செவ்வாய், 30 மே, 2017

31 / 05 / 1981


மறக்கமுடியா நாள்
மறைக்கவும் முடியா நாள்
தீ நூல்களை தின்ற  நாள்
ஒரு அமைச்சரின்/ பொறியியலாளனின்  
தலைமையில்
ஒன்றல்ல இரண்டல்ல
தேடமுடியா பல ஆயிரம் நூல்களை
திட்டமிட்டு பொசுக்கிய நாள்
ஏற்றுக்கொள்ளமுடியா குரூரம்
சமிபாடடைய முடியா கவலை
கடக்கமுடியா பாதாளம்
அணையமுடியா தீ Share/Save/Bookmark

சனி, 27 மே, 2017

என் இறப்பு 
ஒரு நிகழ்வாகவேண்டாம் 
எரித்துவிடுங்கள்
காற்று தான் விரும்பின் 
யாருக்கும் சொல்லட்டும் 
"தங்கல்" எவருக்கும் இல்லை 
உங்கள் பணி தொடருங்கள்   
வாழும் நேரமே வாழ்க்கை 
பருவகாலம் பார்த்து விதையுங்கள் 
அறுவடையில் 
அகங்காரத்தை  தவிருங்கள்   
பலனை பகிருங்கள் 
முடியும் என்றே நகருங்கள் 
இலக்கு ஒன்றையே நினையுங்கள்     Share/Save/Bookmark

வியாழன், 25 மே, 2017

புத்தர் சிலைகள்
திடீரென முளைக்கும்
அதிசயபூமி - ஆனால்
புத்தர் வருவதில்லை
நாளை பிக்கு வருவார்
தங்குமிடம் எழும்
உதவிற்கு சிலர்
பின் அவர் குடும்பங்கள்
பிள்ளைகளுக்கு பாடசாலை
பாடசாலைக்கு ஆசிரியர்
பாதுகாக்க இராணுவம்

   மறுபுறம்?


Share/Save/Bookmark

16 /05 /2009


விடிகாலை, எங்களுக்கு விடியவில்லை . நானும் அன்புவும் மண்மூடைகளால் சூழப்பட்ட மையத்திலிருந்து வெளிவந்தோம். ஜவான் எதிர்ப்பட்டார்.  கடற்கரைப்பக்கத்தை அவன் தொடுத்திட்டான். இன்னுமொரு ஆனந்தபுரம்தான் மிகுந்த கவலையோடு தெரிவித்தார். ஜவானிடம் விடைபெற்று நானும் அன்புவும் நேற்று நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு சென்றோம் .  அங்கு எம் சகபோராளிகள் இல்லை. அவர்கள் வேறு இடத்திற்கு சென்றிருக்கவேண்டும் . பெரியமரம் ஒன்றின் கீழ் விடப்பட்டிருந்த காயமடைந்தவர்களும் இல்லை. கடற்கரை பக்கமிருந்து சரமாரியாக சன்னங்கள் வந்துகொண்டிருந்தன . நாங்கள் நடந்து ரேகா தங்கியிருந்த இடத்திற்கு வந்தோம். அன்பு அன்றிரவு என்னை தொடர்புகொள்வதாய் கூறி சென்றுவிட்டார். ரேகாவுடன் அவரது குடும்பமும் ரேகாவுடன் தோளோடு தோள் நின்று பணியாற்றிய மருத்துவ நிர்வாகப்போராளிகளும் நின்றிருந்தனர்.  நானும் ரேகாவும் ஒரு வாகனத்தின் முன் இருக்கையில் இருந்து கதைத்தோம். பெரியவர் நிற்கிறார் ஏதாவதென்றால் சிறு சத்திரசிகிச்சை கூடமாவது அமைக்கவேண்டும் என்றேன். பலவிடயங்களை துயரங்களோடு பகிர்ந்துகொண்டோம். ரேகாதான் டொக்டர் அன்ரி , தேவா அன்ரி , சுதர்சன் தங்கியுள்ள இடங்களை குறித்துக்காட்டினார் . நான் ரேகாவிடம் விடைபெற்று சுதர்சனிடம் சென்றேன். சுதர்சன் கவலையான அந்தநேரத்திலும் என்னைக்கண்டவுடன் முகம் நிறைந்த சிரிப்புடன் வந்தார்.  நான் சுதர்சனை அழைத்துக்கொண்டு டொக்டர் அன்ரியை (பத்மலோஜினி அக்கா) சந்திக்க போனேன். அக்கா தங்கியிருந்த இடத்தில் இருந்து பிரபாவும் கண்ணனும் வந்தார்கள் . டொக்டர் அன்ரியும்
கரிகாலன் அண்ணையும் வெளிக்கிடுகிறார்கள் போகப்போகிறார்கள் என்றார்கள். நான் ஏனோ அக்காவை சந்திப்பதை தவிர்த்து தேவா அன்ரியிடம் போக தீர்மானித்தேன் . சிலதூரம் கடந்து சென்ற கண்ணன் "டொக்டர்" என அழைத்து விடைபெறுவதாய் கை அசைத்தார் . 90  ஆம் ஆண்டு கண்ணன் தனது ஆரம்பப் பயிற்சியின் போது காயமடைந்தார். நான் தான் அவருக்கு சிகிச்சை அளித்தேன். தேவா அன்ரி அப்போதும் இராணுவ உடையோடேயே இருந்தார். தலைவருடன் தான் இருக்கும் படங்களை தலைவரின் படம் கிழியாத முறையில் கிழித்துப்போட்டுக்கொண்டிருந்தார். நீண்ட  உரையாடி விடைபெற்றோம்.   சுதர்சன் தங்கியிருந்த இடத்திற்கு வந்தோம். இடைக்கிடை காயப்படுபவர்களுக்கு முதலுதவி செய்தோம். எங்களுடன் நின்ற சில பெண்பிள்ளைகள் எங்களை தேடிவந்தார்கள் . அவர்களை தங்களின் குடும்பங்களுடன் இணைந்து இராணுவக்கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள் போகச்சொன்னேன். எந்தநிலையிலும் சரணடையவேண்டாம் என்று அறிவுறுத்தினேன். மக்கள் பெரும் தொகையில்  இராணுவக்கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள் போய்க்கொண்டிருந்தார் கள் . சிலமக்கள் வந்து தாங்கள் என்ன செய்வது என்று கேட்டார்கள். நிலத்தை பார்த்தபடியே போக சொன்னேன்சுதர்சன் ஐயும் போக சொன்னேன். என்னை அனுப்பிவிட்டு போவதாய் பிடிவாதமாய் சொன்னான்ஒரு இளைஞன் தனது சகோதரி பிரசவவேதனையில் இருக்கிறார் உதவுங்கள் என்றுகேட்டார். அத்தான் சிலநாளுக்குமுன் செல்லில் இறந்துவிட்டதாய் அழுது சொன்னான்.        சுதர்சன் எங்கேயோ தேடி gloves கொண்டுவந்தான். பதுங்கு அகழி ஒன்றில் லாந்தர் வெளிச்சத்தில் பிள்ளை பிறந்தது. நாங்கள்தான் நஞ்சுக்கொடியை கொண்டுவந்து புதைத்தோம். எனது சட்டையில் இரத்தம் பட்டிருந்ததால்சுதர்சன் தனது சட்டை ஒன்றை தந்தார். நாங்கள் தங்கியிருந்த இடத்தில் மக்கள் நடமாட்டமே இல்லை. நாங்கள் இடத்தை மாற்றதீர்மானித்தோம். சுதர்சன் வோக்கியில் தொடர்பெடுத்து களைத்துப்போனான்.   சண்டை உக்கிரமாயிற்று. வானம் நிறைய வெளிச்சக்கூண்டுகள். மனம் தலைவர் தப்பிவிடவேண்டும் எனவேண்டிக்கொண்டது.       Share/Save/Bookmark

புதன், 24 மே, 2017

தலைமையிலிருந்து
சகல போராளிகளுக்கும்
ஒரு துளி விருப்பமும் இல்லை
"கட்டாய ஆட்சேர்ப்பு "
நிர்ப்பந்தம்
வேறு வழியில்லை
களத்தில் வாழும் சக உறவுக்கு
சிறு ஓய்வு தேவை
காயமடைந்தால்
வீரமரணமடைந்தால்
மாற்றீடு தேவை
தியாகத்தால் அணுஅணுவாய் செதுக்கிய
விடுதலைப்போராட்டம்
தக்கவைக்கப்படவேண்டும்
வேறு வழியில்லை
வீட்டுக்கு ஒருவர் விடுதலைக்காக
தவறுதான் தவறுதான்
தோற்றதால் பெரும் பூதமாகிறது தவறு
அந்தரவாழ்வால் அழக்கூடமுடியவில்லை
மீதமிருப்போர்
எத்தனை நாள் வாழ்வோம் ?
எரிமலைக்குள் இதயம் ஒளித்து

 
Share/Save/Bookmark

செவ்வாய், 23 மே, 2017

விடுதலைப்புலிகள் பலகோணங்களில் சிந்தித்தார்கள்.

