சனி, 24 மார்ச், 2012

முள்ளிவாய்க்கால் , வைகாசி 17-சில மணித்துளிகள்

முள்ளிவாய்க்கால் , வைகாசி 17 , எங்கள் ஆட்சி மண்ணை துறந்த எங்களின்
இறுதி நிமிடங்கள் - அந்த நேர உணர்வின் சில பகுதி
                                                         நானும் சுதனும் என்ன செய்வது என்ற திடமான
முடிவற்று இருந்தோம்.எம்மோடு இருந்தவரை நேற்று பிற்பகல் கதைத்து
இராணுவ பகுதிக்குள் அனுப்பி இருந்தோம்.எந்த காரணம் கொண்டும்
சரணடைய வேண்டாம் .பொது மக்கள் போன்றே செல்லுங்கள் என்றே
சொல்லி அனுப்பி இருந்தோம்.போகும் பொது ஒவ்வொருவரும் வந்து
நீங்கள் என்னமாதிரி?நாங்களும் நிக்கிறோம் என்ற பிடிவாதங்களை
தளர்த்தியே அனுப்பி வைத்தோம்.சுதனும் நேற்றிரவே போயிருக்கலாம் .
என்னை விட்டு போக மறுத்துவிட்டான்.அநேக மக்கள் நேற்று இரவே
இராணுவ பிரதேசத்திற்குள் சென்றுவிட்டார்கள்.எங்களுடைய
வோக்கிக்கு ஒரு நிலையத்திலிருந்தும் ஒரு பதிலும் இல்லை.
நாங்கள் வெளிக்கிடுவோம் கடைசி மக்களோட நாங்கள் வெளிக்கிடுவோம் .


நேற்று முழுக்க பல மக்கள் ,போராளி மாவீரர் குடும்பங்கள் வந்து கேட்டார்கள் நாங்கள் என்ன
செய்யிறது.நீங்கள் கவனமாய் போங்கோ!  பலர் எங்கள் முன் அழுதுவிட்டு
போனார்கள்.நாங்கள் என்ன செய்வது? உண்மையில் யாருக்கும்
ஆலோசனை சொல்லும் (மன )நிலையில் நாங்கள் இல்லை.
                                              சுதன் வோக்கியை உடைத்தான்.குப்பியை
 மணலுக்குள்ள புதைப்பம் என்றான்.நான் வேண்டாம்
பிறகு சனம் வரையிக்க குழந்தைகள் தெரியாமல் விளையாடிடுங்கள்
என்றன்.அவன் அப்ப மலசலகூடக்குழியிக்க போடுவமா?  என்றான்.
நானும் ஆம் என்றேன் .எனது இரட்டை குப்பியை ஒருமுறை கண்
கொட்டிப் பார்த்துக்கொடுத்தேன்.குப்பி மருந்து இருந்தும் குப்பி
இல்லாமல் இயக்கம் கஷ்டப்பட்டது ஞாபகம் வந்தது.தகட்டை
கொடுக்கும் போது முன்பு தகடு தொலைத்தால் ஆறு மாதம் சமையல்
தண்டனை ஞாபகம் வந்தது.இப்ப நான் இயக்கம் இல்லையோ என்ற வேதனையும் மனசை வாட்டிற்று.
                                              எல்லாப்பக்கத்திலேயும் ஆமி ,ரவுண்ட்ஸ்
எல்லாப்பக்கத்தில இருந்தும் கூவுது. எங்கட கணிப்பிக்கு நாங்கள்
இருந்த இடத்தில இருந்து வட்டுவாகல் பக்கமாய் 150 மீற்றரில
ஆமி இருப்பான் . மெதுவாய் குனிந்து குனிந்தே போய்க்கொண்டிருந்தோம்.
கையில எலும்பு உடைஞ்ச ஒரு பெடியனை தடியை support ஆய் கட்டி
அனுப்பினேன்.சுதன் கால் எலும்பு உடைந்த ஒரு ஐயாவிற்கு மண்
மூட்டையில இருந்து சாக்கு உருவி இருதடிக்குள்ள தள்ளி தூக்கிக்
கொண்டு போகச்சொன்னான்.ஒரு சாக்கு என்றதால அது போதவில்லை
கால் தொங்கிற்று நான் போய் காலை தடியோட சேர்த்து கட்டிவிட்டேன்.
ஒரு பிணத்தில இருந்த சாரத்தை கிழித்து எலும்புமுறியாத இரு
காயங்களுக்கு கட்டுப்போட்டேன். ஒரு இளவயது தாய் கத்திக்
குளறினா தனது கணவனை காப்பாற்றுமாறு கெஞ்சினா வயிற்றில
பெரிய காயம் ஆனால் உயிர் இருந்தது .நூறு வீதம் ஆள் தப்பாது .
அம்மா நீ போ அம்மா நீ வீணாய் சாகப்போறாய் நான் எரிந்த வாகனம்
ஒன்றின் கவரில் நின்று கெஞ்சிப்பார்த்தேன். அம்மா இனி உங்க சனமில்லை
நீ வாம்மா அவள் கேட்கவில்லை அவள் கத்திக்கொண்டே இருந்தாள்.
                                              சுதன் சிறு குன்றுக் கிணற்றிலிருந்து   வாளியிலே மண்ணோடு தண்ணீர் கிள்ளினான் .இறுதியாய் இரத்தக்கை கழுவி மிகுதி நீரைக்குடித்தேன் .வியர்த்து முதுகில் இருந்த எரிகாயம் எரிந்து கொண்டிருந்தது.
சில மீற்றர் தூரத்தில் முதலாவது ஆமியை கண்டேன் .அவன் மரம்
ஒன்றின் பின் துப்பாக்கியை எம்மை நோக்கி நீட்டிய படி இருந்தான்.இப்போதும்
அந்த தாயின் அழுகுரல் கேட்டுக்கொண்டிருந்தது.

                                                     - நிரோன்-


 
                                                    


Share/Save/Bookmark

1 கருத்து:

வேர்கள் சொன்னது…

நிரோன்
வைகாசி 17 என்றால் மே 31 தேதி வருகிறது ஒருமுறை சரிபாருங்கள் நண்பா

கருத்துரையிடுக