திங்கள், 30 மே, 2016

31/05/1981

31/05/1981 , ஈழத்தமிழர் வாழ்வில் மறக்கமுடியாநாள். "யாழ் நூலகம்"  தென் ஆசியாவில் தொன்மையான ,சிறப்புமிக்க  நூலகம் , சிறிலங்கா அரசால் திட்டமிட்டு அமைச்சர் ஒருவரின் தலைமையில் எரிக்கப்பட்ட நாள். 97000 ற்கும் அதிக நூல்களுடன் பல அரிச்சுவடிகளும் சாம்பலாயிற்று. வன பிதா தாவீது அவர்கள் செய்தி அறிந்து இடது நெஞ்சை பிடித்தபடி இறந்துபோனார்.

காமினி திசாநாயக்காவின் தலைமையில்த்தான் நூலகம் எரிக்கப்பட்டதாய் சொல்லப்பட்டது. சிறில் மத்தியு தலைமையில் காடையர்களால் மற்றவைகள் ( யோகேஸ்வரன் வீடு,ஈழநாடு பத்திரிகை 

காரியாலயம்,கூட்டணி காரியாலயம்,-----)  அழிப்பட்டதாய் சொல்லப்பட்டது.இராணுவம் ,போலிஸ்,சிங்கள காடையர்களுக்கு இந்த அமைச்சர்கள் தலைமை தாங்கினார்கள். அதே நேரம் அமைச்சர் லலித் அத்துலத் முதலியும் யாழ்ப்பானத்தில்த்தான் இருந்தார் . இந்த வன்செயல்கள் 2-3 நாட்கள் தொடர்ந்தன.    

1977 இல் தமிழர்கள் தனிநாட்டுக்கோரிக்கைக்கு முழு ஆதரவு  தந்தமையும் ஏற்றுக்கொள்ளமுடியா நூலக எரிப்பும்  பல இளைஞர்களின் பாதைகளை தீர்மானித்தது.



Share/Save/Bookmark

ஞாயிறு, 29 மே, 2016

என் இனம் அழிக்கப்படும் கொடூரம்


உலகக்கண் முன்  
என் இனம் அழிக்கப்படும் கொடூரம்
இனி எந்த இனத்திற்கும்  நேர்ந்துவிடக்கூடாது

உலகமே!
நீயும்
ஏன் என் இனத்தை அழிக்கிறாய்?
உன் பிரதிநிதி யேசுவா? புருட்டசா?
நம்பியவரை நட்டாற்றில் விடுகிறாய்
வஞ்சகமாய் நஞ்சாய் கலக்கிறாய்
வாய்விட்டு அழுவதை வேடிக்கை பார்க்கிறாய்
வேஷங்களுடன் அத்தர் அடித்து வருவாய்
எங்களுக்கு
"உலகம் "நம்பிக்கையின் அச்சில் சுற்றவில்லை
கயிறாய் கழுத்தை சுற்றியிருக்கிறது
தேவையானபோது இறுகுகிறது

இனத்தின் கோடரிக்காம்புகள்
உணர்வதில்லை
தமக்கும் சேர்த்துத்தான் குழி தோண்டப்படுவதை

இன விசுவாசிகள்
தங்களுக்குள் அடிபட்டு
மாரித்தவக்கைகளாய் கிடக்கிறார்கள்

அப்பாவி மக்கள்
புலனாய்வு வலைக்குள் மீன்குஞ்சுகளாய்
அங்கும் இங்கும் ஓடிவிளையாடுகிறார்கள்    

தற்கால கவலையெல்லாம்
இன்னும் எத்தனைகாலம்
என் இனம் தாக்குப்பிடிக்கும்?
ஈழத்தில் மட்டுமல்ல புலத்திலும்தான்  
        


Share/Save/Bookmark

சனி, 28 மே, 2016

விடுதலைப்போராட்ட வரலாறு அதன் பங்காளிகளால் வழங்கப்படவேண்டும்.

 1991 ஆம் ஆண்டு ஆனையிறவு போருக்குப்பின் இயக்கமருத்துவர்களுக்கான ஒன்றுகூடல் ஒன்று தலைவருடன் நல்லூரில் அமைந்திருந்த சாளி முகாமில் நடைபெற்றது. அப்போது தமிழீழ மருத்துவ கல்லூரி ஒன்று ஆரம்பிக்கவேண்டும் என்ற முடிபு தலைவரால் எடுக்கப்பட்டது. நாங்கள் 30 பேருடன் ஆரம்பிப்போம் என்றபோது தலைவர் அவர்கள் 70-100 பேரை உள்ளீர்க்கவேண்டும் என்றதுடன் அதற்கான செயற்பாடுகளில் இறங்கி வழமைபோல் வெற்றிபெற்றார்.30 பெயரளவில் மருத்துவராக வெளிவருகையில் உண்மையில் தலைவரின் தீர்க்கதரிசனத்தை நான் உணர்ந்தேன். வரலாற்றில் தமிழன் தன்னை தானே ஆண்டது சில நூற்றாண்டுகளுக்கு பின்பானது. இனி எப்போதோ?தெரியவில்லை.புலிகளின் போராட்ட வரலாறு முதன்மையானது.அர்ப்பணிப்புகளால் புடம்போடப்பட்டது. காலத்தால் அழிக்கப்படமுடியாதது. இதற்குள் தமீழீழ மருத்துவக்கல்லூரியின் பங்களிப்பு ஒப்பற்றது.  அதன் போராட்டத்தோடு கலந்த வரலாறு முழுமையாக பதியப்படவேண்டும்.எங்கள் எதிர்கால சந்ததிகளுக்கு எமது விடுதலைப்போராட்ட வரலாறு அதன் பங்காளிகளால் வழங்கப்படவேண்டும்.             


Share/Save/Bookmark

உயிரிழந்த அப்பாவி மக்களுக்கு (எல்லா இன) அஞ்சலி

இயக்கத்தின் கட்டாய ஆட்சேர்ப்பு   2000 ஆம் ஆண்டுற்குப்பின்  முதலில் தென் தமிழீழத்திலும் பின் வன்னிக்கும் (2006) அமுலாயிற்று. உண்மையிலேயே தலைமையில் இருந்து எந்தப்போராளியும் விரும்பாத ஒன்று. ஆளணியின் பெரும் அளவிலான பற்றாக்குறை  இந்நிலைக்கு இயக்கத்தை தள்ளிவிட்டது. உண்மையிலேயே அந்நேரத்திலேயே எம்போராட்டம் தோற்றுவிட்டது. எமது போராட்டம் நியாயமானது, அர்ப்பணிப்புகள் நிறைந்தது . உண்மையானது. அது முழுமையாக எங்கள் மக்களுக்கானது. எங்கள் போராட்டத்தில் எங்களால் உயிரிழந்த அப்பாவி மக்களுக்கு (எல்லா இன) அஞ்சலி செய்து மன்னித்துவிட உளமாற இறைஞ்சுகிறேன்.       



Share/Save/Bookmark

வியாழன், 26 மே, 2016

கிளிநொச்சியில் மீள்குடியேற்றம் ( 2001)

இரண்டாயிரம் ஆண்டளவில் சுமார் ஐந்து ஆண்டுகளுக்குப்பின் மக்கள் மீண்டும் கிளிநொச்சியில் மீள்குடியேற்றம். கிளிநொச்சி நகரத்திட்டமிடலில் இறுதி முடிவெடுக்கும் குழுவில் நானும் ஒருவன். சிலவிடயங்கள் எனது முடிவில் /பிடிவாதத்தில் நடந்தாலும் (உ+ம்:கிளி மருத்துவமனை), சிலவிடயங்கள் என் முடிவையும் தாண்டி நடந்தது. குழுவாய் சில வேலைகளை செய்யமுடியாது என்ற எண்ணம் எனக்குள் புகுந்தது.தமிழ்ச்செல்வன் அதைப்புரிந்து கொண்டார். பின் வேலைகள் ஒதுக்கப்படும்போது தனியாகவே எடுத்தேன்.
அறிவியல் நகரில் இயக்கத்திற்கு/எங்களுக்கு நிறைய கனவு இருந்தது. கிளிநொச்சி நகரில் இடத்திற்கு  இடம் ஒரேமாதிரி கடைகள் அமைக்கப்படவேண்டும் என நான் விரும்பினேன் .  