2007 ஆம் ஆண்டின் ஆரம்ப மாதங்களாய் இருக்கவேண்டும். தமிழ்ச்செல்வன் தலைமையில் பரவிப்பாய்ஞ்சானில் அமைந்திருந்த திலீபன் முகாமில் ஒன்றுகூடல். பாடசாலைகளில் மாணவர்களுக்கு கராத்தே பயிற்சியை ஆரம்பிப்பது சம்மந்தமான ஒன்றுகூடல். கல்விக்கழக பொறுப்பாளர் பேபி அண்ணை, மாணவர் அமைப்புப்பொறுப்பாளர் கண்ணன், விளையாட்டுத்துறைப்பொறுப்பாளர் ராஜா , கராத்தே பிரதம பயிற்றுனர் சோதிமாஸ்டர், கல்விப்பணிப்பாளர்கள்  உடன் ஆலோசகராக நானும் அழைக்கப்பட்டிருந்தேன். அந்த ஒன்றுகூடலில் இப்பயிற்சிக்கான இணைப்பாளராய் விளையாட்டுத்துறையை சேர்ந்த இன்பன் தமிழ்ச்செல்வனால்  நியமிக்கப்பட்டார். சிலகிழமைகளிலேயே பயிற்சி ஆரம்பிக்கப்பட்டது. விடுதலைப்புலிகள் பலகோணங்களில் சிந்தித்தார்கள். நினைப்பதை செய்துமுடிக்கும் உளம் இருந்தது. 

    Share/Save/Bookmark

செவ்வாய், 16 மே, 2017

17/05/2009

மனம் சொல்கிறது
மக்கள் இல்லை
தலைவர் சென்றிருப்பார்
தொடர்புகள் இல்லை
எந்தநேரமும் கொல்லப்படலாம்
அல்லது பிடிபடலாம்
உடலில் தெம்பில்லை
சென்றால் தப்பலாம்
பணி முடியவில்லை
முடிவெடு !

"அண்ணை
முடிபு எடுக்கமுடியவில்லை
தொடர்புகள் இல்லை
உங்கள் அருகில் இருக்கவேண்டியவன்
நீங்கள் நலம் என ஊகித்து
நகர்கிறேன் நரகத்துக்குள் "

இக்கணம்வரை
எதற்கும் தயாராக இருந்தமனம்
கூனு(சு)கிறது
யாருமற்ற தெருவில்
நடைப்பிணம் நகர்கிறது 


Share/Save/Bookmark

சனி, 13 மே, 2017"மனம் "
எப்போதும் ஊசலாடிக்கொள்ளும்
மருத்துவ அணிகள்
போதவில்லை என்று சொல்லும்
எங்கே?
"மக்களுக்கான
முழுநேர களமருத்துவ அணி "
என்று முகத்தில் அறையும்
இழக்கமுடியா இழப்புக்களை
குறைத்திருக்க முடியாதா?
என்று ஏங்கும்
வெற்றிடத்தை நிரப்பியிருப்பது
"வளி" அல்ல
"வலி"
அழுவதோ
அஞ்சலிப்பதோ
போதுமானது அல்ல
"வழி " அறிதல் வேண்டும்         Share/Save/Bookmark

சனி, 6 மே, 2017

எமது நிலங்களுக்கு ஏற்றமுறையிலும் வருமானம் தரக்கூடிய வகையிலும்
மரநடுகை பாரிய அளவில் செய்யப்படவேண்டும் . வனவளங்கள் புத்துயிர்ப்போடு பாதுகாக்கப்படவேண்டும் . குளங்கள் ஆழமாக்கப்பட்டு நீர் சேகரிப்பு அதிகரிக்கப்படவேண்டும். நகரங்கள் விரிவாக்கப்படவேண்டும் . மக்கள் அடர்த்தி நகரங்களில் மட்டுப்படுத்தப்படவேண்டும். பொலுத்தீன் பாவனை குறைக்கவேண்டும். மக்களிடம் நல்ல சூழலை உருவாக்கும் அறிவு புகுத்தப்படவேண்டும் . வாகனங்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டு பொது வாகனவசதி சிறந்தமுறையில் பராமரிக்கப்படவேண்டும். எந்தக்காணிகளிலும் அறுபது வீதத்திற்கு மேல் கட்டிடம் அமைக்க அனுமதிக்கக்கூடாது. உயர்ந்தமாடிக்கட்டிடங்களும் எண்ணிக்கையில் அதிகரிக்க   அனுமதிக்கக்கூடாது.   கழிவகற்றல் , விவசாய விலங்குவேளாண்மை நவீன விஞ்ஞான வளர்ச்சியை பின்பற்றி ஊக்கத்துடன் நகர்தல் வேண்டும் .

டெங்கு போன்ற நோய்ப்பரம்பல் வருடத்தில் ஒன்று/ இரண்டு தடவை வரும் . நாம் அந்தகாலத்திற்கு முன்பே வருமுன்காப்பு வேலைத்திட்டங்களை செய்துவிட்டோம் என்றால் பின் நல்ல கண்காணிப்போடு (  Surveillance ) மக்களை டெங்கு தாக்கத்தில் இருந்து காப்பாற்றிவிடலாம் .         


Share/Save/Bookmark