வெள்ளி, 28 ஜூலை, 2017

துயர் தோய்ந்த பின்னிரவும் அதிகாலையும் .

24 / 11  / 1992  வளலாயில் மருத்துவ submain யில்  ஷெல்மழையிற்கு  நடுவில் கடமையில்நின்றேன் . எனது சகோதரன் படுகாயம் அடைந்துவிட்டான் என்பதை நடைபேசி ஊடாக அறிந்துகொண்டேன். அவன் இறந்தது அறிந்தும் அழுத்தவாறே இறுதிவரை முழுமூச்சுடன் கடமையில் நின்றேன். துயர் தோய்ந்த பின்னிரவும் அதிகாலையும் .      Share/Save/Bookmark

வியாழன், 22 ஜூன், 2017

ராஜிவ் காந்தி கொலையில் குற்றம் சாட்டப்பட்ட கைதி "பயஸ் " ,இருபத்தைந்து வருட சிறைவாழ்விற்கு பின் தன்னை கருணைக்கொலை செய்யுமாறு கேட்கிறார் .  இலங்கையில் அமைதிப்படையால் கொல்லப்பட்ட மூவாயிரத்திற்கு மேற்பட்ட கொலைகளில் ராஜீவ் காந்தி எவ்வாறு சம்மந்தப்பட்டாரோ அதேபோல் பயஸும் ராஜீவ் கொலையில் சம்மந்தப்பட்டிருக்கலாம். இலங்கையிலும் பெரும் படுகொலைகளுடன் சம்மந்தப்பட்டவர்கள் ஜனாதிபதியாய், அமைச்சராய் ,இராணுவ அதிகாரியாய் சுகபோக வாழ்வுவாழ்கிறார்கள். உண்மையில் ஜனநாயகம் , நீதி என்பன நடைமுறையில் ஒரு கேலிக்கூத்து.


Share/Save/Bookmark

ஞாயிறு, 18 ஜூன், 2017

ஈழத்தமிழனாய் தலைகுனிவதை தவிர வேறுவழியில்லை.  காணாமல் போனோர்,  சிறையில் வாடும் அரசியல் கைதிகள்  உள்ளிட்ட பல துன்பத்தில் எம் உறவுகள் வதங்கிக்கிடக்க , நேர்த்தியான அரசியலற்று சிதைந்துபோகிறது ஆண்ட இனம்.

சிங்கள அரச/இராணுவ இயந்திரம் ஓய்வற்று இயங்கும்( இராணுவ முகாமைத்துவம் அறிந்தவர் விரிவாய் அறிவர்) . சிங்கள குடியேற்றம் உள்ளீடாய் தமிழின அழிப்பில் இந்நேரம் மூச்சாய் இயங்கும். நாங்கள் என்ன செய்யலாம்? முதுகில் குத்தும் தமிழனை பார்ப்பதா? கறையானாய் அரிக்கும் சிங்களவனை பார்ப்பதா?   


Share/Save/Bookmark

சனி, 3 ஜூன், 2017

புனர்வாழ்வுக் கழகத்தின் கீழ் Children Development council (CDC) என்ற அரசசார்பற்ற அமைப்பு இயங்கியது  அதன் முழுக்குறிக்கோள் வட கிழக்கிலுள்ள  முன்பள்ளி மாணவர்களின் வளர்ச்சிதான். அதை இயக்கியது ரவி அண்ணை (மகேந்தி,  சூட்டியின் சகோ), பிரான்சிஸ் அடிகளார் அதன் தலைவராய் இருந்தார். நான் ஆலோசகராய் இருந்தேன். இறுதிக்கூட்டம் 2008 பிற்பகுதியில் கிளி/ பசுமை நிறுவனம் அமைந்த பகுதியில் நடந்தது.    


Share/Save/Bookmark

செவ்வாய், 30 மே, 2017

31 / 05 / 1981


மறக்கமுடியா நாள்
மறைக்கவும் முடியா நாள்
தீ நூல்களை தின்ற  நாள்
ஒரு அமைச்சரின்/ பொறியியலாளனின்  
தலைமையில்
ஒன்றல்ல இரண்டல்ல
தேடமுடியா பல ஆயிரம் நூல்களை
திட்டமிட்டு பொசுக்கிய நாள்
ஏற்றுக்கொள்ளமுடியா குரூரம்
சமிபாடடைய முடியா கவலை
கடக்கமுடியா பாதாளம்
அணையமுடியா தீ Share/Save/Bookmark

சனி, 27 மே, 2017

என் இறப்பு 
ஒரு நிகழ்வாகவேண்டாம் 
எரித்துவிடுங்கள்
காற்று தான் விரும்பின் 
யாருக்கும் சொல்லட்டும் 
"தங்கல்" எவருக்கும் இல்லை 
உங்கள் பணி தொடருங்கள்   
வாழும் நேரமே வாழ்க்கை 
பருவகாலம் பார்த்து விதையுங்கள் 
அறுவடையில் 
அகங்காரத்தை  தவிருங்கள்   
பலனை பகிருங்கள் 
முடியும் என்றே நகருங்கள் 
இலக்கு ஒன்றையே நினையுங்கள்     Share/Save/Bookmark

வியாழன், 25 மே, 2017

புத்தர் சிலைகள்
திடீரென முளைக்கும்
அதிசயபூமி - ஆனால்
புத்தர் வருவதில்லை
நாளை பிக்கு வருவார்
தங்குமிடம் எழும்
உதவிற்கு சிலர்
பின் அவர் குடும்பங்கள்
பிள்ளைகளுக்கு பாடசாலை
பாடசாலைக்கு ஆசிரியர்
பாதுகாக்க இராணுவம்

   மறுபுறம்?


Share/Save/Bookmark