சனி, 29 மார்ச், 2014

தினம் ஆயிரம் ஞாபகங்கள்

தினம் ஆயிரம் ஞாபகங்கள் மனதை தின்கின்றன.அதில் ஒன்றாய் கிளாலி ஞாபகங்களும்.தொண்ணூறாம் ஆண்டு யுத்தம் தொடங்கியவுடன் ஆனையிறவு பாதை மூடப்பட்டுவிட்டது.தொண்ணூற்றி ஒன்றில் இராணுவத்தின் பலவேகயா -1 நடவடிக்கையுடன்  கொம்படி- ஊரியான்  பாதை பாவனைக்கு வந்தது.ஐயோ அந்த பாதை பயணம் நினைத்துப்பார்ப்பதுக்கே கொடுமையானது. சேறும் சகதியுமான அந்த பாதையில் ற்றைக்டர் ரகவாகனங்கள்தான் போருதவியாய் இருந்தன.பிரயாணம் செய்த மக்கள் மிக்க துன்பங்களை அனுபவித்தனர்.பல மக்கள் சைக்கிளில் பிரயாணம் செய்தார்கள்.
தொண்ணூற்றி இரண்டாம் ஆண்டு இராணுவத்தின் பலவேகயா-2 நடவடிக்கையின் பின் மாற்று வழியில்லாமல் கிளாலி பாதை நடைமுறைக்கு வந்தது
கிளாலியிலிருந்து மக்கள் வள்ளங்களில் பதினைந்து கடல் மைல்கள் தாண்டி பூநகரி நல்லூர் பிரதேசத்திற்கு செல்வார்கள்.பூநகரி நாகதேவன்துறையில் இருந்து புறப்படும் ஸ்ரீலங்கா கடற்படை ரோந்துப்படகுகள் இவ்வள்ளங்களை   இடைமறித்து வாளினால் வெட்டியும் ,துப்பாக்கியால் சுட்டும் கொல்லத்தொடங்கினர்.எனவே கடற்புலிகள்  இம்மக்களின் பயணத்திற்கு பாதுகாப்பு கொடுக்கவேண்டி ஏற்பட்டது.  

எரிபொருள் தட்டுப்பாடு உச்சமாக இருந்த அக்காலத்தில் ஒரு வள்ளத்துடன் பல வள்ளங்கள் சேர்ந்து தொடுவையாக கிளாலிகடலில் சென்றன மக்கள்  மட்டுமல்லாமல் சைக்கிள், மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களும் எடுத்துச் செல்லப்பட்டன. பரல்களை கட்டி பாரிய பாதை ஒன்று ஏற்படுத்தப்பட்டு கார், லொறி போன்ற வாகனங்களும் எடுத்துச் செல்லப்பட்டன.1992 ஆம் ஆண்டு பிற்பகுதியில் ஆரம்பித்த இக் கடற்பயணங்கள் 1996 சித்திரை  மாதம் யாழ். குடாநாடு அரச படையினரின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் வரும் வரை இடம்பெற்றது.
இப்பயணத்தில் சிங்களப்படையால் காயமடையும் மக்களுக்காகவும்,
காவல் புலிகளுக்காகவும் ஒவ்வொரு பயண இரவுகளின் போதும் நாங்களும்
மருத்துவ முதலுதவி அணியாய் வந்து கடற்கரையில் இரவு முழுக்க தங்கி போவோம்.மக்கள் காயமடையாமல், இறக்காமல் போனால் காவலுக்கு செல்லும் புலிகள் நிம்மதியாய் நிலையம் திரும்புவர்.நாங்களோ மக்களும் பாதுகாப்பாய் சென்று/வந்து , புலிகளும் பாது காப்பாய் வந்தால்த்தான் நிம்மதியாய் எம் உறைவிடம் திரும்புவோம்.

எனக்கு நன்கு ஞாபகம் இருக்கிறது.கிளாலியை பிடிக்க ராணுவம் நெருங்கிக்கொண்டிருக்க,எமக்குரியவை எல்லாவற்றையும் முடிந்தவரை வன்னிக்கு அனுப்பி விட்டு இறுதியாய் புறப்பட்ட வள்ளங்களில் கிளாலியில் இருந்து  புறப்பட்டோம்.இராணுவ கெலிக்கொப்டர்கள் எங்கள் வள்ளங்களை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்து கொண்டிருந்தது. இடையில் ஒரு வள்ளம் தீப்பிடிக்க அதில் இருந்தவர்களை கடற்புலி  வள்ளம் காப்பாற்றிற்று.நல்லூர் கரையில் இறங்கி ஏக்கத்தோடு கிளாலி கரையை கண்களால் மேய்ந்தேன்.எத்தனை இரவுகள் கிளாலிக்கரையில் நித்திரை இழந்து கிடந்திருப்பேன்இந்த கிளாலிக்கடலில் எத்தனை மக்கள் இறந்திருப்பார்கள்


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share