சனி, 28 மார்ச், 2015

உயிரின் அலைவரிசையில் ஒலிப்பது

மகளே!
கிழிந்த சட்டைக்காய் அழாதே!
கிழித்த சட்டைதான்
இங்கு latest  design

ஆச்சியின் பொக்குவாய்ச்சிரிப்பில் 
பூரித்த என் இதயத்தை
இங்கு கடந்து போகிறது  
ஒரு ஆச்சியின்  சிரிப்பு 
கட்டிய பற்களுடன்

போசனைக்குறைபாட்டால்
என் சமூகம் அவதியுற
யோ/போசனைகூடி 
அவதியுறுகிறது
இங்கு ஒருசமூகம்

பேரனின் வியர்வை ,
அண்ணனின்  குருதி கலந்த மண்ணில்
வேர்விட்டமரம் நீ
வெயிலில்
காணாமல் போகும் பனியோடு
கரைந்து போகிறேன் நான்
தாமரை இலையில் நீர்போல

அம்மா குழைத்து
உள்ளங்கையில் வைக்கும்
சோற்றுருண்டை
முழு நிலாவைவிட அழகு மகளே!
அதுதான் என் பூமி மகளே!   
பச்சை வயலும்,  
பனங்கூடலும்,குளக்கரையும்
நிசப்த காடுகளும்
ஒத்தனம் தரும் பூமியில்
ஏது சூதுவாது ?

ஆடு மாட்டின் பால்போல
வெள்ளையாய்
பனங்கள்ளும் ,கடல்நுரையும்
உன்சிரிப்பும் மகளே!
நீலம் போடாத வெண்மை மகளே!

நிலம் தொடாமல்
அந்தரத்தில் துயில்கொள்ளும்
என் மனதில் நிறைவது எல்லாம்
நீ நடந்து திரியும் மண்தான் மகளே!
உயிரின் அலைவரிசையில் ஒலிப்பது
தேசப்பாடல்மட்டும்தான் மகளே!

எட்ட இருந்தாலும்
ஒட்டி இருக்கிறாய்
அது எப்படி ?
என் அழகிய தமிழ்மகளே!


  


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக