ஞாயிறு, 31 டிசம்பர், 2017

திரும்பிப்பார்க்கிறேன் 7

 2006 ,2007 ,2008  ஆண்டுக்காலப்பகுதியில் வன்னிக்குள் சுமார் பத்தாயிரம் முதலுதவியாளர்கள் உருவாக்கப்பட்டார்கள். தமிழீழ சுகாதாரசேவைகளின் நெறிப்படுத்தலில் குறிப்பாக கஷ்டப்பிரதேசங்களில் இவ் முதலுதவியாளர்கள் உருவாக்கப்பட்டார்கள். தமிழீழ சுகாதாரசேவைகளின் தொற்றுநோய் தடுப்புப் பொறுப்பாளர் தமிழ்வாணன் அவர்கள் இந்நடவடிக்கையிற்கு பாரிய பங்காற்றியிருந்தார்.    தமிழீழ சுகாதாரசேவைகள் ,  திலீபன் மருத்துவசேவையினர் இவ்வகுப்புக்களை நடாத்தி முடித்து தமிழீழ சுகாதாரசேவைகளின் முதலுதவி சான்றிதழ்களையும் வழங்கியிருந்தனர். பல முதலுதவியாளர்களை போர்ச்சூழலில் இழந்துவிட்டோம். நிச்சயமாக போர்மருத்துவத்தில் இவர்களது பங்கும் இலைமறைகாயாய் இருந்திருக்கும். நான் வீட்டுக்கு ஒரு முதலுதவியாளரை  உருவாக்க நினைத்திருந்தேன் (சுமார் எண்பதாயிரம்). அதற்கு சூழல் இடம்தரவில்லை.   
    Share/Save/Bookmark

வெள்ளி, 29 டிசம்பர், 2017

 அண்ணா !
 இந்த வருடமும்
"நாட்குறிப்பு" கிடைக்கவில்லை
ஒன்பது வருடங்களாய்
உங்கள் "கையெழுத்தை" தேடுகிறேன்
கவலைகளால் கழிகின்ற காலத்தை
குறித்துவைக்க "நாட்குறிப்பு" கிடைக்கவில்லை
உன்னத விடுதலைக்கு உயிர்தந்த வீரருக்காய்
உடன் கூடி சென்ற மக்களுக்காய்
எதுவும் செய்துவிட முடியவில்லை
இதயமதை முள்மீது சொருகிவிட்டு
மறதிநோய்  வாராதோ என ஏங்குகிறேன் 

"தலைவரின் தனிப்பட்ட மருத்துவராய் அன்று 
தனித்துப்போனேன் இன்று
தத்தளித்துவாழ்கிறேன் மனதைக்கொன்று"
Share/Save/Bookmark

புதன், 27 டிசம்பர், 2017

திரும்பிப்பார்க்கிறேன் -6

  2009 இல் போர் முடிந்ததும் இலங்கை அரசு வன்னியில் திட்டமிட்டு செய்த படுகொலைகளை மறைக்கமுற்பட்டது. போர் தீவிரமான போது சர்வதேச அமைப்புகளை அப்பிரதேசத்தில் இருந்து முழுமையாக அகற்றியிருந்தது. போர்க்காலத்தில் உள்ளிருந்து சொல்லப்பட்ட தகவல்களையும் புலிகளின் நெருக்குதலால் சொல்கிறார்கள் என கதைவிட்டிருந்தது. போரில் மக்களுக்கு Zero  Casualty  என முழுப்பொய்யை சொன்னது. போரின்பின்பும் சர்வதேசத்தில் இருந்து மக்களை குறிப்பிட்டகாலம் பிரித்துவைத்து பொய்யை உலகிற்கு உண்மையாக்க முயன்றது. இழப்பின் சூடு ஆறமுதல் உலகிற்கு உண்மையை சொல்லும் நேரடி சாட்சிகளில் ஒருவனாய் இருந்தது மனதிற்கு ஆறுதல் தருகிறது.  உலகம் எங்களுக்கு எதுவும் செய்யப்போவதில்லை என்பது தெரிந்திருந்தாலும் இலங்கை இனப்படுகொலை செய்தது என்பது செய்தியாயிற்று.  2009 ,2010 ஆண்டுக்காலங்கள் எனக்கு அதிக மனப்பாதிப்பு காலமாய் இருந்தது.         Share/Save/Bookmark

செவ்வாய், 26 டிசம்பர், 2017

திரும்பிப்பார்க்கிறேன் - 5

 இன்னும் இரண்டு வருடங்களில் சுதேச மருத்துவத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வோம் என்ற கனவில் 2008 ஆம் ஆண்டளவில் இருந்தோம். கனகாம்பிகைக்குளம் பிரதேசத்தில் மூலிகைத்தோட்டத்தை சில மாதங்களில் கடின உழைப்பில் அமைத்து ஐநூறுக்கு மேற்பட்ட மூலிகையுடன் பொழிந்து நின்றது அந்த மூலிகைநிலம். சுகாதாரசேவைகளின் பணிப்பாளர் வாமன் அவர்களின் அயராத முயற்சி புது நம்பிக்கைகளை தந்தது. 2009   இல் சுகாதார விஞ்ஞான கல்விநிறுவனத்தில் சுதேச மருத்துவ Diploma  ஆரம்பிக்கும் திட்டத்தில் இருந்தேன். எமது "கப்டன் திலீபனா" சுதேச மருந்து உற்பத்தி நிலையத்தில் நாற்பதிற்கும் மேற்பட்ட மருந்துகள் செய்யப்பட்டுக்கொண்டு இருந்தன.   2009   இல் உற்பத்தியை நவீனப்படுத்தும் யோசனைகளுடன் இருந்தோம். கௌசல்யன் நடமாடும் மருத்துவசேவைக்கூடாக வசதிகுறைந்த கிராமங்களுக்கும்  சுதேசமருத்துவத்தை வழங்கிவந்தோம்  .  "சுதேச ஒளி" என்ற காலாண்டு இதழையும் நடாத்திவந்தோம்.        Share/Save/Bookmark

