சனி, 30 மார்ச், 2024

பாதங்களை போரில் தொலைத்தவன் சுவடுகளை தேடிக்கொண்டிருக்கிறேன் துயரங்களை வெளிக்கு மறைத்தாலும் மனது வேர்த்துவிடுகிறது இப்போதெல்லாம் நினைவுகள் மறந்துபோகின்றன ஆனாலும் என் அண்ணனுடன் கதைக்க நிறைய வைத்திருக்கிறேன்


Share/Save/Bookmark
நாய் குரைக்கிறது பாம்பாகவும் இருக்கலாம் கள்ளனாகவும் இருக்கலாம் பாட்டி இல்லை குரைத்தலின் சத்தத்தில் சொல்லிவிடுவார் படபடப்பாக இருக்கிறது யாருக்குத்தெரியும் காற்றுக்கு ஆடும் மரக்கிளையின் நிழலை பார்த்துத்தான் நாய் குரைக்கிறது


Share/Save/Bookmark

வெள்ளி, 29 மார்ச், 2024

ஒளியும் இருளும் குழைந்திருந்த மாலைப்பொழுதில் பறவைகளின் வரிசை குலையாதிருந்தது குருதி உண்ணும் நுளம்புகளை போல மண் அள்ளி டிப்பர்கள் விரைந்தன மின்மினி வெளிச்சத்தில் சட்டென உயிர்கள் பிரிந்தன முடிந்த நாட்களைப்போல போன உயிர்களும் மீளவருவதில்லை உயிர்த்தானம் கொடுக்க வரிசைகுலையா அவதானம் தேவை குழந்தையொன்று பொத்து பொத்தென நடந்து வரும் சத்தம் போல் இதயம் அடித்துக்கொள்கிறது புதிய எதிர்பார்ப்புகளோடு


Share/Save/Bookmark
முள்ளிவாய்க்கால் இறுதிநாள் இளைய போராளிதான் நீ அரச கட்டுப்பாட்டுக்குள் யாவும் அடங்கிக்கொண்டிருந்தது கைக்குழந்தையை இருகைகளால் தூக்கி முத்தமிட்டு மனைவியுடன் அனுப்பிவிட்டு போகும் பாதையையே பார்த்துக்கொண்டிருந்தாய் அவர்கள் போய்முடியும்வரை தோளில் இருந்த துப்பாக்கியை கைகளில் மாற்றியபடி ஏதும் கதைக்காமல் வந்துகொண்டிருந்தாய் ரொட்டியொன்றை மூவர் பகிர்ந்துண்டோம் பிரிந்து நீ போனாய் சிறிது தூரம் போய் என்னை அழைத்தாய் நான் உனைப்பார்க்க நீ கையசைத்துவிட்டு போனாய் பரிமாற வார்த்தைகள் இருக்கவில்லை


Share/Save/Bookmark
ஒரு உயிர்க்கனவிருந்தது கனவை நனவாக்க துயில் தொலைத்து இயங்கினோம் கனவு வெறும் நினைவாகியது வாழும் கணங்கள் சுமையாகியது சீர் துயிலற்ற வாழ்வில் கனவில்லை


Share/Save/Bookmark

வியாழன், 28 மார்ச், 2024

மயானம் மயான அமைதிதான் இடைக்கிடை தேம்பி வரும் அழுகை சத்தம் ஆற்றுகையின் நொடிகள் அல்லது துயர்க்கிடங்கின் கிளறல் வலியின் கட்டுடைப்பு பெத்த வயிறின் ஒலி


Share/Save/Bookmark
குழந்தைகள் முதல்முதலாய் கண்திறக்க பார்த்திருக்கிறேன் முதியவர் இறுதியாய் கண்மூடப்பார்த்திருக்கிறேன் பருவம் மாற செயல் மாறுவதை பார்த்திருக்கிறேன் யாம் அறியாமல் பிறந்தாலும் பிரிவினையை பார்த்திருக்கிறேன் பிரசவவலி குழந்தையை கண்டவுடன் மறைந்துவிடும் எங்கள் வலி புற்றெடுத்துக்கொண்டிருக்கிறது


Share/Save/Bookmark

சனி, 23 மார்ச், 2024

காலை விடிகிறது

அம்மா அன்பிலான அழகான கவிதை ஆண்டவன் எழுதியது கவிஞனின் குழந்தை கவிதையா ? வறுமையா? பட்டிமன்றில் கவிஞன் காலை விடிகிறது மொட்டு பூவாக மலர்கிறது இலைமீது பனித்துளி முகப்பரு போல சூரியக்கதிர்கள் முற்றத்தில் புள்ளியிட மனதில் கோலம் படிகிறது நீலக்கடல் வானில் ஏறுகிறது கடலலைகளில் மனம் ஏறி இறங்குகிறது கைவிடப்பட்ட ஒற்றைப்படகில் என் இதயம் இருக்கிறது


Share/Save/Bookmark

வியாழன், 21 மார்ச், 2024

உங்கள் நண்பனல்ல

எந்த இலட்சியத்திற்காய் உங்களை தந்தீர்களோ அந்த இலட்சியத்திற்கு மாறாய் போபவன் உங்கள் நண்பனல்ல விலைபோகமுடியாதவனே போராளி கூட்டுக்குள் வாழ்ந்தாலும் ஒரு மெழுகுதிரியாய் ஒளிர்வான்


Share/Save/Bookmark

ஞாயிறு, 17 மார்ச், 2024

நிலம் பறிபோகிறது குடியிருப்புகள் எழுகின்றன மதத்தின் பெயரில் ஆக்கிரமிப்பு பெரும்பான்மை, அரசபலம், படைகள் காக்கைவன்னியர் , ஒற்றுமையின்மை பூர்வீகமண்ணில் இனமழிகிறது யாரிடம் முறையிடுவது? ஏதும் சொல்வதற்கில்லை


Share/Save/Bookmark
மரங்கள் மீது குற்றம் சாட்டப்படுகிறது பறவைகளை அழைத்ததாய் மரங்கள் மறுக்கின்றன பறவைகள் காவிய விதைகள்தான் மரங்களாயினவாம் மரங்களை சோடிக்கும் பறவைகளை ஏக்கத்துடன் பார்க்கிறான் வழிப்போக்கன்


Share/Save/Bookmark
அவன் என்னோடு பள்ளியில் படித்தவன் வகுப்பறை கட்டுப்பாடுகளை மீறிக்கொண்டிருப்பான் ஒரே அடிவாங்குவான் அழுவான் அடுத்தநாளும் அப்படித்தான் வீட்டிலும் அடிவாங்கிய காயங்களுடன் வருவான் பத்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்தினான் ஊரடங்கு நேரத்தினுள் இந்திய இராணுவத்தால் சுடப்பட்டான் அவனுக்கு ஒரு வியாதி இருந்திருக்கிறது பெற்றோருக்கோ ஊரவருக்கோ ஆசிரியருக்கோ அது தெரிந்திருக்கவில்லை பாவம் அவனுக்கும் அது தெரிந்திருக்கவில்லை காலப்புண் ஆறுவதில்லை


Share/Save/Bookmark

நண்பா! நீயும் நானும் ஒன்றல்ல வேறுமல்ல

நான் எழுதியதை நீயோ நீ எழுதுவதை நானோ எழுதுவதில்லை நண்பா ! நீ புலம்பெயர முடிவெடுத்தாய் புகையிரத நிலையம்வரை வந்தேன் நாற்பது வருடங்கள் நீ நட்பின் இறகில் சிறகெடுத்தும் நான் குருதி தொட்டும் எழுதிக்கொண்டிருக்கிறோம் நான் மாறிவிட்டதாய் நீ சொல்கிறாய் வலியின் விசாலம் நீ அறியாய் பல உயிருறவுகளை பறிகொடுத்தேன் இனி புது உலகம் சாத்தியமில்லை நண்பா! நீயும் நானும் ஒன்றல்ல வேறுமல்ல


Share/Save/Bookmark

திங்கள், 11 மார்ச், 2024

அங்குதான் அவர்கள் இருக்கிறார்கள்

என் அனுபவங்கள் எனக்கானவை அதேபோல் உங்களதும் நெருப்பு மழைக்குள் இறங்கியும் ஏதோ ஒரு கரை சேர்ந்தேன் உள்காயங்களோடு ஆற்றுப்படுத்த இதயத்தையே சிறகாக்கி விசுறுகிறேன் நினைவு சோரும்வரை இழப்புகளின் வலி திணறி எழ மூச்சுத்திணறி மீள்வேன் யாருமறியாமல் நாளையும் விடியுமா? கசியா இரகசியமாய் மூடியிருந்த வாழ்வு எரிந்துபோகுமா? இதயசிறகு படபடக்க உயிர் காவுகிறேன் வழிப்போக்கனாக மலையடிவாரத்தில் ஏதோ கிறுக்கிப்போனான் கவிஞன் வழிமாறிய குயிலொன்று அதை பாடுகிறது இன்னோர் பிரபஞ்சத்திற்கு கேட்கிறது அங்குதான் அவர்கள் இருக்கிறார்கள்


Share/Save/Bookmark

சனி, 2 மார்ச், 2024

நிலவில்லை கதைப்பதற்கு வேறு கதையில்லை துணையுமில்லை காரிருளில் ஆந்தையின் கண்கள் பயமில்லை இது யாராக இருக்கும் ? விடியும்வரை அசையாமல் இரு தாய் நிலத்து ஆத்மாவாக இருக்குமோ?


Share/Save/Bookmark
Bookmark and Share