ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

சாட்சி அல்லது வாக்குமூலம்
-சுருதி-

2009 “விரோதி” வருடமாய்ப் பிறந்தது
கிளிநகர் வெறிச்சோடிப்போயிற்று
மீள் பிரசவத்தின் பின் பத்து வயதுதான்.
வயதின் அழகும், துள்ளலும் அகன்று
அலங்கோலமானது ஆசைநகர்
உழைப்பை, சொத்தை உறிஞ்சி எழுந்தநகர்.
எல்லாம் இழந்து ஏதிலியாய்க்கிடக்கிறது.
கடைகள், வீடுகள், கூரைகள் இழந்து.
ரைக்டர் ரைக்டராய், லொறி லொறியாய்
உயிர் மனிதர் ஊர் துறந்து,
மடு, அடம்பனில் தொடங்கிய பயணம்
வந்த வெள்ளம் இருந்த வெள்ளத்தையூம்
அள்ளிப்போவது போல்
ஏன் இந்த அவலம்
பிறந்த ஊரில், பூர்வீகம் வாழ்ந்த மண்ணில்
தம் உழைப்பில் மட்டும் வாழ்ந்தவருக்கு
ஏன் இந்த அவலம்
பச்சைப்பிஞ்சுகள், இயலாமுதியோர் என
இடம்பெயரும் இடர்
வாகனங்கள் பத்து அடி நகர
பத்துமணி எடுத்திற்று.
பரந்தன், முல்லைவீதி
வரலாற்றில் மனிதரால் நிரம்பிற்று.
மனித பிதுங்கலால்
அழகுமுகங்கள் கலை(ள) இழந்தன.
அந்த கோடி அழகான வாழ்வை இழந்து
உயிரைத் தூக்கிப்போயின உடல்கள்.
தர்மபுரம், வட்டக்கச்சி, விஸ்வமடு
நிரம்பியது மனிதரால்.
பூர்வீகமக்கள் வாழ்விடம் தந்தனர்.
ஊர் ஊரான இடப்பெயர்வின் வலியோடு
நகரின் இடப்பெயர்வூம்
வலியை எழுத வார்த்தைகள் போதாது.
2007, 2008.
உள் நுழையூம் ஆழ ஊடுருவூம் படை
அங்கும் இங்குமாய் ஒரே க்ளைமர் அடி
பிரயாணிகளுடன் பேருந்து,
ஆம்புலன்ஸ்,
அனைத்தும் வாங்கிக்கட்டின.
மருத்துவர், பாராளுமன்ற உறுப்பினர்,
பிரதேச செயலர்,வியாபாரி, பள்ளிமாணவர்,என
அனைவரும் சமம்.
ஜனநாயகம்
எவரையூம் விட்டுவைக்கவில்லை.


பாதைகளில் பயணிக்க முதுகு கூசும்.
எந்த நேரமும் க்ளைமர் கீசலாம்.


மீண்டும் இடப்பெயர்வூ
விஸ்வமடு, உடையார்கட்டு என
தேங்கிற்று மனித வெள்ளம்.

முல்லையூம் போயிற்று.


விமான இரைச்சலுக்கு
குழந்தை குஞ்சுகள் நடுங்கும்.
பெருசுகள் பதறும்.
அப்பப்பா
ஏன் இந்தக் கொடுமை.
அந்த இடம் புகை மண்டலமாகும்
பருந்திற்குப் பயந்து
ஓடித்திரியூம் கோழிக்குஞ்சுகளாய்
தமிழர் வாழ்வூ.


உடையார்கட்டுப் பாடசாலை
கிளி மருத்துவமனை ஆகிற்று.
சிங்களம் பொழிந்தது செல்மழை
தாதி, ஊழியர், நோயாளி என
இறந்து போக (26.01.09)
ஒவ்வொரு இடப்பெயர்வின் போதும்
ஆடிப்போயிற்று மருத்துவம்.


அகோரம்
அது அப்பித்தெளிக்கும் இரத்தம்
மண்ணோடு மண்ணாக
நாளுக்கு நாள் இறப்புக்களின் ஏற்றம்
மனிதரில் வேற்றுமை
இறப்பிலோ என்ன ஒற்றுமை
எவரும் சாகலாம்
எந்த நேரமும் அந்த வரம் கிடைக்கலாம்
யாரும் எந்த உலகத்திலும்
கற்பனை செய்ய விரும்பா
கொடுர வாழ்வூ ஆரம்பமாகிற்று.
நாள் பட்டியலில் அம்பது உயிர்.
காயங்கள் வேறு
தற்காலிக மருத்துவமனைகள்
காயங்களால் முட்டி வழிந்தது.


அவனுக்கும் எங்களுக்கும் ஒரே தோல்தான்
மொழியின் உச்சரிப்பின் விளைவால்
இமாலய சித்ரவதைகள்.


பதுங்ககழி
அதன்மீது கூடாரம் - அதிகர்
பதுங்ககழியை விட்டு வருவதே இல்லை.


வன்னி மக்களின் வீடுகளில்
நெல், தானியங்கள்,
ஆடு, மாடு, கோழி
கருவாடு, தேன்,
காய்கறி, தேங்காய் என
எல்லாமே இருக்கும்
இப்போது மூன்று கோழி ஐநூறு
முன்பு ஒருகோழி ஐநூறு
உழைப்பு இல்லை.
வருமானம் இல்லை.- இருந்தும்
வயிற்றுப் பிரச்சனை பெரிதாய்த்தெரியவில்லை.
உயிர்தான் பிரச்சனை


சிங்களத்தின் எறிகணை எல்லைக்குள்
எங்கள் குடியிருப்பு.
அங்கொன்றும் இங்கொன்றுமாய்ப்போன உயிர்
இப்போது கொத்துக் கொத்தாய்


பதுங்ககழிகளே தாய்க்கோழிகளாக
தாய்க்கோழிகளோடு சின்னாபின்னமான
குஞ்சு குருமன்கள் எத்தனை?


சா வீடுகள் நடப்பதில்லை
யாரும் அங்கு செல்வதில்லை
சாவீட்டில் சாவடைந்தவர் பலர்
சா சடங்குகளின்றி
பதுங்ககழியினுள் ஒன்றாகவோ
கூட்டாகவோ இட்டு மூடி
மீதம் இருப்பவர் இடம்பெயருவர்
இதுதான் பலரின் கதை.


சம காலத்தில் சிங்களதேசத்தில் விழாக்கள்.
உலகில் பெரும் நிகழ்வூகள்,
IPL கிரிக்கட்டும்
இங்கு விழும் விக்கற்றுக்களை யாரறிவர்?
தப்பி வாழும் ஒவ்வொரு நாளும்
ஆயூளின் போணஸ் நாட்கள்.


சிங்கள தேசம்
இந்தியா, சீனா, ரஷ்சியா, பாகிஸ்தான் என
பல நாட்டு ஆயூதங்களை
எங்களில் பரிசோதித்தது.
சுண்டெலிக்கு உயிர் போக
பூனைக்கோ விளையாட்டாய்ப் போயிற்று.
திக்கற்று இருந்தபோது
பணி செய்ய இங்கோ
INGO களைக் கூட விடவில்லை.
ஏன் என்று கேட்க
மனிதஉரிமை பேசும் உலகிற்கு வக்கில்லை.


இடப்பெயர்வூ மக்களின்
இடர் போக்க முடிந்தவரை
நம் கைகளே நமக்குதவின.
அது போதவில்லை.
யானைப் பசிக்கு சோளப்பொரி.


நாளுக்கு நாள்
பட்டினிப் பூதம் ஊதத் தொடங்கிற்று.
மூன்று இலட்சம் மக்கள் வாழ
எழுபதினாயிரம் மக்கள் என பொய்த் திரிப்பு.
முப்பதினாயிரம் மக்களுக்கே உணவூ.
அதிலும்
அரிசி, மா, சீனீ, பருப்பு மாத்திரமே.
மருந்து வழங்கலும் இப்படித்தான்.
மயக்கமருந்துகள் அறவே இல்லை.
நயவஞ்சகமுகத்தை நாசூக்காய் மறைத்து
மாயமுகம் காட்டியது சிங்களம்.


அப்பாவி மக்களின் உயிர் பறித்தலில்
அரக்கன் மகிந்தவிற்கு இருந்த ஆவல்
அதிசயமானது.
துன்புறுத்தலின் அனைத்து வடிவங்களும்
இன்புறுத்தல் வடிவங்களாய்ச் சோடிக்கப்பட்டது.
தேராவில் பாதையில் ரைக்டர் இருக்கையில்
எரிந்த உருவம் ஓன்று பல நாளாய்க் கிடந்தது.
எந்தக்கூச்சமும் இன்றி கடந்துபோவோம்.
முன் உடையார்கட்டு பாதையிலும் ஓன்று ---
சைக்கிளில் எரிந்தபடி, வாகனங்களில் .----,
மரத்தைக் கட்டிப்பிடித்தபடி ----, இப்படி
எத்தனை உயிர்கள்.


இந்த நூற்றாண்டில்
மனித நாகரிகத்தின் கதை
இவ்வளவூ மோசமானதா?
சுனாமி ஒருநாள் வந்தது, போயிற்று.
அடுத்த நிமிடம் என்ன நடக்கும்?
துடுப்பற்று ஆடுது மனிதப்படகு.

.
பாகிஸ்தான்
பத்து நாளுக்கொரு ஆயூதக்கப்பல்,
இந்தியா சற்றலைட், ராடார்
இது போதாது என்று
இலவச ஆலோசனைகளும்,
சீனா டாங்கிகளுடன் ஆட்லறிகளும்,
தென்னாசியப் போட்டி
எங்கள் தலைகளில் பம்பரமாய் சுற்றிற்று.
ரஸ்சியா உள்ளீடாய் மேலும் சில நாடுகள்
வேறு வேறு காரணங்களுக்காய்
விசுவாசம் காட்டின.


அலைக்கழிந்த வாழ்வில்
அவிழ்க்கப்படா மனித முடிச்சுகள் எத்தனை?
மழுங்கடிக்கப்பட்ட உண்மைகள் எத்தனை?


நாளுக்கு நாள் விமான கழுகுகளின் பிணம்தின்னல்.
புதிய வடிவில் செல்மழை,
கொத்துக்குண்டு, பொஸ்பரஸ் என
உலகத் தடை வெடிகள்
மூடிய குகைக்குள் மனித உயிர்களோடு
வெடித்துச் சிதறின
யாருக்கும்
தீங்கு நினையா மக்களின் வாழ்வில்
அழுகுரல் இசையாயிற்று.
வாழ்நாட் சொத்துக்கள்
ஆங்காங்கே சிதறிப்போக
அகப்படும் உணவூடன் நகர்ந்தது
உயிரைக் கையில் பிடித்த வாழ்வூ.
தப்பி வாழ்பவர் யாவரும்
மயிரிழையில் தப்பியவர்தான்.


சுதந்திரபுரம் விட்டு தேவிபுரம் நாடி
மக்கள் ஓடிவந்தார்கள்.
அருவிக் கரையோரம் சாப்பிணங்கள்.
தேவிபுரம் கைவேலி நோக்கி நகர
வீதியெல்லாம் பிணக்காட்சி.
ஜீரணிக்க முடியா நினைவூகள்.
தனிமனிதன் சுமக்கமுடியா நினைவூகள்.


சுதந்திரபுரம், சுதந்திரம் தரும்,
வள்ளிபுனம் வந்தவரைக் கைவிடாது,
கைவேலி முள்வேலி
நம்பிக்கைகள் வீண்போயின.
அராஜபக்சக்களின் அசுரத்தனம்
விஸ்வரூபம் ஆகிற்று.


எல்லாம் முடிந்திற்று.
இப்போ மாத்தளன், பொக்கணை
வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால் தான்.
நீண்ட நிலப்பரப்பு.
ஒரு கரை பெருங்கடற்கரை.
பத்தாயிரத்திற்கு அதிக உயிர்களை இழந்து
மீதம் இரண்டரை லட்சம் மக்கள்
நெருப்புப்பெட்டி வாழ்வூ வாழத் தொடங்கினர்.
உடல் பெருத்த பட்டினிப்பூதம்
தலை விரித்தாடத் தொடங்கிற்று.
எந்த மரக்கறியூம் இல்லை.
ஆசைக்குக் கூட இலைச் சாப்பாடு இல்லை.
வெற்றிலைக்குப் பதிலாய் நாயூண்ணி இலை.


