ஞாயிறு, 14 ஜூலை, 2013

அந்த நேரத்திலும் நான் சிரித்தேன்

முள்ளிவாய்க்காலில்  இருந்து மக்கள் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள் நுழைந்து கொண்டிருந்தார்கள்.வட்டுவாகல் பகுதியை தவிர்த்து எல்லாப்பக்கம் இருந்தும் துப்பாக்கி சன்னங்கள் கீச்சு கீச்செனெ வந்துகொண்டிருந்தது. நானும் எனது ஒரு போராளியும் மண்மூட்டை மறைப்பில் இருந்து கதைத்துக்கொண்டு இருந்தோம்.சன்னம் பட்டு சில மக்கள் கீழ் விழுவதும் உறவினர் கதறும் ஒலியும் குறைவில்லாமல் கேட்டுக்கொண்டிருந்தது. என்னுடன் இருந்த போராளி ஒவ்வொருமுறை மக்களின் அழுகுரல் வரும்போதும் ஓடிப்போய் பார்த்து முடிந்ததை செய்துவிட்டு வருவான்,தேவையெனில் என்னையும் அழைப்பான். அருகில் இருந்த சனங்கள் படிப்படியாய் போய் எல்லாம் வெளிச்சுக்கொண்டு வந்தது. வண்டு மேலே சுற்றிக்கொண்டு இருந்தது.திடீரென கடற்படையின்  பீரங்கிப்படகில் இருந்து ஏவப்பட்ட இரண்டு பீரங்கிக்குண்டுகள் எமக்கு அருகில் வீழ்ந்து வெடித்தது.எமக்கு அருகில் இருந்த மண்மூட்டைகள் சிதறின.எங்களுக்கு பெரிதாய் பிரச்சனை ஒன்றும் இல்லை.எனது கண்ணுக்குள்ளும் ஒரு காதுக்குள்ளும் மண் போய் விட்டது.அதை சிறிது நேரத்தில் சரிப்பண்ணிவிட்டேன். நடந்து போய்க்கொண்டிருந்த மக்களில் மூவர் நிலத்தில் கிடந்தனர்.மற்றையவர்கள் ஒ என்று அழுதார்கள். என்னுடன் நின்ற போராளி சத்தம் போட்டு கேட்டான் யாருக்கும் காயமா?
உதவி தேவையா?காயம் இல்லை மூன்று பேர் இறந்திட்டினம் என்ற பதில் மட்டும் அங்காலப்பக்கம் இருந்து வந்தது.இது இப்ப எங்களுக்கு பழகியிருந்தது. பின் அந்த மூவரையும் விட்டு விட்டு போய் விட்டார்கள்.என்னுடன் இருந்த போராளி சொன்னான் அடிச்சவன் எப்படியும் திருப்பி அடிப்பான்.எனக்கு முகம் கழுவ தண்ணீர் தேவைப்பட்டது. தான் எடுத்துவருவதாய் சொன்னான்.வேண்டாம் நான் போகிறேன் என்று உடலங்களுக்கு அருகில் இருந்த குன்றுக்கு (கிணறு)போனேன். கிணற்றில் தண்ணீர் எடுத்து முகத்தை கழுவி விட்டு ,திரும்பி இறந்து கிடந்தவர்களை பார்த்தேன்.அதில் இருவர் வயது போனவர்கள் மற்றையது ஒரு சிறுவன் பத்து வயது வரும்.அந்த சிறுவனில் உயிர் இருப்பதிற்கான  அறிகுறி தென்பட்டது.அருகில் போய் திருப்பிப் பார்த்தேன்.அவனில் காயங்கள் இல்லை.தேவையான முதலுதவியை செய்து ,கிணற்றில் தண்ணீர் அள்ளி அவன் முகத்தில் அடித்தேன் அவன் எழுந்துவிட்டான்.எழுந்ததும் போதாதென்று அழத்தொடங்கிவிட்டான். இவனுக்கு ஒரு பிளேன்டி கொடுத்தால் நல்லா இருக்குமென்றான் என்னோடு நின்ற போராளி ,அந்த நேரத்திலும் நான் சிரித்தேன்,நாங்கள் குடிச்சாலும் நல்லாய் இருக்கும் என்றேன். அந்த சிறுவன் இறந்திருப்பவர்கள் தாத்தாவும் ஆச்சியும் என்றான்.தாய் தகப்பனை கேட்டான்.அவன் அழ அழ பாதைக்கு கூட்டிப்போனோம்.இராணுவப்பகுதிக்கு சென்று கொண்டிருந்த எங்களுக்கு தெரிந்த ஒருவருடன் இவனை ஒப்படைக்கும் பொறுப்பை கொடுத்து அனுப்பினோம்.  


ஓவியன்


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share