சனி, 23 டிசம்பர், 2017

திரும்பிப்பார்க்கிறேன்- 4


கிளிநொச்சி இரணைமடு பிரதேசத்தில் சமாதானகாலத்தில் அதிநவீன மருத்துவமனை ஒன்று புலம்பெயர் உறவுகளின் உதவியுடன் விடுதலைப்புலிகளால் கட்ட திட்டமிடப்பட்டது.  அது சம்மந்தமான செய்தி மேலெழுந்தவாரியாக தெரிந்திருந்தது. எனது வேலைப்பளுக்களுக்கிடையில் அச்செய்தியை நான் பெரிதுபடுத்தியிருக்கவில்லை.  மருத்துவமனை சம்மந்தமான முக்கிய சந்திப்பு ஒன்றுக்கு முன்பு அரசியல்த்துறை பொறுப்பாளரால் நான் மருத்துவமனையின் Executive  Director   ஆக அறிவிக்கப்பட்டேன். தாயகம் மருத்துவமனை திட்டம் உலகத்தரத்திலானது. இயக்கம் மிகவும் தூரநோக்கோடு இருந்தது . "தாயக மருத்துவமனை"  என பெயரிடப்பட்ட அந்த மருத்துவமனையும் கானல் நீராகவே போய் விட்டது.      Share/Save/Bookmark

செவ்வாய், 19 டிசம்பர், 2017

சுவாசிக்க நல்ல காற்று
அருந்த தூய நீர்
இயற்கையில் விளைந்த உணவு
தற்சுகாதாரம்
பாதுகாப்பான சமையல், பரிமாறல்
தாய்,சேய்,முதியோர் நலன்
சினம் அறியா, புறம் பேசா வாழ்வு
இனமத பேதமில்லை
அறமே வரம் "கரம் இணைவோம்" 
Share/Save/Bookmark

வியாழன், 14 டிசம்பர், 2017

திரும்பிப்பார்க்கிறேன் 3

 2008 ஆம்  ஆண்டுப்பகுதியில்  உணவு, மருத்துவ பகுப்பாய்வு ஆய்வுகூடத்தை ஆரம்பிக்கும் பாரிய திட்டமிடல் எங்களால் மேற்கொள்ளப்பட்டது. அன்பு அதற்காக உழைத்திருந்தார் . ஆய்வுகூடத்திற்கான வரைபடத்தை கீறியிருந்தேன்  , நிலம் என்பன ஒதுக்கிடப்பட்டு கட்டிட வேலைகளை ஆரம்பிக்கும் நிலையில் அன்பு இருந்தார். அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி நாம் நகர இராணுவம் புகுந்தது எம் எல்லைக்குள்.    Share/Save/Bookmark

புதன், 15 நவம்பர், 2017

கார்த்திகை

இதயம் துடிக்கிறது
எப்போதும் போல அல்ல
இது கார்த்திகை
துடிக்கையில் வலிக்கிறது
அவர் குரல்கள் ஒலிக்கிறது
மொழி, விழியிருந்தும்
உம்மோடு உரைக்க வழியில்லை எமக்கு 

விளக்கு அணையாமல் எரியும்
குருதியால் அன்று
கண்ணீரால் இன்று
இனியும் எரியும் வரலாற்றில் நின்று   Share/Save/Bookmark

வெள்ளி, 10 நவம்பர், 2017

திரும்பிப்பார்க்கிறேன்-2

எனது நிர்வாகத்தின் கீழ் இருந்த எல்லாப்போராளிகளையும் மருத்துவ அறிவு வழங்கியே வைத்திருந்தேன். எனது மருத்துவ நிர்வாகிகளும் தேவையான போது நேரடி மருத்துவக் கடமையில்  ஈடுபடுவார்கள். எனது நிர்வாகிகளை தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்தேன் .  இறுதிப்போர்க்காலங்களில் எனது நிர்வாகிகள் மக்களுக்கான/ போராளிகளுக்கான / இருவருக்குமான நேரடி மருத்துவக்கடமையில்  ஈடுபடுத்தப்பட்டார்கள் . எந்த ஒரு போராளியையும் என் தனிப்பட்ட கடமைகளுக்கு எக்காலத்திலும் பயன்படுத்தியதில்லை. எனக்குரிய போராளிகள் எந்த நேரமும் எதற்கும் தயாராய் இருப்பதையே நான் விரும்பினேன்.      Share/Save/Bookmark

வியாழன், 9 நவம்பர், 2017

திரும்பிப்பார்க்கிறேன்

ஆனந்தபுரத்தில் தலைவர் இருக்கிறார்( பங்குனி பிற்பகுதி  2009). உண்மையிலேயே இறுதி சண்டை இங்குதான் திட்டமிடப்பட்டிருக்கக்கூடும். மக்களின் இழப்பை குறைக்க எண்ணியிருக்கவேண்டும். எனக்கு அறிவிக்கப்படுகிறது  அண்ணை வரமாட்டன் என்று நிற்குது. ஆனந்தபுரத்திற்குள் சத்திரசிகிச்சை கூடம் அவசரமாய் போடவேண்டும். உண்மையிலேயே எங்களது சத்திரசிகிச்சை கூடங்கள் முழு மூச்சுடன் எமது சகல வளங்களையும் பாவித்து இயங்கிக்கொண்டிருக்கிறது. எந்த சத்திரசிகிச்சை கூடத்தின் வினைத்திறனையும் பாதிக்காமல் ஆளணி ,உபகரணங்களை ஒழுங்கு செய்யவேண்டும் . நான் சுதர்சனையும் கமலையும் மட்டும் என்னுடன் கூட்டிப் போக ஒழுங்குபடுத்தினேன். மிகுதியை ஆனந்தபுரத்தில் உள்ள மருத்துவ வளத்தை பயன்படுத்த முடிவெடுத்தேன் .  தளபதி பானு இடத்தினை ஒழுங்கு செய்திருந்தார். இரவு 11 மணிக்கு செல்ல ஆயத்தமாக இருந்தோம். இரவு 3  மணிக்கு தகவல் கிடைத்தது தலைவர் வந்திட்டார். ஆனந்தபுரத்தில் நின்ற தளபதிகள்  தலைவரை ஆனந்தபுரத்தைவிட்டு செல்லுமாறு கெஞ்சி அனுப்பிவிட்டதாய் சொல்லப்பட்டது.  எங்களது பயணமும் இரத்துசெய்யப்பட்டது. தலைவர் எப்போதும் பல எண்ணங்களுடன் இருப்பார். அதற்காய் ஒரு சத்திரசிகிச்சை அணியை இறுதிவரை மனதிற்குள் ஆயத்த நிலையிலேயே வைத்திருந்தேன்.   வருமுன்காப்பு நடவடிக்கையை முன்னெடுக்க லோலோவிற்கு தினமும் ஆலோசனைகளை வழங்கிக்கொண்டிருந்தேன். வருமுன்காப்பு நடவடிக்கையில்  நான் எப்போதும் அதிககரிசனையில் இருந்தேன்.    Share/Save/Bookmark