மரக்கறிக்காய் பிராமணர்கள் பட்டபாடு
பரிதாபம்


நூற்றைம்பது ரூபா மாட்டிறைச்சி
நாலாயிரம் போயிற்று.
முன்னூறு ரூபா செத்தல் பதினையாயிரம்
முன்னூறு ரூபா பால்மா ஆயிரத்து ஐநூறு
சோறும் பருப்பும் வாழ்வூம்
தேய்பிறையாய் போகத்தொடங்கிற்று.


வேவூ விமானம்
பதிந்து பதிந்து சுற்றிக்கொண்டிருந்தது.
பால்மாவைப் பெற வரிசையில் நின்ற
தாய் பிள்ளை மீதே
சிங்களம் ஏவியது செல்லை
தாயோடு பிள்ளையூம் இறந்தது.
தாய் இறக்க பிள்ளை கதறிற்று.
பிள்ளை இறக்க தாய் துடித்தாள்.
அறுபதிற்கு அதிகம் அந்தரத்தில் போயிற்று.


தாயின் இறப்பைப் பார்த்த பிள்ளை.
துள்ளும் பிள்ளையின் இறப்பைக்
கண் முன் கண்ட தாய்
எப்படி வாழ்வர் மிகுதி நாட்களை ?


அயல் நாட்டுப் பிரதிநிதிகள்
தலைநகர் வந்துபோவர்.
இனிப் போர் தணியூம் என நினைக்க
எரிமலையாய் மாறும் சிங்களம்.
எரி விளக்கிற்கு எண்ணெய் வார்த்தது
யாருக்குத் தெரியூம்.


ஐயாயிரம் மக்கள் வாழ் நிலத்தில்
இரண்டரை லட்சம் மக்கள்
நாலு ஆயிரம் சதுர கிலோமீட்டர் வாழ்வூ
வெறும் இருபது கிலோமீட்டருக்குள்.


சதா வேவூ விமான இரைச்சல்
இடைக்கிடை ICRC கப்பல்
படுகாயம் ஏற்றப்படும்.
செல்பவர்களை ICRC
மீண்டும் கூட்டிவராது.
குடும்பங்களின் பிரிவூ,
ஏக்கம்,
இதயங்கள் அழும் ஓசை கேட்காதே


பெரியவர்களின் உணவே
குழந்தைகளுக்கும்.
பிஸ்கட், இனிப்புக்கூட மருந்துக்கும் இல்லை.
தேங்காயிற்கும் தட்டுப்பாடு.
இரண்டு தேங்காயிற்கு
ஒரு ஆட்டோ விலை போயிற்று.


சாப்பாடு அற்று
வயிறு தவில் அடிக்கும்.
வயிறு நிரம்பாமல்
பாதியில் போனவர் எத்தனை?
பசி, பட்டினி,
பங்கர் வாழ்வைத் தவிர்த்து
சற்று முன் இறந்தவர்
அதிஸ்டசாலிகளா?


பங்கரினுள் மேலிருந்தும், அருகிருந்தும்
சிந்தும் மண் துகளிடையே
ஒன்றடுத்து ஒன்றாய்
சமாளித்து உள்ளிருப்போம்.
குடும்பம் குடும்பமாய்
உயிரைக் கையிற் பிடித்தபடி
ஒரே குடும்ப மூன்று சிறுசுகள்
பரிதாபமாய்ப் போயின
பட்டினிக் கொடுமையால்
ஏதோ கிழங்கு தின்று


பனைக்குருத்து தின்ன
கூட்டமாயிக்கூடிய சிறுசுகள்
குண்டடியில் மாண்டதும், துவண்டதும்
அந்த மண்ணுக்குத்தான் தெரியூம்.

தமிழில் ஒரு சொல்லும் கதைக்காத குழந்தை,
சகோதரி திருமணம் செய்யாததால்
திருமணம் புரியாது வாழ்ந்த அண்ணன்,
பிள்ளைகளுக்கு உணவூ பகிர்ந்து
மகிழ்வில் மட்டும் வயிறு
நிரப்பி வாழ்ந்த அம்மா,
இவர் தினம் உடல் சிதறிப்போயினர்.

ஒவ்வொரு நாளும் செத்தவீடு
மணிக்கு மணி இழவூச் செய்தி.


ஐந்து ஏக்கராவது விதைத்து
அயலவருக்கும் வயிறு நிரப்பி,
அந்நியருக்கும் அமுதூட்டி,
ஆரத்தழுவூம் பரம்பரை
அரைச்சுண்டு நெல்லுக்காய்
அரிசி ஆலை உமியை
அரைநாள் முழுக்கப்
புடைத்து எடுத்துப் போகிறது.
கஞ்சி காய்ச்சுவதற்காய்


உலகெங்கும் தமிழினம் உருகிற்று.
தீ சுட்டும் தியாகமாகினர் சகோதரர்.
போதும் போதும் நாம் அலறிய ஒலி
அயல் உறவூகளுக்கு கேட்கவில்லை.
தீக்குளித்த அறச்சீற்றம் கூட
காந்தி தேசத்தை உசுப்பவில்லை.
தமிழரின் இரத்தத்தைத் தோய்த்து
புது சால்வையைப் போட்டார் மகிந்தர்.


ஆக்கிரமித்த நிலத்தில்
தமிழர் சொத்துக்களைக்
காவூ கொண்டது சிங்களம்
வாகனம், ஜன்னல், கதவூ, கூரை என
குரங்கின் கையில் பூமாலையானது
தமிழர் நிலம்.


உழுது, நெல் விதைத்துவிட
அறுவடையைச் சிங்களம் செய்தது.
அறுவடை நெல்லில்
புதிர்ப்பொங்கல், நிலமணி
ஊருக்கே உணவூ கொடுக்கும் இனம்.
கஞ்சி வரிசையில்
நாளையைப்பற்றி எதிர்பார்ப்புகளற்று.


அரசனும் ஒரு நாள் ஆண்டியாவான்
வண்டியூம் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்
ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும்
ஆகா என்ன உண்மை


நாக்கின் அனைத்து சுவைகளும்
அறுந்து போக
உயிர் அறுந்து போனவர் நினைவில்
அயலில் வீசும் பிணவாடையில்
கிறங்கிக்கிடக்கிறது மதிப்புமிக்க இனம்.


பட்டினிச்சாவூகளின் பதிவூ
பத்தினைத் தாண்டியது
கொத்துக்குண்டுகள் டக் தீர் என
வெடித்துச்சிதறும் கொத்தாய் - அது
மருத்துவர் (22-04-09) உயிரையூம் காவூ கொண்டிற்று.


