செவ்வாய், 3 மார்ச், 2015

மருத்துவப்பெருந்தகை கெங்காதரன் ஐயா

மருத்துவப்பெருந்தகை கெங்காதரன் ஐயாவை 95 ஆம் ஆண்டளவில்  யாழ் மருத்துவமனையில் முதல் முதலாய் சந்தித்தேன்.கையில் ஏற்பட்ட காயம் ஒன்றிற்கு சிகிச்சை பெறவந்திருந்தார்.காயத்துடனும் மலர்ந்தமுகத்துடனேயே இருந்தார் நான் இறுதியாய் சுதந்திரபுரத்தில் சந்திக்கும் பொழுதும் அதே மலர்ந்தமுகம்தான். அவரை அதற்கு முன்பு சந்திக்காது இருந்தாலும் அவரை அறிந்திருந்தேன்.யாழ்ப்பாணத்தில் உருவாகிய தனியார் மருத்துவக்கல்லூரியின் ஸ்தாபகர்களில் ஒருவராயும் ஐயா இருந்தார்.
இரண்டாவது, மூன்றாவது, --- தடவைகள்  ஒலுமடுவில் இயங்கிய பொன்னம்பலம் மருத்துவமனையில் பற்சிகிச்சை கிளினிக் நடாத்த சென்றபோது சந்தித்தேன்.பின் துணுக்காய்,கிளிநொச்சி  பொன்னம்பலம் மருத்துவமனைகளில் நெருக்கமானோம்.
ஐயா மிகவும் எளிமையானவர்,மென்மையானவர் ஆனால் அதீத சுறுசுறுப்பானவர். பத்துவருடங்கள் அரசசேவையில் இருந்தார்.முல்லைத்தீவு மாவட்ட வைத்தியாலையின் மாவட்டவைத்திய அதிகாரியாய் 1960 களில்
இருந்தார்.அப்போது பெட்ரோல்மக்சின் உதவிடன் அவசர சிசேரியன் சத்திரசிகிச்சை செய்து தாயையும் பிள்ளையையும் காப்பாற்றியவர்
  ஐயா மருத்துவத்துறையில் ஒரு சகலகலாவல்லவர். அவரிடம் எப்போதுமே ஒரு நீதி இருந்தது. அதுதான் அந்த ஓய்வற்ற உழைப்பைக்கொடுத்தது.அவர் பல பல ஆயிரம் மக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்திருக்கிறார். பல ஆயிரம் சத்திரசிகிச்சைகளை செய்திருக்கிறார். ஆறு தசாப்தங்கள் மருத்துவப்பணி செய்திருக்கிறார்.
சுகாதார விஞ்ஞானக்கல்லூரியின் தலைவராக நியமிக்கும் போதும் அன்போடு ஏற்றுக்கொண்டார்.சுகாதார விஞ்ஞானக்கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழாவின் போது  மாணவர்களுக்கு ஐயா பட்டமளிப்பது இன்றும் மனக்கண்முன்னால் விரிகிறது.
 புல்லாங்குழலை தானாகவே பயின்று ,அந்த இசையாலும் மக்களை மகிழ்வூட்டிய வள்ளல். இவரது புல்லாங்குழல் இசை இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்திலும்  பல தடவைகள் ஒலிபரப்பானது குறிப்பிடத்தக்கது.  
      . ஐயாவும் அவர் மனைவியும் மிகவும் தங்களுக்குள் அன்பாக இருந்தவர்கள். இவரது மனைவி பாம்பு தீண்டி எதிர்பார்க்காமல் உயிர் இழந்தவர். மனைவியின்  திடீர் இழப்பிற்குபின் ஐயா எப்படி மீள் எழுவார் என்று ஐயுற்றோம்.ஐயா மீள எழுந்து தன் அளப்பரிய சேவையை தொடர்ந்தார். ஐயா மருத்துவராயும் அவர் மனைவி தாதியாகவும்   தாங்களே தயாரித்த சுகாதார கருத்தூட்டல்கள் இன்றும் என் காதுகளுக்கு கேட்கிறது.
ஐயாவிற்கு மெக்கானிக் அறிவும் இருந்தது. பல உபகரணங்களை அவரே திருத்துவார். எதையும் வீணாக்கவிடமாட்டார். மிகவும் சிக்கனமாய் பொன்னம்பலம் மருத்துவமனை இயங்கவேண்டும் என்பதிலும் கரிசனையாய் இருந்தார். மூத்த போராளியொருவர் இறுதிப்போரின் பின் 
நீண்டகாலம் புனர்வாழ்வு பெற்று  வெளிவந்து ஐயாவை சந்தித்திருக்கிறார். ஐயா ஒரு இலட்சம் ரூபாவை கொடுத்து ஐம்பது ஆயிரம் உமக்கு மிகுதி ஐம்பது ஆயிரம் ரூபாவை நீர் நல்லாவரும்போது தரவேண்டும் என்று கொடுத்திருக்கிறார்.இதுதான் ஐயா.ஐயாவின் தென்னந்தோட்டத்தில் பல ஏழைக்குடும்பங்களை குடியேற்றி வாழவும் வழிகாட்டியவர்ஐயாவின் வன்னியில் வாழ்ந்தகாலம்  ஒரு வரலாற்றின் தடம்      
தேசியத்தலைவர் அவர்களால் ஐயாவிற்கு" மாமனிதர் " விருது வழங்க கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. இறுதிப்போர்ச்சூழல்

அக்கணத்தை தின்றுவிட்டதுஐயாவின் உடலைச்சுமந்து வன்னியெங்கும் அஞ்சலி செய்ய இயலாத மனம் துடிக்கிறது. போய்வாருங்கள் ஐயா. வன்னியில் வீசும் காற்றிலாவது எங்கள் எல்லோரினதும் உரையாடல்கள் கலந்திருக்கும்.       


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share