வெள்ளி, 19 செப்டம்பர், 2014

இவர்கள் எங்கள் மனங்களில் நிலைத்திருப்பார்கள்

கந்தசாமி ஐயா , ஒரு மூத்த பொது சுகாதார பரிசோதகர்.முன்னாள் கிளி முல்லை மாவட்டங்களின் பதில் மலேரியா தடை பொறுப்பதிகாரி, பதில் கிளிநொச்சி சுகாதரவைத்திய அதிகாரி. அன்பு ,நேர்மை மிக்க உழைப்பாளி.யாழ் அளவெட்டியை பூர்வீகமாய் கொண்டவர்.தொண்ணூறுகளில் மக்கள் யாழில் இருந்து பெருந்தொகையில் வன்னிக்கு  இடம் பெயர்ந்தபோது தமது ஊழியர்களுடன்  ஓய்வின்றி உழைத்த பெருமகன்.இக்காலத்தில் மலேரியா பெரும் பூதமாய் வன்னியை குத்தகைக்கு எடுத்திருந்தது. ஈவு இரக்கமின்றி பல உயிர்களை காவு கொண்டது.  இலங்கையின் மொத்த மலேரியா நோயாளிகளில் எழுபது வீதமான மலேரியா நோயாளிகள் வன்னியில் இருந்தனர்.மீண்டும் மீண்டும் இடப்பெயர்வுகள் அதிக துன்பங்களை தந்த நேரத்தில் அவரது கடமையை நான் பொறுப்பேற்றுக்கொண்டேன்.
எப்போதும் பொது நலனோடும் அதீத சமய நம்பிக்கைகளோடும் வாழ்ந்த கந்தசாமி ஐயா  கிளிநொச்சி வன்னேரிக்குளம் யோகர் சுவாமிகள் திருவடி நிலைய முதியோர் இல்லத்தை நடுநாயகமாய் நின்று வளர்த்தெடுத்தார். முதியோர் இல்லத்தோடு தென்னந்தோட்டத்தையும்  உருவாக்கினார். இல்லம் தனது தேவைகளை யாரையும் நம்பியிருக்காமல் தானே பூர்த்தி செய்யவேண்டும் என விரும்பினார்.   தள்ளாத வயதினிலும் அவரது உழைப்பும் கூர்மையும் குறைந்திருந்ததாய் நான் உணரவில்லை. எங்கள் அன்பான ஐயா விபத்தில் கால் முறிந்து பின் இறந்து போனார். முதியோர் இல்லத்தில் அவரது இறுதி நிகழ்வு நடை பெற்றது.இடையில் அவரது உடலை நான் பொறுப்பேற்று,எனது எல்லா வெளிக்கள ஊழியர்களையும் அழைத்து எமது அலுவலகத்தில் ஒரு அஞ்சலி நிகழ்வை நடாத்தினேன்.

காலம் வேகமாய் ஓடிவிடும் எனினும் இவர்கள் எங்கள் மனங்களில் நிலைத்திருப்பார்கள்   


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக