செவ்வாய், 15 மார்ச், 2022

என் சித்தி

 எனது அம்மாவிற்கு இரண்டு தங்கைகள், அதில் இரண்டாவது தங்கையை பற்றித்தான் இன்று எழுதுகிறேன்.

எனது சித்தி எங்களை கண்டிப்புடன் வழிப்படுத்தினார். எங்கள் முன்னேற்றத்தில் சித்தியின் பங்கும் இருக்கிறது. மாலை ஆறு மணி என்றால் புத்தகத்துடன் மேசையில் இருக்கோணும், எட்டு மணி வரை படிக்கோணும். சித்தியும் அதே மேசையில் இருந்து படித்துக்கொண்டு இருப்பார். நாங்கள் பாடசாலை வகுப்பில் முதலாம் பிள்ளையாய் வரும்போது அவவிடமிருந்து பரிசு கிடைக்கும். சித்தியிற்கு எஸ் எஸ் சியில் 16 பாடங்களில் திறமைச்சித்தி இருப்பதாக மாமாமார் கதைப்பார்கள். அம்மா சொல்லுறவ "சித்தி ஒரேதடவையில்  எஸ் எஸ் சி பூர்த்தி செய்தவ " ஆனால் அவவிற்கு ஆசிரியர் நியமனம் கிடைக்கவில்லை இரண்டு தடவையில  எஸ் எஸ் சி பூர்த்தி செய்த அயலிலுள்ள பெண் ஒருவருக்கு ஆசிரியர் நியமனம் கிடைத்ததாய். சித்தி ஒவ்வொரு வருடமும் இரண்டு மூன்று புதிய பாடங்களை எஸ் எஸ் சி பரீட்சையிற்கு போட்டு திறமைசித்திகள் எடுப்பா. அவவிற்கு வழமையான பாடங்களைவிடவும்  தட்டெழுத்து சுருக்கெழுத்து, ரேடியோ மெக்கானிசம், விவசாயம், தையல், சமையல் என்று திறமைசித்திகள் வைத்திருந்தா. முன்பள்ளி கற்கையில் பட்டயகற்கையை நிறைவுசெய்து முன்பள்ளி ஆசிரியராயும் உரிமையாளராயும் இருந்தார். பெரிய வகுப்புகளில் கல்விகற்பவர்களுக்கு  தனியார் கல்வி ஆசிரியராகவும் இருந்தார். அகில இலங்கை ரீதியில் பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடந்த சிறுகதைப்போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றவர். சித்தி வயலின் வாத்தியத்தை முறையாக கற்றிருந்தாலும் வட இலங்கை சங்கீத சபையின் பரீட்சையில் ஆறாம் (ஆசிரியர் தரம்) தரத்தில் செய்முறை பரீட்சையை சித்தியடையவில்லை என்பது எங்களுக்கு அப்போது ஒரு அபூர்வமாகவே இருந்தது. 

நான் எனது வாழ்நாளில் பல ஆசிரியர்களை பார்த்திருக்கிறேன் அதில் பலர் என் சித்தியின் திறமை, தகுதிகளைவிட குறைந்தவர்கள். ஒவ்வொரு தடவையும் இந்த ஆசிரியர்களை பார்க்கும்போது என் சித்தி ஞாபகத்தில் வந்துபோவார். 

எனக்கு எப்போதும் ஒரு கேள்வி இருக்கும் ஏன் என் சித்தி உயர்தரம் படித்து பல்கலைக்கழகம் போகவில்லை ? அம்மா சொல்லுவா " வழமையா அந்தக்காலத்தில எஸ் எஸ் சி இருந்தால் வேலை கிடைக்கும் அப்ப பலர் தொடர்ந்து படிக்கிறதில்லை. சித்தி திருமணம் முடித்து தெல்லிப்பழையிற்கு போய்விட்டா, அதற்கு பிறகு வேலையிற்கு விண்ணப்பித்திருக்கமாட்டார்.  

சித்தியிற்கு அஸ்த்மா நோயிருந்தது. நோயின் தீவிரத்தில் மருத்துவமனை செல்லும்வழியில் எங்களை பிரிந்துவிட்டார். இறுதி நிகழ்வில்கூட பங்குபற்றாதது இன்றுவரை எனக்கு கவலைதான்.சித்தியிற்கு மூன்று பெண் பிள்ளைகள், சித்தி எங்களை பிரியும்போது ஒருவரும் திருமணம் கூட செய்யவில்லை. இன்று பிள்ளைகள் திருமணம் செய்து நன்றாக வாழ்கிறார்கள், சித்தியிற்கு ஆறு பேரப்பிள்ளைகளும் இருக்கிறார்கள். சித்தப்பா அண்மையில் எங்களை பிரிந்துவிட்டார்.   






Share/Save/Bookmark
Bookmark and Share