செவ்வாய், 2 ஜூலை, 2013

என்ர குஞ்சுகள் கஷ்டப்பட்டிடுங்கள்

கிளிநொச்சிக்கும் அக்கராயனுக்கும் இடையில்,செழிப்பான அந்த கிராமம் அமைந்திருக்கிறது.தென்னைகளால் நிரம்பிய அந்தக்கிராமம் அகதியாய் வந்தவர்களை எப்போதும் வரவேற்றது.அந்தக்கிராமத்து போராளியொருவன்  எங்கள் பிரிவில் இருந்தான்.அவனின் பெற்றோரிடமிருந்து எங்களுக்கு ஒரு கடிதம் கிடைத்திருந்தது.அந்தப்போராளியின் தாய் மரணப்படுக்கையில் இருப்பதாகவும் மகனை தாய் பார்க்கவிரும்புவதாகவும் எழுதப்பட்டிருந்தது.நாங்கள் உடனடியாய் அந்தப்போராளியை விடுப்பில் அனுப்ப தீர்மானித்து எங்கள் பிரதான முகாமுக்கு எடுத்தோம்.
நான் மன்னார் போகும் வழியில் அவனை வீட்டில் இறக்கிவிட்டு,தாயின் நோயை விசாரிக்க அவனுடன் கூடச்சென்றேன்.அவர்கள் குடும்பநிலை சுமாராய் இருந்தது.சிறு தோட்டம் ,ஆடு மாடு,கோழிகள் நின்றன.மண் வீடு என்றாலும் அழகாக இருந்தது.தாய் படுத்த படுக்கையாய் கிடந்தாள்.தகப்பனும் சகோதரியும் அவனை கொஞ்சினார்கள்.தாயுக்கு அருகில் மகன் இருக்க தாய் விழித்துக்கொண்டாள்.அவனை மாறி மாறி கொஞ்சினாள்.அது ஒரு வழமையான தமிழ்ப்பாசக்குடும்பம்.எனக்கு இருக்க ஒரு கதிரை தந்தார்கள்.தகப்பன் கதைப்பது குறைவென்றாலும் ஓடித்திரிந்தார்.பத்துநிமிசத்தில கேட்காமல் சாப்பாடு வந்தது. வெள்ளைப்புட்டு சம்பல் முட்டைப்பொரியல். தாயின் நோயை விசாரித்தேன். தாயின்ற வயிறு வீக்கமாயும் இருந்தது.தாயிற்கு வயிற்றில கட்டியாம் ஆனால் அது கான்சர் இல்லையாம்.நோய் மட்டைகளையும் காட்டினார்கள்.கிளிநொச்சி அரசாங்க ஆஸ்பத்திரியில இருந்து வவுனியா அனுப்பி ,அங்கிருந்து அனுராதபுரம் அனுப்பியும் நோயாளி ஒப்பெரசன் தாங்கமாட்டார் என்று திருப்பி அனுப்பிட்டினம்.கட்டி இனி வெடிச்சிடும் என்றும் சொல்லிவிட்டிருக்காங்கள். என்ர பிள்ளை இருக்கிறான் எனக்கு கொள்ளிவைக்க, நான் இல்லாமல் என்ர குஞ்சுகள் கஷ்டப்பட்டிடுங்கள் தாய்  இடைக்கிடை புலம்பிக்கொண்டாள்.
அடுத்தநாளே கிளிநொச்சி பொன்னம்பலம் மருத்துவமனையில் ஒப்பெரசன் செய்யப்பட்டது.தாய் பூரணகுணமடைந்தாள்.
போராளியின் சகோதரியின் திருமணத்தின் போதும் எங்கள் எல்லோருக்கும் அழைப்புவிடப்பட்டிருந்தது. அந்தக்குடும்பத்தை மிக சந்தோஷ மனநிலையில் பார்த்தோம் .பின் மகன் மாவீரன் ஆனான்.தாயை தவிர ஏனையோர் இறுதி யுத்தத்தில் கிபீர் அடித்து இறந்து போனார்களாம்.தாய் சித்தம் கலங்கிப்போனாள் .பூவோடு கனகபுரம் துயிலும் இல்லத்தை நோக்கிப்போவாவாம் .யாரும் கண்டு பிடித்து வருவார்களாம்.அண்மையில் அந்த தாய் இறந்து போனாள்.அவளின் உடலை சவப்பெட்டி இல்லாமல், துணியால் சுற்றி ,தடிகளோடு கட்டி,காவி சுடலையில் எரித்தார்களாம்.


ஓவியன்


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக