புதன், 14 ஆகஸ்ட், 2013

போராட்ட ஆத்மா சாகாது
மக்கள் எழுபத்து ஏழில்
தனிநாட்டுக்கு தீர்ப்பளித்தனர்
தந்தை செல்வா
தமிழ் மக்களை கடவுளே
காப்பாற்றவேண்டும் என்றார்   
வேறுவழியில்லை
கைகளில் ஆயுதம்


நாங்கள் அடித்தால் அடிவாங்க
பயந்தாங்கோழிகளோ  
மகாத்மாக்களோ இல்லை 
அடித்தார்
திருப்பி அடித்தோம்
அடித்தவரில்
குற்றம் சொல்லா உலகு
திருப்பி அடித்தவரில்
எங்ஙனம் குற்றம் காண்பது?
எங்கள் கைகளை மட்டும் கட்டி
எதிரிக்கு ஆயுதம் கொடுத்தது
மூர்க்கமாய் கால் தடங்கள் போட்டது
முதுகை குறிவைத்தது
இயங்கிய உடல் ஓயலாம்
போராட்ட ஆத்மா சாகாது
அடிமைத்தனத்தை ஏற்காது
நீறு பூத்த நெருப்பாய்
விடுதலை தாகம்  இருக்கும்

ஒரு நாள் தீரும்


Share/Save/Bookmark

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

ஏன் மௌனம்?முஸ்லீம் மக்கள்
சிங்கள தமிழ் போரில்
தேவையான போதெல்லாம்
சிங்களத்திற்கு முண்டு தந்தனர்
சிங்களனின் புலனாய்வில்
முதுகெலும்பாய் இருந்தனர்
கிழக்கு தேர்தலிலும்
சிங்களத்துடன் கூட்டாகி
தமிழரை தோற்கடித்தனர் 
ஜெனிவாவிலும்
சிங்களத்திற்கு தோள் கொடுத்தனர்
தமிழ் இலக்கியத்திலும்
சிங்களத்திட்காய் பேசினர் 
கூட இருந்து குழிபறித்தனர்
தமிழர்கள் விழும்போதெல்லாம்
ஏறி உலக்க தவறவேயில்லை
பண்டமாற்றாய் பணம்
சிங்களம் முகத்தில் குத்த
முஸ்லீம் முதுகில் குத்தினர்

இன்று சிங்களம்
பள்ளிவாசல்களை உடைக்கிறது
வாழும் சுதந்திரத்தை பறிக்கிறது 
தமிழன் மட்டுமல்ல
நீயும் அடிமை என்கிறது

நாம் குரல் கொடுப்போம்
ஆக்கிரமிப்பை,அடாவடியை எதிர்க்க
அடுத்தவன் வாழ்வுரிமைக்காக 
ஏன் மௌனம்?

ஏன் மௌனம்?


Share/Save/Bookmark

சனி, 10 ஆகஸ்ட், 2013

ஆத்மா உலாவும் காணி

எழுபதில் கட்டிய வீடு,
முற்றத்தில் மல்லிகை பூக்களாய் சொரிய
வீடே மல்லிகை வாசம்
கிணற்றடியில்
செவ்வந்திபூக்கள் விரிந்திருக்க
நிலமெல்லாம் பாக்குகள்
தேசிமரத்தில் மஞ்சள் பல்ப்புகள்
மூடிக்கட்டியிருக்கும் மாதாளம் பழங்கள்
பழைய பூவரசிலிலும் பூக்கள் 
வளவில் ஆங்காங்கே செத்தல்கள்
அண்ணாந்து பார்த்தால் தேங்காய்க்குலைகள்
ஊஞ்சல் கட்டியிருக்கும் வேம்பு
அணில் ஓடிவிளையாடும் கொய்யா
திடுக்கிட நொங்கு விழும் சத்தம்
நாய் கூடபுகமுடியா வேலி

