சனி, 8 நவம்பர், 2014

கடைசி நிமிடங்கள்

கள அருகிலும்
மருத்துவமனைகளிலும்
கண் மூடிப்போனவரின்
கடைசி நிமிடங்கள் - மனதில்
ஏற்றப்பட்ட ஆணிகள்

அன்றும் அப்படித்தான்
" என் அம்மாவிற்கு----"
அவன் கண் மூடினான்
பத்திரிகையில் விலாசம் தேடி
வன்னேரிக்குளத்திலிருந்து 
வேரவில் போனேன்
வளர்பிறையோடு  

இடம்பெயர்ந்திருந்த
ஏழைக்கொட்டிலில்
அம்மாவோடு பிள்ளைகளும்
எப்படிச்சொல்வது ?
சொல்லாமலே விடைபெற்றோம்   

பத்துவருடம் கழித்து
வள்ளிபுனத்தில்
அம்மாவை காண்கிறேன்
வயிறு பிளந்து குடல் தெரிய
முகம் வியர்த்துக்கிடக்கிறாள்
எல்லாப்பிள்ளைகளையும்
"செல்" தின்றதாய் சொல்கிறாள்
பிள்ளை!என்னைக்காப்பாற்றாதே!
அவள் தப்பமாட்டாள்  
அந்தத்தாயிடம்
அவள் மகன் சொன்னதை
ஒப்புவிக்கிறேன்
" அடுத்தபிறப்பிலும்
உனக்குத்தான் பிள்ளையாய்
பிறப்பேன் அம்மா.
அம்மா நீ அழக்கூடாது,
நீ அழக்கூடாது."
வாயில் ஒருபுன்சிரிப்போடு
அம்மாவும் கண் மூடிப்போனாள்
Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக