வியாழன், 19 பிப்ரவரி, 2015

மகிழ்வும் இல்லை கவலையும் இல்லையாம்

ஒரு மாதம் கழிந்துவிட்டது
காணாமல் போனவர்
இருக்கிறாரா ? இல்லையா?
சிறு செய்திகூட இல்லை  
என்ன இணக்கம் வேண்டிக்கிடக்கிறது
விதவையா? சுமங்கலியா ?
இரண்டும் கெட்டவாழ்வு
அப்பா வர பொங்குவோம்
நல்ல உணவை உண்ணும் போதும்
பிள்ளைக்கு / கணவனுக்கு ?
இரவும் பகலும் துயரில் கரையும்
விடையில்லா அந்தரித்த வாழ்வு

அண்டங்காக்காவுக்கு
மகிழ்வும் இல்லை கவலையும் இல்லையாம்
பிணங்களைப்போல   


Share/Save/Bookmark

சனி, 14 பிப்ரவரி, 2015

Dr பொன்னம்பலம் ஞாபகார்த்த மருத்துவமனை

Dr பொன்னம்பலம் ஞாபகார்த்த மருத்துவமனை (தனியார்)1996 ஆம் ஆண்டில் மாங்குளத்திற்கு   அண்மையிலுள்ள ஒலுமடு என்ற அழகிய கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டது.இடப்பெயர்ந்த மக்கள் தமது மருத்துவ தேவைகளை பெறக்கூடியவாறு வன்னியின் மையத்தில் மருத்துவமனை அமைந்தது சாலப்பொருந்திற்று. இறுதிவரை சில மக்கள் பொன்னம்பலம் ஞாபகார்த்த மருத்துவமனையை ஒலுமடு மருத்துவமனையென்றும் அழைத்தனர்.இந்த (ஒலுமடு)மருத்துவமனையின் மக்கள் நம்பிக்கையிற்கு அதன் பொறுப்பு மருத்துவராயிருந்த Dr தர்மேந்திராவும் ,எமது மூத்த மருத்துவர்
Dr கெங்காதரனும் வழிகோலினர் என்றால் அது மிகையல்ல. ஸ்ரீலங்கா இராணுவத்தின் ஜெயசுக்குறு நடவடிக்கையால் இம்மருத்துவமனை இரண்டாகி புதுகுடியிருப்பிற்கும் , மல்லாவியிற்கும்  இடம்பெயர்ந்தது , பின் மல்லாவிக்கிளை கிளிநொச்சியிற்கு  10/02/2001 அன்று புதுப்பொலிவோடு இடம்மாறிற்று.2008 இன் பிற்பகுதியில்  கிளிநொச்சி மருத்துவமனை மீண்டும்

இடம்பெயர்ந்து விசுவமடுவில் இயங்கிற்று. யுத்தத்தில்   மருத்துவமனையும் காணாமல் போயிற்று.நினைவுகள்தான் எஞ்சியிருக்கிறது.


Share/Save/Bookmark

சனி, 7 பிப்ரவரி, 2015

ஒரு மருத்துவ ஆளுமை

1996 பிற்பகுதி, ஆனையிறவிலிருந்து கிளிநொச்சி நோக்கி "சத்ஜெய " இராணுவ நடவடிக்கை கிளிநொச்சியில் இருந்து மக்கள் எல்லாம் இடம் பெயர்ந்து செல்கிறார்கள்.ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்தவர்களும் மீள இடம்பெயர்கிறார்கள்.கிளிநொச்சியில்த்தான் மக்களுக்கான பெரிய மருத்துவமனை இருந்தது.அந்த மருத்துவமனை அக்கராயனில் அமைந்திருந்த சிறு மருத்துவமனைக்கு மாறுகிறது. செல்லுக்கும் துப்பாக்கி ரவைகளுக்கும் மத்தியில் சில ஊழியர்களோடும் போராளிகளோடும் மருத்துவமனை பொருட்களை தம் உயிர்களை பணயம் வைத்து மாற்றுகிறார் வைத்தியகலாநிதி விக்னேஸ்வரன் அவர்கள்.பழையகால எக்ஸ்ரே இயந்திரத்தை மாற்றுவது இலகுவான வேலை அல்ல.அக்கராயனில் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனை இயங்க ஆரம்பிக்கின்றது.தினம் ஆயிரம் தொடக்கம் இரண்டாயிரம் வெளிநோயாளர்கள்.மருத்துவமனை எங்கும் நோயாளர்கள்.ஆளணியோ ஐந்தில் ஒன்று கூட இருக்காது. மாவட்ட வைத்திய அதிகாரி விக்னேஸ்வரனின் ஒப்பற்ற உழைப்பு மக்களை காத்தது. விக்னேஸ்வரன் ஒரு மருத்துவ ஆளுமை.இயன்றவரை அரச அரசசார்பற்ற நிறுவனங்களை ஒன்று திரட்டி மருத்துவமனையின் சேவையை இயன்றவரை பூரணப்படுத்தினார்அவரும் ,சக உத்தியோகத்தர்களும்,ஊழியர்களும், தொண்டர்களும் சுமந்த வேலைப்பளு எழுத்தில் எழுதிவிடமுடியாதது.    போர்ச்சூழலில் பொருளாதார,மருந்து, எரிபொருள்த்தடைக்கும்  நடுவில் இடப்பெயர்வோடு மருத்துவமனைகளை நடாத்துவது இலகுவானது அல்ல


Share/Save/Bookmark