வெள்ளி, 2 மார்ச், 2012

உண்மைக்கதைகள் -05

அது எண்பத்திநான்காம் ஆண்டாக இருக்க வேண்டும் அவர்கள் இருவரும்
எதிரெதிராய் சந்தித்துக்கொள்வார்கள்.ஆனால் இருவரும் வெவ்வேறு
இயக்க உறுப்பினராய்,சிவாவும் ஓவியனும் ,ஓவியனோ ஒவ்வொரு
தடவையும் முறைப்பான் சிவா தலையை குனிந்து சென்றுவிடுவான்
இருவரும் முன் பின் அறிமுகமில்லாதவர்தான்.
                                      சிலகாலத்திட்குப்பின் சிவாவும் ஓவியன் சார்ந்த
இயக்கத்தில் கடமை செய்ய மாறி வந்தான்.இப்போது அவர்களுக்கிடையில்
புரிந்துணர்வு உருவாகிற்று.சிவா பிராமண சமூகத்தை சேர்ந்தவன்.
அவனுக்கு இந்த வாழ்வு கடினமாக இருந்திருக்கும். தங்குமிடத்தில்
எப்போதும் அசைவ உணவே வரும்.அவன் சாப்பிடுவதில்லை.கடையில்
ஏதாவது வாங்கி சாப்பிட்டு வயிறை நிரப்புவான் அனேகமாக பூந்தி
லட்டுத்தான்.அவன் கூட செலவளிப்பதாகவும் குற்றமும் அவன் மீது
வீழ்ந்தது.அவன் பாவம் அவன் என்ன செய்வான்.
                                    யாழ்ப்பாணம் முழுக்க சைக்கிள் அடிச்சுத்தான்
வேலை அவன் தெல்லிப்பளை,வல்வெட்டித்துறை உள்ளீடாய் பல
இடங்களில்
முதலுதவி வகுப்புக்கள் எடுத்தான்.திலீபனின் உண்ணாவிரத
காலத்தில் மாறி மாறி அம்புலன்சிட்குள் தவம் இருந்தான் .
                                    இந்தியன் ஆமிக்காலம் அவன் செஞ்சிலுவை
சங்கம் ஒன்றுக்கு சொந்தமான இடத்தில் தங்கி இருந்தான்.
அந்த இடத்தில் இயக்கத்தின் சில சந்திப்புகள் யாருக்கும்
தெரியாமல் நடக்கும் .யாருக்கும் ஐயுறவும் வரவில்லை.
                                    ஒருமுறை மன்னாருக்குரிய நோட்டீஸ்களும் ,
சுவரொட்டிகளும் அனுப்ப வேண்டும்.சிவாவும்,ஓவியனும்
தனித்தனியாக சைக்கிளில் பஸ் நிலையத்திற்குள் கொண்டுவந்தார்கள்.
மன்னார் மினி பஸ்ஸில் சீட்டை பிரட்டி சீட்டிற்கு கீழ் யாரும்
அறியாமல் வைத்தார்கள்.அர்ச்சுனன் அந்த பஸ்ஸில் போகிறான்.
இயக்க பிரதேசம் வரும்போது அதை எடுத்து போவான்.அர்ச்சுனனுக்கு
முகத்தால் சைகை காட்டி இருவரும் வெவ்வேறு திசையால்
போனார்கள்.இப்போது சிவா,அர்ச்சுனன் ஓவியன் இணைபிரியா
நண்பர்கள்.
                              இது இரண்டாம் ஈழப்போர் ஆரம்ப காலம் யாழ் வைத்தியசாலை இயங்கவில்லை.சிவாவின்
பொறுப்பில் மருத்துவ வீடுகள் மானிப்பாயில் ஓவியனின் பொறுப்பில்
மருத்துவ வீடுகள் வட்டுக்கோட்டையில் அர்ச்சுனன் மன்னாரில்.
சிவாவின் வீடுகள் எப்போதும் மிக துப்பரவாக இருக்கும் உதாரணம்
காட்டி கதைப்பார்கள்.பின் சிவா யாழ்ப்பணத்தில் ஜேம்ஸ்,ரோய்
மருத்துவ வீடுகளுக்கு பொறுப்பாய் செல்ல ஓவியன் சுதுமலை
வீடுகளுக்கும் யாழில் இருந்த அருணா வீட்டுக்கும் பொறுப்பாய்
வந்தான்.(களமுனையில் போராளிகள் குறைந்த நிலையில்
காயமடைந்த போராளிகளை விரைவில் குணப்படுத்தி மீள களமுனைக்கு
செல்ல துணைபுரிதல் முக்கிய இயக்க பணியாக இருந்தது).
                               1992 இல் மருத்துவ பிரிவிற்கும் பொறுப்பாய்
இருந்த மாத்தையா அவர்களால் சில காரணங்களை காரணம்
காட்டி சிவா இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்டான்.அக்காலத்தில்
அவன் மிக கவலை கொண்டிருந்தான்.
                              1997 ஆம் ஆண்டு ஒலுமடு பிரதேசத்தில் சிவாவை
ஓவியன் கண்டான்.ஓவியன் ஒவ்வொரு ஞாயிறும் பற்சிகிச்சை
வழங்க ஒலுமடுவில் இயங்கிய பொன்னம்பலம் மருத்துவமனைக்கு
வருவான்.அதையறிந்து சிவா ஓவியனை சந்திக்க வந்திருந்தான்.
எப்போதும் விடுதலை போராட்டத்துடன் சேர்ந்து வாழவேண்டும்
என்பதில் உறுதியாய் இருந்தான்.வேலை அற்று சோர்வுடன்
காணப்பட்டான்.சிவாவை சர்வதேச செஞ்சிலுவை சங்க
நடமாடும் மருத்துவ சேவையுடன் உதவி மருத்துவராய்
இணைக்க ஒழுங்குபடுத்திக்கொடுத்தான்.
                            சிவா மக்களுக்கு நிறைவான சேவை வழங்கி,
கிராம சுகாதார வழங்குனர்களின் கல்விபுகட்டலிலும்
சிறந்த பங்கு வகித்தான்.வசதிகள் குறைந்த வன்னி மண்ணில்
அந்த காலங்களில் மக்களுக்கு சேவையாற்றிய அவன்
மனித உச்சமாக தெரிகிறான்.
                             சமாதான காலத்தில் யாழ்ப்பாணத்தில்
இருந்தான்.
                           நான்காம் ஈழப்போர் ஆரம்பமாகுவதட்கு
சிலமாதம் முன் மீண்டும் வன்னி வந்தான்.நேரடியாய் ஓவியனிடமே
வந்தான்.யாழ்ப்பான தற்போதைய நிலையை விளக்கி மீண்டும்
அங்கு செல்ல விரும்பவில்லை என்றான்.ஓவியன் அவனை
மீள இயக்கத்தில் இணைய கேட்டான்.சிவா விரும்பவில்லை.
இப்போது சிவா திருமணம் முடித்திருந்தான்.அவனது மனைவி
யாழில் ஆசிரியையாய் கடமை புரிந்தாள்.
                               சிவா ஓவியனுடன் கலந்தாலோசித்து மனநோயியல்
சிகிச்சை கடமை செய்ய முடிவெடுத்தான்.அரசசாரா நிறுவனம்
ஒன்றினூடு கடமை செய்ய தொடங்கினான்.இரண்டு கிழமைக்கு
ஒரு தடவை ஓவியனுக்கு மனநோய் சம்மந்தமான அறிக்கை
கொடுத்து விவாதித்து வந்தான்.    இக்காலப்பகுதியில் இவனது
மனைவி சிங்கள இராணுவத்தின் துப்பாக்கி ரவை தற்செயலாய்
பாய்ந்து இறந்து போனாள்.மனைவி காயப்பட்டிருக்கும்
காலத்தில் கூட அருகில் இருக்க முடியாமல் மிகக் கவலையில்
இருந்தான்.
                        இறுதிவரை மனநோய் சிகிச்சையை கிளி,முல்லையென
மோட்டார் சைக்கிள் பயணத்துடன் வழங்கிவந்தான்.
                       2009 சித்திரை இருபதில் மாத்தளன் இராணுவத்திடம்
வீழ்ந்தவுடன் மிக வருந்தினானாம்.2009 சித்திரை இருபத்தி இரண்டு அன்று
வலைஞர்மடத்தில்
ஓவியனை சந்திக்க சிவா வந்த வேளை வெறும் பத்து மீற்றர் தூரத்தில் கொத்துக்குண்டுக்கு இரையாகி
சிவா தனது மக்களை பிரிந்தான்.ஓவியனால் சிவாவின் இறப்பைத்தான்
உறுதிப்படுத்த முடிந்தது.
                          விடுதலைப்புலிகளால் நாட்டுப்பற்றாளர் கௌரவம்
வழங்கப்பட்டு அவனது உடல் முள்ளிவாய்க்காலில் விதைக்கப்பட்டது.

                                                                              - நிரோன்-

 
                                   



Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share