Share/Save/Bookmark

திங்கள், 16 மே, 2016

இழப்பதற்கு எதுவுமில்லை என்ன பயம் உனக்கு?

கற்பனைக்கு எட்டா மாளிகை
இனி கட்டமுடியா மாளிகை
கல்லாயிற்று நேசித்தமண்ணோடு
17/05/2009

சதா
விடுதலைக்காய்
துடித்த இதயங்களை
இழந்த கொடுமையை

ஓருயிர் காக்கவே
எம் உயிர் வைப்பவர் நாம்
இத்தனை உயிர்களுக்கு பின்பும்

கொழுந்து விட்டு எரிகின்றன
அந்த குளிர்மையான நினைவுகள் - இன்று
மிருக பற்களுக்கு நடுவில்
வாழ்வதற்காய் துடிக்கும் இதயம்  

கண்கள் திறந்தபடி இரு(ற) ந்தவன் 
பார்த்துக்கொண்டே இருப்பான்
உடல்களை எரித்தாலும் ஆன்மா சாகாது
இலட்சியத்திற்குள் வாழும்  

 இருள் கூடக்கூட
பொட்டு வெளிச்சமும்
பிரகாசமாகும்
இழப்பதற்கு எதுவுமில்லை
என்ன பயம் உனக்கு?
  




Share/Save/Bookmark

திங்கள், 9 மே, 2016

நல்லிணக்கம் சாத்தியமா?

58,77,81,83--என
இனக்கலவரம் என்ற பெயரில்
நடந்த கொலை கொள்ளைகளுக்கு
யாருக்காவது தண்டனை வழங்கப்பட்டதா?
கொக்கட்டிச்சோலை படுகொலை உள்ளீடாய் நடத்தப்பட்ட
நூற்றுக்கும்  மேற்பட்ட திட்டமிட்ட படுகொலைகளுக்கும்
யாருக்காவது சிறை/தண்டனை/புனர்வாழ்வு?
இராணுவம்,கடல்,விமானப்படை போன்ற
பாதுகாப்புப்படைகளில்த்தான்
பெரும் குற்றவாளிகள்
சொகுசாக இருக்கிறார்கள்
சரணடைந்து காணாமல் போன
இளம்பரிதியின் இளைய மகளுக்கு
மூன்று வயது
நல்லிணக்கம் சாத்தியமா?  

முள்ளிவாய்க்காலில்  இனப்படுகொலை முற்று பெறவில்லை.இன்றும் கறையான் வடிவில் இனஅழிப்பு நன்கு திட்டமிட்டு நடக்கிறது. நடந்தது இனஅழிப்பு என்று ஒரு நாடும் வெளிப்படையாய் சொல்லவில்லை ஏனெனில் இனஅழிப்பு எனில் பாதிக்கப்பட்ட இனத்திற்கு சுதந்திரம் வழங்கவேண்டும். பலநாடுகள் தங்கள் நலனுக்காய் ஒரு பண்பாட்டு இனம் அழிந்துபோவதை மறைமுகமாயோ/நேரடியாயோ ஆதரிக்கின்றன.

போராடினாலும்
இல்லாவிட்டாலும்
இனம் அழியும்
போராடி வென்றால் மாத்திரமே
இனம் காக்கக்படும் 


Share/Save/Bookmark
Bookmark and Share