வெள்ளி, 12 ஜனவரி, 2024

நெஞ்சினுள் ஒரு நெருஞ்சிமுள்

 வழுக்கையாறு வாய்க்காலிருந்து 

கூப்பிடு தூரத்தில் மூன்று வயல்கள்

வரம்புக்கட்டுவதும் மூலைகொத்துவதும்

நெல் விதைப்பதும் களைபிடுங்குவதும் 

வயலின் பசுமையில் நாங்களும் இருந்தோம் 

இருபோக விதைப்பு 

சிலகாலம் ஒருபோகமானது 

மூன்று வயல்களிலும் 

வெவ்வேறு நெல்லினங்கள் விதைப்போம் 

ஒன்று பிழைத்தாலும் மற்றையது கைவிடாது 

நானறிந்து நட்டம் ஏற்பட்டதில்லை    

இறுதி பலவருடங்கள் 

யாரோதான் செய்தார்கள் 

செய்தார்களோ இல்லையோ தெரியவில்லை  


பயிர்களோடு சேர்ந்து அசையும் மனம்

புலுனிகளும் வேறு குருவிகளும் பாடும் இசை 

வயலோடும் வயலை சுற்றியும் நட்புவட்டம்      

முதல் நெல்லில் பொங்கும் பொங்கல் 

அரிசிமா மணக்கும் கொழுக்கட்டை 

அறுவடையும் சூடடிப்பும் 

வைக்கோலும் அந்த சுனையும் 

எப்படி மறப்பது?


மூன்று தலைமுறையின் 

வியர்வை கலந்த மண் 

பார்க்க ஆட்கள் இல்லை 

வயல் விற்பனையாயிற்று 

வயலில்லா முதல் பொங்கல் நெருங்குகிறது 

நெஞ்சினுள் ஒரு நெருஞ்சிமுள் 

வயல்கள் வீடாக மாறும் காலம் 



Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share