கொத்துக்குண்டு உடலினுள் சுமந்தபடி,
RPG செல்லினை ஏற்றபடி,
கருவறையில் இருந்தபடி
ரவை பெற்று, செல் துகள் பதிய
பச்சைப் பிஞ்சுகள் பாதி உயிருடன்
மருத்துவமனை வருவர்.
எப்போதும் மருத்துவமனையைச் சூழ
சாச்சங்கீதம் இசைக்கப்படும்


மருத்துவமனை ஓன்று கதைக்கிறது.
இந்த வெடி மழைக்குள் உலாவமுடியாதுதானே
கால்கள் இல்லாததையிட்டு அவர் கவலை கொள்ளமாட்டார்.


இந்த சாக்காட்சியைப் காண
அவர் கண்களுக்கு பார்வை இல்லைத்தானே
அவர் இல்லாத கண்களுக்காய்
கவலை கொள்ளமாட்டார்.


இந்த வெடியோசையூம், அவலக்குரல்களும்
அவனுக்கு கேட்காதுதானே
கேட்காத காதுகளுக்காய்
அவன் கவலைகொள்ளமாட்டான்.


அள்ளித் தின்ன உணவூ இல்லைத்தானே
இல்லாத கைகளுக்காய்
அவள் கவலை கொள்ளமாட்டாள்.


இல்லாத பற்களுக்காய்
இவ கவலைகொள்ளமாட்டா
சிரிக்கவோ, சுவைக்கவோ
என்ன இருக்கிறது.


இழந்த உறவூகளுக்காய்
இவர் கவலைகொள்ளமாட்டார்
சித்த சுவாதினமுற்று இருப்பதால்---.


இதற்குள்ளும் இடைக்கிடை
அகாலமாய் மழை பெய்கிறது
கூடாரம் குடை பிடித்திருக்க
நிலத்திற்குக் கீழ் பங்கரும்
மேல் பொருட்கள், சமையல்
சிலநேரம் செல்லில் சின்னாபின்னமாகும்
குழந்தைகளுக்கே சாப்பாட்டிற்கு வழியற்று
முழி பிதுங்கும்


பங்கருக்குள் தண்ணீர் வந்து
உடல் விறைத்திருக்கும்,
தவிர்க்க வெளி வந்தவரை
சிலநேரம்
மீண்டும் காண முடியாது.


பெற்றவரின் பெருங்கொடுமை
பச்சைப்பிள்ளை பசித்து அழும்போது
பரிமாற உணவில்லா நிலைமை
களவூ தெரியாதவனும் களவூ எடுத்தாவது
பிள்ளையின் வயிறு நிரப்ப ஆசை
யாரிடம் களவெடுப்பது ?
வெடிச் சத்தங்களும், ஓலங்களும்,
பயமும் கலந்து வாழ்வூ நகர
தலைநகருக்குப் பான் கி மூன்
வருவார், போவார்
மனித உயிர்களின் மேல் நடந்தபடி


தெற்காசிய, உலக
இராணுவ இலாபத்திற்காய்
கபடமாய் மடிகின்றன(து) உயிர்கள்,
மனித விடுதலை
சுடலை வாழ்வினைச்
சுதந்திரப் பரிசாய்ப் பறைசாற்றுகிறது
மகிந்த அரசு
அயல்நாட்டின் அலங்கார ஜாலமும்
உலகின் பாராமுகமும்
தமிழினத்தை வதைக்கிறது
எந்த வருடலுமற்று


கட்டிய துணையை,
பெற்ற பிள்ளையைக்
கொலை செய்தால் மரணதண்டனை


இறையாண்மை, இலங்கை மக்கள்
என்னவூம் செய்வேன்.
எவரும் கேட்கமுடியாது.
கொலைஞன் இளிக்கிறான்.
அயல்நாடும் ஆமா சாமி போடுகிறது.


இலங்கை சுதந்திரம் பெற்றதாய்ச்
சொன்னபின் கொல்லப்பட்ட தமிழர்
ஒன்றரை லட்சத்திற்கு மேல்
அயல்நாடு அமைதிப்படையாய் வந்து
ஏப்பம்விட்டது ஆறாயிரம்
தாய்த்தேசமாய்ப் பாரதத்தையே
நம்பினர் தமிழர் - அது
மாற்றாந் தாயானது மாறாச்சோகம்தான்.


அகாலமாய் இறந்த உடலை
புதைக்கவிடாது சிங்களம் அமர்க்களம்
நாய்கள் உண்ணும், இழுத்துச்செல்லும்
உறவூகளின் கண்ணீர், துயர்
மண்ணோடு மட்டும் கலக்கும்
காயமடையூம் மக்களுக்கு,
போராளிகளுக்கு
நலிவிலும்
இரத்தம் தந்தனர் மக்கள்.
இரத்தம் தந்தவரே
பின் காயமடைந்ததும்,
இறந்ததும் பதிவூ


கஞ்சி வரிசை
வேவூ விமானத் தரவில்
எறிகணையால் சிதையூம்
கஞ்சிக்கு நின்றவர்
கந்தலாய்ப் போவர்.


வயது வேறுபாடு அற்று
வயிற்றுப் பசிக்காய்
அடுத்த நிமிடமும்
கஞ்சி வரிசை நிற்கும்
இறுதிவரை
கஞ்சி ஊற்றினர் போராளிகள்.


அகிம்சையில் தொடங்கி
அரச அடக்குமுறையால்
ஆயூதமானது போராட்டம்
வாழும் உரிமை கேட்பது தவறா?


சிங்களர் தொகையில்
தமிழரை விட ஐந்து மடங்கு
சிங்களம் ஒரு அரசு
இருபது நாடு உதவியதாய்
சிங்களமே சொல்கிறது.


தனித்து நின்ற சிறு இனத்தை
போரில் வென்றதாய்
இனவாத மகுடி மகிந்த
மார்தட்டல் முறையா?


இங்கு வாழும் அநேகருக்கு
நாள், திகதியே தெரிந்திருக்காது.
சித்திரை வருடமும்
சலனமற்று வந்துபோயிற்று.


மாத்தளன், பொக்கணைக்குள்
ராணுவம் புகுந்தது (20.04.09).
இரண்டாம் உலகப் போருக்குப்பின்
ஒரே நாளில் அதிகர் இறந்த நாள்.
பஞ்சத்தில் துவண்ட மக்கள்
இராணுவ வலைக்குள் சிக்கினர்.


சில நாட்களில் வலைஞர்மடமும்
பறிபோயிற்று. பல உயிர்கள்
பஞ்சாய்ப் போயிற்று.
எறிகணைகள், ரவைகள்,
எறிகுண்டுகள், கொத்துக்குண்டுகள்,
பீரங்கி வேட்டுக்கள்,
விமானக்கொட்டல்கள் - எல்லாம்
சிறு இடத்தைப் பிய்த்துப் போட்டிற்று.


பசித்தாலும், பயந்தாலும்
சுதந்திர மண்ணில் வாழ்வதே சுகம்.
இப்போதெல்லாம் கஞ்சி மட்டும்தான்
அதுவூம் ஒரு நேரம்
அநேகரில் மனநிலைச்சரிவூ.
பட்டினிப் பாவத்திற்கு
ஐநாவூம், மகிந்தவூம் காரணம்.


ஐநாவைப் புரிய முடியவில்லை
காசாவிற்கு ஊசிக் காயத்திற்கு
மருந்திட்ட உன்னால்
காயத்திட்குள் உயிர் பிடித்தவரை
காப்பாற்ற முடியவில்லை. சீ -.
இளைத்து, நலிந்த மக்களின்
ஏக்கப் பார்வைகளில்
பெரும் பெரும் கண்ணீர்க் காவியங்கள்.


கொலை
வலையம்
மகிந்தவின் மொழியில்
அது பாதுகாப்பு வலையம்.


வாழும் உரிமை பறித்தல்
எப்படி
நவீன உலகில் சாத்தியம்?
கடும் உழைப்பின் அறுவடையை
அடுத்தவர் எப்படி சுவீகரிக்கலாம்.
சாவடைந்தவருக்கு
எட்டிற்குக் கழிக்கும் உணவை
அடிபட்டு, பறித்து எடுத்துப் போகிறார்கள்
பசியால் வாடும் சிறுவர்கள்.
பெற்றதாய் புழுங்கிக் கலங்குகிறாள்.
பிச்சை எடுக்கும் ஒருவரைக்
காணமுடியா கிளி, முல்லையில்
அவலம் காண உலகம் சபித்தது.

சிங்களம் கூலிப்படையோடு
புலிகளுக்குள் ஊடுருவி
பல வஞ்சகத் தாக்குதல்கள்
உயிர், பட்டினியைத் தவிர்க்க
அரச பகுதிக்குள் செல்லும்
அப்பாவிகள் மீது சூடு
மூத்த போராளிகள்
கதி கலங்கிப்போயினர்


புலிகளின் ஆட்சேர்ப்பிலும் அடாவடி
மாவீரர், போராளி குடும்பங்களுக்கே
அதிக நெருக்கடி, பாதிப்பு.
திட்டமிட்டு
அரச, கூலிப்படையின் அட்டூழியம்


நந்திக்கடலுடாகத் தன் உளவாளர்களை
படகு விட்டு ஏற்றியது சிங்களம்.


தலைமையின் உத்தரவில்
போராளிகளின் உணவூ
மக்களுக்கு பகிரப்பட்டது
போராளிகள்
ஒரு நேரக் கஞ்சியூடனேயே
களத்தில் நின்றனர்.


செஞ்சோலைச் செல்வங்களுக்காய்
கடற்புலி மீன்பிடிக்கப் படகேறினர்.
உயிர் கொடுத்துக்
குழந்தைகளுக்கு உணவூ தந்தனர்.
மக்களுக்கு மருத்துவம் செய்ய
புலிகளே மயக்கமருந்து,
இரத்தப்பை, சேலைன் தந்தனர்.
அதற்காகவூம் உயிரைத் தந்தனர்.


சீனி கிலோ இரண்டாயிரம்.
பழைய விலை எழுபத்தைந்து.
சீனிக்கஞ்சி உப்புக்கஞ்சியாயிற்று.
உப்பும் இல்லாதவர் கடல்நீரில்
அரிசி இட்டுக் காய்ச்சினர்.
கொழுப்புணவைத் தவிர்க்கவூம்,
இனிப்பு உணவைத் தவிர்க்கவூம்.
ஆலோசனை செய்யூம் உலகில்
ஒரு நேர உணவிற்கே வக்கில்லை.


வெட்டிய சிறு குண்டில்
குடிநீர் பெறப்பட்டது.
தண்ணீருடன் மண்ணும் கலந்து வரும்.
துணியால் வடித்தே குடித்தனர்.
போராளித் தலைமையின் உத்தரவில்
ஆயிரம் சிறு குண்டுக்கிணறும்,
பல நூறு மலகூடமும்
ஏற்கனவே செய்து கொடுக்கப்பட்டிருந்தது.


சுடு மணலின் வெட்கை பெரிதாய்ப்
பாதிக்கவில்லை - மனதின் வெட்கை
அதிகமாயிருந்ததால்.


மருத்துவமனைகள்
நாள் முழுக்க
உயி(ய)ர்சேவை புரிந்தன.
வைகாசி பன்னிரண்டில்
பொஸ்பரஸ் குண்டில்
நானும் காயமுற்றேன் .
அனைத்து ஆவணங்களும்
எரிந்து சாம்பலாகிற்று.


வைகாசி 15, 16 இல்
நாலு பக்கமிருந்தும்
அதிவெடி பின்னணியில்
ராணுவம் மக்களுக்குள் புகுந்தது.
திக்குத் திசை தெரியாமல்
மக்கள் ஓடினர், திரும்பினர்.
வழமை முடங்கிப்போயிற்று.
அல்லோல கல்லோலம்
காயம், இறப்பு, பீதி.
ராணுவவலை


புலிகளால்
சிறைவைக்கப்பட்ட சிப்பாய்கள்
புலிகளால் விடுவிக்கப்பட்டு
மக்களோடு வந்தார்கள் (16.05.09)


பதுங்கு குழியினுள்
இருந்த மக்களையூம்
குண்டு வீசிக் கொன்றபடி
ராணுவம் வந்தது.


டாங்கிகளால்
பதுங்குகுழிகளை மூடிச்சென்றது.
காயமடைந்தவரையூம்
சுட்டுச்சுட்டே நகர்ந்தது.
முள்ளிவாய்க்கால்
தமிழரால் மறக்கப்பட முடியாதது.
மறைக்கப்பட முடியாதது.
துயரைப் பகிரக் கடவூள் போதுமான
வார்த்தைகளைப் படைக்கவில்லை
எந்தக் கவிஞனாலும்
துயரத்தின் துளியைக்கூட
வெளிச்சொல்ல முடியாது.
துயரம் பெரியது, கொடியது.
கற்பனை செய்யப்பயப்படுவது.


பல பொட்டுகளை அழித்து
நிலம் முழுக்க
பல இரத்தப் பொட்டுகள்
மக்களோடு நானும் வந்தேன்
சுமார் முந்நூறு உடல்களைத் தாண்டி,
சிலரில் உயிர் இருந்தது.
நடக்கக் கூடியவரை
எழுப்பி நடக்க வைத்தேன்.
சிலர் என் கால்களைப் பிடித்தனர்
கெஞ்சினர். என்னால் என்ன செய்யமுடியூம்.
கேவலம் ஒரு மனிதனாய்
செத்தபடி ஊர்ந்தேன்


பனங்காயா? பார்த்தேன்
அது ஒரு தலை
கங்குமட்டையா?
இடுப்பு இரு தொடையோடு


உலகில் படுகொலை செய்தவர்
ஒப்புக்கொண்டதாய் வரலாறு இல்லை
அராஜபக்சவூம் விதிவிலக்கல்ல.


நண்பா
என் உள்ளங்கைகளைப் பார்க்கிறேன்.
நீ இறந்து கிடந்தபோது
உன்முகத்தை தடவிய சுவடுகள்
உண்டா? எனப் பார்க்கிறேன்.
என் கைகளை
முகத்தில் ஒற்றிக்கொள்கிறேன்.
போய் வா நண்பனே.
சோதரனே
என் சுமைகளைச் சுமந்தவனே
உன் உயிரற்ற உடலைச் சுமந்து
மணல் கிளறிப்புதைத்து வேகிறேன்.
வாழும் பிணமாய் நகர்கிறேன .
குழந்தையைக் கொஞ்சித்
துணைவியூடன் அனுப்பிவிட்டுப்
பொறி கக்கும் களமுனைக்குள்
சென்றனர் வீரர்கள்.


இறுதிவரை சண்டையிட்டும்
தம்மைத் தாமே சுட்டும்,
சயனைட் அருந்தியூம்,
மண்ணில் வீழ்ந்தனர்
மண்ணின் மைந்தர்கள்.
கணவனும் மனைவியூமாய்
களத்தில் வீரச்சாவூ.
கரும்புலிகள் இறுதிக் கணம் வரை
வெடித்து விடுதலை வேட்கையை
மெய்ப்பித்தனர்.


விடுதலைப் பறவைகளின்
ஆத்மா இசைக்கும் குரல்
யாருக்கும் புரியாமல்
அந்த மண்ணில்
ஒலித்துக்கொண்டே இருக்கும்.


இருப்பவர்களை விட
இல்லாதவர்களுக்காய் வாழ
காலம் கட்டளை இடுகிறது.


மன்னாரிலிருந்து
ஆடு, மாடுகள் செத்துக் கிடக்க
நடுவால் வந்தோம்.
முள்ளிவாய்க்காலில்
மனிதர்களே செத்துக்கிடக்க
பிணவாடையுடே தொலைகிறோம்


உலகே உலகே
ஈரமில்லை ஈரமில்லை
உம் நெஞ்சில் ஈரமில்லை
ஈவிரக்கம் தானும் இல்லை
இதயம் இல்லை
இல்லை என்று சொல்லாதவனை
இதயமின்றி வதைத்தாயே
கள்ளமில்லா நெஞ்சம் மீது
கல்லைத் தூக்கி வைத்தாயே
கனவிற் கூட காணக்கூசும்
காட்சி எல்லாம்
நனவிற் காணும் கொடுமை செய்தாய்
கவிதையாய் வாழ்ந்த வாழ்வை
கந்தலாக்கிச் சிதைத்தாயே
கண்கலங்க வைத்து வதைத்தாயே
கண்கொள்ளாக் காட்சியான வாழ்வதனை
காரிருளாய்த் தொலைத்தாயே
காதல் சொல் அதனை
சாதல் எனச் சபித்தாயே
சதைகள் தொங்கும்
மரங்களைப் பார்த்து
அழுது தொலைக்கும் காலமல்லோ
வதையின் கதைகள் எழுத
வார்த்தைகள் அற்று
புலம்பும் ஓலமல்லோ


தொழுத கைகளை,
நடந்து உழைத்த கால்களை
இழந்து தவிக்கிறௌம்.
உலகே உலகே
உம் நெஞ்சில் ஈரமில்லை


ஈழத்தமிழன் இறுதியாய் ஆண்ட
மண் விட்டு, சுதந்திரம் இழந்து,
பிணமாய்க் கனக்கும் உடலோடு
ஒரு நகர்வூ
மலையிலிருந்து பள்ளத்திற்கு
அம்மா ஏன் என்னைப் பெற்றாய்?


இன்று வைகாசி பதினேழு
சமாதானம் பேச வந்த நோர்வேயின்
தேசிய தினம்.
தேசிய இனம் ஓன்று
சுதந்திரம் இழக்கிறது.


அரச பகுதி பயங்கரமானது.
காணாமற் போன நீள்பட்டியல் அங்கு உண்டு,
விசாரணைகள் அற்ற சிறைகள்,
கண்ணுக்குமுன் கடத்தல், கொலைகள்
யாராகவூம் இருக்கலாம்
பாராளுமன்ற உறுப்பினர்,
ஊடகவியலாளர் -- ஒரே நீதி
விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்படும்


உதயன் ஆசிரியரின் கடத்தலுடன்
வெள்ளை வான் உரிமையாளர்
அகப்பட்டார் - மகிந்த ஐயா.
அமரர் லசந்த விக்ரமதுங்கவின் டயரி
தன்னைக் கொல்பவன் யார்?
தெளிவாய்ச் சொல்லிற்று


முல்லை ராணுவ வலைக்குள்
முட்கம்பிகளுக்கிடையில்
ஒரு லட்சம் மக்கள்
வரிசையில் நிற்கவைத்து
திடீர்க் கட்டளையில்
இருக்கச் சொல்வர் - மக்கள்
ஒருவர் மேல் ஒருவர் விழுவர்
பார்த்துக் கேலியாய்ச் சிரிப்பார்
நீண்ட தடியால் அடிப்பார், அடிப்பது போல் பாசாங்கும் செய்வர்
பத்தாயிரம் சனம் நிற்கமுடியா இடத்தில்
பத்து மடங்கு சனம்
பல மணி காத்திருப்பு
வெயில்இ சன வெட்கை அகோரம்
அம்மம்மா சொல்லில் அடங்காது.


ஒரு முடர் தண்ணீருக்கு
அருகிருந்தவனைக் கெஞ்சினேன்.
தர மறுத்தான்.
அவனும் எத்தனை பேருக்குக் கொடுப்பது?
தண்ணீருக்குக் குழந்தை அழ
தண்ணீர் எடுக்கப்போனவரை
அடித்துத் துரத்தினர் சிங்களர்.
தண்ணீரின் அருமையை வன்னி
மக்கள் அன்றுதான் அறிந்திருப்பர்.


குட்டையில் நீர் எடுத்துப்போகிறார்கள்
அதற்குள் நாய் ஓன்று
செத்துக்கிடப்பது தெரிந்தும்.
வெருட்டலும் அதிகாரத் தோரணையூம்
சிங்களத்தின் செருக்கில் வெளிப்பட்டது.
புலிகளுடன் தொடர்புபட்டவர்
அப்பும் படலமும்
அழகாக அரங்கேறிற்று
பதிவூ மட்டும் எனச் சொல்லி
கூட்டிப்போனார்கள், போனார்கள்.


மனுசி, பிள்ளைகளைக்
கொன்றிட்டாங்கள். அப்பு
நிலத்தில் கிடந்து கதறியது
இன்னும் கண் முன் தெரிகிறது.
என்ர பிள்ளை காயம்
என்ன நடந்துதோ தெரியாது
அந்த அலறல் இப்போதும்
காதுகளில் கேட்கிறது.
சிங்களம் விடுப்புப் பார்த்துச் சிரித்தது.
வவூனியா பயணம்
செல்லும் வழியெல்லாம்
வீடுகள் உடைவூ. ஐயோ
மாவீரர் துயிலும் இல்லம் தரைமட்டம்
கிட்லரும் தோற்று விட்டான்
பூலோகமே நீ அழிந்தாலென்ன?


நினைவூக் கல்லறைகளை இடிக்கிறார்கள்
பேடிகள். நிஜக் கல்லறைகள் மக்களின்
நெஞ்சங்களில் இருப்பது தெரியாமல்.


செட்டிகுளம் காடு
திறந்தவெளிச் சிறை
முகாம் வாழ்வூ
மீண்டும் கூடாரம் - தலா
ஒன்றுக்குள் முப்பது பேர்.
இரவில் ஆண்கள் வெளியில் படுப்பர்.


எல்லாவற்றுக்கும் வரிசை
குடிநீருக்கு, குளிப்பதற்கு,
உணவிற்கு, மலசலகூடத்திற்கு.
ஊருக்கு உணவூ கொடுத்த கைகள்
ஒரு நேர உணவிற்கு கையேந்தின.
வாகனத்தில் இருந்து
உணவூப் பார்சலை எறிய
கைகளால் ஏந்தினர்.


மீண்டும்
புலித்தொடர்பு களையெடுப்பு.
முட்கம்பிகளுக்குள்
அழகான புன்னகை களவாடப்பட்டது,
எரியூட்டப்பட்டது.


உலகின் பெரிய அகதிமுகாமாம்.
சாவூக்கு முந்திய கொடுமை
நலிவடையைச் செய்யூம் தந்திரம்.
நூற்றாண்டின் புது அடிமைச் சட்டம்.


ஒப்பனை அற்ற வாழ்வில்
அன்பும் மகிழ்வூம் இருந்தது.
இங்கு அனைத்தும் போயிற்று.
அவன் நினைப்பது போல் வாழ்வூ.
அகாலத்தில் அழைத்து விசாரணை.
கதைக்க முடியாச் சுதந்திரம்.
இறந்தவர் பாச உடலைக் கூட
இராணுவத்திடம் கையளித்து
கடைசிக் காடேறும் படலமும் இல்லை.
கனவிலும் விரும்பா வாழ்வூ.
மாற்று உடையற்ற வாழ்வூ.
கனதியான சோகம்.
கரையூம் உரிமை.


யார் பொட்டு வைப்பது?
இருப்பவர், இல்லாதவர் குழப்பம்.


ஐநூறு புலிகள்தான் என்றவர்.
பத்தாயிரம் புலிகளைப் பிடித்ததாய்
அறிக்கை.


விமானங்கள் மட்டும்
48 லட்சம் கிலோ வெடிமருந்தை
கிளி, முல்லையில் வீசினவாம்
வீரப்பேச்சு வேறு.
கோடிக்கு அதிக எறிகணைகள்,
பல கோடி ரவைகள்,
எம் அழகு பூமியைப் பிய்த்து நாராக்கின.


இருபத்தையாயிரத்திற்கும்
அதிக உயிர்ப்பலி.
ஆயிரக்கணக்கில் அவயவ துண்டிப்பு.
பலருக்கு காது கேட்காது.
அநேகருக்கு உளநோய்
யாரும் தொற்றுநோயால் இறக்கவில்லை.
போரில்
பல ஆயிரம் சிங்கள இளைஞர் பலி.
பாவம் அந்த ஏழைக் குடும்பங்கள்.


கருணை மிகு புத்த பகவானோ
விலங்குகளைக்கூட
கொல்ல அனுமதியாதவர்.


வைகாசி 2009
தமிழரின் இரத்தம் தோய்ந்த மாதம்.
தமிழர் வரலாற்றின் கருமை.
ஊடகங்களுக்கு
உண்மை சொன்னதற்காய்
உருகி உழைத்த
மருத்துவர்கள் கைது
மனித உரிமை யாது?
வாழா வெட்டி உலகம்
வெற்றுப் பேச்சு உலகம்
ஒன்றும் செய்யவில்லை.


முகாம்களில்
தொற்று நோய்களில்
தினமும் முட்பது உயிர் பறிப்பு.
பல நூறு சின்னமுத்து, கொப்பளிப்பான்.
பலருக்கு மூளைக் காய்ச்சல்.
தற்கொலைகளுக்கும் குறைவில்லை.
தொற்றுநோய்களின் சாம்ராஜ்யம்
மகிந்தவின் முகாம்கள்.
எங்கு தேடியூம் பலரைக் காணவில்லை .


சம்பூர், மாதகல், மாவிட்டபுரம்,
தெல்லிப்பளை மக்களை
இன்னும் குடியேற்றவில்லை.
எப்போது எம்மை?


மானத்தைத் தவிர
எல்லாம் இழந்த மக்களை
முகாமிலிருந்து வெளியேறப் பல லட்சம் பணம் கறக்கும் ராணுவம்
கை, கழுத்து நகைகள் மறைந்தன.
தக தகக்கும் தமிழர் வாழ்வில்
குளிர் காய்கிறது சிங்களம்.


வளமாக வாழ்ந்த
எம் கூண்டினைக் கலைத்து,
துரத்தி, துன்புறுத்தி,
உயிர் பறித்து,
அங்கம் பறிதது,
வாழ்நாள் சொத்துக்களை
சிதைத்து, சூறையாடி, ஒரு பையூடன் வெறும் உயிருடன்
உள்வாங்கி, முடக்கி, உளம் உருக்க
சிங்களமே அயல்நாடே
என்ன பாவம் செய்தனர்
அன்பு கனிந்த இம்மக்கள்.


அநாதை வாசகம் தெரியா
செஞ்சோலை, காந்தரூபன்
செந்தளிர், பாரதி இல்லம்.
திக்கற்ற முதியோருக்கு
அருமை முதியோர் இல்லங்கள்.
மனநோய் உள்ளோருக்கு
அன்பான வெற்றிமனை.
கண்பார்வை இல்லாதவருக்கு
இனிய வாழ்வூ இல்லம்.
செயற்கைக் கால் இட
வெண் புறா.
தென்னாசியாவில்
தொற்று நோய் குறைந்த மண்.
பிச்சைக்காரரைக் காண முடியாத் தேசம்.
திருடர்கள் அற்ற வாழ்வூ. பெண்களுக்குச்
சமவாய்ப்பு, வறுமை பல்கலை மாணவருக்கு
மலரவன் நிதியம.
உலகிற்கு மட்டும்
பாதகமாய்த் தெரிந்தது ஏன்?


உலகின் தலைநகர் வீதியெல்லாம்
முதியோர், குஞ்சுகுருமன் எல்லாம்
கொட்டும் குளிருக்குள்ளும்
தவமாய்க், தஞ்சமாய்க் கிடந்தனரே
காப்பாற்று, காப்பாற்று.
கதறிக், கதறி அழுத கண்ணீரும்
பனிக்கட்டியாய்ப் போயிற்றே.


தீயினால் உடல்களே உருகியபோதும்
உங்கள் உள்ளங்கள்
ஏன் இளகவில்லை?

முந்நூறுக்கு மேல்
தமிழக உறவூகளின் உயிர்கள்
வங்கக்கடலில் பறிக்கப்பட்டன.
ஒவ்வொரு தடவையூம்
வன்னியில் இரத்தம் கொதித்தது.
தமிழக தலைவர்களைக்
கோமாளி என்றான் சிங்களன்.
வன்னியில் இரத்தம் கொதித்தது


அழகழகான இடங்கள்
அழகற்று முண்டம் இருந்த சந்தியாய்.
எரிந்த உடல் சுருண்டு கிடந்த இடமாய் .
கர்ப்பிணித்தாய் வயிறு பிளந்து கிடந்த குடிலாய்.
குழந்தை ஒன்றின் பிஞ்சுக்கால்கள் கிடந்த முடக்காய்.
பத்துப் பிறப்பிட்கும் இங்குதான்
வாழ விரும்பிய மனம்
இனி அங்கு செல்ல சம்மதிக்குதில்லை.


தந்தையற்ற குடும்பம்
தாய் இருக்கிறா என நிம்மதி கொள்ளும்.
தாய் தந்தை இல்லாக் குடும்பம்
சகோதரர் இருப்பதால் நிம்மதி கொள்ளும்.
யாருமற்றவர் என்ன செய்வார்?
கையூமற்று, காலுமற்று, கண்களற்று.
ஓ கடவூளுமற்று என்ன செய்வார்?


மனிதன் உயிருடன்
இதைவிட
நாராக முடியாது.


நிறுத்து என்று சொல்ல
தமிழனுக்கு அதிகாரமற்றதால்
உடலைக் கொளுத்தி எரித்த போதும்
எந்தக் கொம்பனும் வரவில்லை.
எரிந்த நெருப்பு அணைந்துவிடவில்லை. நீறு பூத்துக்கிடக்கிறது.


எட்டுக் கோடித் தமிழரை
உலகம் அவமானம் படித்திற்று.
மனித உரிமை வெறும்
உதட்டளவில் உதிர்ந்து போகிறது


வாழ்க்கையின் கனதி கூடி
ஒவ்வொன்றாய் மறந்து
இப்போது இறந்தவர் முகங்கள்
மட்டும் ஞாபகத்தில்


சிங்கள ராணுவம்
விடுதலைப்புலிகளின் யூக்திகளை
போரில்
பின்பற்றிற்று.


விடுதலைப்புலிகளின்
ஆயூதக்கப்பல்களை
வல்லரசு ஒன்றே
கடலில் அழித்திற்று
அதனால் புலிகள் தோற்றனர் .


உயிர் காக்க மட்டுமல்ல
டாக்டர் பட்டம் - அது
கொலை உச்சத்திற்கும் வழங்கப்படுகிறது.
சித்திரகுப்தனுக்கும்
பொன்னாடை போர்க்கிறார்கள்.


இது - ஒரு இனத்தின் வரலாறு.
அழித்தலால்
அழியாமல் போகும் (வாழும);
வரலாறு.
கழித்தலால்
கூட்டப்படும் வரலாறு.

தமிழர் வாழ்வில்
2009 விரோதி வருடமாய்
நிலைக்கப்போகிறது.

Share/Save/Bookmark

2 கருத்துகள்:

V.A.S.SANGAR சொன்னது…

வேதனைகள் விபரிக்கப்படும் போது வலிகளை காண முடிகிறது .என்ன பண்ணுறது இப்பிடி பிறந்திட்டம்

அருண்மொழி சொன்னது…

கண்ணீரை மட்டுமே பதிலாய் தரமுடிகிறது.
இழந்தவற்றின் வலியை விட, இழப்புகளின் அர்த்தம் அழிக்கப்பட்டுவிடுமோ என்ற நினைவு தான் இன்னும் வேதனையைத் தருகிறது!
{தயவு செய்து, உங்கள் அனுபவங்களை ஆவணப்படுத்துங்கள்}

கருத்துரையிடுக