அம்மா,அம்மாவின் அம்மா,அம்மம்மாவின் அம்மா
அவர்களின் ஆத்மா உலாவும் காணி

கோடி ஆசையோடு வீடு பார்க்க போனோம்
வாசலில்  பூட்டு
முற்றத்தில் குறியீட்டுப்பலகை

" இராணுவத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது"  


Share/Save/Bookmark

காணாமல் போனவர்கணவன்
இந்திய இராணுவத்தால்
அல்லது
கூட இருந்தவரால்
காணாமல் போனவர்
தம்பி கடல்தொழிலில்
கடற்பீரங்கி சத்ததிற்கு பின்
காணாமல் போனவன்
மூத்தவன்
செம்மனிக்காலத்தில்
காணாமல் போனவன்
இளையவன்
முள்ளிவைக்காலுக்குப்பின்
சரணடைந்து காணாமல் போனவன்
மருமகளும்,பேரக்குஞ்சுகளும்
அவுஸ்ரேலியாவிற்கான  கடற்பயணத்தில்
காணாமல் போனவர்

இவள் வானத்தையும்
கடலையும் மாறி மாறி பார்க்கிறாள்        
Share/Save/Bookmark

புதன், 7 ஆகஸ்ட், 2013

குளிர்மையை பரிசளிக்கும் காடு
காடுகளில் வாழத்தொடங்கும் வரை
காடுகளின் சொர்க்கம் தெரிந்திருக்கவில்லை
வீடும் சுற்றமும் அற்பமாய்  போயிற்று
காடுகளில் வாழும்வரை

இன்று கலைந்த கூட்டில்
தாயை தேடும் குஞ்சுகளாய்
காடற்று வாழும் வாழ்வு 
காடுகளில் தவழும் இசையை
கேட்க மனம் மீண்டும் மீண்டும் துள்ளும்
பாலுக்கு அழும் குழந்தையைப்போல

காடுகள் அபாயமானவை
பழகாதவனுக்கு
காடுகள் அதிசயம்
நேசிப்பவனுக்கு
ஊர்வாழ்க்கை சீனி/சர்க்கரை
காட்டுவாழ்க்கை தேன் 

காட்டினுள்
மிருகங்கள் குளம் நாடிவரும் அழகு
வேட்டையால் சிதறும் கொடுமை
அழகிய ஊரில் கிபீர் இரைச்சலுடன்
குண்டு வீசுவது போல 

கொடும் வெயிலிலும்
குளிர்மையை பரிசளிக்கும் காடு
(யுத்த) காட்டுத்தீயால் வெந்தது
கூடி வாழ்ந்த உறவுகளுடன் 

காடு பத்திரமாய் வைத்திருக்குமா?
பழைய நினைவுகளை
எங்கள் சுவடுகளை

சாம்பலில் இருந்து பறவைகள் எழும்
நாளிற்காய் காத்திருக்கும் வதங்கிய மனம்
மீளவும் துளிர்க்குமா?
அந்த காடுகளைப்போல
அந்த குளிர்மை தரும் காடுகளைப்போலShare/Save/Bookmark

சனி, 3 ஆகஸ்ட், 2013

யாரும் குறிப்பெடுக்கா சோகம்

  


நேற்றுவரை
ஒன்றாய் வாழ்ந்தவரை,
வீரச்சாவு என கேட்கும் கணங்கள்
மனம் பிழிந்து சாறாகும் நிமிடங்கள்
அவர் உறவுகளை காணும் நிமிடத்துளிகள்
உலகில் யாருக்குமே வரக்கூடாது
எங்கள் பணிகளுக்குள்
உறவுகளுக்கு ஆறுதல் சொல்லி
இறுதி நிகழ்வை நடாத்தி
எல்லோரும் போன பின்
துயிலும் இல்லத்தில் இருந்து
நாங்கள் அழுவோம்
சிலர் ஊமையாய் அழுவர்
சிலர் ஒப்பாரி வைப்பர்
சிலர் சாமம் தாண்டியும்
மண்ணில் வீழ்ந்துகிடப்பர் 

யாரும் குறிப்பெடுக்கா சோகம்  


Share/Save/Bookmark