வியாழன், 6 செப்டம்பர், 2012

என் அம்மம்மா


இன்று காலை தொலைபேசி அடித்தது. என் அம்மம்மா 
இறந்துவிட்டாவாம்.அம்மம்மாவிற்கு தொண்ணூறு வயது.
சில நாட்களாய் கடும் சுகயீனம் உற்றிருந்தா. நேற்றும் அம்மம்மாவுடன் தொலைபேசியில் 
கதைத்தேன்.என்னால தொடர்ந்து கதைக்கேலாமல் 
கிடக்கு ராசா என்று தொலைபேசியை அம்மாவிட்ட 
குடுத்திட்டா.இறப்புகளைக்கண்டு பழகிப்பழகி வெறும் மரமாய்ப்போன 
வாழ்க்கையில் எங்கிருந்தோ கண்ணீர்த்துளிகள் வருகின்றன.
நான் பிறந்ததிலிருந்து இன்றுவரை எனக்கு அம்மம்மாவைத்தெரியும்.
நாங்கள் பிஞ்சுகளாய் இருக்கைக்க அம்மம்மா 
நிலாக்காட்டி சோறு ஊட்டுவா.நிறைய கதைகள் சொல்லுவா.
அம்மம்மா சில வருடங்கள் ஆசிரியையாய் வேலை செய்தவ.
அதுவும் சின்னப்பிள்ளைகளுக்குத்தான் படிப்பிச்சவ.அதனாலதான் 
என்று நினைக்கிறன் அவ கதைகள் சொல்லைக்க நிஜமாய் நடக்கிறதை பார்க்கிற 
மாதிரி இருக்கும். நாங்கள் திருப்பி திருப்பி சொன்ன கதைகளைக்கூட கேட்பம்.
அம்மம்மா சலிப்பில்லாமல் சொல்லுவா.  
அம்மம்மாவிற்கு அரசியல் தெரியாது.களவு பொய் தெரியாது.
யாரையுமே பிரிச்சுப்பார்க்கமாட்டா .எல்லோருக்கும் உதவி செய்வா.
அம்மம்மாவின்ர ஐயா(அப்பா) PWDஓவசியறாய் இருந்தவர்.
அம்மாவின்ர குடும்பம் எப்பவுமே நடுத்தரக்குடும்பம் தான். 

 அம்மம்மாவிற்கு எழுபிள்ளைகள்.அம்மப்பாவிட்கு சாதாரண 
வருமானம்தான்.அம்மப்பா கொஞ்சம் தண்ணியும் பாவிப்பார்.
இருந்தும் ஒருநாளும் அம்மம்மா அம்மப்பாவோட சண்டை 
பிடிச்சதை நான் பார்க்கயில்லை.எங்கட வீட்டை யார் வந்தாலும் 
சாப்பிடுற நேரமென்றா சாப்பிட்டு தேத்தண்ணீர் குடிக்கிற நேரமென்றால்   
தேத்தண்ணீ குடுத்துத்தான் அனுப்புவா. 
என்னோட என் நண்பர்கள் (திலீபன் உட்பட)வருவார்கள்.வந்தால் 
சாப்பிட்டோ/தேத்தண்ணீ குடித்தோ எங்கட வேலை பிரிக்கிற 
இடமாய் அது இருக்கும்.அம்மம்மாவிற்கு சாப்பாடு தாறதைவிட
வேறு ஒன்றையும் அறிந்திருக்கமாட்டார்.நான் எந்த நேரமும் 
வீட்டை போவன் அம்மம்மா உடன சாப்பாடு தருவா.நான் வீட்டைப்பொருத்தவரை
பொறுப்பில்லாதவன்.என்னால வீட்டுக்கு எந்த ஆதாயமும் இல்லை 
என்றதும் அவைக்குத்தெரியும்.ஆனால் ஒருநாளும் 
ஏற்றுக்கொள்ள முடியா சொல் ஒன்றை எனக்கு சொன்னதில்லை.அம்மம்மா 
சைவம் மச்சம் சாப்பிடமாட்டா.நான் ஒரு நாள் அம்மம்மாவிட்ட கேட்டன். 
அம்மம்மா மாடு சமைச்சு தருவிங்களோ என்று.அம்மம்மா சொன்னா 
கொண்டுவா சமைச்சு தாறன். நான் வாங்கி வந்து வெட்டிக்குடுக்க 
அம்மம்மா சமைச்சுத்தந்தா.ரொட்டியும் சுட்டுத்தந்தா .நான் கொண்டுபோய் 
சென்றியில பிரிச்சு சாப்பிட்டம்.இப்படி கொஞ்சக்காலம் தொடர்ந்திது.   
அவவின்ர ஒரு பேரன் வீரச்சாவு அடையிக்க    
அம்மம்மா முதல் தடவை சத்தம் போட்டு அழுததைப்பார்த்தேன்.
பிறகு அம்மப்பா இறந்து, அதட்குப்பிறகும் இரண்டு 
பேரன்கள் வீரச்சாவு அடைஞ்சிட்டாங்கள். கவலைகளுக்குள் 
வாழ்ந்தாலும் எதையுமே வெளிக்காட்டாமல் எல்லோருடமும் 
பழகி வந்தா.சில காலம் வெளி நாட்டிலும் வாழ்ந்தார்.பின் 
தாய் மண்ணில் மூத்தமகளுடன் வாழ்ந்தார்.சமாதான நேரம் 
நான் இறுதியாய் அவரை சந்தித்தேன்.  

 இறுதிவரை முழு ஞாபச்சக்தியோட அவ இருந்தா.தொலைபேசியில
குரலை வைச்சே ஆட்களை அடையாளம் காணுவா.பூட்டப்பிளைகளோட 
இறுதிக்காலமும் மகிழ்வாய்த்தான் இருந்தா.  இரண்டு வயது பூட்டி 
அம்மம்மாவின் படத்தோடு திரிகிறாளாம். படுக்கும் போதும் தலையணைக்குக்கீழ்
படத்தை வைத்துப்படுக்கிறாளாம். என்னால்த்தான் எதுவுமே அம்மம்மாவிற்கு 
செய்யமுடியவில்லை. மனதில் ஏதோவொன்று பிசைகிறது.

-நிரோன்- 

  

Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக