சனி, 1 செப்டம்பர், 2012

என் ஊர்ப்பயணம்


எனக்கு தெரிஞ்ச நாட்களிலேயே எங்கட அப்பா படு சுழியன்.
அப்பாவுக்கு முந்தி ஒழுங்கான வேலை கிடையாது.பிறகு 
புலிகளின்ர காலத்தில அவங்கட அலுவலகம் ஒன்றில 
வேலை செய்தார்.அப்ப புலி என்ற நினைப்பிலேயே இருப்பார்.
இப்ப தாடிக்காரரோட வேலை செய்யுறார்.இப்ப இந்த நினைப்பில 
இருக்கிறார்.
நான் வெளிநாட்டுக்குப்போனதுக்கு இப்பதான் ஊருக்கு வந்திருக்கிறன். 
நான் இன்றைக்கு கனக மாமாவிட்ட போகக்கேட்டன்.அப்பா வேணாம் 
என்றிட்டார்.முந்தி அப்பாவும் கனக மாமாவும் நல்ல ஒட்டு.எங்களுக்கு 
அவை நிறைய உதவி செய்திருக்கினம் .நாங்களும் வீட்டுல இரண்டு 
பிள்ளைகள் நானும் தங்கச்சியும்.கனக மாமாவுக்கு இரண்டு பெடியள்.
மூத்தவன் என்னோடையும் இளையவன் தங்கச்சியோடையும் 
படிச்சவை.இப்ப அப்பாவும் கனக மாமாவும் கதைக்கிறதில்லை.அதால 
அங்க போக்குவரத்து இல்லை.    

எனக்கு அது இப்ப மாதிரி இருக்கு .அப்ப கனக மாமா வன்னியில வேலை செய்தவர்.
அவற்றை இளையவன் இங்க வீரச்சாவு.அப்ப தொலைத்தொடர்புகள் நல்லா இல்லை.
இயக்கம்தான் அவருக்கு அறிவிச்சது மகனுக்கு சீரியஸ் உடன வரச்சொல்லி .அவரை 
கிளாலியில இருந்து கூட்டிவர நானும் போனனான்.அவர் அழுதுகொண்டே வந்தார்.
அவர் என்னைக்கண்டதும் மூத்தவன்தான் வீரச்சாவு என்று நினைச்சிருக்கோனும். 
அவர் எதுவும் யாரிட்டையும் கேட்கயில்லை.அவருக்கு யார் என்றாலும் பிள்ளைதானே.
வீட்டை வந்தவுடன மூத்தவனை கட்டிப்பிடிச்சு அழுதார்.எல்லாம் கண்ணுக்கு முன்னால 
நிற்குது.அவற்றை பிள்ளைகளில அவருக்கு சரியான பாசம் .மிகவும் நேர்த்தியாய் 
பிள்ளைகளை வளர்த்தார்.எங்கட வீட்டுக்கு நேர் முன்னாலதான் அவற்றை வீடு.
எங்கட வீடு இப்ப மாடி வீடு.சுற்று பூந்தோட்டத்தோட
அழகாக இருக்கிறது.கனக மாமாவின்ர வீடு அப்படியே 
இருக்கிற மாதிரி தெரியுது.ஆனால் முன்னுக்கு இருந்த 
மல்லிகைப்பந்தலைக் காணவில்லை.

இன்றைக்கு அப்பா எவ்வளவு ஆசையாய்க் கேட்டார்.எனக்கு 
ஒரு மகன் இருக்கிறான்.அவனுக்கு ஐந்து வயது .அவனை தன்னோட 
அலுவலகத்திற்கு கூட்டிப்போக கேட்டார்.என்ரை மனுசி தொடுவிலையும்
மாட்டன் என்றிட்டுது. அம்மா அதை பெருசுபடுத்தவில்லை.
தங்கச்சியும் பிள்ளையும் எங்களைப்பார்க்க வந்திருக்கிறார்கள்.
மச்சான் வரவில்லை.அம்மா ஏற்கனவே என்னிடம் சொல்லி இருக்கிறார்.
மச்சான் இப்ப எங்கட வீட்டை வாறதில்லை என்று.தங்கச்சியிடம் 
கேட்டேன் எப்படி வந்தீங்கள்?அவர்தான் கூட்டி வந்தவர் .விட்டிட்டு 
கனக மாமாவிட்ட போயிட்டார்.கனக மாமாவும் ,மாமியும் 
தனியத்தானே இருக்கினம் இவர் இடைக்கிடை போய்ப்பார்க்கிறவர்.
மச்சானிட்டை சொன்னனியா நான் கேட்டதை?இல்லை.
அதை கேட்டிருந்தால் செருப்பால அடிச்சிருப்பார் சடக் 
என்று சொன்னாள்.ஏன் இயக்கம் தோற்றது?என்டதைத்தான்
கேட்டிருந்தனான்.நான் அந்தக்கதையை மாற்றினேன். 

நீ கனக மாமாவிட்ட போறனியா?ஆம் என மேலும் 
கீழும் தலையாட்டினாள்.அவைக்கு பிள்ளைகள் 
இல்லை என்று கவலை இல்லையா?திருப்பியும் 
முறைத்துப்பார்த்தாள்.கனக மாமி ஒரு நாள் சொன்னவ 
"பொம்பிளப்பிள்ளைகளே  போராடப்போகைக்க என்ர 
பிள்ளைகள் எப்படி வீட்டை இருக்கும்" சொல்லி ஓரக்கண்ணால் 
என்னைப்பார்த்தாள். எனக்கு ஏதோ நெஞ்சில் நறுக்கென்றது.
ஏதோ என்னில்த்தான் பிழை பிடிப்பதுபோல் இருந்தது.
வீட்டு வாசலில் மோட்டார் சைக்கிள் வந்து நின்றது 
அப்பா இறங்கினார் .தாடிக்காரன் ஒருவன் மோட்டார் 
சைக்கிள் ஓடிவந்தான்.என் மனைவியும்,தங்கையும் 
எதிர்ப்பக்கமாய் தலையை திருப்பினார்கள்.

-சுருதி -Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக