்நிறுவனத்தின் தலைவராக பிரான்சிஸ் Father இருந்தார்.நான் தமிழ்ச்செல்வனின் வேண்டு கோளுக்கு இணங்க CDC இன் ஆலோசகராய் இருந்தேன்இறுதியாயும் CDC இன் நிர்வாகக்கூட்டத்தில்தான் சந்தித்துக்கொண்டோம். அன்று நிர்வாகக்கூட்டம் முடிந்தபின்னும் நீண்டநேரம் Fatherஉம் இரவியும் நானும் உரையாடினோம். பின்பு அவரை சந்திக்க தருணம் கிடைக்கவில்லை.அவர் இறுதிவரை மக்களுடன் இருந்தார்.
முள்ளிவாய்க்காலின் இறுதிநாளில் இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் போனார்.இவருடன் இரவியும் ,இன்னும் நூற்றுக்கு மேற்பட்டவர்களும் ஒன்றாக சரணடைந்து காணாமல் போனார்கள்.சரணடையும் போது Father இன் வயது எழுபத்தைந்து. சரணடைந்தவர்களில் சிலர் முழுக்குடும்பமாக சரணடைந்தார்கள்.கைக் குழந்தைகள் கூட இந்த காணாமல் போனவர் பட்டியலில் இருக்கின்றன. காணாமல் போனவர்களில் சிலர் முழுக்குடும்பமாய் காணாமல் போனதால் அவர்களை தேடக்கூட / பட்டியலில் பதியக்கூட ஆட்கள் இல்லை. இறுதி யுத்தத்தின் பின் காணாமல் போன ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின்
நினைவுகளையும் தாய்மண் சுமக்கும் ஒரு தாயைப்போல   .     .      


Share/Save/Bookmark