செவ்வாய், 24 அக்டோபர், 2017

குர்திஸ்தான், கத்தலோனியா மக்களின் தனிநாட்டுக்கான அமோக ஆதரவு  ஆக்கிரமிப்பாளர்களால் மட்டுமல்ல  ஜனநாயகம் பேசும் நாடுகளாலும் கண்டு கொள்ளப்படவில்லை. 1977 இல் தமிழீழ மக்களின் தனிநாட்டுக்கான அமோக ஆதரவை ஜனநாயகம் பேசும் உலகு கண்டுகொள்ளாததால் பூர்வீக இனம்  ஒன்றின் ஆயுள் திட்டமிட்டவகையில் குறுக்கப்படுகிறது.  Share/Save/Bookmark

புதன், 4 அக்டோபர், 2017

இன்று ஒவ்வொரு முகங்களாய் வந்து வந்து போகிறது

இயக்கத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய அதிவிசேட பயிற்சி முகாம்கள் நடாத்தப்பட்டன. அப்பயிற்சிகளில் ஒரு பயிற்சிபெறுனராகவும் சமகாலத்தில்அம்முகாம்களின் மருத்துவப்பொறுப்பாளனாகவும்  வாழ்ந்தகாலங்கள் கடினமானவையாகவும்  இயக்கவளர்ச்சிற்கு இன்றியமையாததாகவும் உணர்கிறேன். காலை ஐந்து மணிக்கு துயில் எழுந்தால் இரவு பன்னீரெண்டுக்குப்பின்தான் நித்திரைக்கு செல்வேன். பயிற்சியாளர்களை தேர்வு செய்யும் ஆரம்ப பரிசோதனையில் இருந்து அவர்களது உணவு பட்டியலை தயாரித்து எனது கடமைகள் நீண்டவை. எனது கடமைகளை ஒழுங்காக செய்ததாய் உணர்கிறேன். அதனால்த்தான்  என்னவோ தரையில் நடந்த நான்கு   அதிவிசேட பயிற்சி முகாம்களுக்கும் நான் தெரிவு செய்யப்பட்டேன். நான்கிலும் பங்குபற்றியவன் இயக்கத்திலேயே நான் மட்டும்தான்.  இன்று ஒவ்வொரு முகங்களாய் வந்து வந்து போகிறது. நினைவுகள் கொடுமையானவை.           Share/Save/Bookmark

ஞாயிறு, 24 செப்டம்பர், 2017

இப்ப நான் மட்டும் தனிமையில்

நண்பன் திலீபனின் நினைவுகளை சுமந்து 30 வருடங்கள் ஆகிறது . இன்றைய நாளும் எனக்கு கடினமாக இருக்கிறது. இயக்கத்தில் இருந்த காலங்களில் அவன் இல்லை என்பது பெரிதாக தெரியவில்லை. இயக்கம் சொன்னால் நானும் உண்ணாவிரதம் இருப்பேன் என்ற இறுமாப்பில் வாழ்ந்தேன். இன்றைய நாட்கள் குற்ற உணர்வில் கழிகிறது.
என் அம்மம்மா மரவள்ளிக்கிழங்கு அவித்து ஒரு சருவத்திலேயும் சிகப்பு சம்பல் ஒரு சாப்பாட்டுக்கோப்பையிலேயும் தருவா. நான், திலீபன், அருணன் சுற்றி இருந்து சாப்பிடுவம். இப்ப நான் மட்டும் தனிமையில்.  Share/Save/Bookmark

வெள்ளி, 28 ஜூலை, 2017

துயர் தோய்ந்த பின்னிரவும் அதிகாலையும் .

24 / 11  / 1992  வளலாயில் மருத்துவ submain யில்  ஷெல்மழையிற்கு  நடுவில் கடமையில்நின்றேன் . எனது சகோதரன் படுகாயம் அடைந்துவிட்டான் என்பதை நடைபேசி ஊடாக அறிந்துகொண்டேன். அவன் இறந்தது அறிந்தும் அழுத்தவாறே இறுதிவரை முழுமூச்சுடன் கடமையில் நின்றேன். துயர் தோய்ந்த பின்னிரவும் அதிகாலையும் .      Share/Save/Bookmark

வியாழன், 22 ஜூன், 2017

ராஜிவ் காந்தி கொலையில் குற்றம் சாட்டப்பட்ட கைதி "பயஸ் " ,இருபத்தைந்து வருட சிறைவாழ்விற்கு பின் தன்னை கருணைக்கொலை செய்யுமாறு கேட்கிறார் .  இலங்கையில் அமைதிப்படையால் கொல்லப்பட்ட மூவாயிரத்திற்கு மேற்பட்ட கொலைகளில் ராஜீவ் காந்தி எவ்வாறு சம்மந்தப்பட்டாரோ அதேபோல் பயஸும் ராஜீவ் கொலையில் சம்மந்தப்பட்டிருக்கலாம். இலங்கையிலும் பெரும் படுகொலைகளுடன் சம்மந்தப்பட்டவர்கள் ஜனாதிபதியாய், அமைச்சராய் ,இராணுவ அதிகாரியாய் சுகபோக வாழ்வுவாழ்கிறார்கள். உண்மையில் ஜனநாயகம் , நீதி என்பன நடைமுறையில் ஒரு கேலிக்கூத்து.


Share/Save/Bookmark

ஞாயிறு, 18 ஜூன், 2017

ஈழத்தமிழனாய் தலைகுனிவதை தவிர வேறுவழியில்லை.  காணாமல் போனோர்,  சிறையில் வாடும் அரசியல் கைதிகள்  உள்ளிட்ட பல துன்பத்தில் எம் உறவுகள் வதங்கிக்கிடக்க , நேர்த்தியான அரசியலற்று சிதைந்துபோகிறது ஆண்ட இனம்.

சிங்கள அரச/இராணுவ இயந்திரம் ஓய்வற்று இயங்கும்( இராணுவ முகாமைத்துவம் அறிந்தவர் விரிவாய் அறிவர்) . சிங்கள குடியேற்றம் உள்ளீடாய் தமிழின அழிப்பில் இந்நேரம் மூச்சாய் இயங்கும். நாங்கள் என்ன செய்யலாம்? முதுகில் குத்தும் தமிழனை பார்ப்பதா? கறையானாய் அரிக்கும் சிங்களவனை பார்ப்பதா?   


Share/Save/Bookmark

சனி, 3 ஜூன், 2017

புனர்வாழ்வுக் கழகத்தின் கீழ் Children Development council (CDC) என்ற அரசசார்பற்ற அமைப்பு இயங்கியது  அதன் முழுக்குறிக்கோள் வட கிழக்கிலுள்ள  முன்பள்ளி மாணவர்களின் வளர்ச்சிதான். அதை இயக்கியது ரவி அண்ணை (மகேந்தி,  சூட்டியின் சகோ), பிரான்சிஸ் அடிகளார் அதன் தலைவராய் இருந்தார். நான் ஆலோசகராய் இருந்தேன். இறுதிக்கூட்டம் 2008 பிற்பகுதியில் கிளி/ பசுமை நிறுவனம் அமைந்த பகுதியில் நடந்தது.    


Share/Save/Bookmark

செவ்வாய், 30 மே, 2017

31 / 05 / 1981


மறக்கமுடியா நாள்
மறைக்கவும் முடியா நாள்
தீ நூல்களை தின்ற  நாள்
ஒரு அமைச்சரின்/ பொறியியலாளனின்  
தலைமையில்
ஒன்றல்ல இரண்டல்ல
தேடமுடியா பல ஆயிரம் நூல்களை
திட்டமிட்டு பொசுக்கிய நாள்
ஏற்றுக்கொள்ளமுடியா குரூரம்
சமிபாடடைய முடியா கவலை
கடக்கமுடியா பாதாளம்
அணையமுடியா தீ Share/Save/Bookmark

சனி, 27 மே, 2017

என் இறப்பு 
ஒரு நிகழ்வாகவேண்டாம் 
எரித்துவிடுங்கள்
காற்று தான் விரும்பின் 
யாருக்கும் சொல்லட்டும் 
"தங்கல்" எவருக்கும் இல்லை 
உங்கள் பணி தொடருங்கள்   
வாழும் நேரமே வாழ்க்கை 
பருவகாலம் பார்த்து விதையுங்கள் 
அறுவடையில் 
அகங்காரத்தை  தவிருங்கள்   
பலனை பகிருங்கள் 
முடியும் என்றே நகருங்கள் 
இலக்கு ஒன்றையே நினையுங்கள்     Share/Save/Bookmark

வியாழன், 25 மே, 2017

புத்தர் சிலைகள்
திடீரென முளைக்கும்
அதிசயபூமி - ஆனால்
புத்தர் வருவதில்லை
நாளை பிக்கு வருவார்
தங்குமிடம் எழும்
உதவிற்கு சிலர்
பின் அவர் குடும்பங்கள்
பிள்ளைகளுக்கு பாடசாலை
பாடசாலைக்கு ஆசிரியர்
பாதுகாக்க இராணுவம்

   மறுபுறம்?


Share/Save/Bookmark

16 /05 /2009


விடிகாலை, எங்களுக்கு விடியவில்லை . நானும் அன்புவும் மண்மூடைகளால் சூழப்பட்ட மையத்திலிருந்து வெளிவந்தோம். ஜவான் எதிர்ப்பட்டார்.  கடற்கரைப்பக்கத்தை அவன் தொடுத்திட்டான். இன்னுமொரு ஆனந்தபுரம்தான் மிகுந்த கவலையோடு தெரிவித்தார். ஜவானிடம் விடைபெற்று நானும் அன்புவும் நேற்று நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு சென்றோம் .  அங்கு எம் சகபோராளிகள் இல்லை. அவர்கள் வேறு இடத்திற்கு சென்றிருக்கவேண்டும் . பெரியமரம் ஒன்றின் கீழ் விடப்பட்டிருந்த காயமடைந்தவர்களும் இல்லை. கடற்கரை பக்கமிருந்து சரமாரியாக சன்னங்கள் வந்துகொண்டிருந்தன . நாங்கள் நடந்து ரேகா தங்கியிருந்த இடத்திற்கு வந்தோம். அன்பு அன்றிரவு என்னை தொடர்புகொள்வதாய் கூறி சென்றுவிட்டார். ரேகாவுடன் அவரது குடும்பமும் ரேகாவுடன் தோளோடு தோள் நின்று பணியாற்றிய மருத்துவ நிர்வாகப்போராளிகளும் நின்றிருந்தனர்.  நானும் ரேகாவும் ஒரு வாகனத்தின் முன் இருக்கையில் இருந்து கதைத்தோம். பெரியவர் நிற்கிறார் ஏதாவதென்றால் சிறு சத்திரசிகிச்சை கூடமாவது அமைக்கவேண்டும் என்றேன். பலவிடயங்களை துயரங்களோடு பகிர்ந்துகொண்டோம். ரேகாதான் டொக்டர் அன்ரி , தேவா அன்ரி , சுதர்சன் தங்கியுள்ள இடங்களை குறித்துக்காட்டினார் . நான் ரேகாவிடம் விடைபெற்று சுதர்சனிடம் சென்றேன். சுதர்சன் கவலையான அந்தநேரத்திலும் என்னைக்கண்டவுடன் முகம் நிறைந்த சிரிப்புடன் வந்தார்.  நான் சுதர்சனை அழைத்துக்கொண்டு டொக்டர் அன்ரியை (பத்மலோஜினி அக்கா) சந்திக்க போனேன். அக்கா தங்கியிருந்த இடத்தில் இருந்து பிரபாவும் கண்ணனும் வந்தார்கள் . டொக்டர் அன்ரியும்
கரிகாலன் அண்ணையும் வெளிக்கிடுகிறார்கள் போகப்போகிறார்கள் என்றார்கள். நான் ஏனோ அக்காவை சந்திப்பதை தவிர்த்து தேவா அன்ரியிடம் போக தீர்மானித்தேன் . சிலதூரம் கடந்து சென்ற கண்ணன் "டொக்டர்" என அழைத்து விடைபெறுவதாய் கை அசைத்தார் . 90  ஆம் ஆண்டு கண்ணன் தனது ஆரம்பப் பயிற்சியின் போது காயமடைந்தார். நான் தான் அவருக்கு சிகிச்சை அளித்தேன். தேவா அன்ரி அப்போதும் இராணுவ உடையோடேயே இருந்தார். தலைவருடன் தான் இருக்கும் படங்களை தலைவரின் படம் கிழியாத முறையில் கிழித்துப்போட்டுக்கொண்டிருந்தார். நீண்ட  உரையாடி விடைபெற்றோம்.   சுதர்சன் தங்கியிருந்த இடத்திற்கு வந்தோம். இடைக்கிடை காயப்படுபவர்களுக்கு முதலுதவி செய்தோம். எங்களுடன் நின்ற சில பெண்பிள்ளைகள் எங்களை தேடிவந்தார்கள் . அவர்களை தங்களின் குடும்பங்களுடன் இணைந்து இராணுவக்கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள் போகச்சொன்னேன். எந்தநிலையிலும் சரணடையவேண்டாம் என்று அறிவுறுத்தினேன். மக்கள் பெரும் தொகையில்  இராணுவக்கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள் போய்க்கொண்டிருந்தார் கள் . சிலமக்கள் வந்து தாங்கள் என்ன செய்வது என்று கேட்டார்கள். நிலத்தை பார்த்தபடியே போக சொன்னேன்சுதர்சன் ஐயும் போக சொன்னேன். என்னை அனுப்பிவிட்டு போவதாய் பிடிவாதமாய் சொன்னான்ஒரு இளைஞன் தனது சகோதரி பிரசவவேதனையில் இருக்கிறார் உதவுங்கள் என்றுகேட்டார். அத்தான் சிலநாளுக்குமுன் செல்லில் இறந்துவிட்டதாய் அழுது சொன்னான்.        சுதர்சன் எங்கேயோ தேடி gloves கொண்டுவந்தான். பதுங்கு அகழி ஒன்றில் லாந்தர் வெளிச்சத்தில் பிள்ளை பிறந்தது. நாங்கள்தான் நஞ்சுக்கொடியை கொண்டுவந்து புதைத்தோம். எனது சட்டையில் இரத்தம் பட்டிருந்ததால்சுதர்சன் தனது சட்டை ஒன்றை தந்தார். நாங்கள் தங்கியிருந்த இடத்தில் மக்கள் நடமாட்டமே இல்லை. நாங்கள் இடத்தை மாற்றதீர்மானித்தோம். சுதர்சன் வோக்கியில் தொடர்பெடுத்து களைத்துப்போனான்.   சண்டை உக்கிரமாயிற்று. வானம் நிறைய வெளிச்சக்கூண்டுகள். மனம் தலைவர் தப்பிவிடவேண்டும் எனவேண்டிக்கொண்டது.       Share/Save/Bookmark

புதன், 24 மே, 2017

தலைமையிலிருந்து
சகல போராளிகளுக்கும்
ஒரு துளி விருப்பமும் இல்லை
"கட்டாய ஆட்சேர்ப்பு "
நிர்ப்பந்தம்
வேறு வழியில்லை
களத்தில் வாழும் சக உறவுக்கு
சிறு ஓய்வு தேவை
காயமடைந்தால்
வீரமரணமடைந்தால்
மாற்றீடு தேவை
தியாகத்தால் அணுஅணுவாய் செதுக்கிய
விடுதலைப்போராட்டம்
தக்கவைக்கப்படவேண்டும்
வேறு வழியில்லை
வீட்டுக்கு ஒருவர் விடுதலைக்காக
தவறுதான் தவறுதான்
தோற்றதால் பெரும் பூதமாகிறது தவறு
அந்தரவாழ்வால் அழக்கூடமுடியவில்லை
மீதமிருப்போர்
எத்தனை நாள் வாழ்வோம் ?
எரிமலைக்குள் இதயம் ஒளித்து

 
Share/Save/Bookmark

செவ்வாய், 23 மே, 2017

விடுதலைப்புலிகள் பலகோணங்களில் சிந்தித்தார்கள்.

2007 ஆம் ஆண்டின் ஆரம்ப மாதங்களாய் இருக்கவேண்டும். தமிழ்ச்செல்வன் தலைமையில் பரவிப்பாய்ஞ்சானில் அமைந்திருந்த திலீபன் முகாமில் ஒன்றுகூடல். பாடசாலைகளில் மாணவர்களுக்கு கராத்தே பயிற்சியை ஆரம்பிப்பது சம்மந்தமான ஒன்றுகூடல். கல்விக்கழக பொறுப்பாளர் பேபி அண்ணை, மாணவர் அமைப்புப்பொறுப்பாளர் கண்ணன், விளையாட்டுத்துறைப்பொறுப்பாளர் ராஜா , கராத்தே பிரதம பயிற்றுனர் சோதிமாஸ்டர், கல்விப்பணிப்பாளர்கள்  உடன் ஆலோசகராக நானும் அழைக்கப்பட்டிருந்தேன். அந்த ஒன்றுகூடலில் இப்பயிற்சிக்கான இணைப்பாளராய் விளையாட்டுத்துறையை சேர்ந்த இன்பன் தமிழ்ச்செல்வனால்  நியமிக்கப்பட்டார். சிலகிழமைகளிலேயே பயிற்சி ஆரம்பிக்கப்பட்டது. விடுதலைப்புலிகள் பலகோணங்களில் சிந்தித்தார்கள். நினைப்பதை செய்துமுடிக்கும் உளம் இருந்தது. 

    Share/Save/Bookmark

செவ்வாய், 16 மே, 2017

17/05/2009

மனம் சொல்கிறது
மக்கள் இல்லை
தலைவர் சென்றிருப்பார்
தொடர்புகள் இல்லை
எந்தநேரமும் கொல்லப்படலாம்
அல்லது பிடிபடலாம்
உடலில் தெம்பில்லை
சென்றால் தப்பலாம்
பணி முடியவில்லை
முடிவெடு !

"அண்ணை
முடிபு எடுக்கமுடியவில்லை
தொடர்புகள் இல்லை
உங்கள் அருகில் இருக்கவேண்டியவன்
நீங்கள் நலம் என ஊகித்து
நகர்கிறேன் நரகத்துக்குள் "

இக்கணம்வரை
எதற்கும் தயாராக இருந்தமனம்
கூனு(சு)கிறது
யாருமற்ற தெருவில்
நடைப்பிணம் நகர்கிறது 


Share/Save/Bookmark

சனி, 13 மே, 2017"மனம் "
எப்போதும் ஊசலாடிக்கொள்ளும்
மருத்துவ அணிகள்
போதவில்லை என்று சொல்லும்
எங்கே?
"மக்களுக்கான
முழுநேர களமருத்துவ அணி "
என்று முகத்தில் அறையும்
இழக்கமுடியா இழப்புக்களை
குறைத்திருக்க முடியாதா?
என்று ஏங்கும்
வெற்றிடத்தை நிரப்பியிருப்பது
"வளி" அல்ல
"வலி"
அழுவதோ
அஞ்சலிப்பதோ
போதுமானது அல்ல
"வழி " அறிதல் வேண்டும்         Share/Save/Bookmark

சனி, 6 மே, 2017

எமது நிலங்களுக்கு ஏற்றமுறையிலும் வருமானம் தரக்கூடிய வகையிலும்
மரநடுகை பாரிய அளவில் செய்யப்படவேண்டும் . வனவளங்கள் புத்துயிர்ப்போடு பாதுகாக்கப்படவேண்டும் . குளங்கள் ஆழமாக்கப்பட்டு நீர் சேகரிப்பு அதிகரிக்கப்படவேண்டும். நகரங்கள் விரிவாக்கப்படவேண்டும் . மக்கள் அடர்த்தி நகரங்களில் மட்டுப்படுத்தப்படவேண்டும். பொலுத்தீன் பாவனை குறைக்கவேண்டும். மக்களிடம் நல்ல சூழலை உருவாக்கும் அறிவு புகுத்தப்படவேண்டும் . வாகனங்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டு பொது வாகனவசதி சிறந்தமுறையில் பராமரிக்கப்படவேண்டும். எந்தக்காணிகளிலும் அறுபது வீதத்திற்கு மேல் கட்டிடம் அமைக்க அனுமதிக்கக்கூடாது. உயர்ந்தமாடிக்கட்டிடங்களும் எண்ணிக்கையில் அதிகரிக்க   அனுமதிக்கக்கூடாது.   கழிவகற்றல் , விவசாய விலங்குவேளாண்மை நவீன விஞ்ஞான வளர்ச்சியை பின்பற்றி ஊக்கத்துடன் நகர்தல் வேண்டும் .

டெங்கு போன்ற நோய்ப்பரம்பல் வருடத்தில் ஒன்று/ இரண்டு தடவை வரும் . நாம் அந்தகாலத்திற்கு முன்பே வருமுன்காப்பு வேலைத்திட்டங்களை செய்துவிட்டோம் என்றால் பின் நல்ல கண்காணிப்போடு (  Surveillance ) மக்களை டெங்கு தாக்கத்தில் இருந்து காப்பாற்றிவிடலாம் .         


Share/Save/Bookmark

ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

இன்று மேதினம் . தொழிலாளர்களின் தினம். ஈழத்தில் எம் இனம் காயங்களோடு இருக்கிறது . மறைமுகமாக அழிக்கப்பட்டுக்கொண்டும் இருக்கிறது. பூர்வீக இருப்பை இழந்துகொண்டிருக்கிறது. நலிந்துபோய் இருப்பதால் நாளாந்தத்தோடு போராடிக்கொண்டிருக்கிறது. எங்களுக்குள் ஒன்றாகமுடியா சாபம் தொடர்கிறது. நாங்கள் ஆக்கிரமிப்பாளனை மறந்து எங்களுக்குள் மோதிக்கொள்கிறோம். எங்களிடம் உள்ள கொஞ்ச சக்தியையும் இழந்துவிடுகிறோம். எங்களை பாதுகாக்கக்கூடிய அரசியல் தீர்வை சிங்களம் தரப்போவதில்லை. இன்றில்லையாயினும் போராட்டம் மீண்டும் எம்மக்களில் இருந்து எழப்போவது தவிர்க்கமுடியாததும் கவலையானதும்தான்  .
ஒவ்வொரு மேதினத்தின் போதும் என் நினைவில் மலையகத்தில் வாழும் என் சகோதரமக்களே இருப்பார்கள். ஒரு தடவை தலைவர் அவர்களோடு உரையாடும்போது தலைவர் அவர்கள் சொன்னார்கள் விரும்புகிற மலையக மக்கள் "  அறிவியல் நகரில் " வந்து குடியேறலாம்.
( நாம் அறிவியல் நகர் திட்டமிடலில் இருந்தகாலம்) .      Share/Save/Bookmark

சனி, 29 ஏப்ரல், 2017

2006  இல் ஒரு நாள்  (சுகாதார விஞ்ஞானக்கல்லூரி ஆரம்பிப்பது சம்மந்தமாகவும் அன்று உரையாடப்பட்டது )தலைவருடரான சந்திப்பில் நானும் தமிழ்ச்செல்வனும் கலந்துகொண்டபோது தலைவர் இந்தவிடயத்தையும் சொன்னார் .  எமக்கான நெருக்கடி கூடும் போது எங்கட ஆட்களுக்குள்ளேயே சிலர்   இடுப்பில இருக்கிற  பிஸ்டலை கழற்றிவைச்சிட்டு ஓடுவினம். இந்தவிடயத்தை தீபனும் தலைவர் தன்னிடம் சொன்னதாக பின்பு ஒரு நாள் என்னிடம் சொல்லியிருந்தார் .
நான் அறிய இது பின்பு முள்ளிவாய்க்காலில் நடந்தது. Share/Save/Bookmark

சனி, 8 ஏப்ரல், 2017

சகோதரன் சத்தியா என் அன்பு சகோதரன்

சகோதரன் சத்தியா என் அன்பு சகோதரன் . எந்தவிடயங்களையும் நேரிடையாக  உரிமையுடன் வந்து  என்னுடன் கதைப்பவன். நாங்கள் அப்போது ஸ்கந்தபுரத்தில் இருந்தோம். சத்தியா தன் வருங்கால மனைவியை சந்திக்க போகிறான். எமதுமுகாமில் யாருக்கும் இந்தவிடயம் சம்மந்தமாய் எதுவும் தெரியாது. ஒரு நாள் காலை ஸ்கந்தபுரத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் ஏற்றிப்போகிறேன். நாங்கள் மல்லாவியிற்கு  போகவேண்டும் . சத்தியா முகாமில் நின்ற உடையோடேயே வருகிறார். எனது bag இல் அவர் மாற்ற வேண்டிய உடைகள் இருக்கிறது. மாற்றுவதற்கு இடம் தேடினோம். கடைசியில் துணுக்காயில் அமைந்திருந்த சிறுநூலகம்தான் கண்ணில்பட்டது. நான் சென்றி நின்றேன். அவர் மாற்றிவந்தார். மல்லாவி கல்வி திணைக்களம் போனோம். நான் எனக்கு தெரிந்த பிரதி கல்விப்பணிப்பாளருடன் கதைத்துக்கொண்டிருந்தேன். அவர் தன் மனைவியுடன் கதைத்துவிட்டு வந்தார். வரும் வழியில் சத்தியா ஓகே ஆ என்றேன். ஓடும்  மோட்டார் சைக்கிளில்  பின்னால் இருந்தவர் எழுந்துநின்று தனது இருகைகளையும் தட்டி சத்தமாய் ஓகே என்றார்.  இறுதியாய் அவரை மாத்தளன் மருத்துவமனையில் சந்தித்தேன். ஆனந்தபுரத்தில் சத்திரசிகிச்சை கூடம் ஆரம்பிக்க இருந்தோம். அது நடக்கவில்லை.


Share/Save/Bookmark

வெள்ளி, 7 ஏப்ரல், 2017

எப்போது நினைத்தாலும் நெஞ்சு வலிக்கும்.

வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு இயக்கம் ஒரு அமைப்பாக தெரியும் எங்களுக்கு அது ஒரு அழகான குடும்பம் . சகோ இசை எல்லா வசதியும் இருந்தகாலத்தில் வாழ்ந்தவன் அல்ல. யாவற்றையும் நாங்களாகவே தேடவேண்டிய காலத்தில் வாழ்ந்தவன். 2007 ,2008 களில் மன்னாரில் இருந்து வள்ளங்களூடாக மருந்துகளை பெற்றோம். அதற்கான ஒழுங்குபடுத்தல்களை இசையே செய்தான் . ஒவ்வொரு வள்ள விநியோகத்திற்கும் பத்தாயிரம் ரூபா வள்ள உரிமையாளருக்கு தமிழீழ சுகாதாரசேவையினரால்  வழங்கப்பட்டது. எமது பள்ளமடுவில் இயங்கிய சத்திரசிகிச்சைகூட மருந்துவளங்களின் பெரும்பகுதியை நாங்களே பார்த்துக்கொண்டோம். தலைமைக்கு தேவைப்பட்ட முக்கிய பொருள் ஒன்றையும் பெரும் அளவில் பெற்றுக்கொடுத்தோம். இசை 15 / 05 / 2009 அன்று எங்களைவிட்டு பிரிந்தார். எப்போது நினைத்தாலும் நெஞ்சு வலிக்கும்.( இவர்கள் பற்றிய என் நீள் பதிவு வெளிவரும்) 


Share/Save/Bookmark

செவ்வாய், 28 மார்ச், 2017

அவரிடம் ஒரு துளி பயம்கூட எனக்கு இருக்கவில்லை.

எனக்கு தலைவன்தான்  இருந்தும் அவரிடம் ஒரு துளி பயம்கூட எனக்கு இருக்கவில்லை. எப்படி? சம்பாஷணை முடிந்து வெளியில் வரும்போதே அளவுக்கு அதிகமாய் கதைத்த ஞாபகம் வரும்.  எனக்கு அவரிடம் ஒளிக்க ஒன்றுமில்லை அதுதான் காரணம் என்று எனக்குள் நினைத்துக்கொள்வேன். 1990 களில் உடல் உறுப்பு தானம்பற்றி தற்செயலாய் இழுத்துவிட்டேன். சொர்ணமும் சங்கர் அண்ணையும் அது சாத்தியப்படாது என்றார்கள்.  எம் சமூகத்தில் பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்றார்கள் . அண்ணை வழமைமாதிரியே கண்ணை உருட்டியபடி யோசித்தார். பிள்ளை விரும்பி பெற்றோர் விரும்பாட்டி அதைவிடலாம். இருவரும் விரும்பும் பட்சத்தில் வசதிப்பட்டால் செய்யலாம். ஒருபோராளி தான் நேசித்த மக்களுக்காய் எவ்வளவு அதிகம் செய்யமுடியுமோ அதை செய்யிறதை நான் விரும்புகிறேன். கதை பிறகு பல பக்கங்களுக்கும் போயிற்று. என்ன ஆச்சரியம் சில காலத்தில் போராளிகளுக்கான தனிப்பட்ட  அறிக்கையில்   இந்தவிடயம் இணைக்கப்பட்டிருந்தது.                 Share/Save/Bookmark

சனி, 25 மார்ச், 2017

2009 வைகாசியில் இந்தியா, அமெரிக்கா, சீனா, ரஸ்யா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல உலகநாடுகளின் முழு உதவியுடன் சிங்கள தேசம் போரை வென்றது. தமிழர்களின் தன்னம்பிக்கையை அழிப்பதே அதன் குறிக்கோளாயிருந்தது. இன்றும் அதுதொடர்கிறது. இலங்கையில் 15 வீதமானவர்கள்தான் தமிழர்கள் . மிகுதி 85 வீதமானவர்களும் எதிர் அணியில் உள்ளவர்கள். இலங்கையின் சுதந்திரத்திற்குப்பின் தமிழர்கள் பலவழிகளும் ஈழத்தில் தங்களை இழந்துபோனார்கள். தமிழர்களிடம் போராடிய வீரம் செறிந்த வரலாறு உண்டு. வாழும் பங்காளிகள் அந்த வரலாற்றை வரும் சந்ததிகளிடம் கையளியுங்கள்.

       


Share/Save/Bookmark

சனி, 18 பிப்ரவரி, 2017

மனதில் கசியும் குருதித்துளியில்
உங்களோடு நானும்
நினைவுகள் உரசி எழும் ஆவியில்
கொதிக்கிறது ஆத்மா
கவிதையில் கரையா உரிமை
மிதக்கிறது வாழ்வில் Share/Save/Bookmark

வெள்ளி, 13 ஜனவரி, 2017

ஊருக்கு உணவுதரும் விவசாயி
தூக்கில்,
" பொங்கல் "புதுப்பட வெளியீடு
மக்கள் வானத்தில் ,
வெடியோசையில் மறைகிறது ஓலம் 

 சொந்த வீடு உயர்பாதுகாப்புவலயத்தில் 

பொங்குகிறது கண்ணீர் 

பொங்க வேண்டியவன் சிறைக்குள் 

பொங்கியும் தணியவில்லை நெஞ்சு 

பொங்க வசதியில்லை    

ஏக்கம் பொங்குகிறது பிஞ்சுகளில்  


விடுதலைக்காய் பொங்கியவர் வாழ்வில் 
மங்களம் போயிற்று  - அவர் கண்ணில் 
மங்கலாய்  தெரியும் பொங்கல் 

       பொங்குவதில் தவறில்லை

 "பொங்கல்" தமிழரின் திருநாள்

  நன்றிமறவாதவரின் பெருநாள் 
Share/Save/Bookmark

வியாழன், 12 ஜனவரி, 2017

வேண்டாதவை வருகின்றன போதைப்பொருள்களாய்

காணாமல்போனவர் தான்
வரவில்லை
அவர்பற்றிய செய்தியும் வரவில்லையே
வருவார் என்றால் எப்போது?
இல்லை என்றால் என்ன நடந்தது?
தாய் காத்திருந்தே இறந்துபோனாள்
மனைவி உருக்குலைந்துபோனாள்
பிள்ளைகள் தேடிக்கொண்டிருக்கிறார்கள்
புதுக்குடி சிங்களவருக்கு
நாவற்குழியில் வீடுகள் வருகின்றன
யாரும் அழைக்காமலே
புத்தர் சிலைகள் முளைக்கின்றன
தமிழரை இலங்கையில் கரைக்கும்
அமிலம் வெல்லமென ஊற்றப்படுகிறது
தேவையானவை வரவில்லை
அரசியல் தீர்வு ,சிறைக்கைதிகள்
காணாமல் போனவர்
தேவையானவை வரவில்லை
வேண்டாதவை வருகின்றன  
போதைப்பொருள்களாய்      Share/Save/Bookmark

புதன், 11 ஜனவரி, 2017

என்றோவொருநாள்

நடக்கிறேன்
பின்நோக்கியல்ல
நினைக்கிறேன்
பின்நோக்கியேதான்
ஏன்?
ஆயிரம் கனவுகள் எரிந்துபோயின
வாழ்வே
புதியதேசத்திற்காய் ஒப்புக்கொடுத்திருந்தும்
கண்ணுக்குமுன்னால் யாவும் சாம்பலாயிற்று
தேசத்திட்டம் நீள்தூரம் சென்றிருந்தும்
அத்திவாரம் சிதைக்கப்பட்டது உலகத்தால்
எல்லாம் இழந்துபோனோம்
இருந்தும் வாழ்கிறது இலட்சியம்
இன்றில்லாவிட்டாலும் என்றோவொருநாள்
தாகம் தீரும் கருமேகம் விலகும்         Share/Save/Bookmark

திங்கள், 9 ஜனவரி, 2017

நாங்கள் இருந்தும் இல்லை

தேசத்திற்காய்
பாசப்பாய்விரித்து
அதன்மீது குடியிருந்தோம்
வேஷம் யாரிடமுமில்லை
காசைப்பற்றி இம்மியும் கவலையில்லை
உயிர்கள் நேசமாய் கூடியிருந்தன
சந்தோசம் வாசமாய் பூத்துக்கிடந்தது
பார்க்கும் இடமெல்லாம்  

  
நேற்றுவந்த செய்தி
ஏற்றுக்கொள்கிறேன்
இளம் விதவையின் மறுமணம்
ஏற்றுக்கொள்கிறேன்
குழந்தையை நினைக்க
என் இதயம் ஓடித்திரிகிறது
நிம்மதி இழந்து
அவன் இல்லை
அவள் இனி இல்லை
நாங்கள் இருந்தும் இல்லை
குழந்தையை நினைக்க
என் இதயம் ஓடித்திரிகிறது
பற்களுக்கிடையிலும் Share/Save/Bookmark

சனி, 7 ஜனவரி, 2017

நண்பர்களே! போய்வாருங்கள்

சரணடைந்து சுட்டுக்கொல்லப்பட்டார்கள்
காணாமல் போனார்கள்
யாரை நம்பிப்போனோம்?
இராணுவ அறிவும் அனுபவமும்
ஏன் கைகொடுக்கவில்லை
எங்கே ? எதிர்பார்த்த இறுதிச்சண்டை
குழம்பிப்போகிறேன்  
வீரரின் இறுதிமணித்துளிகள்
வீணாகிப்போனதா?
நண்பர்களே! கண்மூடமுன் என்னநினைத்தீர்?
கண்ணீர் உருள்கிறது கண்களிலிருந்து,
போய்வாருங்கள் 

தாய்மண் உங்கள் நினைவுகளை சுமக்கும் 
நாளையசந்ததி உம்கனவுகளை சுமக்கும்


Share/Save/Bookmark

வெள்ளி, 6 ஜனவரி, 2017

வலியையே நானறிவேன்

தலைவனின் தனிப்பட்ட மருத்துவனாய்,
தலைவனின் குடும்பமருத்துவனாய் ,
கரும்புலிகளின் மருத்துவனாய் ,
போராட்டசுமையை  
தோள்களில் மட்டுமல்ல
இதயத்தாலும் சுமந்தேன்  
உயிரை தேசத்திற்காகவே சுமந்தேன்
வழி மாறியது எப்படி? நானறியேன்
வலியையே நானறிவேன்
  

ஒரு கூட்டின் உறவுகளே, 

அழுவதற்கான நேரமல்ல 

தொழுகிறேன் 

கடல் துயரில் மூழ்கினும் 

உம் நினைவுகளுடனேயே வேகுவேன்Share/Save/Bookmark

புதன், 4 ஜனவரி, 2017

உறைந்துபோன ஒரு இனத்தின் குருதி

2009
ஒரு கடினகாலம்
பாரிய இழப்புகளுடன் போரில்  தோற்றோம்
சிறை, வஞ்சகமாய் காணாமல் போதல் ,
மக்களுக்கு திறந்தவெளிச்சிறை
சிங்களம் முடிந்தவரை மூடிமறைத்தது
சிங்களமுகமூடியை கிழிக்க
இயன்றவரை உழைத்தோம்
உலகம் யாவும் அறியும் - இருந்தும்
உலகின் கள்ள மௌனத்தில் உறைந்து போனது
ஒரு இனத்தின் குருதி  Share/Save/Bookmark