புதன், 7 ஆகஸ்ட், 2013

குளிர்மையை பரிசளிக்கும் காடு
காடுகளில் வாழத்தொடங்கும் வரை
காடுகளின் சொர்க்கம் தெரிந்திருக்கவில்லை
வீடும் சுற்றமும் அற்பமாய்  போயிற்று
காடுகளில் வாழும்வரை

இன்று கலைந்த கூட்டில்
தாயை தேடும் குஞ்சுகளாய்
காடற்று வாழும் வாழ்வு 
காடுகளில் தவழும் இசையை
கேட்க மனம் மீண்டும் மீண்டும் துள்ளும்
பாலுக்கு அழும் குழந்தையைப்போல

காடுகள் அபாயமானவை
பழகாதவனுக்கு
காடுகள் அதிசயம்
நேசிப்பவனுக்கு
ஊர்வாழ்க்கை சீனி/சர்க்கரை
காட்டுவாழ்க்கை தேன் 

காட்டினுள்
மிருகங்கள் குளம் நாடிவரும் அழகு
வேட்டையால் சிதறும் கொடுமை
அழகிய ஊரில் கிபீர் இரைச்சலுடன்
குண்டு வீசுவது போல 

கொடும் வெயிலிலும்
குளிர்மையை பரிசளிக்கும் காடு
(யுத்த) காட்டுத்தீயால் வெந்தது
கூடி வாழ்ந்த உறவுகளுடன் 

காடு பத்திரமாய் வைத்திருக்குமா?
பழைய நினைவுகளை
எங்கள் சுவடுகளை

சாம்பலில் இருந்து பறவைகள் எழும்
நாளிற்காய் காத்திருக்கும் வதங்கிய மனம்
மீளவும் துளிர்க்குமா?
அந்த காடுகளைப்போல
அந்த குளிர்மை தரும் காடுகளைப்போலShare/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக